இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராகவேந்தருக்கு படபடப்பாக இருந்தது. அடுத்து மகன் பேசக்கூடிய வார்த்தைகளை கேட்குமளவு மனதில் தைரியமில்லை. அவன் என்ன நினைக்கிறான்… என்ன நினைப்பான் என்பது அவருக்கு புரிந்தது.அவன் ஈர மனதற்றவன் என்பது அவருக்கு தெரியும் ஆனால் இந்த அளவுக்கு கொடூரமான மனதுக்காரனாக இருப்பான் என்று அவர் நினைக்கவில்லை
மேனேஜரும் வருண் எது பேசினாலும், அதை மறுத்துப் பேசவோ, மாற்றுக் கருத்துக் கூறவோ, அவன் வாய்ப்பளிக்க மாட்டான் என்பது தெரிந்து, பேசாமல் அவன் சொல்வதை கேட்டபடி இருந்தார்.
“மேனேஜர்… நான் என்ன செய்யனும்ங்கறத தெளிவா சொல்றேன். கவனமா கேட்டுக்கங்க. அதை கொஞ்சமும் பிசகாமல் அப்படியே செய்ங்க. இதுல கொஞ்சம் சொதப்புனா கூட நாம எதிர்பார்க்கிற காரியம் நடக்காது.”
“சரி தம்பி…சொல்லுங்க…நான் வேணா நம்மகிட்ட வேலை பார்க்கிறவங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாராவது இந்த குரூப் இருக்கிறாங்களான்னு விசாரிக்கவா..”.
“வேணாம் மேனேஜர்… அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல… ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு பிளட் டெஸ்ட் பண்ணி, இது பொருந்துதா பாக்குறதுக்கு அப்பாவுடைய உடல்நிலை இடம் கொடுக்காது… டாக்டர்கள் எவ்வளவு சீக்கிரம் கிட்னி கிடைக்குதோ அவ்வளவு சீக்கிரம் நல்லதுன்னு சொல்லியிருக்காங்க. அதனால இப்போதைக்கு லட்டு மாதிரி முத்து இருக்கான் அவனை வச்சு நான் நினைக்கிறத முடிக்கிறேன்…எங்க அப்பாவை காப்பாத்துறேன்.”
“நீங்க பண்ண வேண்டியதை நான் சொல்றேன்..இந்த அட்ரஸ்ல இருக்கிற என்னுடைய ஃப்ரெண்டைப் போய் பாருங்க அவன் உங்களுக்கு காரியத்தை பிளான் போட்டுக் கொடுப்பான். அதை கச்சிதமா செஞ்சு கொடுங்க போதும்”
“என்ன தம்பி சொல்றீங்க… எனக்கு புரியல..”என்றார். தயக்கத்துடன்.
“முத்துகிட்ட சம்மதம் கேட்டு பயனில்ல மேனேஜர் .முத்து சம்மதித்தாலும், குடும்பம் இதற்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டாங்க… அதனால அவன அடிச்சு கொண்டாந்து போடுங்க ..விபத்து மாதிரி ஏற்பாடு பண்ணுங்க …ஆனா ரொம்ப கவனம் மூளைச்சாவு மட்டும் தான் . அதை எப்படி பண்ணனும்னு என்னுடைய நண்பன் சொல்லுவான். அதை கவனமாக கேட்டு பண்ணுங்க”
“நாளைக்கு சாயங்காலம் வரைக்கும்தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள எனக்கு முத்து வேணும். எத்தனை பேர வேணாலும் பயன்படுத்திக்கோங்க. கட்டு கட்டாய் பணத்தை எடுத்து அவர் கையில் திணித்தான் ..”
மேனேஜரும் விதியை நினைத்து …தன் மனசுக்கு ஒத்துவராத ஒரு விஷயம்… வேறு வழியில்லாம செய்ய வேண்டிய நிலைமையில் இருப்பதை எண்ணி, நொந்தபடி நடந்தார்
இரவு மெல்ல கண்விழித்த ராகவேந்தர் பக்கத்திலிருந்த டாக்டர ரமேஷை மெல்ல அழைத்தார் …
“என்ன சார்…ஏதும் வேண்டுமா? வலி எதுவும் இருக்கா?”
இல்லை என்று தலையசைத்தவர்…”டாக்டர் எனக்கு ஒரு உதவி நீங்க செய்யனும்” என்றார்.
“சொல்லுங்க சார்…என்ன செய்யனும் ..உங்க மகன் வீட்டுக்கு போயிட்டாரு… உங்க மனைவியும், மகளும் ,பக்கத்து ரூம்ல இருக்காங்க. அவங்க யாரையாவது பார்க்கனுமா ..நான் வேணா அவங்களை வரச் சொல்லட்டா அவங்களை வந்து பார்க்கச் சொல்லட்டா . “
“இல்லை டாக்டர்..தயவு செய்து நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காதீங்க என்னால என்ன ரொம்ப பேச முடியல. இந்த ஆக்சிஜன் மாஸ்க், உயிர்காக்கும் கருவிகள், இதையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு எடுத்துடுங்க…”
திடுக்கிட்ட டாக்டர் ரமேஷ் பதறியபடி ,”சார் என்ன சொல்றீங்க? இதையெல்லாம் எடுத்தால் உங்களால மூச்சுவிட முடியாது. உயிர்காக்கும் கருவிகள் இல்லாம போனா நீங்க அபாய கட்டத்திற்கு போயிடுவீங்க அப்புறம் உங்களை காப்பாத்துவது கஷ்டம் …எதையோ நினைச்சு கவலைப்படுறீங்க… பயப்படாதீங்க! கண்டிப்பா உங்களுக்கு ஒரு டோனர் கிடைச்சு நீங்க நல்லபடியா குணமாகி வெளியில வருவீங்க அதுக்கு நாங்க பொறுப்பு… எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காதீங்க.. கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்குங்க ” என்றான் கனிவோடு.
“உங்க திறமை மேல எனக்கு எந்த அவநம்பிக்கையும் கிடையாது டாக்டர்… ஆனால் நான் முழு சுயநினைவோடு தான் சொல்றேன் தயவு செய்து இத செய்யுங்க. நான் இப்படி சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு..”.
“என்ன காரணம் இருந்தாலும், இதை கண்டிப்பா என்னால செய்ய முடியாது. நான் ஒரு டாக்டர்… உயிரைக் காப்பாற்றுவது தான் ஒரு மருத்துவருடைய வேலையே ஒழிய, ஒரு உயிர் போவதற்கு நான் காரணமாய் இருக்க மாட்டேன் ..இதற்கா சார் நாங்கள் இவ்வளவு தூரம் போராடுகிறோம் .தயவுசெய்து மன்னிச்சுக்கோங்க ..என்னால இத பண்ண முடியாது எல்லோரும் உங்களை காப்பாத்த போராடிக்கிட்டு இருக்கோம் நீங்க என்னன்னா உயிர் போறதுக்கு உண்டான வழியச் சொல்றீங்க. இதை எப்படி சார் நான் ஒத்துக்க முடியும் …”
“டாக்டர் நான் சொல்றத பொறுமையா கேளுங்க…என்னால ரொம்ப பேச முடியல… நான் இந்த நேரத்துல இந்த முடிவை எடுக்கலைன்னா என்னுடைய வாழ்க்கை அர்த்தம் இல்லாததா போயிடும். எந்த தொழிலாளிகளை என்னுடைய உயிரா நினைக்கிறேனோ… என் குடும்பமா நினைக்கிறேனோ… அவங்களுக்கு தான் துரோகம் செஞ்சவனாயிடுவேன் .அவங்க என்கிட்ட காட்டுற அன்பும், மரியாதையும், அளவில்லாதது .அதுபோல அவங்களையும் அவங்க குடும்பத்தையும் ,நான் காப்பாற்றுவேன்னு உறுதியாக நினைக்கிறாங்க. அந்த நம்பிக்கையை நான் பொய்யாக மாட்டேன்.
எனக்காக என்னை வாழ வைப்பதற்காக எந்த உயிரும் போகக்கூடாது …என் உயிர் விலைமதிப்பில்லாததுன்னு நெனச்சா ..அவங்க உயிரும் அதே மாதிரி தான் .அதை எடுக்க நமக்கு எந்தவித உரிமையும் கிடையாது .ஏழைகள் உயிர்ன்னா அவ்வளவு எழப்பமா போயிடுச்சா? ஆனால் என் மகன் தொழிலாளர்களுடன் உயிரோடு விளையாட நினைக்கிறான். அதுக்கு நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன்..” மூச்சு வாங்க அயர்ச்சியோடு கண்களை மூடிக்கொண்டார் ராகவேந்தர்…
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings