in ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“நீங்கள் உங்கள் அம்மாவைக் கண்டுபிடிக்க போலீசை நாடினீர்களா?” என்றாள் கௌசல்யா.

“போலீசிற்குப் போனால் அம்மாவிற்கும் கெட்ட பெயர், குடும்பத்திற்கும் கெட்ட பெயர் என்று போலீசின் உதவியை நாடவில்லை” என்றாள் மாதவி. 

“மாதவி, உனக்கு உண்மையில் ராகுல் மேல் பிரியம் இருந்தால், அவனிடமிருந்து திருமண பந்தத்திலிருந்து விலகி விடு. நான் ஏன் இப்படிப் பேசுகிறேன் என்றால், இத்தனை வருடமாகத் தேடியும் உன் அம்மா கிடைக்கவில்லை. நீயோ உன் அம்மா இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாய். உன் வீட்டில் உள்ள சிக்கல்களுக்காக, என் மகன் ஏன் தன் இல்லற வாழ்க்கையை இழக்க வேண்டும்? இப்போது என் சகோதரி தன் பெண்ணை ராகுலிற்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக இங்கு வந்திருக்கிறாள். வசதியிலும் எங்களுக்கு சம்மானவர்கள். சிக்கலில்லாத பேரன்டேஜ்” என்றார் பரத் கோபமாக.

“ஸாரி அங்கிள், நான் உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் அதிக மனக்கஷ்டத்தைக் கொடுத்து விட்டேன் போலிருக்கிறது. நானாக உங்கள் மகனைத் தேடி வரவில்லை. நீங்கள் ராகுலை என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். வெரி ஸாரி, நான் இனிமேல் ராகுலுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்” என்றவள், பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எழுந்து போய வாஷ் பேசினில் கையைக் கழுவிக் கொண்டு தன் ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

விஷயம் இவ்வளவு விபரீதமாகப் போகும் என்று எதிர்ப்பார்க்காத ராகுல், என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமித்து நின்றான். அந்த அதிர்ச்சியிலிருந்து நீங்கியவுடன் எரிமலையாக வெடித்தான்.

“மாதவியை நான்தான் தொந்தரவு செய்து அழைத்து வந்தேன், அதற்கு எனக்கு சரியான பரிசு கொடுத்து விட்டீர்கள். இத்தனை நாள் நீங்கள் ஜாதகம் பற்றியெல்லாம் பேசவில்லை. உங்களை இத்தனை நாள் திரும்பிக் கூடப் பார்க்காத தங்கை திடீரென்று பெண்ணிற்கு வரன் தேடி வந்தவுடன், நீங்கள் என் முதுகில் குத்த துணிந்து விட்டீர்கள். ஆனால் ஒன்று சொல்லுகின்றேன் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை ஜென்மம் ஆனாலும் என் மனைவி மாதவிதான்” என்றவன், கோபமாக சாப்பாட்டுத் தட்டிலேயே கையைக் கழுவி விட்டு காரை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றான்.

அன்று மாலையே புவனா தன் மகளை அழைத்துக் கொண்டு ராகுல் வீட்டிற்குத் திரும்பினாள். வெகுநேரம் கழித்தே ராகுல் வீட்டிற்குத்  திரும்பினான்.

“ராகுல் எப்படியப்பா இருக்கிறாய்?” என்று புவனா குசலம் விசாரித்தாள்.

“நான் நன்றாக இருக்கிறேன் ஆன்ட்டி. லண்டனிலிருந்து எப்போது வந்தீர்கள்? அங்கிள் வரவில்லையா?” என்றான் விசாரிக்க வேண்டுமே என்று.

“அங்கிள் வரவில்லை, நானும் ரக்‌ஷிதாவும் தான் வந்திருக்கிறோம்” என்றவள் அதே நேரத்தில் ரக்‌ஷிதா சமையல் அறையில் இருந்து ஒரு கப்பில் குலோப் ஜாமுன்களை எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வைத்து சாப்பிட்டுக் கொண்டே வந்தவளைப் பார்த்து சிரித்தாள்.

ராகுல் அவளை ஒரு பார்வைப்  பார்த்து விட்டு மாடியில் தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டான். போனைப் பார்த்தான். மாதவிக்கு ஒரு பத்து மிஸ்டு கால் அனுப்பியிருந்தான். வாட்ஸ் அப்பில் அழைத்தும் மெசேஜ் அனுப்பியும் இருந்தான், ஆனால் எதற்கும் பதில் இல்லை. ராகுலிற்கு அவள் மேல் கொஞ்சமும் கோபம் வரவில்லை, அவன் கோபம் அவன் அப்பா பரத் மேல் தான்.

இரண்டு நாட்கள் மாதவி அவளாகப் பேசுவாள் என்று காத்திருந்தான் ராகுல். ஆனால் அவளிடமிருந்து எந்த போனுமில்லை மெஸேஜும் இல்லை. பொறுக்க முடியாமல் அவளுடைய ஆபீசிற்கே நேரில் சென்றான்.

அவளுடைய தோழி வெண்பா வந்து, “மாதவி இன்று வேலைக்கு வரவில்லை” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. கண்களை நேருக்கு அந்த பார்க்காமல் அவள் பேசியதிலிருந்தே அவள் பொய் சொல்கிறாள் என்று நன்றாகப் புரிந்தது.

“வெண்பா, பொய் பேசாதே. உன் ப்ரண்ட் நாங்கள் வழக்கமாக சந்திக்கும் ஹோட்டலில் இன்று மாலை நாலரை மணிக்கு என்னைக் கட்டாயம் வந்து பார்க்க வேண்டும். இல்லையென்றால் நான் உங்கள் ஆபீஸ் சி.இ.ஓ.வை சந்தித்து, உன்னையும் சாட்சிக்கு அழைத்து, எங்கள் காதலைப் புட்டு வைக்க வேண்டியிருக்கும். உன் தோழியின் மானம் தான் காற்றில் பறக்கும், அதனால் உன் ப்ரண்ட் கட்டாயம் என்னை வந்து பார்க்க வேண்டும்” என்று சொல்லி விட்டு காரின் கதவை வேகமாக அடித்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.

வீட்டிற்குச் சென்றவன், அப்பா, அம்மா, அத்தை எல்லோரும் பார்த்திருக்க யாருடனும் பேசவில்லை. நேரே மாடியில் தன் அறைக்குச் சென்று கதவை சாத்தினான். அப்போது மத்தியானம் ஒரு மணியாகி விட்டது. வீட்டில் எல்லோரும் இவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர்.

வேலம்மாள், “நான் போய் சின்னவரை அழைத்து வருகிறேன்” என்று மாடிக்குப் போக்க் கிளம்பினாள்.

அவளைத் தடுத்த ரக்‌ஷிதா, “நான் போய் அழைத்து வருகிறேன்” என்று வேகமாக ஓடினாள்.

ராகுலின் அறைக்கதவு தாளிடாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது.  கதவைத் தட்டி, “வரலாமா” என்று அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே போனாள்.

‘வா’ என்பது போல் தலையை ஆட்டியவன், ‘என்ன’ என்ற கேள்விக்குறியுடன் அவளை நிமிர்ந்நு பார்த்தான்.

“உங்களை சாப்பிட அழைத்து வரச் சொன்னார்கள். ஆமாம், நான் உங்களை என்னவென்று கூப்பிடுவது? மாமா என்று கூப்பிடலாமா?” என்றாள் லேசாகத் தலையை ஒருபுறமாகச் சாய்த்து.

“மாமாவும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம், எனக்கென்று தான் ஒரு பெயர் இருக்கிறதே, பெயர் சொல்லிக் கூப்பிடு” என்றான் ராகுல்.

“கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறவரை யாராவது பேர் சொல்லிக் கூப்பிடுவார்களா? அம்மா என்னைக் கொன்றே போட்டு விடும்” என்றாள் ரக்‌ஷிதா.

“இது என்ன புதுக்கதை? யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?” என்றான் விழிகளை அகல விரித்து.

“நம் இருவருக்கும் தான். அதற்குத் தான் அம்மா என்னைத் தொந்தரவு செய்து அழைத்து வந்திருக்கிறார்கள்“ என்றாள்.

“தொந்தரவு செய்தா?”   என்றான் ஆச்சர்யமாக.

“ஆம்… நான் பேச்சிலர் தானே முடித்திருக்கிறேன். மேலே மாஸ்டர் டிகிரி படிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. திருமணம் என்பது இப்போது நான் நினைக்கக் கூட விரும்பாத ஒன்று” என ரக்‌ஷிதா கூற

“அப்பாடா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ராகுல்.

“என்ன மாமா பெருமூச்செல்லாம் பலமாக இருக்கிறது. உங்களுக்கும் இப்போது திருமணத்தில் விருப்பம் இல்லையா? யாரையாவது ‘லவ்’ பண்றீங்களா?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள் ரக்‌ஷிதா. ராகுல் சிறிது தயக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

“பயப்படாதீர்கள் மாமா. நான் உங்கள் காதலுக்கு என்னால் முடிந்தால் உதவி செய்வேனே தவிர உபத்திரவமாய் இருக்க மாட்டேன், இது அம்மா சத்தியம்” என்றாள் குழந்தை போல்.

ராகுலுக்கு அச்சு அசல் குழந்தை போல் கள்ளங்கபடின்று இருக்கும் ரக்‌ஷிதாவை மிகவும் பிடித்து விட்டது. இவளைப் போல் ஒரு தங்கை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவன் லேசாக சிரித்துக் கொண்டான்.

மாதவியிடம் தனக்குள்ள காதலை அவளிடம் கூறினான். தனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது மாதவியுடன் மட்டும் தான் என்று உறுதியுடன் கூறினான். மாதவி வீட்டிலின்று வெளியேற்றப்பட்டதையும், அதனால் அவளுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலையும் விவரமாக அவளிடம் கூறினான்.

“கவலைப்படாதே மாமா. எல்லோரும் சேர்ந்து அந்த ஆன்ட்டியைக் கண்டுபிடிப்போம். மாதவி மனம் சந்தோஷப் படும்படி அவளுடைய அம்மா ,அப்பா இருவரின் ஆசீர்வாதத்துடன் உங்கள் திருமணம் நடைபெறும்“ என்று வாக்குறுதிக் கொடுத்தாள் ரக்‌ஷிதா.

“இன்று மாலை நாலரை மணிக்கு மாதவியை வழக்கமாக சந்திக்கும் ஒரு ரெஸ்டாரன்ட்டில் சந்திக்க வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயா? நான் உனக்கு அவளை அறிமுகப்படுத்துகிறேன்” என்றான்  ராகுல்.

விழுந்து விழுந்து சிரித்தாள் ரக்‌ஷிதா, “நான் அண்ணா என்று உங்களைக் கூப்பிடலாமா? எனக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லாமல், பாலைவனத்தில் நிற்கும் ஒற்றைப் பனைமரம் போல் இருப்பதால் அண்ணா அக்கா உறவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மாமா என்று உங்களை அழைப்பது எனக்கு ஒட்டாத உறவுப் போல் இருக்கிறது” என்றாள்.

“உனக்கு எப்படி விருப்பமோ அப்படிக் கூப்பிடலாம், அதற்கா இப்படிச் சிரிச்சே?” என்று கேட்டான்.

“ஐயோ அண்ணா, நான் அதற்கு சிரிக்கவில்லை. நீங்கள் ரொம்ப இன்னசன்ட். உங்களுக்கே மாதவியிடம் வரவேற்பு எப்படி இருக்குமென்று தெரியவில்லை, இந்த நிலையில் நான்வேறு உங்களுடனா? வெளங்கிடும். இன்றைய உங்கள் சந்திப்பு சந்தோஷமாக வெற்றிகரமாக முடியட்டும், என் வாழ்த்துக்கள். பிறகு என்னை அறிமுகப்படுத்துங்கள். இப்போது வந்து லஞ்ச் சாப்பிடுங்கள். அத்தை வருத்தமாக இருக்கிறார்கள், உங்கள் ஆற்றாமையை அவர்களிடம் காட்டாதீர்கள்” என்றாள்.

“சரி” என்றவன், “அம்மாவிடம் நான் பேசிக் கொள்கிறேன். வா ரக்‌ஷிதா நாம் போய் லஞ்ச் சாப்பிடலாம். பிறகு நான் ஒரு நான்கு மணிக்கு மாதவியை ரெஸ்டாரென்ட்டில் போய் பார்க்க வேண்டும்” என்றான்.

இருவரும் மாடியிலிருந்து சிரித்து சந்தோஷமாக இறங்கியதைப் பார்த்த அவன் தந்தையும் அத்தையும் அவர்கள் எண்ணம் நிறைவேறிவிட்டதாக சந்தோஷம் அடைந்தார்கள். ராகுல் லஞ்ச் சாப்பிட்டு விட்டு தன் லண்டன் கம்பெனி அதிகாரிகளுடன், அங்குள்ள கம்பெனி நிலவரத்தைப் பற்றி விசாரித்து விட்டு அங்குள்ள தன் செக்ரட்டரியிடம் சில உத்தரவுகள் பிறப்பித்து விட்டுப் பேச்சை முடித்துக் கொண்டான்.

மணியைப் பார்த்தான். சரியாக நான்கு மணி ஆகியிருந்தது. சென்னைக் கூட்டத்தில் நீச்சலடித்துக் கொண்டு மாதவியை வரச் சொல்லியிருந்த ஹோட்டலை அடைவதற்கு மணி நாலரை ஆகியிருந்தது. அவளுடன் வெண்பாவும் வந்திருந்தாள், ஆனால் அவளே ஒரு ஆரஞ்சு ஜூஸ் மட்டும் குடித்து விட்டு, அவர்கள் தனிமையைக் கெடுக்காமல் விடைபெற்றுச் சென்று விட்டாள்.

எதிரில் அமர்ந்த மாதவி அவனை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.

“மாதவி… என்ன ஆர்டர் செய்யட்டும்?” என்று கேட்டான்.

“எனக்கு வெறும் காபி மட்டும் போதும்” என்றாள் மாதவி  கோபக்குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு.

“மாதவி, உன்னுடன் நான் கொஞ்சம் நிறைய பேச வேண்டும். அதனால் ஏதாவது இரண்டு ஐட்டம் சாப்பிட ஆர்டர் செய்கிறேன். மெதுவாக சாப்பிட்டுக் கொண்டே பேசுவதற்கு வசதியாக இருக்கும், என்ன சொல்கிறாய்?” என ராகுல் கேட்க

“நிறைய நேரம் பேசுவதற்கு நமக்குள் என்ன இருக்கிறது ராகுல்? உன் அப்பாதான் தன்னுடைய முடிவை சொல்லி விட்டாரே, நமக்குள் வேறு என்ன இருக்கிறது?” என்றாள் மாதவி.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விடியும் வரை காத்திரு (பகுதி 2) – நாமக்கல் எம்.வேலு

    கவிதா டீச்சர் வேலைக்கு போறாங்க (சிறுகதை) – இரஜகை நிலவன்