in ,

உனக்கு ஒண்ணும் தெரியாது (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மாலை நேரத்தில் தொலைக்காட்சியில் வரும் ஆலயதரிசனம் பார்க்கலாம் என்பதற்காக டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன். ஆனால் அதில் கவனம் செலுத்த இயலாதபடி உள் அறையில் என் மகன் அரவிந்தும், மருமகள் யாழினியும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் டிவியை ஆஃப் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

சமையலறைக்குள் நுழைந்து இரவு உணவைத் தயார் செய்யும் வேலையில் இறங்கினாலும், என் மனம் முழுவதும் அங்கே நடக்கும் வாக்குவாதத்தில்தான் இருந்தது. மகனும், மருமகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை என் காதில் விழா விட்டாலும், அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம் எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் இரண்டு மூன்று நாட்களாக அரசல்புரசலாக இந்தப் பேச்சு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விஷயம் இதுதான். மகன் புதிதாகக் கார் வாங்க வேண்டும் என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறான். அதற்காக வங்கியில் லோன் வாங்க வேண்டும். எந்த வங்கியில், எவ்வளவு லோன் கிடைக்கும், மாதத் தவணை எவ்வளவு கட்டினால் வீட்டில் சமாளிக்க முடியும், வட்டி எவ்வளவு, எவ்வளவு வருட லோன் இது போன்ற விஷயங்களை வங்கியில் விசாரிக்க வேண்டும்.

அதைப் போய் விசாரிப்பதற்கு மகனுக்கு நேரம் இல்லை. வாரம் முழுவதும் காலையில் வேலைக்குப் போனால் மாலை ஏழு மணிக்குத்தான் திரும்பி வருகிறான். ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை. அன்று வங்கி இல்லை.

தினமும் போய் விசாரிக்க வேண்டும் என யோசித்து யோசித்து, விடுமுறை எடுக்க இயலாமல், இரண்டு மூன்று வாரங்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மருமகள் யாழினி பகல் பொழுதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு, போய் விசாரித்து வருகிறேன் என்கிறாள். ஆனால் அதை என் மகனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அது என்னவோ பேங்க் விஷயம், லோன் எடுப்பது, இஎம்ஐ கட்டுவது இதெல்லாம் ஆண்களுக்கே உரித்தான விஷயம் என்ற எண்ணம் நிறைய ஆண்களின் மனதில் உள்ளது. அந்தப் பட்டியலில் என் மகனும் வருவான் என்று நான் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை.

ஏனென்றால் நான் அவனை அப்படி வளர்க்கவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லித்தான் வளர்த்தேன். ஆனால் ஆண்களுக்கே உரித்தான சில குணங்கள் அவ்வப்போது எட்டிப் பார்த்துவிடும் போல.

இத்தனைக்கும் மருமகள் வேலைக்குப் போகவில்லை என்றாலும் நன்கு படித்தவள்தான். திருமணத்துக்கு முன்பு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். திருமணமான பிறகு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவளுக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். நாங்களும் வற்புறுத்தவில்லை.

அதனால் வங்கியில் போய் விவரங்களை விசாரித்து வருகிறேன் என்றுதான் அவள் சொல்கிறாள். ஆனால் அரவிந்துக்கு ஏனோ அதை ஏற்றுக்கொள்ளவே மனமில்லை.

“யாழினி, உனக்கு அதெல்லாம் ஒழுங்கா விசாரிக்கத் தெரியாது. இஎம்ஐ எவ்வளவு வரும், இன்ட்ரஸ்ட் எவ்வளவு போடுவாங்க இதைப்பத்தி எல்லாம் உனக்கு என்ன தெரியும்? அரைகுறையா கேட்டுட்டு வந்தேன்னா நான்தான் திரும்ப அலையணும். பேங்க்ல டெபாசிட் பண்றதோ, வித்ட்ரா பண்றதோ நீ பண்ணலாம். டீட்டெய்ஸ் விசாரிக்கறது உனக்கு எப்படித் தெரியும்? மாசா மாசம் இஎம்ஐ கட்டப் போறது நான் தானே.”

இப்படித்தான் அரவிந்த் சொல்லிக் கொண்டேயிருக்கிறான். நல்ல விஷயங்கள் சொல்லி வளர்த்த என் மகனே இப்படிப் பேசுகிறான் என்பது எனக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்பாவோ, கணவனோ, மகனோ யாராயிருந்தாலும் ஆண்களுக்கே உரிய சில குணாதிசயங்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சில விஷயங்களில் அரவிந்தைவிட மருமகள் யாழினி சாமர்த்தியமாக முடிவெடுக்கிறாள். ஆனால் பொருளாதாரம் சார்ந்து, அதாவது இதுபோல் வங்கியில் விசாரிப்பது, பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் செய்வது, இன்ஷூரன்ஸ் எடுப்பது இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் யாழினி சொல்லும் கருத்துக்களை அவன் ஏற்பதே இல்லை.

தலைமுறை தலைமுறையாக இந்த குணம் மட்டும் ஆண்களுக்குக் கடத்தப்பட்டுவிடும் போல. யாழினி போல நானும் இந்த விஷயத்தில் அடி வாங்கியிருக்கிறேன்.

எனக்குத் திருமணம் ஆன புதிதில் நடந்த சம்பவம் ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்தது. அப்போது எனக்குத் திருமணம் முடிந்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகியிருக்கும்.

என்னுடைய சின்ன நாத்தனார் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிய நேரம். ஏதோ ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூ போய்விட்டு வந்தாள். அங்கே வேலைக்கு சேர அழைப்பு வந்தது. ஆனால் அவர்கள் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

குடும்பத்தில் அனைவருக்குமே நல்ல நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்த சந்தோஷம்தான் பெரிதாகத் தெரிந்தது. நல்ல பெயர் பெற்ற நிறுவனம், கை நிறைய சம்பளம் இவை மட்டும்தான் அனைவருக்குமே பெரிய விஷயமாகத் தெரிந்தது. ஆனால் எனக்கு மட்டும் அவள் பத்திரத்தில் (bond) கையெழுத்திடுவதில் விருப்பம் இல்லை.

அதனால் அவள் கையெழுத்து போடும் முன் சற்று யோசித்து அது தேவைதானா எனப் பார்த்துவிட்டு போடும்படி எவ்வளவோ சொன்னேன். அவர்கள் அஸ்வினியின் ஒரிஜினல் சான்றிதழ்களையும் கேட்டார்கள். என்ன எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. என் கணவர், மாமியார், நாத்தனார் என அனைவருமே என்னை விரோதியாகத்தான் பார்த்தார்கள்.

“மஞ்சுளா, உனக்கு என்ன தெரியும் இதைப்பத்தி? நம்ம அஸ்வினிக்கு எந்த கம்பெனியில் வேலை கிடைச்சிருக்குன்னு தெரியுமா? அது எவ்வளவு பேர் வாங்கினதுன்னு தெரியுமா? சம்பளம் எவ்வளவு, போனஸ் இதெல்லாம் எவ்வளவு தருவாங்கன்னு ஏதாவது உனக்குத் தெரியுமா? முதல்ல இந்த மாதிரி கம்பெனி எல்லாம் படி ஏறி பாத்திருக்கியா நீ?

பெரிய இடத்தில் வேலை கிடைக்குதுன்னா இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். ஒரு வருஷத்துக்கு அந்தக் கம்பெனியை விட்டு வெளியில் வரக்கூடாதுன்னு கையெழுத்து போட்டுத் தரச் சொல்றாங்க. அவ்வளவு தானே. இது எல்லா இடத்திலும் இருக்கறதுதான். எங்க ஆஃபீஸ்லகூட இப்படித்தான்.

அதுல கையெழுத்து போட மாட்டேன்னு சொன்னா அவளுக்குக் கிடைச்ச வேலையை வேற யாருக்காவது குடுத்துடுவாங்க. உனக்குத் தெரியாத விஷயத்தில் எல்லாம் நீ பேசாதே.” இது என் கணவர்.

“நாலு எழுத்து படிச்ச திமிரில் பேசறாப்பா அவ. படிச்சா மட்டும் போதுமா? எல்லா விஷயமும் தெரிஞ்சுடுமா? என்ன மஞ்சுளா, என்னதான் படித்திருந்தாலும் பொம்பளைங்க எதுல தலையிடணுமோ அதுல மட்டும்தான் தலையிடணும். பண விஷயம், பத்திர விஷயம், ஆஃபீஸ் விஷயம் இதுல எல்லாம் நீ மூக்கை நுழைக்காதே மஞ்சுளா. அதெல்லாம் என் பையன் பார்த்துப்பான். நீ உன் வேலையை மட்டும் பாரு.” இது என் மாமியார்.

இப்படி, அது என்னவோ நான் தலையிடக் கூடாத விஷயம் என்பது போலவும், இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும்தான் உண்டு என்பது போலவும் என் மாமியார் மாமனார் பேசி என் வாயை அடைத்து விட்டார்கள். அதற்குமேல் நான் அதில் தலையிடவில்லை.

அஸ்வினி அந்த bondல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதம்கூட அங்கே தாக்குப்பிடிக்க முடியவில்லை. கட்டாயம் வேலையைவிட வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் வேலையை விட்டுப் போக வேண்டுமென்றால் ஒரு லட்சம் பணம் கட்ட வேண்டும், இல்லையென்றால் அவளுடைய ஒரிஜினல் சர்டிஃபிகேட் எல்லாம் திரும்பத் தர முடியாது என்று கம்பெனியில் கறாராகச் சொல்லி விட்டார்கள்.

வேறு வழியில்லாமல் பணத்தைப் புரட்டி ஒரு லட்சம் அந்தக் கம்பெனிக்கு தண்டம் கொடுத்து, ஒரிஜினல் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தாள். அன்று வீட்டில் ஒருவருக்குக்கூட என் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேச இயலவில்லை. ஆனால் அதற்காக அவர்கள் செய்தது தவறு, என் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும் என்று மனதார ஒத்துக் கொள்ள யாருக்கும் மனசே வரவில்லை. அப்படி ஒத்துக் கொண்டுவிட்டால் அவர்களது கௌரவம் குறைந்து விடுமே.

அன்று என் கணவர் பேசிய அதே தொனியில்தான் இன்று என் மகனும் பேசுகிறான். எவ்வளவு தலைமுறைகள் கடந்தாலும், பெண்கள் எவ்வளவு படித்து முன்னேறி வந்தாலும், அது என்னவோ சில விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே இருப்பதாகவும், அவர்கள் மட்டுமே சரியான முடிவு எடுப்பதாகவும் ஒரு உணர்வு சமூகத்தில், குடும்பத்தில் இன்னும் உலாவிக் கொண்டு தான் இருக்கிறது.

பெண்கள் என்னதான் நிறைய படித்திருந்தாலும், ம்யூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெப்பாசிட், இன்ஷூரன்ஸ் பாலிஸி, லோன் இதெல்லாம் எந்தக் குடும்பத்திலாவது பெண்கள் தனியாக எடுத்து பார்த்திருக்கிறீர்களா? வேலைக்குப் போகும் பெண்களும் கூட அப்படித்தான் அடக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதனாலேயே நிறைய குடும்பத்தில் ஆண்கள் என்ன சேமிப்பு வைத்திருக்கிறார்கள், எந்த வங்கியில் வைத்திருக்கிறார்கள், எந்த பாலிஸி எப்போது மெச்சூர் ஆகும் போன்ற எந்த தகவல்களுமே அந்த வீட்டுப் பெண்களுக்குத் தெரியவே தெரியாது.

திருந்த விருப்பமில்லாத ஆண்கள் கூட்டத்தில் என் மகனும் சேர்ந்து விட்டது வருத்தம் தான். மகனிடம் பொறுமையாகப் பேச வேண்டும். நான் நினைத்து கொண்டிருந்த போது, மருமகள் யாழினி ஆத்திரமும், அழுகையும் பொங்க முணுமுணுத்தபடியே வந்தாள். என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்த?

கொஞ்ச நேரத்தில் இரவு உணவு சாப்பிட வந்த அரவிந்திடம் மெதுவாக ஆரம்பித்தேன்.

“ஏம்பா அரவிந்த், யாழினி சொல்றதும் நியாயம் தானே? நீ ஏன்….”

என்னை அதற்கு மேல் பேச விடவில்லை.

“அம்மா, இதைப் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. பேசாம இருங்க,” என்று முற்றுப்புள்ளி வைக்கவே, நானும் வாயை மூடிக் கொண்டேன்.

நாம் தெரிந்து கொண்டதை இவர்கள் இன்னும் எவ்வளவு தலைமுறை கழித்து உணர்வார்களோ?

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 11) – சுஶ்ரீ

    ஒரு மாருதிக் காரும், தண்ணி வண்டியும் (சிறுகதை) – முகில் தினகரன்