2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்தச் செய்தியை கேட்டு அதிர்ந்து போனான் பாலு. “ச்சே!… மனித வாழ்க்கையை என்னன்னு சொல்றது?… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி லீவுல வந்திருந்தப்ப… எத்தனை சந்தோஷமா இருந்தான்!… நாங்க ரெண்டு பேரும் எத்தனை ஜாலியா ஊர் உலகமெல்லாம் சுத்தினோம்?… ஆனா இன்னைக்கு… என் நண்பன்….. ராணுவ வீரன்…. கிருஷ்ணன் உயிரோட இல்லை!.. நினைச்சாலே நெஞ்சே அடைக்குது!”
இரண்டு மாதத்திற்கு முன் விடுமுறையில் வந்திருந்து விட்டு மறுபடியும் சென்று டூட்டியில் ஜாயின் செய்தவுடன் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்களுடன் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த நண்பனை நினைத்து பாலுவின் மனம் கலங்கியது.
அவனையுமறியாமல் அவன் விழியோரங்களில் ஊற்றெடுத்த கண்ணீர்த் துளிகளை விரலால் வழித்தெடுத்துச் சுண்டியவன், “அம்மா.. நான் கிருஷ்ணன் வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன்மா” என்றான் உடைந்து போன குரலில்.
“பாடி வர்றதுக்கு எப்படியும் ரெண்டு மூணு நாளாகுமாம்!.. அப்படியா பாலு?” அவன் தந்தை கேட்க,
“ஆமாம்பா!… இருந்தாலும் அவனோட அம்மாவையும், தங்கச்சியையும் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வரலாம்னு இருக்கேன்”
“சரி… சரி… போயிட்டு வாப்பா.. போயிட்டு வாப்பா”
வெளியில் வந்து வாசலில் நின்றிருந்த தன் பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான் பாலு.
கிருஷ்ணன் வீட்டில் அவன் தாயையும், தங்கையையும் சந்தித்து, ஆறுதல் வார்த்தைகளைத் தந்து விட்டுத் திரும்பியதில் பாலுவின் நெஞ்சு பாரம் இன்னும் அதிகரித்திருந்தது.
இரவு நீண்ட நேரமாகியும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். கண்களை மூடினால் கிருஷ்ணனின் முகமே வந்து வந்து போனது.
அன்று பஸ் ஏறும் போது அவன் சொல்லி விட்டு சென்ற அந்த வார்த்தைகளை மனம் மீண்டும் நினைத்துப் பார்த்தது.
“டேய் பாலு… என்னோட தங்கச்சி கல்யாணத்துக்காக நான் கொஞ்சம் பணம் சேமிச்சு வச்சிருக்கேன்டா இங்கே அனுப்பிடலாம்ன்னா… உனக்கே தெரியும் எங்க அப்பா எப்படிப்பட்ட குடிகாரர்ன்னு… கையில கிடைச்ச பாத்திர பண்டத்தையெல்லாம் கூட வித்துக் குடிக்கிற மனுஷன்… இந்த பணம் இருக்கிறது தெரிஞ்சா… எங்க அம்மாவையும்… தங்கச்சியையும்… மிரட்டியே வாங்கிட்டுப் போய்… குடிச்சே அழிச்சிடுவார்…. அதனால… அதனால”.
“சொல்லு கிருஷ்ணா… நான் என்ன பண்ணனும் உனக்கு?”
“நான் போய் டூட்டில ஜாயின் பண்ணினதும்…அங்க நான் வெச்சிருக்கற பணத்தை உன் பேருக்கு மணியாடர் பண்ணிடறேன்…நீ அதை வாங்கி உன்கிட்டேயே வெச்சிரு!… அடுத்த தடவை நான் வரும் போது உன்கிட்ட இருந்து வாங்கி… இங்கேயே என் தங்கச்சி பேருல ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதுல போட்டுடறேன்… என்ன… சரியா?”.
அவனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது பாலுவுக்கு. “இதெல்லாம் கேட்கணுமாடா?… இந்த உதவி கூடச் செய்யலேன்னா நானெல்லாம் எதுக்குடா நண்பன்னு இருக்கணும்?”
நெகிழ்ந்து போய் பாலுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் விடை பெற்ற கிருஷ்ணன் சொன்னது போலவே போனவுடன் பாலுவின் முகவரிக்குப் பணத்தை மணியாடர் செய்தான்.
பாலு கூட கிருஷ்ணன் சொன்ன போது, ஏதோ இருபதாயிரம்… முப்பதாயிரம் இருக்கும்ன்னுதான் நினைச்சிட்டிருந்தான். ஆனால் தொடர்ச்சியாக பலமுறை மணியார்டர் வந்ததில் பாலுவின் கைகளில் கிட்டத்தட்ட ஒண்ணேகால் லட்சம் ரூபாய் சேர்ந்திருந்தது.
“இத்தனை சின்ன வயசுல… எவ்வளவு பொறுப்பா தங்கச்சி கல்யாணத்துக்கு பணம் சேர்க்கிறான்… கிருஷ்ணா ரியலி ஆர் கிரேட் டா” நினைத்துக் கொண்டான் பாலு.
மேலே சுழலும் ஃபேனைப் பார்த்தவாறே படுத்துக் கிடந்த பாலு அவனையுமறியாமல் தூங்கிப் போனான்.
மின்சாரம் தடைப்பட்டுப் போனதில் சுழலும் மின் விசிறி நின்று விட, புழுக்கம் தாளாமல் கண் விழித்த பாலு, கடிகாரத்தை பார்த்தான். அது நேரம் 3:30 என்று காட்டியது.
அந்த நிமிடம் வரை வெண்மை நிறத்தில் இருந்த பாலுவின் மனம் கருப்பு நிறத்திற்கு மாற ஆரம்பித்தது.
“கிருஷ்ணன், தங்கச்சி கல்யாணத்துக்குப் பணம் சேமிச்சு வச்சிருக்கிற விஷயமும், அதை அவன் எனக்கு அனுப்பி வைத்திருக்கிற விஷயமும் எனக்கும் அவனுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாதே!… அப்ப… அதை ஏன் நானே சொந்தமாக்கி கொள்ள கூடாது?”.
“வேண்டாம்ப்பா…. ஏதாச்சும் பிரச்சினை வந்திடப் போகுது” இன்னொரு மனம் எச்சரிக்க, குழப்பமானான். திரும்பத் திரும்ப யோசித்ததில் அந்த ஒண்ணேகால் லட்ச ரூபாயை ஏப்பம் விட்டு விடுவது என்ற தீர்மான முடிவுக்கு வந்தான்.
மறுநாள் காலையே தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாய் மொத்தப் பணத்தையும் தன் வங்கிக் கணக்கில் சேர்த்து விடும் எண்ணத்தில், அதை ஒரு கவரில் வைத்து எடுத்துக் கொண்டு பைக்கில் கிளம்பினான்.
அரை மணி நேரத்தில் வங்கியை அடைந்து பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரினுள் தான் வைத்த பணக்கவரை எடுக்க கையை விட்டு குடைந்தவன் முகம் பேயறைந்தது போலானது.
“அய்யய்யோ… வர்ற வழியில் எங்கேயோ தெறிச்சு விழுந்துருச்சு போலிருக்கே!… கடவுளே… இப்ப என்ன பண்றது?” திருடனுக்கு தேள் கொட்டிய கதையானது பாலுவின் கதை. யாரிடமும் சொல்லவும் முடியாமல், போலீசில் புகார் கொடுக்கவும் வழியில்லாமல், தொங்கிப் போன முகத்தோடு வீடு திரும்பினான்.
அதே நேரம், காவல் நிலையத்தில் அந்த ஆட்டோக்காரரும் உடன் இன்னொருவரும் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“உங்க ரெண்டு பேரோட நேர்மைக்குணத்தையும், உள்ளத்தையும் நான் மனதார பாராட்டுகிறேன்!…. சாலையில் கிடந்த இந்தக் கவரையும்… அதனுள்ளிருந்த பணத்தையும் அபேஸ் பண்ணிக்காமல் காவல் நிலையத்தில் சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் நீங்க கொண்டு வந்து கொடுத்தீங்க பாருங்க ரியலி ஐ யாம் வெரி ப்ரவுட் ஆப் யூ”.
இன்ஸ்பெக்டர் அந்த இருவரையும் பாராட்டித் தள்ள மகிழ்ச்சியின் உச்சிக்கு போயினர் அவர்கள் இருவரும்.
“சார்… இது என்னோட கடமை சார்” என்ற அந்த ஆட்டோக்காரரின் முதுகில் தட்டிக் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.
“ஓ.கே.ப்பா!… இது சம்பந்தமாக யாராவது நேரில் வந்தாலோ அல்லது ஏதாவது என்கொயரி வந்தாலோ… தீர விசாரிச்சு உரியவங்க கிட்ட நான் சேர்த்து விடுகிறேன்… போதுமா?”
“அப்ப நாங்க வர்றோம் சார்” அவர் வெளியேறி நெடு நேரமாகியும் இன்ஸ்பெக்டர் அந்த இருவரைப் பற்றியும் கான்ஸ்டபிள்களிடம் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு மேலாகியும் அந்த ஒண்ணேகால் லட்ச ரூபாய்க்கு உரிமை கொண்டாடி எவருமே வராததால் இன்ஸ்பெக்டர் தன் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அத்தொகையை “போரில் உயிர் துறக்கும் நமது ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கான நிவாரண நிதி”க்கு நன்கொடையாக அளித்தார்.
இறுதியில் கிருஷ்ணனின் ஒண்ணேகால் லட்ச ரூபாய் அவன் குடும்பத்திற்கே திரும்பி நிவாரணத் தொகையாக வந்து சேர்ந்த விஷயம் பாவம், பாலுவுக்கு தெரிய வாய்ப்பில்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings