in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பூஜை அறையில் தொடுத்து வைத்திருந்த மல்லிகை சரத்தை நீண்ட அவள் கருங்கூந்தலில் ஹேர் பின்னால் செருகி மாதவயின் இரு தோள்களிலும் மாலையாகத் தொங்க விட்டாள்.

பெண்களுக்குப் பூ வைத்து விட்டால் எவ்வளவு அழகாக ஆகி விடுகிறார்கள் என்று வியந்து நின்றான் ராகுல். கௌசல்யாவும், மாதவியின் அழகைப் பார்த்து வியந்து ஒரு நிமிடம் நின்று பிறகு, இரு கைகளாலும் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.

எல்லாவற்றையும் ஒரு புன்முறுவலோடு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் ராகுலும், அவன் தந்தை பரத்தும். ராகுலின் தந்தை அதிகமாகப் பேசவில்லை. ரொம்ப ரிசர்வ்ட் டைப் போல் இருக்கிறது, ஆனால் மாதவி வந்ததிலிருந்து கூடவே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள் மாதவி.  ராகுல், மாதவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறும் போது கூடவே வந்து வழியனுப்பினர் அவன் பெற்றோர்.

காரில் ஏறிக் கல்லூரிக்குப் போகும் போது மாதவி, “ராகுல், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர். என்ன அருமையான அம்மாவும் அப்பாவும். என் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறது” என்றவள் ஒரு நீண்ட பெருமூச்செறிந்தாள்.

“பாட்டுக் கேட்கிறாயா மாதவி?” என்றவன் காரில் உள்ள ரேடியோவில் எப்.எம்.ஸ்டேஷனை ஆன் செய்தான்.

‘தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தாள்’ என்ற பாட்டு ஒலித்தது. மாதவி அவனை முறைத்தாள்.

“ஏய், என்னை ஏன் முறைக்கிறாய்? எப்.எம் ரேடியோவிற்கே மாதவி ஓர் தேவதை என்று தெரிந்திருக்கிறது. நிஜமாகவே நீ ஒரு தேவதை தான் மாதவி. என் அம்மா யாருடனும் அப்படி மனம் விட்டுப் பிரியமாகப் பேச மாட்டார்கள். அவ்வளவு ஏன்? எத்தனையோ உறவுக்காரப் பெண்கள் வருவார்கள், ஆனால் அவர்கள் யாரிடமும் கூட உன்னிடம் இன்று பாசத்துடன் பேசியது போல் பேசியதில்லை.  ஆமாம், நீ என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்றாயே, இப்போது பேசு”

“நீங்கள் என் அப்பாவிடம் போய், நான் ஏன் சிரித்து சந்தோஷமாகப் பேசுவதில்லை என்று கேட்டீர்களா?”

“ஆம்,  விமல் தான் அவன் போய் தெரிந்து வருவதாகக் கூறி விட்டு உன் அப்பாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தான். உன் அப்பா விமல் வந்து விசாரித்ததில் உன்னிடம் கோபித்துக் கொண்டாரா?” என்று கவலையுடன் கேட்டான் ராகுல்.

“அப்பா கோபித்துக் கொள்ளவில்லை, ஆனால் வருத்தப்பட்டார். ‘வீட்டில் தான் என்னிடத்தில் கோபித்துக் கொண்டு வருத்தமாக இருக்கிறாய். கல்லூரியில் வெளியில் இங்கெல்லாமாவது சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?’ என்றார். ஆமாம்! நான் தெரியாமல் தான் கேட்கிறேன். நான் சிரித்தால் உங்களுக்கு என்ன? வருத்தப்பட்டால் உங்களுக்கு என்ன?” என்று முறைத்தாள் மாதவி.

“ஏனென்றால்…” என்று தயங்கியவன், “நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட தேவதை. முதல் வருடம் நீ கல்லூரியில் சேர்ந்த போதே இந்தப் பெண் நம்முடன் பல ஜென்மமாகத் தொடர்புடையவர் என்ற எண்ணம்தான் என் மனதில் ஓடியது. நான் சொல்வதை நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை” என்றான்.

உணர்ச்சிப் பெருக்கில் அவன் குரல் தடுமாறியது.  அவன் தடுமாற்றம் முதலில் அவளுக்கு ஆச்சர்யத்தையும், பிறகு சிரிப்பையும் தான் வரவழைத்தது.

“இதென்ன புதுக்கதை” என்றவள் குரலில் கேலியும், வாயில் நமுட்டுச் சிரிப்புமாக.

“இது ஒன்றும் புதுக்கதை இல்லை. நீ எப்படி வேண்டுமானாலும் கேலி செய்துக் கொள். இது இரண்டு வருட பழையக் கதை. பழமையான ஒயின் பாட்டில்களுக்குத்தான் ருசியும் மதிப்பும் அதிகம். அது போலத்தான் மாதவி என் காதலும்”

“காதல் ஒரு தெய்வீக உணர்வு. அதைப் போய் மது பாட்டிலுடன் ஒப்பிடுகிறீர்கள்! ஆண்களே நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள். சில மணி நேரங்களில் மதுவின் மயக்கம் போய் விடும். காதலும் அப்படித்தானே மறைந்து விடும்” என்றாள் மாதவி ஆற்றாமையுடன்.

அவளை வியப்புடன் பார்த்தான். ஒரு சின்ன உதாரணத்திற்கு இத்தனை எதிர்மறையான  விளக்கமா?   அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ராகுல்.

“நான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள். என் மனதில் பட்டதைத்தான் நான் கூறினேன். உதாரணங்கள் சரியோ தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் உன்மேல் கொண்ட காதல் உண்மையானது, என்றும் அழியாதது”  என்றான். அவன் குரலில் சத்தியம் ஒலித்தது.

அதற்குள் அவர்கள் கல்லூரியே வந்து விட்டது. “அடச்சே” என்றாள் மாதவி கோபத்துடன்.

“மாதவி, காலேஜிற்குப் போகப் பிடிக்கவில்லையா ? ஏன் சினிமா, பீச் சென்று போக வேண்டுமா? இந்த முறை முறைக்கிறாய்” ராகுல் ஏதும் புரியாமல் கேட்டான்.

“நான் தானே உங்களோடு சில விஷயங்கள் பேச வேண்டுமென்று உங்கள் காரில் வந்தேன். ஆனால் நீங்களோ ஏதேதோ நடக்க முடியாத்தையெல்லாம் பேசிக் கொண்டு வந்தீர்கள். கடைசியில் காலேஜே வந்நு விட்டது. சே” என்றாள் கோபமாக காரில் இருந்து இறங்கியபடி.

“அதனாலென்ன, இன்று மாலை கல்லூரி முடிந்த பின் பீச்சிற்குப் போகலாம். அங்கு நான் வாயே திறக்கமாட்டேன். நீ என்ன பேச வேண்டுமென்று நினைக்கிறாயோ அவ்வளவும் பேசலாம். பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வீட்டிற்குப் போகலாம்“ என்றவன் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்‘ என்ற கண்ணதாசன் பாடலை விசிலடித்தான்.

“அது சரி! லேட்டானால் என் அப்பாவிற்கு யார் பதில் சொல்வது?”

“நான் தானே உன்னைக் காரில் கொண்டு விடுகிறேன். நானே பதில் சொல்லி விடுகிறேன்” என்றான் சிரித்துக் கொண்டு.

“சரியான விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறீர்களே?”

“சரி பாட்டி. நான் கரெக்டாக அந்த மரத்தடியில் நிற்பேன். நீ லேட் ஆகாமல் வந்து விடு. நாம் காரில் போகும் போதே பேசிக் கொண்டு போய், ஒரே ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டலாம். பீச்செல்லாம் இன்னொரு நாள் போய்க் கொள்ளலாம். உன்னை நேரத்தோடு கொண்டு போய் உன் வீட்டில் சேர்த்து விடுவது என் பொறுப்பு” என்றான்.

ஒன்றும் பேசாமல் மாதவி தன் தோழிகளை நோக்கி விரைந்தாள். வெண்பா தான் ஓடி வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னடி சீனியருடன் காரில் வருகிறாய்“ என்ற கேள்வி வேறு. அதே போல் ராகுலையும் அவன் வகுப்புத் தோழர்களும், மாணவிகளும் சூழ்ந்த கொண்டனர்.

“எங்களையெல்லாம் ஏமாற்றி விட்டு கடைசியில் மாதவியிடம் தோற்று விட்டாயா?” என்ற கிண்டல் வேறு.

இருவரும் யாருக்கும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய் விட்டனர். ’ஆனால் அன்று மாலை ராகுலை சந்தித்து, அவன் நினைவுகள் நிறைவேறாது என்று உறுதியாகச் சொல்ல வேண்டும். அவள் அம்மா சரயு எங்கிருக்கிறாள், அவள் ஏன் தன் ஒரே மகளைத் தேடி இத்தனை ஆண்டுகள் கழித்தும் வரவில்லை என்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் அவள் வாழ்க்கையில் எந்த சந்தோஷ நிகழ்வுகளும் கிடையாது என்று அவனுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மேலும் ராகுல் என்ற அழகான பெற்றோர்களுக்கான, ஒரே பிள்ளை, இவள் தேடலுக்காகத் தன் வாழ்க்கையை இழந்து நிற்கக் கூடாது என்று அவனுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும்‘ என்று நினைத்தாள்.

ஆனால் நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் விதிக்கு என்ன வேலை? கடவுளுக்குத்தான் ஏது விளையாட்டு?.

‘என் தாய் களங்கமில்லாதவள் என்று என் தந்தையே அவளிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு தான் என் வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்க முடியும் என்று ராகுலிடம் உறுதியாக சொல்லி விட வேண்டும்’ என்று அவளுக்குள் முடிவு செய்து கொண்டாள். 

அன்று மாலை, அவன் சொன்னது போல் அவனை சந்தித்து தன் மனதில் தோன்றிய எண்ணங்களை அவனிடம் விளக்கினாள்.

ஆனால் அவனோ, “கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீயும் உன் அப்பாவும் தேடுகிறீர்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை! எந்த தாயும் தன் மகளை விட்டுப் பிரிந்தாலும் அவள் கண் பார்வையில் தான் மகளை வைத்திருப்பாள். பசு எங்கிருந்தாலும் பிரிந்த கன்றினைத்  தேடி ஓடி வரும்.

காட்டில் வாழும் கொடிய மிருகமான சிறுத்தையிடமிருந்து அதன் குட்டியைப் பிரித்து எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றாலும் அது ஆங்காரமாய்த் தேடி வந்து தன் குட்டியை மீட்டு எடுத்துச் செல்லும், அப்படித்தான் தாயும். ஐந்தறிவு கொண்ட அந்த விலங்கிற்கே இவ்வளவு தாய் பாசம் என்றால் உன் தாய் ஆறறிவுள்ள மானுடப் பெண். நன்றாகப் படித்து டாக்டரேட் பட்டமும் பெற்றவர். அவர் குணமோ, அவர் பெயரைப் போலவே புனிதமானது” என்றான்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதைப் புரியும்படி சொல்லுங்கள்” மாதவி.

“உன் அம்மா, வெகு அருகில் தான் எங்கோ இருக்கிறார்கள்; உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உன் வளர்ச்சி மட்டும் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் இந்நேரம் உன்னை வந்து இழுத்துச் சென்றிருப்பார்கள். ஏற்கெனவே அவர்கள் சொல்லியபடி போலீசிற்கோ அல்லது கோர்ட்டிற்கோ போய் கூட உங்களை மீட்டிருப்பார்கள்” என்றான் திட்டவட்டமாக.

“நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்? எங்காவது என் அம்மாவைப் பார்த்தீர்களா?” என்றாள் ஆவலுடன்.

“நான் எங்கும் பார்க்கவில்லை மாதவி. ஆனால் என் மனதில் தோன்றியதைத் தான் நான் சொன்னேன். எல்லாம் ஒரு அனுமானம் தான் மாதவி” என்றான்.

அதற்குள் அவள் வீடும் வந்து விட்டது.

“ராகுல் இனிமேல் நாம் தேவையில்லாமல் சந்திக்க வேண்டாம். மற்றவர்கள்  வம்புப் பேச்சிற்கும்  அவலாக வேண்டாம். போதும் இந்த விளையாட்டு. இத்தோடு நம் நட்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். நான் வருகிறேன்” என்று காரை விட்டு இறங்கினாள்.

“ஒரு நிமிடம்” என்று அவளை நிறுத்தியவன் “மற்றவர்கள் என்றால் யார்?” என்றான்.

“எல்லாம் என் அப்பாவின் உறவினர்கள் தான். லதா சித்தியும், அந்த சின்ன சித்தப்பாவும் தான் நல்லவர்கள். மற்றவர்கள் எல்லாம் விஷப் பூச்சிகள். முன்பெல்லாம் என் அம்மாவைப் பற்றி கோள் சொல்லி விரட்டி விட்டார்கள். இப்போது என்னைப்பற்றி ஏதாவது என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வப்போது வந்து பணம் வாங்கிக் கொண்டு போகும் போது இந்த நல்ல காரியமும் செய்கிறார்கள். அதனால் தான் இனிமேல் தேவையில்லாமல் சந்திக்க வேண்டாம். இதுவே கடைசி சந்திப்பாக இருக்கட்டும். பை” என்று கையை ஆட்டி விட்டுப் போய் விட்டாள்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏக்கவலி அறிவார் யாரே (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    ரகசியமாய் ஒரு சேதி (சிறுகதை) – சசிகலா ரகுராமன்