in , ,

உயிரைத் தந்துவிடு (இறுதி அத்தியாயம்) – தி.வள்ளி, திருநெல்வேலி.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மறுநாள் காலை எல்லா தொலைக்காட்சிகளும் ராகவேந்தர் மரணச் செய்தியை முக்கிய செய்தியாக அறிவித்துக் கொண்டிருந்தன. அத்தனை தொலைக்காட்சி, வானொலி மற்ற ஊடகங்களின் மொத்த டீமுமும் அங்கே குவிந்திருந்தது.

மருத்துவமனை முன்பு கூட்டம் கூட ஆரம்பிக்க, நாலு பக்க பெரிய கேட்களும் இழுத்து அடைக்கப்பட்டன. ஓயாமல் அடித்துக் கொண்டிருந்த தொலைபேசிக்கு பதில் சொல்லவே தலைமை மருத்துவர் தனியாக ஒரு ஆளை நியமிக்க வேண்டி இருந்தது. 

ராகவேந்தர் மரணத்தை முறைப்படி வருண் குமாருக்கு தலைமை மருத்துவர் தெரிவிக்க, வருண்குமார் அழுகையில் வெடித்தான்.

“அப்பா… உங்களைக் காப்பாற்றனும்னு எவ்வளவு போராடினேன் .. உங்களுக்கு டோனர் ஏற்பாடு பண்ணும் முன்னேயே இப்படி ஆயிடுச்சே” என்று கதறினான். 

மருத்துவமனையையும் டாக்டர்களையும் திட்டி தீர்த்தான். சீப் டாக்டர் அவ்வப்போது வந்து அவனை அமைதிப்படுத்த வேண்டிய தாயிருந்தது. ஐ.சி.யு. பரபரப்பாக இருந்தது. ராகவேந்தர் குடும்பமே அவர் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர். காலை பிளைட்டில் வந்து சேர்ந்த தருண் நேராக மருத்துவமனைக்கு வர, அவன் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டான். தந்தையின் உயிரற்ற உடலை பார்த்து கதறி அழுதான்.   

அண்ணனுடைய அழுகை வருணையும் வேதனைக்கு உள்ளாக்க, அங்கிருந்த மருத்துவர்களை பார்த்து கத்தினான்.

“எப்படி டாக்டர்…சாயங்காலம் நல்லா இருந்தாரு, என் கூட பேசிகிட்டு இருந்தாரு… எங்க அம்மாகிட்ட பேசியிருக்காரு… அப்புறம் திடீர்னு ராத்திரி மூச்சுத்திணறல் வந்திருக்கு… நீங்க அவர சரியா கவனிக்கல. டாக்டர் ரமேஷ் அவர் கூட இருக்கத்தானே செஞ்சாரு…அவர் ஏன் அப்பாவுக்கு உடனே ட்ரீட்மென்ட் கொடுக்கல. நான் வேற எங்கேயாவது அவரை அனுமதிச்சிருக்கனும் குடும்ப டாக்டர் பேச்சைக் கேட்டு இங்க வந்தது தான் தப்பா போச்சு”

“மிஸ்டர் வருண்… உங்கள் மனக்கஷ்டம் எனக்கு நல்லா புரியுது. எங்களுக்கும் அவருக்கு இந்த மாதிரி ஆனது ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவர நல்லபடியா காப்பாற்றி அனுப்பிடுவோம்னு நம்பிக்கையில இருந்தோம். டாக்டர் ரமேஷ் கூடவேதான் இருந்தாரு. திடீர்னு தான் மூச்சுத் திணறல் அதிகமாயிருச்சு… டாக்டர் ரமேஷ் உடனே எனக்கு போன் பண்ண… அடுத்த பத்து நிமிஷத்தில் நான் இங்கே இருந்தேன். எவ்வளவோ போராடியும் அவரை காப்பாற்ற முடியல ..கார்டியாக் அரெஸ்ட் ..”

அப்படியும் சமாதானம் ஆகாமல், வருண் மற்றும் அவனது குடும்பம் ‘டாக்டர் பேச்சைக் கேட்காம, நாம வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயி அவரை காப்பாத்தி இருக்கனும். இவங்க எல்லாரும் காப்பாத்திடுவாங்கன்னு நம்புனது தான் தப்பா போச்சு’ என்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

மூர்த்தி அவசரமாக ஜெகனுக்கு போன் பண்ணினார் பெரியவர் இறந்த விஷயத்தை கூறினார். திட்டத்தை கைவிட்டு விடும்படியும், முத்துவை ஒன்னும் பண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மனம் சற்று நிம்மதியானது. பெரியவர் இறந்த வருத்தமும், அதிர்ச்சியும் அவருக்குள் நிறைய இருந்தாலும், இந்த அளவுக்கு முத்து உயிர் பிழைத்தானே என்ற நிம்மதி அவர் மனதுக்குள் வந்தது. 

அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் மளமளவென்று நடக்க… வெளியே கூட்டம் அதிகம் கூடினால் ராகவேந்தரை வீட்டுக்கு கொண்டு போவது சிரமமாகிவிடும் என்று உடலை சீக்கிரமாக ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்ப மருத்துவமனை ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தனர்.

இதற்குள்ளாகவே ராகவ் மார்பிள்ஸ் தொழிலாளர்களுக்கு விஷயம் தெரிந்து ஒரு பெரிய கூட்டம் மருத்துவமனை முன் நின்று அழுது புலம்பிக்கொண்டு கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பிரியத்திற்குரிய பெரிய முதலாளியின் மரணம் அவர்களை ரொம்பவே பாதித்திருந்தது. அதற்குள் போலீஸ் குவிக்கப்பட மருத்துவமனைக்குள் யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை.

ஃப்ரீசர் பாக்ஸ்ஸை கொண்டு வந்து அதில் ராகவேந்தர் உடலை வைக்க ஏற்பாடு பண்ணினர. ராகவேந்தர் உடலை ஃப்ரீசர் பாக்ஸ்ல் வைக்குமுன் டாக்டர் ரமேஷ் …”நான் ஒரு நிமிஷம் சார பாத்துட்டு வரேன்” என்றபடி இந்த அறைக்குள் நுழைந்தார்.

“ஐயா நீங்க மிகப் பெரிய மனிதர். தன் உயிரைக் கொடுத்து ஒரு ஏழையின் உயிரை காப்பாற்றும் மனசு உண்மையிலேயே யாருக்கு வரும்? உங்கள பத்தி நான் ஆரம்பத்துல தப்பா நினைச்துக்கு என்னை மன்னிச்சிடுங்க. உங்க வேண்டுகோளின்படி பண்ணினாலும் நான் பண்ணினது, மறக்க முடியாத… ஆயுசுக்கும் உறுத்தக் கூடிய ஒரு தவறு. இதற்கு நான் உங்ககிட்ட மட்டுமில்ல கடவுள்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன். இருந்தாலும் உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதருக்கு நிம்மதியான கடைசி நிமிஷத்தை கொடுத்ததற்காக என்ன நானே தேத்திக்கிறேன்” என்று மனதில் நினைத்த டாக்டர் ரமேஷ், யாருமறியாமல் அவர் பாதத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு வெளியே நடந்தார் நீர் நிறைந்த கண்களுடன். 

பின் உள்ளே சென்ற மேனேஜர் மூர்த்தி, பெரியவர் பாதங்களை தொட்டு வணங்கி குலுங்கி குலுங்கி அழுதார்.

இத்தனை வருட காலம் பெரியவருடன் அவர் நிழலாய் நீதிக்கும், நேர்மைக்கும் சத்தியத்துக்கும் கட்டுப்பட்டு வேலை பார்த்த தான் இனி வருணுக்கு கீழ் வேலை பார்த்தால், மொத்த பாவத்தின் மறு உருவமாக மாறிவிடுவோம் என்று தோன்ற நேராக வருணிடம் சென்று, “தம்பி பெரியவர் காரியம் முடிந்ததும் நான் கம்பெனியில் இருந்து விலகிக் கொள்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதம் இதோ” என்று ரெடியாக வைத்திருந்த கவரை அவன் கையில் திணித்தார்.

பெரியவர் உடலுடன் ஆம்புலன்ஸ் கிளம்ப… அவருடன் நீதி, நேர்மை, இரக்கம் ,அனைத்தும் விடைபெற்றுச் செல்வது போல தோன்றியது மூர்த்திக்கு…கண்ணீர் அவர் கண்களை திரையிட்டு மறைத்தது. 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 10) – தி.வள்ளி, திருநெல்வேலி.

    குருவிக்கூடு (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி