இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இருதயா மருத்துவமனையின் ஐ.சி.யு. அமைதியில் உறைந்திருந்தது. நர்ஸ் தன்னுடைய மேஜையில் அரை துக்கத்தில் கவிழ்த்து படுத்திருக்க.. டாக்டர் ரமேஷ் ராகவேந்தரின் இன்றைய மருத்துவ குறிப்புகளை பைலில் எழுதிக் கொண்டிருந்தார்.
உறக்கமின்றி ராகவேந்தர் அமைதியாக படுக்கையில் அமர்ந்திருந்தார். இந்த நாலைந்து நாட்களுக்குள் எவ்வளவு மாறுதல். வாழ்க்கையே மொத்தமாக புரட்டி போட்டு விட்டது
தனக்கு வந்த இந்த நோய். தான் படுத்தவுடன் அப்படியே போய் சேர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவர் மனதில் எழுந்தது …மூத்த மகன் தருண் நாளை வந்து விடுவான் அவனைப் பார்க்காமல் போகிறோமே என்ற ஒரு சிறு ஆதங்கம் மனதில் எழுத்தது..
தருண் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் .அவன் வருணை விட கொஞ்சம் ஆழ்ந்து யோசிப்பான்…இவனை போல முரடன் கிடையாது …அவனும் ரொம்ப நல்லவன் இல்லை என்றாலும் வருணை விட மேல்…தான் சொல்வதையாவது காது கொடுத்து கேட்பான்.
நாளை இவர்கள் முத்துவை ஏதாவது செய்யும் முன் அவசரமாக தான் ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டார் ராகவேந்தர்.
ராகவேந்தர் படுக்கையில் அமர்ந்திருப்பதை கண்ட டாக்டர் ரமேஷ் அவர் அருகில் வந்தார்.. “என்ன சார் தூக்கம் வரலையா? உங்களுக்கு பழைய பாடல்கள் பிடிக்கும்னா நான் என்னுடைய மொபைலில் பழைய சாங்ஸ் இருக்கு போடவா? கேட்டுக்கிட்டே தூங்குறீங்களா?” என்றார் வாஞ்சையோடு ..
“டாக்டர் ரமேஷ்… நீங்க ரொம்ப நல்லவரு நான் இங்க சேர்ந்ததிலிருந்து அன்போடும், கவனமாகவும் பாசமாகவும் கவனிச்சுக்கறீங்க? உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்பேன் பதில் சொல்லனும்… டாக்டர் நீங்க என்ன பத்தி என்ன நினைக்கிறீங்க?”
“சார் ! உண்மையைச் சொல்லனும்னா .. நீங்க இங்க வந்து சேரும்போது நான் உங்களைப் பத்தி தப்பா நினைச்சேன்… பெரிய பணக்காரரு.. பதவில இருக்கிறவங்களோட தொடர்பில இருக்கிறவரு.. ரொம்ப கர்வமா இருப்பாரு அப்படின்னு நினைச்சேன். ஆனால் இந்த ரெண்டு மூணு நாள்லயே புரிஞ்சுகிட்டேன் நீங்க ரொம்ப இரக்கமான மனசுக்கு சொந்தக்காரர்.. அன்பும் பாசமும் நிறைந்தவரு ”
உங்க பேர்ல உங்களுடைய கம்பெனி ஊழியர்கள் வைச்சிருக்கும் அன்பையும், பாசத்தையும் பார்க்கும் போதுதான் நீங்க எவ்வளவு தூரத்துக்கு உயர்ந்தவர்ன்னு புரியுது ..நீங்க நல்லபடியா குணமாகனும்.. எப்போதும் போல உங்க கம்பெனியை நடத்தனும்”
“டாக்டர் நீங்க என் மேல் வச்சிருக்கிற உயர்வான கருத்துக்கும் அன்புக்கும் ரொம்ப நன்றி.. நான் சொல்ல வர்ற விஷயத்தை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்களுக்கு என் மனதும் உணர்வுகளும் புரியும்.
நான் இந்த தொழிலுக்கு வந்தப்ப ஒரு சாதாரண தொழிலாளி. மனைவி மற்றும் நான்கு குழந்தைகள். வறுமையில தான் வாழ்க்கை. என்னோட கடினமான உழைப்பினாலும், ஊக்கமான முயற்சியாலும்தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன். அதுக்கு ஒரு முக்கிய காரணம் என்னுடைய அன்பான, விசுவாசமான, தொழிலாளிகள்தான் ..”
“சார்.. மூச்சு வாங்குது பாருங்க…தயவுசெய்து பேசாதீங்க… தூங்குறதுக்கு ஊசி போடுறேன்.. தூங்குங்க…”
“தயவுசெய்து செய்து கேளுங்க டாக்டர்… நான் பேச வேண்டிய நேரத்தில் பேசித்தான் ஆகனும்.. எனக்கு வயசு எண்பது. என்னுடைய எல்லா கடமைகளையும் முடிச்சிட்டேன். இனி நான் வாழ்ந்தாலும் அதிகபட்சம் நாலஞ்சு வருஷம். என்னை காப்பாற்றுவதற்காக என்னோட மகன் வருண் ஒரு தப்பான முடிவெடுத்திருக்கிறான். என்னோட கம்பெனியில வேலை பாக்கிற முத்துவ விபத்துக்குள்ளாகி, அவனோட சிறுநீரகத்த எனக்குப் பொருத்தி, என்ன பிழைக்க வைக்கனும்னு நினைக்கிறான்”
டாக்டர் ரமேஷ்.. ராகவேந்தர் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் தெரியலையே.. நீங்க எப்படி சார் சொல்றீங்க ..நீங்களா யூகப்படுத்திகிறீங்களா?”
“இல்லை டாக்டர் நானா யூகிச்சு சொல்லல.. என் மகன் மேனேஜர் மூர்த்திகிட்ட சொல்லிக்கிட்டு இருந்ததை என் காதார கேட்டேன். அப்படியே அதிர்ந்து போனேன் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் வெளிய வரல”
“பாவம் முத்து… மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன்… விசுவாசமானவன்… அவன் அப்பா என் ஆரம்ப காலத்திலிருந்து கூட இருந்தவர். நான் எப்படி அந்தக் காலத்தில் இருந்தேனோ… அதே போல தான் அவன் என் கண்ணுக்குத் தெரிகிறான். வாழ வேண்டியவன்.. அவன் எனக்காக உயிரை விட ,எனக்கு சம்மதம் கிடையாது. வருணுக்கு புத்தி சொல்லி அவனை மாற்ற முடியாது. அவன் ஒரு முரடன். சொன்னாலும் கேட்க மாட்டான். அதனால தான் அந்த முடிவெடுத்தேன். தயவுசெய்து இந்த கருவிகளின் இணைப்பையெல்லாம் எடுத்து விட்டுடுங்க”
“நீங்க என்ன சொன்னாலும்… என்னால முடியாது சார் இது மிகப்பெரிய பாவம் ..அதுவும் ஒரு உயிரை காப்பாத்த வேண்டியது தான் டாக்டர் கடமை ..அதை எடுக்கறது இல்ல . நீங்க வாழ்றது கடவுள் கையில இருக்குது.”
“அதுபோல முத்து வாழ்றது உங்க கையில இருக்கு டாக்டர். தயவு செய்து நான் சொல்றத கேளுங்க..அவனை பிணமாக்கி நான் உயிர் பிழைச்சு, அந்த வாழ்க்கை வாழ என் மனசு சம்மதிக்குமா? அப்படி வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா “
அவர் எவ்வளவு எடுத்துக் கூறியும் டாக்டர் ரமேஷ் மறுக்க…
“அப்ப ஒண்ணு செய்யுங்க… கொஞ்ச நேரம் வெளியில நில்லுங்க…ஒரு அரை மணி நேரம் கழிச்சு வந்து இணைப்புகளை எல்லாம் திரும்ப மாட்டிவிட்டுடுங்க டாக்டர்… இந்த ஒரு உதவி எனக்காக செய்யுங்க… இன்னொரு உயிரை காப்பாற்றுவதற்காக இந்த உதவி செய்ததா நினைச்சுக்கோங்க… என்னால ரொம்ப பேச முடியல தயவு செய்து எனக்கு இந்த உதவி செஞ்சா நான் நிம்மதியா என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்வேன்”
பெரியவர் கை கூப்ப ரமேஷுக்கு மனம் ஒப்பவில்லை, என்றாலும் பெரியவர் மனது புரிய, அவர் பக்கம் உள்ள நியாயமும், அவருக்கு நிம்மதி வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.
வருண் செய்ய நினைத்த காரியத்தால் அவன் அவர் மனதில் எழுந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. பெரியவர் பிழைக்க வேண்டும் என்பதில் 100% மாற்றுக்கருத்து கிடையாது.. ஆனால் அதற்காக இன்னொரு வாழ வேண்டியவனை கொல்வது என்ன நியாயம்… வருண்னுடைய பணத்திமிர் அவரை கோபம் கொள்ள வைத்தது.
பெரியவருடைய நியாயமான கோரிக்கையை ஏற்பது தான் தனக்குள்ள ஒரே வழி.. அதுதான் அந்த அப்பாவி தொழிலாளியை காப்பாற்றும் என்று மனதிற்கு பட டாக்டர் ரமேஷ் கனத்த மனதுடன் ஐ .சி. யு வை விட்டு வெளியேறினார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings