in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கதவின் அருகில் போனவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். ஏதோ யாசிப்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல். அவளுடைய அன்பிற்காக ஏங்குவது போல் காத்திருந்தான். மனம் கேட்காமல் மாதவி அவனிடம் திரும்ப ஓடி வந்தாள். ஆனால் அவன் ஏக்கம், அவள் மனதிற்குள் ஒரு மத்தாப்பூவாக மலர்ந்தது. உள்ளுக்குள் ஒரு சந்தோஷம்.

“என்ன?” என்றாள் வெளியே கோபமாக, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு.

“போடி” என்றான் அவனும்  கோபமாக

“என்ன  போடியா? சீனியர் சார், நீங்களா பேசியது? உங்களைப் பார்ப்ப்தற்கு மனதிற்கு  ஒரு மாதிரி இருந்தது என்று தானே வந்தேன் .நீங்கள் இப்படிக் கோபிக்கிறீர்களே” என்றாள் மாதவி. அவள் குரலில் கூட ஒரு இனம் புரியாத சோகம்.

“உன்னைக் கேட்டா நான் உன்னிடம் என்னை பறி கொடுத்தேன்? உன்னைக் கேட்டா நான் உன்னைக் காதலித்தேன்?  என் மனம் உன்னைப் பார்த்துத் தடுமாறியது. என் இதயம் உன்னைக் கண்டு நழுவியது, அதனால் உன்னை மறப்பதற்கு என் இதயம் எனக்கு ஆணையிட வேண்டும் ! என் உள்ளம் எனக்கு உன்னை மறக்கச் சொல்ல வேண்டும்.  புரிகிறதா? மற்றவர் சொல்லி நான் கேட்கமாட்டேன். என் உள்ளம் எனக்கு ஆணையிட வேண்டும். உன்னைப் பார்க்க வரக் கூடாது, அவ்வளவு தானே. உன்னை மறக்க வேண்டுமென்று சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது. வருகிறேன்“ என்று கூறிவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு வேகமாகப் போய் விட்டான்.

அதன் பிறகு ராகுலை, கல்லூரியில் பலமுறை சந்தித்திருக்கிறாள் மாதவி. ஆனால் அவன், யாரோ புதிய மனிதரைப் பார்ப்பது போல் அவளை ஒரு கணம் உறுத்துப் பார்த்து விட்டு, ஒழுங்காக வெட்டப்பட்ட அவன் சுருண்ட தலை முடியைக் கோதிக் கொண்டே போய் விடுவான்.

மாதவி என்னவோ ராகுலிடம், பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று சொல்வி விட்டாளே தவிர, அவள் வார்த்தையை அவள் மனதாலேயே காப்பாற்ற முடியவில்லை. அவள் மூளையும் மனமும் ஒன்றாகச் செயல்படவில்லை.

அவனை நினைக்கக்கூட கூடாது என்று மூளை ஒருமுறை  உத்தரவிட்டால், மனம் பலமுறை அவனைப் பற்றியே நினைத்தது. ஏன் சில சமயம் அவன்நட்பிற்காக ஏங்கியது, இதனால் தான் மனம் ஒரு குரங்கு என்றார்களோ?

ராகுல் இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டான், ரிசல்ட்டும் வந்து விட்டது. அதிகமான மதிப்பெண்களுடன் ஒரு இஞ்ஜினீயரிங் பட்டதாரியாய் வெளியே வந்து விட்டான். சக மாணவர்கள், ஜூனியர்கள் எல்லோருடனும் கை குலுக்கி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தான் ராகுல், ஆனால் மாதவியை மட்டும் தவிர்த்தான்.

ஜூனியர்ஸ் எல்லோருமாகச் சேர்ந்து வெற்றியோடு  கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதற்காக சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்தனர், அதில் ஒன்று மாதவி பாடவேண்டும் என்பதாகும். கல்லூரி முதல்வரும், சில முக்கியமான பேராசிரியர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.

அன்று மாதவி பாடினாள். அந்தப் பாடல் எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது, ஆனால் அதில் ஒரு கரை காணாத சோகம் இழைந்தோடியது.

எல்லோரும் சீனியர் மாணவர்கள் பிரிவிற்கான வருத்தமே இதற்கான காரணம் என்று நினைத்தனர், ஆனால் அந்த சோகம், உண்மையில் ராகுலின் பிரிவிற்காகவும், அவன் இவளிடமிரிந்து விலகி நிற்பதற்காகவும் என்பது மாதவிக்கு மட்டுமா தெரியும்.

ராகுலும் தான் அது தனக்காகப் பாடப் பட்டதென்று நம்பினான். வெண்பாவிற்குக் கூட அது புரிந்திருந்தது. ஆனால் மாதவிக்கோ, இனிமேல் ராகுலைக் கல்லூரியில் பார்க்க முடியாதென்பதே பெரிய வருத்தத்தைக் கொடுத்தது.

எல்லோருடனும் கை குலுக்கி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த ராகுல் தன்னை மட்டும் தவிர்த்ததை அவளால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் எரிந்தது.

நம்முடைய சொல்லும் செயலும் தானே அவனுடைய இந்த நிலைக்குக் காரணம் என்பது தெரிந்தாலும், அதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

‘நான் சொன்னால் இவனுக்கு புத்தி எங்கே போச்சு?’ என்று கொதித்தாள். நிகழ்ச்சிகளும் முடிந்து எல்லோரும் டின்னர் சாப்பிட அமர்ந்தனர். மாதவி மட்டும் சரியாக சாப்பிடாமல்  தன் கையில் உள்ள முள்கரண்டியால் உணவை அளைந்து கொண்டிருந்தாள்.

வெண்பா, அவளுக்குப் பக்கத்தில் உட்காரந்திருந்தவள் யாரிடமோ சைகையால் பேசிக் கொண்டு, கைகளால் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். அதைக் கூட மாதவி கவனிக்கவில்லை. அவளுடைய மனமோ ராகுலின் நினைவிலேயே இருந்தது.

சிறிது நேரம் கழித்து, “மாதவி, நீ சாப்பிட்டுக் கொண்டே இரு. நம்ம கீதா கூப்பிடுகிறாள், ஏனென்று கேட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெண்பா எழுந்து போனாள்.

ஆனால் மாதவி அவள் சொல்லியதற்குத் தலையசைத்தாளே தவிர எதையும் மனதில் வாங்கிக் கொண்டாற்போல் தெரியவில்லை. வெண்பா எழுந்து சென்ற சிறிது நேரத்தில் ராகுல் அங்கு வந்து உட்கார்ந்தான். மாதவி அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.

“மாதவி, இன்று கூட என்னோடு பேசமாட்டாயா?  என்னை முழுவதுமாக மறந்துவிட்டாயா?” என்றான் வரண்ட குரலில்.

அவள் கண்கள் குளமாயின. மூக்கு நுனி கூட சிவந்து விட்டது.

“நானாடா உன்னை மறந்தேன். இடியட்! எல்லாப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றதை எல்லோரிடமும் சிரித்து சிரித்துப்  பகிர்ந்து கொண்டாயே. என்னைப் பார்த்து ஒன்றும் பேசாவிட்டாலும், ஒரு சின்னச் சிரிப்பாவது சிரித்தாயாடா? அதற்குக் கூட நான் அருகதை அற்றவளாடா? உன்னை நானா மறந்தேன்?

நீ பெரிய பணக்காரன். அருமையான அம்மா, அப்பாவின் ஒரே செல்லப் பிள்ளை. என்னைப் போல் ஒரு அநாதையை உன்னால் நினைவில் கூட வைத்துக் கொள்ள முடியாது இல்லையாடா?  உன்னிடம் நான் என்னவெல்லாமோ உளறி விட்டேன், ஆனால் தினமும் உன்னை நினைத்து சாப்பிடப் பிடிக்காகாமல்  தூங்கவும் முடியாமல் நான் படும் அவஸ்தை உனக்குத் தெரியுமா?”  என்று விம்மி விம்மி  அழுதுகொண்டே கேட்டாள்.

ஆனால் ராகுல் அவளை ஒன்றும் குறை கூறவில்லை. ‘நீ தானே பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று கட்டளையிட்டாய். உன் சொல்படி தானே நான் நடந்தேன்’ என்று கூறி அவளைக் குற்றம் சாட்டவில்லை.

எதிரே டேபிள் மேல் நீண்டிருந்த அவள் கைகளைப் பிடித்து மென்மையாக அழுத்தினான், அந்த அழுத்தம் அவளுக்கு பெரிய தைரியம் கொடுத்தது.

“மாதவி இங்கே பார், இப்போது என் மேல் உள்ள கோபம் போய்விட்டதா? எல்லோரும் சாப்பிடுகிறார்கள், நீயும் சாப்பிடம்மா” என்றான் கனிவாக.

ஆனால் அவள் அவனைப் பார்த்துக் கொண்டு ஓசைப் படாமல் அழுகையை அடக்கிக் கொண்டு விம்மினாள். இதனால் அவள் மார்பு துடித்தது, கழுத்து நரம்புகள் கூட புடைத்தன. ராகுலிற்குத் தாங்கவில்லை. அவளை அங்கேயே இறுக அணைத்து அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதிக்க விரும்பினான்.

“அழாதேடா கண்ணா ! இனிமேல் நீயே வற்புறுத்தினாலும் நான் உன்னைப் பிரிய மாட்டேன். நீ பேசாவிட்டாலும் நான் பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால் நீ அழுதால் எனக்குத் தாங்கவில்லை” என்றவன், அவள் கண்களைப் பார்த்து சிரித்தவாறு, “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று மெதுவாக அவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டியவாறு பாடிக் கொண்டே அவள் கண்களைத் துடைத்தான்.

“ஸாரி ராகுல், சந்தோஷமாய் சாப்பிட வந்த உன்னை நான் அழுது உன் மூடைக் கெடுத்து விட்டேன். ஐயாம் வெரி சாரி” என்றாள்.

“ஸாரியெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீ சிரித்துக் கொண்டிருந்தாலே போதும். எனக்கு உன் சிரிப்பு மட்டும் போதும் மாதவி. உனக்குக் கோபம் வந்தால் என்னைத் திட்டு, வேண்டுமானால் அடிக்கக் கூட அடிக்கலாம். நான் ஏதாவது தவறு செய்தால் ஏண்டா இப்படி செய்தாய் என்று என் சட்டையைப் பிடித்து உலுக்கு. இதெற்கெல்லாம் உனக்கு உரிமை இருக்கிறது, ஆனால் நீ இப்படி அழுதால் எனக்கு இங்கே வலிக்கிறதடி” என்று தன் நெஞ்சில் கை வைத்து லேசாகக் குத்தினான்.

அவனையே கண்இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி. அவள் கண்களை அகற்றி அவனைப்  பார்த்தப் பார்வையால் சிரித்து விட்டான் ராகுல்.

“ஏய், இதென்ன கண்ணா கடலா? அப்படியே மூழ்கி விடுவேன் போல் இருக்கிறதே! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருகிறாயா? அம்மா உன்னைப் பற்றி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என்றான்.

“அம்மாவிடம் நான் உன்னிடம் பேசவேண்டாம் என்று சொல்லியதையெல்லாம் சொல்லி விட்டாயா?”

“நான் அம்மாவிடம் எதையும் மறைப்பதில்லை”

“ஐயோ! அம்மா என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்”

“அம்மா ஒன்றும் உன்னைப் பற்றித் தவறாக நினைக்கவில்லை. ‘பாவம், எந்தத் தவறும் செய்யாத ஒரு அன்பான தாயை இழந்து நிற்கும் குழந்தையல்லவா? அவள் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து, அந்தத் தாயைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம். அந்தக் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வா’ என்றுதான் சொன்னார்கள்” என்றான் ராகுல்.

இப்போதெல்லாம் அவள் அப்பா அவளிடம் தன் அன்பை மிக அதிகமாக வெளிப்படுத்துகிறார். அவளைப் பார்த்தால் அவருக்குக் கூட பரிதாபமாக இருக்கிறது போலும். அடிக்கடி ஏதாவது பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் அழகிய சுடிதார், ஒரு நாள் ஒரு மெல்லிய தங்க மோதிரம் இப்படி. எதற்காக இந்தப் பரிசு என்று அவளுக்கே தெரியாது. அவரிடம் இன்னும் மனம் விட்டுப் பேசும் பக்குவம் அவளுக்கு வரவில்லை.

ராகுல் அவளை அழைத்துப் போக அவள் வீட்டிற்கே வந்து விட்டான். அன்று மாதவிக்குப் பிறந்த நாள். ஆனால் ராகுலுக்கு அவளுடைய பிறந்த நாள் என்று தெரியாது. காலையில் மிகவும் சீக்கிரமாய் மாதவியின் சித்தப்பாவும், சித்தி லதாவும் பிறந்த நாள் பரிசை வழங்கி வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

அவள் அப்பா வழக்கம் போல் காஸ்ட்லியான சுடிதார் செட்டும், மெல்லிய தங்கச் சங்கிலியும் பரிசாக அளித்தார். ஆனால் எப்போதும் போல் அவள் தந்தை அளித்த பரிசை அவள் மனம் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றது, அதனால் ராகவன் மிக மனவருத்தத்துடன் மகளிடம் பேசினான்.

“மாதவி… நான் ஆசையுடன் கொடுக்கும் எந்த பொருளையும் நீ பிரியமுடன் வாங்கிக் கொள்வதில்லை. அப்படியே வாங்கிக் கொண்டாலும் ஒழுங்காக உபயோயகப் படுத்தவதில்லை. நான் செய்தது தவறு என்று தான் பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறேன, அப்படியும் நீ என்னை நிராகரித்தால் எனக்கு செத்து விடலாம் போல் இருக்கிறது” என்று வருத்தப்பட்டு கத்தினார்.

“ஏன், என்ன ஆயிற்று அங்கிள்?” என்றான் ராகுல்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ‘சஹானா’ சிறந்த படைப்புப் போட்டி 2025-26 – www.sahanamag.com

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை