இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மருத்துவமனையே ஒரே பரபரப்பாக இருந்தது …மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர். முதலமைச்சர் தன் சார்பில் பூங்கொத்துடன் மந்திரி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார். வி ஐ பி களின் வருகையால் மருத்துவமனை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது ..
வரும் விஐபிகளை அமர வைக்க என்று ஒரு தனி ரூம் உருவாக்கப்பட்டது …வந்தவர்கள் எல்லோருக்கும் ஐ.சி.யூ.வில் சென்று பார்க்க அனுமதி இல்லாததால், வருணை பார்த்து அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்து தெரிவித்துச் சென்றனர். நிறைய பேர் போனிலும் கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருந்தனர் ..
முதலமைச்சரே மருத்துவமனையின் சீஃப் டாக்டரிடம் பேசி வேண்டியதை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது அதனால் அவருக்கு நல்ல முதல் தர சிகிச்சை கொடுங்கள் என்று வலியுறுத்தினார். தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் சிகிச்சை செய்வதற்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.
ஒரு பக்கம் வி.ஐ.பி’களின் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொரு ஒருபக்கம் கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் பண்ண டோனர் கிடைப்பது மிக சிரமமாக இருந்தது. மருத்துவமனை பல இடங்களிலும் பல விதமாக முயற்சி பண்ணிக் கொண்டிருந்தார்கள். வருண்குமார் தன் பங்குக்கு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி எல்லோரையும் அதிர வைத்து கொண்டிருந்தான்.
வருண்குமார் மற்றவர்களைப் பொருத்தவரை இரக்கமற்றவனாக இருந்தாலும், அப்பாவை பொறுத்தவரை அவன் ஒரு பாசமான மகன். அவரை எப்படியாவது அந்த நோயிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்பதில் மும்மரமாக இருந்தான்.
குடும்பத்தினர் எல்லோருடைய ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. மருமகள் நித்யா கர்ப்பிணியாக இருந்ததால் அவளிடம் ரத்த மாதிரி எடுக்க வேண்டாம் எனச் சீப் சொல்லி விட்டார், அதே போல மூத்த மகளும் மஞ்சள் காமாலை நோயிலிருந்து அப்போதுதான் குணமடைந்திருந்ததால் அவளது சிறுநீரகமும் அப்பாவுக்கு கொடுக்க முடியாமல் போனது. மற்ற யாருடையதும் பொருந்தாமல் போக, வருண்குமார் டென்ஷன் ஆனான். தன் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி எல்லோருடைய உதவியும் வேண்டினான்.
ஏசியின் லேசான குளிர்ச்சியில்…ஐ.சி.யூ. அரையிருட்டில் மூழ்கியிருந்தது. ராகவேந்தர் தூக்கமருந்து உதவியுடன் வலியை மறந்து சற்று தூங்கிக் கொண்டிருந்தார். அருகில் நர்ஸ் இருந்து கவனித்துக் கொண்டிருக்க ..அவருடைய உடல் நிலையை டாக்டர் ரமேஷ் ..தன் முன் இருந்த மானிட்டரில் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
டாக்டர் சரவணன் உள்ளே வர, “என்ன டாக்டர்… சார் எப்படி இருக்காரு?”
“பேராமீட்டர்ஸ் எல்லாம் நார்மலாத் தான் இருக்கு…. வலியிருக்கிறதா சொன்னாரு… தூக்கம் சரியா வரலைன்னு சொன்னதால சடேஷன் மட்டும் கொடுத்திருக்கேன். இப்பதான் சீப் வந்து பாத்துட்டு போறாரு …டாக்டர் சரவணன்”
“டாக்டர்… டோனர் சீக்கிரம் கிடைச்சா எல்லாத்துக்குமே நல்லது… மேலிடத்திலிருந்து பிரஷர் கொடுக்கிறாங்க. எல்லா ஹாஸ்பிடல்லேயும் சொல்லி வச்சிருக்காங்க …”
“சாரோட மகன் மிஸ்டர் வருண்… நிறைய ட்ரை பண்ணிகிட்டு இருக்காரு. ரொம்ப கான்பிடண்டா சொல்றாரு… எப்படியும் ஒன்றிரண்டு நாட்கள்ல கண்டிப்பா டோனர் ஏற்பாடு பண்ணிடுவோம். அப்பாவ அதுவரைக்கும் பத்திரமா பாத்துக்கங்கனு…”
“டாக்டர் வார்ட் ரவுண்ட்ஸ் பாக்கி இருக்கு …சாரோட நியூரோ சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு போயிடுவோம்னு தான் வந்தேன்.”
நர்ஸ் எல்லா ரிப்போர்ட்களையும் எடுத்துட்டு வந்து காண்பிக்க.. இதைப்பார்த்த சரவணன் ஒரு சில மருந்துகளில் மட்டும் மாற்றத்தை எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பினார்.
லேசாக கண் விழித்த ராகவேந்திரர்… தன் அருகில் இருந்த டாக்டர் ரமேஷை பார்த்து லேசாக தலையை அசைக்க… “என்ன சார்… எதும் வேணுமா? வலி குறைஞ்சிருக்கா… வலி தெரியாமல இருக்கறதுக்கு இன்ஜெக்ஷ்ன் போட்டிருக்கேன். நல்ல தூக்கம் வரும் தூங்குங்க”.
ராகவேந்தர் டாக்டர் ரமேஷை அருகில் வருமாறு கை அசைத்தார்… மிகவும் சிரமப்பட்டு ஆக்சிஜன் மாஸ்க் எடுக்கச் சொல்லிவிட்டு ஈனஸ்வரத்தில்… “டாக்டர் எனக்கு என்ன பிரச்சனை?” என்றார்.
டாக்டர் ரமேஷ் தயங்க, “டாக்டர் தயங்காம சொல்லுங்க… என்னோட வயசு எனக்கு பக்குவத்தை கொடுத்திருக்கு .எதுவானாலும் நான் தாங்கிக்குவேன்” என்றார்.
டாக்டர் ரமேஷ் தயக்கத்துடன், “சார் உங்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்க ஆரம்பிச்சிடுச்சு. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடிவு செஞ்சிருக்கோம். அதற்கு டோனர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் அரிய வகை ரத்தப்பிரிவு என்பதால் டோனர் இன்னும் கிடைக்கலை. கிடைச்சதும் ஆப்ரேஷன் பண்ணிடுவோம். டோனருக்காக ஆஸ்பத்திரில எல்லா இடத்திலும் சொல்லி வச்சிருக்காங்க. அதுபோக உங்க மகன் மிஸ்டர் வருண் எல்லா இடத்திலேயும் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு. கண்டிப்பா சீக்கிரம் கிடைச்சு நல்லபடியாக ஆபரேஷன் பண்ணிடுவோம். நீங்கள் நிம்மதியா தூங்குங்க. உங்களை பிழைக்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்றார் .
ராகவேந்தர் சற்று தூங்கி கண்விழித்தபோது வருண் பக்கத்தில் இருப்பதை பார்த்தார். கூப்பிட்டு பேச ஆக்ஸிஜன் மாஸ்க் தடையாக இருக்க, அதை எடுக்குமாறு கூற வந்தவர், தன்னை கவனிக்காமல் வருண்குமார் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டார்.
மேனேஜர் முகம் இருளடைந்து இருந்தது. ஆனால் வருண்குமார் கூறுவதை கவனமாக கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தார். மேனேஜரின் முகத்தை பார்த்த உடனே ராகவேந்தருக்கு புரிந்தது ஏதோ சொல்லக்கூடாத விஷயத்தைத்தான் வருண்குமார் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று.
வருண்குமார் பிடிவாதக்காரன். தான் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவான். அதற்கு அவன் மனம் அச்சப்படாது என்பது அவர் அறிந்த விஷயமே… அதனால் அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க தொடங்கினார்…
வருண்குமார் மேனேஜரிடம் கூறியதை கேட்டு திடுக்கிட்டார் …அவன் எண்ணம் புரிய மனம் பதைபதைத்தது ராகவேந்தருக்கு …
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும் …
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings