in , ,

உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 5) – தி.வள்ளி, திருநெல்வேலி.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பிரபல தொழிலதிபர் ராகவேந்தர்… மருத்துவமனையில் அனுமதி என்று எல்லா டிவி சேனல்களும் பிரேக்கிங் நியூஸ் போட, விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவியது. வர்த்தக உலகம் முழுவதும் அவருடைய உடல்நிலை பற்றிய பேச்சாகவே இருந்தது.

அவர் உடல்நிலை பற்றிய அறிவிப்பை அடுத்து ராகவ் மார்பிள்ஸ் பங்கு கூட சரிய ஆரம்பித்தது. மருத்துவமனை வாசலின் முன் மீடியா ஆட்கள் குவிய ஆரம்பித்தனர். அவர்களை சமாளிப்பது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.  

ராகவ் மார்பிள்ஸ் மொத்தமும் ஸ்தம்பித்துப் போனது. தொழிலாளர்கள் கூடிக் கூடி பேச ஆரம்பித்தனர். ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களிடையே காணப்பட்டது. 

தங்கள் முதலாளி உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி தொழிலாளர்களை ரொம்பவே உலுக்கியது.

அன்று எந்த வேலையும் நடக்கவில்லை. மேனேஜர்கள் நிலைமையை சகஜமாக்க எவ்வளவோ முயன்றும் தொழிலாளர்களின் உணர்ச்சி கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்றுவரை தங்களிடையே பேசி சகஜமாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்று மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார் என்பதை கேள்விப்படும் போது அவர்கள் மனம் வேதனை ஆழ்ந்தது.

“ஐயா ரொம்ப நல்லவரு… நமக்கெல்லாம் நடமாடும் கடவுள் மாதிரி.. அவருக்கு ஏன் இப்படி ஒரு சோதனை நல்லவங்களுக்கு தானே கடவுள் இந்த சோதனை எல்லாம் கொடுக்கிறாரு?” என்று காளி வேதனையோடு கூறினான் .

“உண்மைதான் நம்மோட பிரச்சனைய அவர் பிரச்சனை போல நெனச்சு தீர்த்து வைப்பாரு. நம்ம குடும்பம் வேற அவர் குடும்பம் வேறன்னு என்னைக்குமே பிரிச்சு பாத்ததில்ல. நமக்கு என்ன வேணுமோ அத பாத்துப் பாத்து செய்வாரு.. அவரை மாதிரி தங்கமான குணம் கிடையாது..அவ்வளவு பெரிய வசதி படைத்த முதலாளி தொழிலாளிகள் வீட்டுக்கு வரவே மாட்டாங்க..அவரு நம்ம குடும்பத்து ஒவ்வொரு விசேஷங்களுக்கும் வந்து நம்மளோட கலக்குவாரு. இப்படிப்பட்ட மனசு யாருக்கு வரும்..ஐயா இன்னும் நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கனும் “

பெண்கள் எல்லோரும் கண்ணீர்விட ஆரம்பித்தனர்.

“ஐயா நல்லபடியா திரும்பி வரட்டும் அக்கா நான் தீச்சட்டி எடுக்கிறேன்” என்றாள் இசக்கியம்மா

“நான் பூக்குழி இறங்குகிறேன் ” என்றாள் செல்வி

“எல்லோரும் சேர்ந்து போய் ஆத்தங்கர மாரியம்மனுக்கு பொங்கல் வைச்சு வேண்டிகிட்டு வருவோம்” என்றாள் ராசாத்தி.

நல்ல குணம் படைத்த முதலாளி.. இன்று உயிருக்கு போராடுவது, அந்த தொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மன குமுறலை கொடுத்தது.

“தொழிலாளர் யார் குடும்பத்தில் பிரச்சனை வந்தாலும் … நம்ம பெரிய முதலாளி ஓடி வந்து உதவுற மாதிரி சின்னவர் செய்ய மாட்டாரு… அவர் பெரியவருக்கு நேர்மாறான குணம். ஆதாயம் இல்லாத எதையும் செய்யமாட்டார் ஆதாயம் இருக்குன்னா என்ன வேணும்னாலும் செய்வார். இரக்கம்ங்கறது மருந்துக்கு கூட கிடையாது. அசோக்குமார் சார்… பழைய யூனியன் லீடர் செல்வராசு… இவங்க விஷயத்திலெல்லாம் என்ன நடந்ததுன்னு நமக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல ” என்று முத்து கூற…

“வேணாம் முத்து… பெரிய இடத்து விவகாரம், கவனமா பேசு… சின்னவர் ஆட்கள் நிறைய பேரு நமக்கு நடுவுல இருக்காங்க. எதுக்கு வேண்டாத பேச்செல்லாம்….பெரியவர் நல்லபடியா பொழச்சு வரணும்னு வேண்டிக்குவோம் ” என்று காளி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

பின் எல்லோரும் சேர்ந்து மருத்துவமனைக்கு போய் விசாரிச்சுட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு மொத்தமாக கிளம்பி போனார்கள். பெரிய கூட்டத்தை பார்த்ததுமே, செக்யூரிட்டி வாசல் கேட்டை மூடிவிட்டான்.

“வெளியே நில்லுங்க… உள்ளே யாருக்கும் அனுமதி கிடையாது” என்று உறுதியாக கூறிவிட்டான்.

வருண் கவனத்திற்கு இந்த பிரச்சனை போனது. மேனேஜரை அழைத்து, “இப்ப எதுக்கு இங்க வந்து கூடியிருக்காங்க… நாங்களே ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கோம்”

“பெரியய்யா பேர்ல அவங்களுக்கு ரொம்ப மரியாதை.. அன்பு.. அதான் எல்லாரும் வந்திருக்காங்க.. நீங்க ஒரு வார்த்தை நேர்ல பாத்து பேசி போக சொல்லிட்டீங்கன்னா வீட்டுக்கு போயிடுவாங்க …ஐயா நல்லா இருக்காங்கன்னு ஒரு வார்த்தை உங்க வாயால வந்தா அவங்க சந்தோசமாயிடுவாங்க நிம்மதியா வீட்டுக்கு போவாங்க ..”

“என்ன பேசுறீங்க மேனேஜர்… இவங்ககிட்ட வந்து நான் பேசணுமா… எங்கப்பா நல்லாதான் இருக்காரு அவருக்கு ஒன்னும் ஆயிடலை… அப்படி ஏதாவது ஆனா சொல்லி விடறோம்னு சொல்லுங்க” என்றான் குரோதமாக.

இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த மேனேஜர் வெளியே வந்து கூடிநின்ற தொழிலாளர்களிடம், “உங்க ஐயா நல்லா இருக்காங்க.. இப்போ ஆஸ்பத்திரியில சேர்த்த பிறகு டாக்டர்கள் நல்லா கவனிச்சுகிறாங்க… சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வந்திடுவாங்க. அவங்களுக்கு இப்போ பூரண ஓய்வு தேவை…இந்த சந்தர்ப்பத்துல அவங்க குடும்பத்தை நாம தொந்தரவு பண்ணக்கூடாது. நீங்க எல்லாரும் அமைதியா வீட்டுக்கு போங்க …அதுதான் நீங்க இப்ப செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி. நான் தினமும் உங்க யூனியன் லீடருக்கு, ஐயா எப்படி இருக்காங்கன்னு தகவல் சொல்லி விடுறேன் …நீங்க எல்லோரும் பெரியவருக்காக பிரார்த்தனை பண்ணுங்க ..அவர் சீக்கிரம் குணமாகி ஜம்முன்னு எப்போதும் போல கார்ல வந்து கம்பெனில இறங்கணும் …”

தொழிலாளிகள் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு, கண்ணீர் மல்கிய கண்களுடன் கைகூப்பியபடி, “ஐயா நல்லா இருந்தா சரிதான்…அதுதான் இங்கு எல்லாருக்கும் வேணுங்கய்யா ஐயா எப்படி இருக்காங்கன்னு மட்டும் அப்பப்போ எங்களுக்கு தகவல் சொல்லுங்க…நாங்க ஐயாவுக்காக கடவுள்கிட்ட வேண்டிகிடுதோம்” என்றபடி கலைந்து சென்றனர்.

மேனேஜர் கண்களும் கலங்கியது. ‘இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபதி, கோடீஸ்வரரா இருப்பினும், இத்தனை உள்ளங்களின் அன்புக்கும், பாசத்துக்கும், அதிபதியாக அல்லவா பெரியவர் இருக்கிறார். பணம் இந்த தொழிலாளிகளின் பாசத்துக்கு ஈடாகுமா என்று ஒருகணம் நினைத்தவர்… வருண் போன்ற ஆட்களால் பணத்தை சம்பாதிக்க முடியுமே ஒழிய இவர்கள் அன்பை சம்பாதிக்க முடியாது… பெரிய பெரிய தொழிலதிபர்களும் மந்திரிகளும் வந்து பார்க்கும் இடத்தில் ..இந்த ஏழை தொழிலாளிகளின் அன்பு எங்கே எடுபட போகிறது’

கனத்த மனத்துடன் மேனேஜர் மருத்துவமனைக்குள் சென்றார்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விசித்திர உலகம் (பகுதி 8) – சுஶ்ரீ

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 6) – தி.வள்ளி, திருநெல்வேலி.