இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“நிறைய நேரம் பேசுவதற்கு நமக்குள் என்ன இருக்கிறது ராகுல்? உன் அப்பாதான் தன்னுடைய முடிவை சொல்லி விட்டாரே, நமக்குள் வேறு என்ன இருக்கிறது? உன் அத்தை லண்டனிலிருந்து தன் மகளுடன் வந்திருக்கிறார்கள் இல்லையா? உன் அத்தை மகளைத் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடு. என்னால் ஆறுமாதத்தில் என் அம்மாவைத் தேடி கண்டுபிடிக்க முடியாது, அதனால் நீ உன் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள். எனக்காகக் காத்திருந்து உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே” என உண்மையாகவும், அதே நேரத்தில் அந்த உண்மையையை ஏற்றுக் கொள்ள முடியாமலும், கோபமாகத் தொடங்கி கண்களில் நீர் ததும்ப நின்றாள்.
“முட்டாளா நீ, கல்யாணம் எனக்கா இல்லை என் அப்பாவிற்கா? என் விஷயத்தில் அநாவசியமாக தலையிடுவது பெற்ற தகப்பனாராக இருந்தாலும் நான் அனுமதிக்க மாட்டேன். இங்கே பார்… எனக்குத் திருமணம் என்ற ஒன்று நடந்தால், அது உன்னோடு மட்டும்தான். மனைவி என்றால் அது நீ மட்டும்தான். என் தோல்சுருங்கி, நடக்க முடியாத வயதை அடைந்தாலும், கண் புருவங்கள் எல்லாம் வெளுத்த வயதிலும் என் வாழ்க்கைத்துணை நீதான். கடவுள் அருளால் உனக்கு முன் நான் இறந்தால், என் கடைசி மூச்சு உன் மடியில்தான். இதை உணர்ந்து கொள். அதை விட்டு, என் அப்பா சொன்னார், என் கொள்ளுத் தாத்தா சொன்னார் என்று என்னை விலக்கி என்னோடு பேசுவதைத் தவிர்த்தால், நான் சும்மாயிருக்க மாட்டேன். பல்லை உடைத்து விடுவேன்” என்றான் கோபமாக.
“உங்கள் அப்பாதான் என்னை உன்னிடமிருந்து விலகி விடச் சொன்னாரே. அப்படி இருக்கும்போது நான் உன்னிடம் பழகினால் சரி வருமா? பணத்திற்காகத்தான் நான் உன்னிடம் பழகுகிறேன் என்று சொல்வார்கள், அது எனக்கு அவமானமில்லையா?” என்றாள் கோபத்துடன்.
“இங்கே பார் மாதவி, உன் அம்மாவைத் தேடிக் கண்டுபிடிப்பது இனி நம் இருவர் வேலை. நீ தனியாக ஒன்றும் செய்ய முடியாது. நான் உனக்கு உயிரோடு வேண்டுமென்றால், என்னோடு நல்ல முறையில் சந்தோஷமாகப் பழக வேண்டும். நான் பேசும்போதெல்லாம் நீயும் என்னைத் தவிர்க்காமல் பேச வேண்டும்” என்றான் கறாராக.
“உன் அப்பா தேடி வந்து என்னைத் திட்டினால்?” மாதவி சிரித்துக் கொண்டு அவனிடம் கேட்டாள்.
“போய்யா போய் உன் பிள்ளையை முதலில் கட்டுப்பாடு செய், பிறகு என்னிடம் பேசு என்று சொல்” என்று பாடம் எடுத்தான் ராகுல்.
“நீங்கள் மறுபடியும் எப்போது லண்டன் போக வேண்டும்?”
“இன்னும் ஒரு வாரத்தில் நான் கிளம்பிவிடுவேன். ஆனால் அதற்கு முன் என் தங்கை உன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறன்” என்றான் அவளைப் பார்த்து புன்முறுவல் செய்தபடி.
“என்ன உளறுகிறாய்? உனக்கு தங்கையா?” என்றாள் மாதவி ஆச்சர்யத்துடன்.
“தங்கை என்றால் உடன் பிறந்தால் தானா? என் அத்தை மகள் ரக்ஷிதாவைத்தான் சொல்கிறேன்”
“ஆனால் உன் அப்பா அன்று என்னிடம் பேசும்போது, ‘என் தங்கை மகள் லண்டனிலிருந்து எங்கள் மகன் ராகுலிற்காகவே வந்திருக்கிறாள். செல்வாக்கு, அழகு, பேரன்டேஜ் எல்லாவற்றிலும் உன்னை விடச் சிறந்தவள். அவளைத்தான் என் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்றாரே. நீ அவளைத் தங்கை என்று சொல்கிறாய், நீ பொய் பேசுகிறாயா? இல்லை உன் அப்பா என்னை மிரட்டுகிறாரா?” என்றாள் மாதவி கோபமாக.
“இரண்டும் இல்லை மாதவி. என் அத்தை அவர்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகத்தான் அழைத்து வந்திருக்கிறார்கள், அதைத்தான் என் அப்பாவிடமும் பேசியிருக்கிறார்கள். அதனால் தான் என் தந்தையும் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசி நம் இருவர் உள்ளத்தையும் புண்படுத்தினார். எனக்கும் கோபம் அதிகமாகி என் அம்மாவிடம் கூட பேசுவதைத் தவிர்த்தேன். என் அறையில் சென்று கதவைத் தடால் என்று சாத்திவிட்டு படுக்கையில் உட்கார்ந்தேன்.
அப்போது தான் ரக்ஷிதா என் அறைக்கு வந்து, அவளுக்கு இப்போது திருமணத்தில் எந்த ஆர்வமும் இல்லையென்றும், மாஸ்டர் டிகிரி படிக்க வேண்டும் என்றும், அவளுக்கு என்னை ‘அண்ணா’ என்று அழைக்கத்தான் ஆசை என்றும் கூறினாள். அப்போதுதான் எனக்கு நிம்மதியான மூச்சு வந்தது. அவள் தான் என்னை ‘மாதவியிடம் நீ சுமுகமாகப் பேசு, பிறகு நானும் வந்து பேசுகிறேன்’ என்றாள்” என்று முடித்தான் ராகுல்.
“அப்படியா? நீங்கள் சொல்வது உண்மையானால் எனக்குக் கூட ரக்ஷிதாவைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது” என்றவள், அப்போது தான் நிம்மதியாகச் சிரித்தாள்.
“மாதவி, எனக்கு உன் அம்மாவின் போட்டோ வேண்டும். இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இரண்டே மாத்த்தில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது உன் செல்போனில் அவர்கள் படம் இருக்கிறதா? இருந்தால் இப்போது எனக்கு வாட்ஸ்ஆப்பில் உடனே அனுப்பு” என்றான்.
மாதவி தன் செல்போனிலிருந்த அவள் அம்மாவின் போட்டோக்களைக் காட்டினாள். அந்த இளம்வயதில் மாதவியைப் போலவே பேரழகாய் இருந்திருக்கிறார் அவள் அம்மா. அதைப் பார்த்து திகைத்தான் ராகுல்.
“ஏய் ராகுல், என்ன என் அம்மாவை அப்படிப் பார்க்கிறாய்?” என்றாள் சிரிப்புடன்.
“ஏய் மாதவி, இது உன் போட்டோவா இல்லை உன் அம்மாவின் போட்டோவா?” என்று கேட்டான் ஆச்சர்யத்துடன்.
“எனக்கு நன்றாக வாயில் வந்துவிடப் போகிறது. என் அம்மாவிற்கும் எனக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா உனக்கு?” என்றாள் மாதவி பொய் கோபத்துடன்.
“மாதவி, நீ அப்படியே உன் அம்மாவின் ஜெராக்ஸ் காப்பி” என்றான் ஆச்சர்யம் சிறிதும் குறையாமல்.
“எப்போதும் பெண் குழந்தைகள் அப்பா மாதிரி இருந்தால் தான் அதிர்ஷ்டம். நான் அம்மாவைப்போல் இருப்பதால்தான் இவ்வளவு துரதிருஷ்டம் வாழ்க்கையில்”
“நல்லவேளை நீ உன் அப்பா மாதிரி இல்லை. அவரைப் போல் நீ இருந்திருந்தால், நான் காததூரம் ஓடியிருப்பேன். என் அத்தைபோல் இருப்பதால்தான் ரதிமாதிரி இருக்கிறாய்” என்றான் அவள் கைகளை பிடித்து கண்களால் பருகியவாறே.
“ராகுல் போதும், வீட்டிற்குப் போகலாமா?”
“போகலாம். ரக்ஷிதாவை எப்போது சந்திக்கப் போகிறாய்? எனக்கு ஒன்றும் இதில் இஷ்டமில்லை. அவள்தான் உன்னை சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். நல்லபெண், உனக்கும் வெண்பாபோல் ஒரு நல்ல சினேகிதியாக இருப்பாள். அவளும் உன் அம்மாவின் போட்டோவைக் காட்டச் சொன்னாள், அவளுக்குத் தெரிந்த வழிகளில் தேடுகிறேன் என்கிறாள்“
“என் அம்மாவைக் கண்டுபிடித்து, நம் திருமணம் சீக்கிரம் நடப்பதால் அவளுக்கு என்ன சந்தோஷம்?” என்றாள் மாதவி சந்தேகக் குரலில்.
“நீ என்ன எல்லாவற்றையும் சந்தேகமாகவேப் பார்க்கிறாய்? நம் திருமணம் சீக்கிரம் நடந்தால், அதோடு அவள் அம்மா சொந்தத்தில் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட மாட்டார்கள் இல்லையா. அதனால் தான்” என்றான்.
“சந்தேகத்திலேயே பிறந்து, சந்தேகத்திலேயே வாழ்ந்து, அதே சந்தேகத்தால் பெற்ற தாயை இழந்து, இன்று தாயன்பிற்கு ஏங்கி, கடலில் தத்தளிப்பவன் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கரை சேர விரும்புவதுபோல் நான் உங்கள் அன்பிற்காக ஏங்குகிறேன் ராகுல். என்னை எந்த நிலையிலும் மறக்க மாட்டீர்களே?” கண்களில் நீர் தளும்ப மாதவி கேட்டபோது, அவள் கண்களில் பொங்கிய சோகம் அவன் இதயத்தை உலுக்கியது.
அவர்கள் இருக்கும் இடம் ஹோட்டல் என்பதை மறந்தான். ஏன், தன்னையே மறந்தான். அவனுடைய இருக்கையில் இருந்து எழுந்துச் சென்று அவளை மெதுவாகத் தூக்கித் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டான். நல்லவேளையாக அது பேமிலி ரூம் என்பதால் யாரும் அவர்களைப் பார்க்கவில்லை.
பிறகு பேசிக்கொண்டே மாதவியை அவனுடைய காரில் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டான். அவளுடைய அப்பாவிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பினான்.
கௌசல்யா அவன் முகத்திலிருந்த சந்தோஷத்தைப் பார்த்தவுடன், மாதவியுடன் பேசிவிட்டு வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவளுக்கும் இதில் பரம சந்தோஷமே. உண்மையைச் சொல்லப் போனால், அவளுக்கும் மாதவியை மிகவும் பிடிக்கும்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாதவிக்கு மீண்டும் ராகுலிடமிருந்து போன் வந்தது.
‘ரக்ஷிதா மாதவியைப் பார்க்க விரும்புவதாகவும், அவள் உடனே மேற்படிப்பிற்காக லண்டன் கிளம்புவதால், அவளை அழைத்து வரலாமா?’ என்றும் கேட்டான்.
மாதவிக்கும் அவளைப் பார்க்க ஆசையாக இருந்தது. மாதவி சரியென கூற, வழக்கமாக சந்திக்கும் ஹோட்டலுக்கு ரக்ஷிதாவை அழைத்து வந்தான் ராகுல். களங்கமற்ற அவள் அழகும், வெள்ளந்தியான அவள் பேச்சும், மாதவிக்கு ரக்ஷிதாவை மிகவும் பிடித்து விட்டது.
ரக்ஷிதா மாதவியை “அண்ணி” என்றே அழைக்கத் தொடங்கி விட்டாள்.
ஏனென்று புரியாமல் மாதவி அவளைப் பார்க்க, “ராகுலை அண்ணா என்றுதானே அழைக்கிறேன், அப்போது நீங்கள் எனக்கு அண்ணிதானே” என்றாள்.
“அண்ணி ஒரு குட் நியூஸ். எனக்கு ‘லண்டன் யுனிவர்ஸிட்டி ஆப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சையன்ஸ்’ என்னும் கல்லூரியில் மாஸ்டர்ஸ் படிப்பதற்கு இடம் கிடைத்திருக்கிறது. அதனால் நான் நாளையே கிளம்புகிறேன் அண்ணி” என்றாள் குதூகலத்துடன்.
“அது மிகவும் புகழ்பெற்ற யூனிவர்ஸிட்டியா ரக்ஷிதா?” என மாதவி கேட்க
“அண்ணி, அது லண்டனிலேயே சிறந்த பத்து யூனிவர்ஸிட்டியில் நான்காவது ரேங்க். அதில் இடம் கிடைப்பதே மிகவும் கஷ்டம். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இடம் கிடைத்திருக்கிறது அண்ணி” என்றாள் சந்தோஷமாக.
“அசடு, நீயும் எல்லா பாடங்களிலும் நிறைய மார்க் வாங்கியிருப்பதாக ராகுல் சொன்னார். கடவுளின் ஆசீர்வாதம் இருந்தாலும் உன் உழைப்பும் இதில் உண்டு. அதனால் சந்தோஷமாக போய் கல்லூரியில் சேர்” என்றாள் மாதவி அவளை அணைத்துக் கொண்டு.
ஒரே மாதத்தில் ஒருவர் பின் ஒருவராக ராகுலும் ரக்ஷிதாவும் லண்டனுக்குக் கிளம்பி விட்டனர். மாதவிக்குத் தான் திடீரென்று யாரும் இல்லாமல் தனித்து விட்டதுபோல் வெறுமையாக இருந்தது.
ராகுல் தினம் இரவு ஒன்பது மணிக்கு செல்போனில் அழைத்து விடுவான். அவன் பேசி வைத்தவுடன் மாதவிக்கு ஏக்கம் இன்னும் அதிகமாகும். அவன் செல்லமாகத் திட்டியதும், ஆசைதீர கொஞ்சியதும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அதை அவனிடம் சொன்னால், “உன் ஆபிசில் லீவ் போட்டு ஒரு மாதம் லண்டன் வந்து என்னோடு வந்து என்ஜாய் பண்ணு” என்பான்.
வாரம் ஒருநாள் கட்டாயம் போன் செய்துவிடுவாள் ரக்ஷிதா. விடுமுறை நாட்களில் அவள் சென்ற இடங்கள், அவள் செய்த அட்டகாசங்கள் எல்லாவற்றையும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விடுவாள்.
இத்தனை நாள் அவளுடைய நட்பு கிடைத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று தனக்குள் நினைத்துக் கொள்வாள் மாதவி. இப்படியே, பிரிவும் போன் மூலம் சந்தோஷமுமாகக் கழிந்தது இரண்டு மாதங்கள்.
ஒரு நாள் எதிர்ப்பார்க்காத நேரத்தில், மாதவி ஆபீஸில் இருந்த போது போன் செய்தாள் ரக்ஷிதா.
“அண்ணி… அச்சுஅசல் உங்களைப்போல் யாராவது ஒரு அக்கா இருக்கிறார்களா உங்களுக்கு?” என கேட்டாள் ரக்ஷிதா.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings