in ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“உன் அப்பா ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் மாட்டிக் கொண்டார். ஒவ்வொருத்தர் ஒன்று சொல்லி அவரைக் குழப்பி விட்டார்கள். ஆனால் அவருக்கு சரயு அக்காவிடம் உயிருக்குயிரான காதல்தான். எல்லாம் விதி. கம்பராமாயணத்தில் ஒரு வரி வரும், நீ கூட அதைப் படித்திருப்பாய்.

‘நதியின் பிழையன்று நறும் புனலின்மை; விதியின் பிழை: நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான்’ என்று ராமன் இலக்குவனுக்குக் கூறுவது போல் வரும். அது போல் உன் அம்மா அப்பா இருவரும் நல்லவர்களே. விதி செய்த சதியால் அவர்கள் பிரிந்தார்கள்” என்று பெருமூச்சு விட்டாள் லதா.

“மனிதர்கள் சுலபமாக தங்கள் சுயநலத்திற்குத் தவறு செய்து விட்டு, ’எல்லாம் விதியின் செயல்‘ என்று சுலபமாகத் தப்பித்து விடுகிறார்கள். இல்லையா சித்தி?” வெறுப்போடு சிரித்தாள் மாதவி.

“மாதவி, ஒன்று புரிந்து கொள். நான் ஒன்றும் காதலுக்கு எதரியில்லை, உன் சந்தோஷத்திற்கும் எதிரி இல்லை. உன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும், அதுதான் என் பிரார்த்தனை. உன் ஹீரோவை நான் பார்க்கலாமா?”.

“ஹீரோவை மட்டும் இல்லை சித்தி. நீங்கள் வருவதாக இருந்தால் அவர் வீட்டிற்கே சென்று அவருடைய அம்மா அப்பாவையும் பார்த்து விட்டு வரலாம்” என்றாள் மாதவி.

“ஓ.கே. முன்னறிவிப்பு இன்றி போகக் கூடாது. ஒரு நாள் போன் மூலம் தெறிவித்து விட்டுப் போய் பார்த்து விட்டு வரலாம்” என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றாள்.

ஒருமாதம் ராகுலைப் பொறுத்த மட்டில் ஜாலியாக முடிந்து விட்டது. அன்று காலையில் சீக்கிரமே எழுந்து அவன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, ஆசீர்வாதம் மட்டுமல்ல புதிதாக கம்பெனி சேருவதற்கு தேவையான புத்திமதிகளும் பெற்றுக் கொண்டு  பணியில் போய் சேர்ந்தான்.

அன்று மாதவி படுக்கையிலிருந்து எழுந்த உடனே காலண்டரைப் பார்த்தாள். அன்று ராகுல் முதன் முதலாக அவன் கம்பெனியில் போய் பணியில் சேர வேண்டிய நாள். ராகுலின் தந்தையின் அலுவலகத்தை அவனோடு ஊர் சுற்றும் போது அவன் காட்ட இவள் பார்த்திருக்கிறாள்.

நான்கு அடுக்கு மாடி கொண்ட பெரிய ஆபீஸ். கட்டிடத்திற்கு வெளியே எப்போதும் பல வித விலையுயர்ந்த கார்கள் நின்று கொண்டிருக்கும். ஒரு ஓரமாக டிராக்டர்களும், ஜீப்புகளும், லாரிகளும் நின்றுக் கொண்டிருந்தன. விதவிதமான நாகரிகத்தில் நிறையப் பெண்களும் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

அவ்வளவு பெரிய கம்பெனியின் ஒரே வாரிசு இந்த ராகுல் ஆணழகன். நல்ல உயரம், களையான முகம், அடர்த்தியான சுருண்ட முடி கொண்ட அழகன் அல்ல… பேரழகன் அவன். முதலாளியாக கோட்டும்  சூட்டும் டையுமாக முதலாளியின் சுழல் நாற்காலியில் கம்பாரமாக அவன் உட்கார்ந்து, கோப்புகளில் கையெழுத்திடுவதைப் பார்க்க வேண்டும் என்றும், தன்னுடைய பி.ஏ.க்கு டிக்டேஷன் கொடுப்பதைப்  பார்க்க வேண்டும் என்றும், மாதவிக்கு பயங்கர ஆசை.

அதனால்  முதல்  பீரியடைக் கட் செய்து விட்டு தன் தோழி வெண்பாவையும் அழைத்துக் கொண்டு ராகுலின் அலுவலகத்திற்குச் சென்றாள். போகும் போதே ராகுல் அலுவலகத்தைப் பற்றியும், அவன் ஒரே வாரிசு ஆதலால் அநேகமாக  அவன் தந்தை சேர்மேனாக இருப்பதால் இவன் மேனேஜிங் டைரக்டர் போஸ்ட்டில்தான் அமர்ந்திருப்பான் என்று பலவாறு கற்பனை செய்து, வெண்பாவின் காது கிழியுமளவிற்கு தொணதொணவென்று பேசிக் கொண்டு வந்தாள்.

ஆனால் இவர்கள் அங்கு போன போது, செங்கல்லும் சிமென்ட்டும் ஒரு லாரியில் சில ஆட்கள் ஏற்றிக் கொண்டிருக்க, ராகுல் அந்த லாரியில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தான். இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் லாரியில் இருந்து டக்கென்று குதித்தான்.

“ஏய் மாதவி, வெண்பா… எங்கே இருவரும் காலேஜிற்குப் போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னைப் பார்க்க வந்தீர்களா? இல்லை பெரிய கம்பெனியாக இருக்கிறதே, ஏதாவது வேலைக்கு அப்ளை செய்யலாமென்று வந்தீர்களா?” என்றான் ராகுல் நக்கலாக.

“உன் கம்பெனியில் உன் பொஸிஷனே சரியில்லை, நாங்கள் எங்கே வேலைக்கு அப்ளை செய்வது?” என்றனர் இருவரும் கேலியாக சிரித்துக் கொண்டு.

ராகுலோடு டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டு நின்றிருந்த ஒருவர், “மேடம் இந்த லாரியின் டிரைவர் இன்று திடீரென்று வேலைக்கு வரவில்லை. அவசரமாக இந்த மெட்டீரியல்ஸ் எல்லாம் கன்ஸ்ட்ரக்‌ஷன் சைட்டிற்குப் போக வேண்டியிருந்தது. ராகுல் சாரிடம் தான் லாரி ஓட்டுவதற்கான ஹெவி வெஹிகிள்ஸ் லைசன்ஸ் இருக்கிறது. அதனால் தான் ராகுல் சார் லாரி ஓட்ட வந்தார்” என்று கூறி முடித்தார்.

“அது மட்டும் காரணமில்லை மாதவி. கம்பெனியைச் சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் அடிமட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பார் என் டாடி. ஒரு குறிப்பிட்ட வேலை செய்யும் மெக்கானிக் வரவில்லை என்பதற்காக எந்த வேலையும் நிற்கக் கூடாது என்பார். அதனால் இந்த திடீர் லாரி டிரைவர் பதவி. நீங்கள் இருவரும் என்னோடு லாரியில் வருகிறீர்களா, ஜாலியாக கொஞ்ச நேரம் லாரியில் ஊர் சுற்றி விட்டு வரலாம்” என்றான் சிரித்துக் கொண்டு.

“ஐயே” என்று முகம் சுளித்தனர் இருவரும்.

“என்ன லாரியில் போவதென்றால் மட்டமா? காரில் போவோர்கள் எல்லோரையும் விட நாம்தான் உயரத்தில் இருப்போம் தெரியுமா?” என்றான்.

“ஆளை விடு சாமி. எங்களுக்கு காலேஜிற்குப் போக வேண்டும்” என்று அவனை அழகெடுத்து விட்டு அவசரமாக ஓடி ஆட்டோ ஒன்றைப் பிடித்து காலேஜிற்குப் பறந்தனர். அவர்கள் ஓடிய வேகத்தைப் பார்த்த ராகுல் கை கொட்டி சிரித்தான்.

அதன் பிறகு மாதவியும் பரீட்சைக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தாள், அதனால் பிஸியாகி விட்டாள். ராகுலும், அடிமட்டத்திலிருந்து எல்லாத் துறைகளிலும் தன்னைத் தயார் செய்து கொள்வதற்காக கம்பெனி வேலையில் மிகவும் பிஸியாகிவிட்டான்.

ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி விட்டு, இரவு டின்னர் சாப்பிட்டு விட்டு மாதவியிடம் அரை மணி நேரம் கட்டாயம் போனில் பேசிவது அவன் வழக்கம். அந்த நேரத்தில் மாதவியும் தன்னுடைய போனை பிரீயாக வைத்துக் கொள்வாள்.

இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. மாதவி இஞ்ஜினீயரிங் படிப்பை முடித்து ஒரு தனியார் கம்பெனியில் பணியிலும் சேர்ந்து விட்டாள். ராகுலும்  இந்த இரண்டு வருடங்களில் எல்லாத் துறைகளிலும் தேர்ச்சி பெற்று அவன் கம்பெனியில் ஜெனரல் மேனேஜர் பதவியை ஏற்றுக் கொண்டான்.

ஒவ்வொரு நாளும் இரவில் போனில் பேசிக் கொள்வது மட்டும் தவறுவதில்லை. அதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பகல் உணவு எங்காவது ஒரு பைவ் ஸடார் ஹோட்டலில் இருவரும் ஒன்றாக சாப்பிடுவது வழக்கம்.

ராகுலின் பெற்றோர் அவன் திருமணத்தைப் பற்றி அதிகமாக வற்புறுத்த ஆரம்பித்தனர்.  ஆனால் மாதவியோ திருமணத்தைப் பற்றிப் பேசினாலே தன் அம்மாவின் கனவில் மிதப்பாள். அதனால் ராகுல் விட்டுத்தான் பிடிக்க வேண்டுமென்று உறுதி கொண்டான்.

ராகுலின் கம்பெனிக்கு மெட்டீரியல்ஸ் சப்ளை செய்யும் கான்ட்ராக்டர் தனசேகரன், ஒரு நாள் போன் செய்து விட்டுத் தன் மகள் ஸ்வேதாவை அவன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவள் பி.எஸ்.ஸி. டிகிரி படித்திருக்கிறாள் என்றும், கம்ப்யூட்டரில் டிப்ளமோ வாங்கியிருக்கிறாள் என்றும், தன் மகளின் வல்லமையைப் பற்றி நிறையக் கூறினார்.

மேலும் ராகுலை உறுத்துப் பார்த்துக் கொண்டு, “ஆபிசில் தம்பிக்கு பி.எ. போல் ஏதாவது ஒரு வேலை போட்டுத் தர வேண்டும் என்றும் வேண்டினார். ராகுலின் அப்பா பரத்திற்கு அந்தப் பெண்ணை சுத்தமாகப் பிடிக்கவில்லை. மேக்-அப்பிலேயே முக்கிக் குளித்தவள் போல் நின்றிருந்தாள்.

ஓவர் மேக் அப் செய்யும் யாரையும் பரத்திற்குப் பிடிக்காது. அவர்களுக்கு செய்யும் வேலையில் ஆர்வம் இருக்காது என்பது அவர் எண்ணம். ஆதலால் அவளை மெட்டீரியல்ஸ் டிபார்ட்மென்டில் ஒரு சாதாரண கிளார்க்காக வேலையில் அமர்த்தினார்.

ஒரு பையன் நல்ல படிப்போடு, பணத்தோடு, அழகாகவும் இருந்தால், பெண்களும், அவர்களைப் பெற்றவர்களும் அவனுக்கு வலை விரிக்கிறார்கள் என்று எண்ணி மனதிற்குள் கேலியாக சிரித்துக் கொண்டார்.

அவரின் சிரிப்பிற்குக் காரணம் ஸ்வேதா மட்டும் இல்லை. அவரோடு நீண்ட வருடங்களாக எந்தத் தொடர்பும் இல்லாத அவரின் ஒன்று விட்ட சகோதரி புவனா, தன் மகளை அழைத்துக் கொண்டு சம்மர் வெகேஷனை அவர்கள் வீட்டில் சந்தோஷமாகத் தங்கப் போவதாகவும், அப்படியே குலதெய்வம் கோயிலுக்குப் போய் ஒரு பிரார்த்தனையையும் முடிக்க வேண்டும் என்றும் வரலாமா என்றும் அனுமதி கேட்டிருந்தாள்.

இவர் வரலாமா வேண்டாமா என்று பதில் அனுப்புவதற்குள், தன் மகள் ரக்‌ஷிதாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் புவனா. புவனா சின்ன வயதில் மிக அழகாக இருப்பாள். அவள் மகள் ரக்‌ஷிதாவோ, அதிக மேக்அப் இல்லாமல் தங்கச் சிலை மாதிரி இருந்தாள்.

புவனா வந்த அன்று மாலையே, “அண்ணா, உங்க பையன் ராகுல் எங்கே? அவனை சின்ன வயதில் பார்த்தது” என்று கேட்டாள்.

“புவனா, ராகுல் என்ன சின்ன பையனா? அவன் ஒரு இஞ்ஜினீயரிங் பட்டதாரி. என்னுடைய எல்லா கம்பெனிகளையும் நிர்வாகம் செய்யும் மேனேஜிங் டைரக்டர். இப்போது லண்டனில் ஒரு கிளை தொடங்கலாம் என்று இருக்கிறோம். அங்கும் நாம் கட்டித் தரும் வீடுகளுக்கு நிறைய டிமாண்ட். இங்கேயிருந்து கொண்டு  எங்களால் அவர்களுடைய தேவைகளை சரியாக நிறைவேற்ற முடியவில்லை.

அதனால் லண்டன் அரசாங்க அனுமதி பெற்று அங்கே ஒரு சிறிய அலுவலகம் தொடங்க நினைத்தோம். ஆனால் நிறைய டிமாண்ட் அதிகரித்ததால் கிட்டத்தட்ட ஒரு நூறு ஆட்களோடு கொஞ்சம் பெரிய அலுவலகமே தொடங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்குறோம். அதனால் பத்து நாட்கள் லண்டனில் தங்கி வேலையை முடிக்க நினைத்தவனுக்கு ஒரு மாதம் முடிந்தும் ஊருக்குத் திரும்ப முடியவில்லை” என்று ஒரு நீண்ட பேச்சுடன் முடித்தார்.

“அண்ணா, ராகுல் இவ்வளவு பொறுப்பாக நிர்வாகம் பார்ப்பதும், உங்கள் பளுவை அவன் தோளில் சும்ப்பதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?” என்றாள். அவள் கண்களில் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வழிந்தது.

பரத்திற்கு ரக்‌ஷிதா மிகவும் பிடித்து விட்டது. அவளுடைய அழகும், அறிவும், இடமறிந்து நடந்து கொள்ளும் புத்திசாலித்தனமும் மிகவும் கவர்ந்து விட்டது. பிறப்பிலேயே பல கோடிகளுக்கு ஒரே வாரிசு.

ஏன், அவர்களின் உள்நாட்டு வியாபாரமும், வெளிநாட்டு கொள்முதலும் பரத்தின் சொத்தையே தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு இருந்தன. அப்படி இருந்தும் அவளின் எளிமையும், வேலைக்காரர்களிடம் கூட அவள் காட்டும் பரிவும், பரத்தின் மனதில் ரக்‌ஷிதாவிற்கு ஒரு தனி இடம் கொடுத்தது.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாச வேலி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

    காந்தி நோட்டு (சிறுகதை) – மணிராம் கார்த்திக்