in ,

உறவுக்கு அப்பால் (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நயன்தாரா… ஸ்ருதிஹாசன்… அனுஷ்கா… மூவரும் ஆனந்தைச் சுற்றி வளைக்க, அவன் தப்பியோட வழியில்லாமல் மிரண்டு நின்றான்.

“ஆனந்து இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு இல்லையில்லை… மூணுல ஒண்ணு தெரிஞ்சாகணும்!… சொல்லு எங்க மூணு பேர்ல யாரை நீ காதலிக்கிறே?” நயன்தாரா சற்று கோபமாக கேட்டாள்.

“சொல்லு ஆனந்த்…  “நான் ஸ்ருதிஹாசனைத்தான் காதலிக்கிறேன்”னு அடிச்சுச் சொல்லு ஆனந்த்” என்று இடையில் புகுந்த ஸ்ருதிஹாசன் தானே தனக்குச் சாதகமாய் முடிவை வைத்துக் கொண்டு சொல்ல.

     “இங்க பாருங்கம்மா… எதுக்கு வீணா ரெண்டு பேரும் உங்க நேரத்தையும் ,எங்க நேரத்தையும் விரயம் பண்றீங்க?… போங்க… போங்க… மை டார்லிங் ஆனந்த்… லவ் பண்றது என்னைத்தான்” என்றாள் அனுஷ்கா.

            “அதெல்லாம் முடியாது என்னைத்தான்”.இது நயன்தாரா.

     “நோ… அவர் என்னைதான்” இது ஸ்ருதிஹாசன்.

     “நோ…. நோ… ஹீ ஈஸ்… மை மேன்”. இது அனுஷ்கா.

உச்சகட்டத்தில் மூவரும் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து இழுத்துக் கொண்டு சண்டையில் ஈடுபட, “ஐயோ… கடவுளே! என்னைக் காப்பாத்து!… என்னைக் காப்பாத்து” ஆனந்த் அலற, மொபைல் ஒலித்தது.

     தூக்கம் கலைந்து கண் விழித்தான் ஆனந்த்.  “அடச்சே… எல்லாம் கனவா?” மொபைலை எடுத்து பேசினான்.

      மறுமுனையில் அவன் மனைவி.

            “ம்…சொல்லு தேவி!… எங்கிருந்து பேசுறே?” கேட்டான்.

     “என்ன பண்ணிட்டு இருந்தீங்க ரொம்ப நேரமா போன் அடிச்சிட்டு இருந்துச்சு”.

      “தூங்கிட்டிருந்தேன்”

.“என்னது?… தூங்கிக்கிட்டிருந்தீங்களா? மணி எவ்வளவு தெரியுமா பத்து”

       திரும்பி கடிகாரத்தை பார்த்து விட்டு, “அட ஆமாம் பத்தாயிடுச்சு” என்றான்.

      “நான் ஊரிலிருந்து திரும்பி வந்தாச்சு! இப்ப பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன் கொஞ்சம் காய்கறி எல்லாம் வாங்க வேண்டி இருக்கு! மார்க்கெட்டில் வாங்கிட்டு ஆட்டோவில் வந்திடறேன்”

      “ம்…சரிடா” போனை வைத்துவிட்டு நிமிர்ந்த ஆனந்த் அறையைப் பார்த்தான். துணிமணிகள் அலங்கோலமாய் கிடந்தன. ஆஷ்டிரே நிறைய சிகரெட் துண்டுகள்.  இந்தக் கோலத்தை தேவி பார்த்தால்…. நினைத்துப் பார்த்தான்.

      “மூணு நாள் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போயிட்டா இங்க வீடு வீடாவா இருக்கு?”.

      அவ வர்றதுக்குள்ளார முடிஞ்ச அளவுக்கு சுத்தம் செய்திடுவோம்.

     “மள…மள”வென்று ஆரம்பித்தான்..

.காலிங் பெல் அழைத்தது.

     “அடக்கடவுளே அதுக்குள்ளார வந்துட்டாளா?” தயக்கத்துடன் கதவை திறந்தவன் ஆச்சரியமாய் நின்றான்.

     ஒரு இளம் பெண் தோளில் பேக். கையில் சோப்புத்தூள் பாக்கெட்டுடன் நின்றிருக்க புரிந்து கொண்டான்.  சேல்ஸ் கேர்ள்.

     “சார் புதுசா அறிமுகமாகியிருக்கு சார்! கேப்டன் பிராண்டு சோப் பவுடர் சார்!… ஒரு கிலோ பாக்கெட் ஒண்ணு வாங்கினால்… இன்னொரு பாக்கெட் இலவசம் சார்!.. நல்லா வெளுக்கும் சார்!… விலையும் ரொம்ப கம்மி சார்!… இரண்டு பாக்கெட் போட்டு விடலாமா சார்?”.

     வைத்த கண் வாங்காமல் அவளையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் சொன்னது எதுவுமே காதில் விழவில்லை.
   

“சார்….” அவனை உசுக்கும் விதமாய் அவள் சற்று உரக்க அழைக்க,

 சட்டென்று சுய நினைவுக்கு வந்தவன்,  “என்ன சொன்னீங்க?” என்றான்.

     அவள் சொன்னதையே மீண்டும் சொன்னாள்.

.
     “வேண்டாம்மா” என்று சொல்ல நினைத்தவன்,  “உன் பேர் என்னம்மா?”  கேட்டான்.

     சில சபலிஸ்ட்டுகள் இப்படித்தான் பேர்… ஊர் பற்றியெல்லாம் கேட்டுட்டு கடைசியில் ஐந்து அல்லது பத்து பாக்கெட் வாங்கிக் கொள்வார்கள், என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்த அந்த பெண்ணும்,  “என் பெயர் மைதிலி சார்! இங்க பக்கத்துல ரயில்வே குவாட்டர்ஸில் தான் வீடு!… டிகிரி முடிச்சிட்டு இந்த வேலையை செய்கிறேன் சார்!.. என்ன பண்றது ஏழ்மைக் குடும்பம்” என்றாள்.

     அவள் பேச்சில் கரைந்து போன ஆனந்த், “இந்த பேக்ல மொத்தம் எத்தனை பாக்கெட் இருக்கு?” கேட்டான்.

             “நாப்பது பாக்கெட் இருக்கு சார்…”

      “என்ன விலை ஆகுது?”.

      “மொத்தமாவா சார்?”.

      “ஆமாம்”.

      “ம்ம்ம்ம்…. நானூறு ரூபாய் ஆகுது சார்”

.
      வீட்டினுள் சென்று ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து வந்து அவளிடம் நீட்டி, “அப்படியே எடுத்துக்கிறேன்” என்றான்.

      “நெஜமாவா சார்?” அவள் நம்ப முடியாமல் கேட்டாள்.

      “ஆமாம்மா” என்றவன் அவள் கையில் இருந்த பேக்கை வலுக்கட்டாயமாக பிடுங்கி அதிலிருந்து சோப்புத்தூள் பாக்கெட்டுகளை எடுத்து டீப்பாயின் மேல் பரப்பி வைத்து விட்டு காலி பேக்கைத் திருப்பித் தந்தான்.

      “சார்… மீதி நூறு ரூபாய் சில்லறை இல்லையே சார்?”.

      “பரவாயில்லை… நீயே வச்சுக்கம்மா.”

      “இல்லை சார்… வேண்டாம் சார்… கொஞ்சம் இருங்க சார்…. பக்கத்துல எங்காவது போய் சில்லரை மாத்திட்டு வந்து தர்றேன்”.
சொல்லி விட்டு அவள் செல்ல, ஐந்தாவது நிமிடம் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ஆனந்தின் மனைவி தேவி.

     “என்னங்க இது?… எதுக்கு இத்தனை சோப்புத் தூள் பாக்கெட்?”.

     “ஒரு சேல்ஸ் கேர்ள் வந்து  “புதுசா வந்திருக்கற சோப்புத்தூள்… ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ”ன்னு சொன்னா… விலையும் சீப்பா இருந்தது!… அதான் கிடைக்கும் போதே வாங்கிடலாம்னு மொத்தத்தையும் நானே வாங்கிட்டேன்”.

      “அவளைப் பார்த்து லிட்டர் கணக்குல ஜொள்ளு விட்டு வாங்கிப் போட்டுட்டீங்க அப்படித்தானே?” விழிகளை பெரிதாகிக் கொண்டு தேவி கேட்க.

      “சேச்சே… அப்படியில்லை”.

      “சரி எத்தனை ரூபாய் தண்டம் அழுதீங்க?”.

      “கம்மிதான்… நானூறு”.

      “என்னது நானூறு என்பது உங்களுக்குக் கம்மியா?… காசோட அருமை தெரியாம எவளையோ பார்த்துப் பல்லை இளிச்சுக்கிட்டு தூக்கி கொடுக்கிற மனுஷனை வெச்சுக்கிட்டு குடித்தனம் பண்ணனும்னு என் தலையில எழுதியிருக்கு” தேவி கதாகாலேட்சபத்தைத் தொடங்க.

      “சார்… சார்” அதே பெண் குரல்.

     ஆனந்தை முந்திக் கொண்டு பாய்ந்து சென்ற தேவி, மீதி பணத்தைக் கொடுக்க வந்திருந்த அந்த சேல்ஸ் பெண்ணைப் பார்த்ததும் ”ஹக்”கென அதிர்ந்து சிலையாய் நின்றாள்.

     அவள் பின்னால் நிதானமாய் நடந்து வந்த ஆனந்த், அந்தப் பெண் நீட்டிய மீதி பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனை அனுப்பி விட்டு தேவியைப் பார்த்து, “என்ன தேவி?… என்ன ஆச்சு?”.கேட்டான்.

     ஏங்க… அந்தப் பெண்…. அந்தப் பெண்…. தலைப்பிரசவத்தில் செத்துப் போன உங்க தங்கச்சி கவிதா மாதிரியே இருக்காங்க!…

“ஐயோ… என்னால நம்பவே முடியலைங்க …ஒரே அச்சில வார்த்த மாதிரி எப்படிங்க இப்படி?.”

மெலிதாய்ப் சிரித்த ஆனந்த், “தேவி உன்னை மாதிரித்தான் நானும் முதல்ல அந்த பெண்ணை பார்த்ததும் அசந்து போய் நின்னுட்டேன்!.. என்னை அறியாமல் எனக்குள் அந்த பெண் மேல ஒரு பாசம் உண்டாகிடுச்சு… அதனால கண்டிப்பா ஒரு பாக்கெட்டோ இல்லை… ரெண்டு பாக்கெட்டோ வாங்கலாம்னு நெனச்சேன்!… அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்!… நம்ம ஏரியாவில் இருக்கிற காலிப் பசங்க கொஞ்சம் சுமாரா இருக்கிற பொண்ணுங்களைப் பார்த்தாலே இல்லாத சேட்டையும் சில்மிஷமும் பண்றானுங்க!… போன மாசம் பேஸ்ட் விற்க வந்த ஒரு சேல்ஸ் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து… அது கத்தி களைபரம் பண்ணி கடைசில எப்படியோ தப்பிச்சு ஓடிடுச்சு!…

எங்கே அது மாதிரி இவகிட்டேயும் கலாட்டா பண்ணிடுவானுங்களோ?ன்னு நெனச்சு… இவளை உடனே இந்த ஏரியாவை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு பண்ணித்தான்…. அத்தனை சோப்பு பவுடர் பாக்கெட்டுகளையும் வாங்கினேன்!… எனக்கென்னவோ செலவான ரூபாய் பெருசாத் தெரியலை!… என் தங்கச்சியை அந்தக் காலிப் பசங்ககிட்டேயிருந்து காப்பாத்திட்டோம் என்கிற திருப்திதான் பெருசாத் தெரியுது… நீ என்ன சொல்ற தேவி?” கேட்டபடி திரும்பியவன் அவளைக் காணாது தேடினான்.

அவளோ நிதானமாய் அந்த சோப்பு பவுடர் பாக்கெட்டுகளை எடுத்து அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அப்பா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 10) – சுஶ்ரீ