எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எப்போது சவுதியிலிருந்து திரும்பப் போகிறாய் என் வருங்காலச் செல்லக் கணவனே! உனக்காக எத்தனை நாள் காத்திருப்பது?
‘சீ! எய்… அப்படிப் பார்க்காதே.. ஏய் கண்ணடிக்கிறாயா? எப்போது வருகிறீர்கள் கார்த்திக்!’
மாப்பிள்ளை தேடும் படலம் வரை யாரோ ஒரு பிருதிவிராஜன் வெள்ளைக் குதிரையில் வருவதாகத்தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். நீதான் எனக்கு என்று உன் வீட்டார் வந்து நிச்சயம் செய்து உங்கள் போட்டோவையும் தந்து விட்டுப் போய்விட்டார்கள்.
உங்களை நான் நிழலாகப் பார்த்துதான் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் தத்தளிக்க வைத்து விட்டு அங்கே என்ன, வேலை அப்படி உங்களுக்கு.
பள்ளியில் சக ஆசிரியைகள் ‘மலர்விழி கனவு காண ஆரம்பித்து விட்டாள்’ என்று சொல்லும் போது வெட்கமும் கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.
நான் எழுதிய கடிதத்திற்கு நீங்கள் பதில் எழுதவில்லை ஏன்? என்னைப் பிடிக்கவில்லையா? ஏதாவது பேசுங்களேன். எனக்கு போன் பண்ணுவீர்களா? இந்த நாளில் இந்த நேரத்தில் இந்த நம்பருக்கு போன் பண்ணுகிறேன் என்று எழுதி என்னை காத்திருக்கும் இன்ப இம்சையை சுமக்க வைப்பீர்களா கார்த்திக்.
நீங்கள் வரும்போது என்னவெல்லாம் பேச வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறேன் பையா…
நான் பேசுவது உங்களுக்குத் தெரியுமா? என் இம்சைகளை புரியும் தன்மை உண்டா? நீங்கள் எப்படி சாதுவா ? முரடனா?
அய்யோ… முழுமனிதனாக நீங்கள் சவுதியில் உலவிக் கொண்டிருக்க உங்கள் போட்டோவோடு என்னைப் பேசிக் கொண்டிருக்கச் செய்து விட்டீர்களே…
நான்.. நான் படும் அவஸ்தையில் பாதியாவது உங்களுக்கு உண்டா?… என்னைப் பற்றி யோசிக்கிறீர்களா கார்த்திக்.
உங்களுடைய போட்டோவிலிருந்து அப்படியே உயிரோடு எழுந்து வந்துவிட மாட்டீர்களா என்று கூட சில நேரம் அல்ப கனவு காணுகிறேன் மை டியர்.
இந்தச் சிரிப்பு எங்கேயிருந்து பிடித்து வந்தீர்கள்? மீசையைப் பார்… உதட்டை மறைத்துக் கொண்டு. கண்ணின் இமைகளுக்கு நடுவிலே இடைவெளியே இல்லையே. ‘நீங்கள் கண்டிப்பாக பெண்டாட்டி தாசனாகத் தானிருப்பீர்கள்’ என தோழிகள் எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள்.
நான் உங்களுக்கு தாசியாகவும், நீங்கள் எனக்குத் தாசனாகவும் இருப்பதில்தான் வாழ்க்கையின் சுகமே அடங்கிப் போயிருக்கிறது. இதில் கிண்டல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று தான் புரியவில்லை
இவ்வளவு லூசாகவா உடையணிவது, நீங்கள் இங்கு வந்ததும் டைட்டாக டெனிம் ஜீன்சும், டீசர்ட்டும் வாங்கித் தந்து போடச் சொல்ல வேண்டும். இன்னும் அழகாகத் தெரிவீர்கள்.
உங்கள் முகத்தில் கூட ஓரிரு முகப்பருக்கள் தெரிகிறதே.. ஏய் யாராவது முஸ்லீம் பெண் சைட் அடிக்கிறாளா? நான் இங்கே ஒருத்தி உங்களுக்காகக் காவல் இருக்கிறேம்பா…
என் போட்டோவைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா? என்னைப் போல உங்களுடைய சூடான பெரு மூச்சுகள் தென்றலோடு மோதிக் கொள்கின்றனவா…
அடுத்த விடுமுறையில் தான் நீங்கள் வருவீர்கள். அப்போது தான் திருமணம் என்று சொல்லி விட்டார்கள் உங்கள் பெற்றோர்கள். இங்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருக்கிறது கார்த்திக்.
என் முகத்திலிருக்கும் ஒரு மரு போல உங்கள் வலது கன்னத்திலும் இருப்பது கூட கொஞ்சம் பிளஸ் பாயிண்ட்டாகத்தான் தெரிகிறது.
சீ! திரும்பவும் கண்ணடிக்கிறீர்களே, மீசையைப் பிடித்து இழுத்து விடுவேன் என்று போட்டோவிலிருந்த கார்த்திக்கின் மீசையைத் திருகுவதாக பாவனை செய்து கொண்டிருந்த மலர்விழியின் கவனத்தை அம்மாவின் சப்தம் கலைத்தது.
“மலர் வாசலிலே யாரோ வந்திருக்கிறார்கள் போய் பார்?” என்று சமையற்கட்டிலிருந்து அம்மா சொல்ல, எழுந்து வாசலுக்கு வந்தாள்.
கார்த்திக் ஒரு முஸ்லீம் பெண்ணோடு வாசலில் நிற்பதை பார்த்ததும் ஒருமுறை பேச முடியாமல் தவித்துப் போய் நின்றாள்.
“நீ… நீங்கள்… காரத்திக்… உள்ளே வாருங்க. இது.. உள்ளே வந்து உட்காருங்கள்” என்று நாற்காலியைக் காட்டினாள்.
மலர்விழியின் உடம்பு முழுவதும் சிலிர்ப்புத் தட்டியது. “நான் காண்பது கனவா…” என்று ஒருமுறை தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். “அம்மா அப்பா யாரும் இல்லையா? என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டான் கார்த்திக்.
“ம்…” என்று வெட்கத்தில் தலையாட்டியவள், “இது யார்?” என்று கேட்டாள்.
“என் மனைவி. இவளுடைய பெற்றோர் எங்கள் திருமணத்திற்கு தடையாக இருந்தார்கள். அதனாலே நான் இவளை திருமணம் செய்துகொண்டு இந்தியாவிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டேன்” என்று புன்முறுவல் பூத்தான் கார்த்திக்.
“என்ன விளையாடுகிறீர்களா?” என்று கோபமாகக் கேட்டாள் மலர். அருகில் அமர்ந்திருந்த பெண் தலையைக் குனிந்து கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தாள்.
“நீ இவ்வளவு கோபப்படுவாய் என்று தெரிந்து தான் இந்தியா வந்ததும் முதலில் உன்னைப் பார்க்க வந்தேன்”.
“நீங்கள்…” பேச முடியாமல் கோபத்தில் குமுறிய மலர், ”கார்த்திக், இவ்வளவு நடந்திருக்கிறது. நீங்கள் ஊருக்கு போன் பண்ணி உங்களுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர் குபுக்கென்று பாய்ந்தது.
“ஸாரி, எனக்கு போன் பண்ணிச் சொல்லிவிட்டு இங்கே உனக்கும் எனக்கும் நிச்சயதாம்பூலம் அரேஞ்ச் பண்ணி விட்டார்கள். என்னிடம். கூட சம்மதம் கேட்காததால் தான்…” அவன் முடிப்பதற்குள் “நீங்கள் நிச்சயம் முடிந்து மூன்று மாதற்க்குள் போட்டோ பார்த்திருப்பீர்கள். என் விலாசம் தெரிந்திருக்கும். எனக்கு போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். எத்தனை ஆசைகள்.. எத்தனை ஆசை வளர்த்துக் கொண்டு…”
‘சே! முன்னே பின்னே அறியாத உங்கள் போட்டோவைப் பார்த்துக் கொண்டு…. என்னென்ன பேசி எத்தனை கனவுகள் வாழ்க்கையைப் பற்றி எல்லாம்.. எல்லாம் வீணாக… எதுவும் பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
“மலர்விழி உங்ககளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தான் தெரியவில்லை. செய்தது தவறுதான். அட்லீஸ்ட் போன் பண்ணிச் சொல்லி இருந்தால் கூட நீங்கள் வீணாக ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் தயவு செய்து அழாதீர்கள்…”
“அப்படி உங்களைக் கவர்ந்த அந்த முக்காட்டுக்காரி யாருனுதான் பார்ப்போம். நீங்கள் வந்த நேரத்திலேயிருந்து தலை குனிந்து கொண்டேயிருக்கிறாளே…” அழுகையும் கோபமும் பீறி எழ கார்த்திக்கின் அருகிலிருந்த பெண்ணின் தலை தொட்டுத் தூக்க, “அய்யே எவ்வளவு பெரிய மீசை இருக்கு…” என்று மலர்விழி சப்தமிட தலையிலிருந்த பெண்ணின் சவுரி கையோடு வர, “ஏன் இப்படி ஏமாற்றினீர்கள்?” என்று அன்போடு கண்ணீர் வடித்தாள் மலர்விழி.
“இனி எனக்கு இங்கு வேலை இல்லை” என்று பெண்வேடத்தில் வந்த நண்பன், “கார்த்திக் நான் வெளியே நிற்கிறேன்” என்று கிளம்பினான்.
“பயந்து விட்டாயா மலர்…” என கார்த்திக் மெதுவாக அவளை அணைக்க, “அம்மா கிட்டத்திலே நிற்கிறார்கள்” என்றாள் அணைத்தவாறு.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings