in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“தப்பெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது. பிறகு தேவையில்லாமல் ஆண்டவனை வம்பிற்கு இழுக்க வேண்டியது. என் அம்மாவை வெளியே தள்ளி என்னைத் தாயற்றப் பெண்ணாக ஆக்கி விட்டீர்கள். இப்போது பதினெட்டு வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது மாப்பிள்ளை ஆகப் போகிறீர்கள். இந்தக் கண்றாவியெல்லாம்  பார்த்துக் கொண்டு என்னால் பொறுத்துக் கொண்டு இங்கே இருக்க முடியாது. சீக்கிரம் என்னையும் எங்காவது ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள்” என்று கோபத்துடன் கத்தினாள் மாதவி.

சிரிப்பதற்குக் கூட வாயே திறக்காத மாதவியா இப்படிக் கத்துகிறாள் என்று ராகவன் ஆச்சர்யப்பட்டான்.

“இதென்ன புதுக்கதை சொல்லுகிறீர்கள்? புது மாப்பிள்ளையா? யார்?” என்றான் ராகவன் ஆச்சர்யத்தோடு.

“தெரியாத மாதிரியே பேசுகிறீர்களே. உங்களுக்கும் சீதாவிற்கும் திருமணம் செய்வதற்கு ஜாதகப் பொருத்தம் கூடப் பார்த்து விட்டார்களே, உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் லதா.

“அப்படியா“ என்றவன் ஆச்சர்யத்தோடு “நீ சொல்வது மட்டும் உண்மையாக இருந்தால் என் மகள் மாதவியை அழைத்துக் கொண்டு அவள் கல்லூரிக்கு அருகிலேயே ஏதாவது ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொண்டு தனியே போய் விடுவேன். இந்த மாதிரி தவறான எண்ணம் கொண்டவர்களோடு நான் சேர்ந்து வாழ மாட்டேன். இது சத்தியம்” என்றான் கோபமாக.

“மாமா, சீதாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற திருட்டு எண்ணத்தால் தான் சரயு அக்காவைப் பற்றி இல்லாத்தும் பொல்லாததுமாகச் சொல்லி உங்கள் வாயாலேயே அவர்களை விரட்டி விட்டார்கள். எல்லாம் தமயந்தி அக்காவின் மாஸ்டர் பிளான் தான்” என்றாள் லதா, வெகுநாட்களாக தன் உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த  உண்மைகளை வெளியிட்டாள்.

கோயிலுக்குச் சென்றவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன், அவர்களிடம் லதா சொன்தை உறுதிப் படுத்திக் கொண்டு, அவர்களிடம் பலமான சண்டைக்குப் பிறகு மாதவியுடன் வேறு வீடு பார்த்துக் கொண்டு சென்றது ஒரு தனிக்கதை. ராகவன், அதிலிருந்து மாதவியிடம் கூட ஏதும் சொல்லாமல் சரயுவைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினான்.

மாதவியும், தாயைப் பிரிந்த பசுங்கன்றைப் போல், உள்ளம் ‘அம்மா அம்மா ‘ என்று கதறத் தேடிக் கொண்டிருந்தாள். அந்தக் கன்றின் உள்ளத்து அலறல், தாய்க்குக் கேட்கவில்லையா, இல்லைக் கேட்டும் மனதைக் கல்லாக்கிக் கொண்டிருக்கிறளா என்று புரியவில்லை.

இதற்கிடையில் மாதவியின் அழகும், பேச்சுத் திறனும், பாடும் ஆற்றலும் கல்லூரியில் நடந்த கல்சுரல் மூலமாக அவளுடைய கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே மட்டுமின்றி மற்ற கல்லூரிகளுடனான இன்டர் காலேஜியேட் காம்படிஷன் மூலமாக மற்ற கல்லூரி மாணவி, மாணவர்களிடையிலும்  பிரபலமானது.

முறையாக கர்நாடக சங்கீத்த்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தால் கல்லூரியில் நடக்கும் போட்டிகள் மட்டுமின்றி, தனியார் தொலைக் காட்சிகளில் நடக்கும் சங்கீதப் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வந்தாள்.

மாதவியின் கல்லூரியில் எலக்ட்ரிகல் இஞ்ஜினீயரிங் சீனியர் ஸ்டூண்ட் ராகுல். கல்லூரிக்கே ‘ஆடி‘ காரில் வரும் அளவு பணக்கார வீட்டுப் பிள்ளை. நல்ல ஆணழகன்.

அழகன் என்றவுடன் பால் போல் வெள்ளை நிறம் என்று நினைக்க வேண்டாம். கருப்புமில்லை வெள்ளையுமில்லை. நல்ல காபி நிறம். ஆறடி உயரம், செதுக்கிய சிலைபோல் முகஅமைப்பு, எப்போதும் புன்னகை தவழும் முகம். அவனைச் சுற்றிப் பட்டாம்பூச்சிகள் போல் மாணவிகள் கூட்டம் கூடினாலும் சிரித்துக் கொண்டே எல்லோரையும் தவிர்த்து விட்டு தனியாக நிற்பவன். 

ஆனால் ஒரு நாள் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் மாதவியின் பாட்டைக் கேட்டவுடன், அடிக்கடி அவள் பாட்டைக் கேட்க ஆசைப்பட்டு, அவள் பாட்டிற்கு அடிமையானது ஒருபுறம் இருக்க, பார்க்கப் பார்க்க மனதை கொள்ளை கொண்ட அவள் அழகு ஒருபுறமும் அவனை அறியாமலே அடிமையாக்கியது.

ஆனால் அவனுக்குள் ஒரு கேள்வி! ‘பாடும்போது மட்டும் சிரித்துக் கொண்டே பாடி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவள், மற்ற நேரத்தில் சிரிக்க மறந்தது ஏன்?‘ என்ற ஒரு கேள்வி அவன் உள்ளத்தில் தோன்றி மறையும்.

ஒரு நாள் கல்லூரியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாட மாதவி மட்டும் தனியே மேடை ஏறினாள். வழக்கமாக மாதவியும், ராகுலின் வகுப்புத் தோழி தன்யாவும் சேர்ந்தே பாடுவர். அன்று அவளுக்குத் தொண்டை சரியில்லாத்தால் மாதவி தனித்துப் பாட வேண்டியதாயிற்று.

தன்யா எப்போதும் மற்றவர்களை விட தன் குரல் தான் டாமினேட் செய்ய வேண்டுமென்று தேவைக்கு அதிகமாகவே உரத்துப் பாடுவாள். அதிலும் ஜூனியர் ஸ்டூடண்ட் ஆன மாதவியுடன் சேர்ந்து பாட விரும்புவதே இல்லை.

ஆனால் அவளுக்குக் கொஞ்சம் மறதி அதிகமானதால் அடிக்கடி பாடல் வரிகள் மறந்து விடும். அப்போது மறந்த பாடல் வரிகளை எடுத்துக் கொடுப்பதற்காக மாதவியைத் தன்னுடன் பாட அனுமதித்துக் கொண்டிருந்தாள்.

அப்படியும் மாதவி மேடை ஏறும் போது,”மாதவி, நன்றாக எடுப்பாகப் பாடி என் பேரைக் காப்பாற்று. எனக்கு இருக்கும் நல்ல பேரையும் கெடுத்து விடாதே” என்று அறிவுரை சொல்லி அனுப்பினாள்.

மாதவியும் லேசான ஒரு புன்முறுவலுடன் மேடை ஏறினாள். அந்தப் புன்முறுவல் தன்யாவைக் கேலி செய்ததா இல்லை அவள் சொல்வதற்கு சரியென்று சொன்னதா என்று அருகில் இருந்தோர் குழம்பினர்.

மாதவி தன் மென்மையான பட்டுப் போன்ற குரலில் பாடிய பாடல் எல்லோரையும் அதிகமாகக் கவர்ந்ததுடன், இனிமேல் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தன்யா பாடவேண்டாம் என்றும், மாதவி மட்டும் தனியாகப் பாடினாலே போதும் என்றும் நினைக்க வைத்தது.

‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று பாரதி போல் வரம் வேண்டி வந்தாளோ’ என்று ஆச்சர்யப்பட்டான் ராகுல். அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ராகுல், மேடை விட்டு இறங்கி தோழிகள் புடை சூழ வந்த  மாதவியின் எதிரில் போய் நின்று, “ஹலோ” என்றான்.

“நீங்கள் சீனியர் தானே, சொல்லுங்கள் சார்” என்றாள் லேசான பயம் கலந்த மரியாதையுடன்.

“எனக்கு ஒரு ஆச்சர்யம்” என்றான்.

‘என்ன?’ என்பது போல் மாதவி அவனை உறுத்துப் பார்த்தாள்.

“மயில் அழகாக நடனமாடும்  என்பது தெரியும், ஆனால் அழகாகப் பாடவும் செய்யும் என்பது இப்போது புரிந்தது” என்றான்.

“ஸாரி, உங்களுக்குப் புரிந்தது எனக்குப் புரியவில்லை” என்றாள் மாதவி புருவங்கள் முடிச்சு போட. ராகுல் உறக்க ‘ஹ்ஹ்ஹா’ என்று சிரித்தான்.

சுற்றி நின்ற அவள் தோழிகளோ, “நீங்கள் இருவரும் தமிழ் தான் பேசுகிறீர்களா? எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை” என்றனர்.

ராகுல் மாதவியை உறுத்துப் பார்த்தபடி, “நீங்கள் மிக அழகு, பாடியது அதைவிட அழகு” என்றான். ஆனால் மாதவியோ, எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், அவனை உறுத்துப் பார்த்தபடி மெதுவாக சென்றாள்.

“ஹலோ மேடம், ஒன்றும் பதில் சொல்லாமல் போனால் எப்படி?”

“உங்கள் கருத்தை நீங்கள் சொன்னீர்கள், அதற்கு ஒரு நன்றி. அதற்கு மேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்று லேசாக சிரித்தபடி சென்றாள்.

ஓரமாக நின்று, நடந்தது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் ராகுலின் நண்பன் விமல்.

“டேய், சீனியர் என்று கூட மதிக்காமல் போகிற போக்கில் ஏதோ பதில் சொல்லிவிட்டுப்  போகிறாள். அவளை நல்ல ‘டோஸ்’ விடாமல் பார்த்து ரசித்துக் கொண்டு வேறு இருக்கிறாய். நண்பா, நீ நல்லவனா கெட்டவனா சொல்” என்றான் விமல் கிண்டலாக.

“விமல், நான் நல்லவனா கெட்டவனா என்று எனக்குத் தெரியாது, ஆனால் மாதவியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஏனென்று தெரியாது. அந்தப் பெண் பொது நிகழ்ச்சிக்கு வந்தால்தான் கொஞ்சமாவது பேசவோ சிரிக்கவோ செய்கிறாள். வகுப்பிலோ மற்ற தோழிகளுடன் இருக்கும் போதோ முகத்தில் எந்த உணர்ச்சியும் நான் பார்த்ததில்லை, மிகவும் இறுக்கமாகவே இருக்கிறாள். அவள் கண்களில் எப்போதும் மெல்லிய சோகம்தான் இழைந்தோடுகிறது. அதுதான் ஏனென்று தெரியவில்லை” என்றான் ராகுல் பெருமூச்செறிந்தபடி.

“ராகுல், இந்த மாதவி ரொம்பவும் திமிர் பிடித்தவள் என்று நினைக்கிறேன். அவள் வகுப்பில் கூட அவளுக்கு யாரும் பாய் பிரண்ட் கிடையாதாம். ஆண்கள் எல்லோரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று அவளுடைய தோழி வெண்பாவிடம் சொல்வாளாம்” என்றான் விமல்.

“விமல், எனக்கு ஓர் உதவி செய்வாயா? அந்த வெண்பாவிடம் பேசி, இந்த மாதவி ஏன் இப்படி இருக்கிறாள் என்று தெரிந்து வர முடியமா?”

“தோழன் விடு தூதா? வெண்பாவெல்லாம் வேண்டாம், அவள் இவளை விட திமிர் பிடித்தவள். இந்த மாதவி ஏன் அப்படி ‘உம்’மென்று இருக்கிறாள் என்று உனக்குத் தெரிய வேண்டும், அவ்வளவு தானே. இந்த சி.ஐ.டி.யை நம்பு, நம்பினார் கெடுவதில்லை. ஒரு வாரத்தில் உனக்குத் தேவையான எல்லா இன்பர்மேஷனும் உன்னிடம் இருக்கும். சென்று வருகிறேன் தோழா, வென்று வருகிறேன்” என்று கலாட்டாவோடு விடை பெற்றான் விமல்.

ஒரு வாரத்தில் வருகிறேன் என்று சொல்லிச் சென்ற விமல், பத்து நாட்கள் கழித்துத் தான் நண்பனைக் காண வந்தான். முகம் பேயறைந்தாற் போல் இருந்தது. வந்தவன் வாயைத் திறந்து ஒன்றும் பேசவுமில்லை.

மாதவியிடம் செமையாக ‘டோஸ்’ வாங்கிக் கொண்டு வந்தானோ? ராகுலுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்டால் பதிலும் இல்லை. ஆனால் அவனை எப்படிப் பேச வைக்க வேண்டும் என்று ராகுலுக்குத் தெரியும்.

ஜீன்ஸ் பேண்டிற்கும், டீ ஷர்ட்டிற்கும் மாறி, “டேய் விமல், நான் அருகில் இருக்கும் ஆரிய பவனிற்குப் போய் ஒரு செட் போண்டாவும் டீயும் குடிக்கப் போகிறேன். நீயும் வாடா” என்றான். விமலிற்கு அந்த ஹோட்டல் போண்டா மிகவும் பிடிக்கும் என்று ராகுலுக்குத் தெரியும்.

இருவருக்கும் தலா ஒரு செட் போண்டா ஆர்டர் செய்து விட்டு, அவன் கொஞ்சம் சாப்பிடும் வரை காத்திருந்து விட்டுப் பிறகு கேட்டான் ராகுல்.

“விமல், என்னடா ஆயிற்று உனக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா? மாதவியைப் பற்றி விசாரித்து ஒரு வாரத்தில் சொல்கிறேன் என்று சொன்னாயே! நீயே கோவிட் வந்தவன் போல் இருக்கிறாயே, என்ன ஆயிற்று? மாதவியைப் பற்றி ஏதும் விஷயம் தெரிந்ததா?“

பொதுவாகத் தலையாட்டினான் விமல். “இன்னொரு செட் போண்டா சொல்லுடா. நீ ஒன்று நான் ஒன்று சாப்பிடலாம், நிறைய விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது” என்றான். அப்படியும் சிறிது நேரம் பேசவில்லை.

“சொல்லித் தொலையேண்டா! மனுஷனை இப்படி டென்ஷன் பண்றியே” என்று மிக மெதுவாக அடிக்குரலில் உறுமினான் ராகுல்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை