இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சென்னையின் புறநகர் பகுதி அது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது…எப்போதாவது சென்ற ஒன்றிரண்டு கார்களைத் தவிர பெரிதாக வாகன போக்குவரத்து இல்லை. வானம் இருண்டு, லேசாக தூறிக் கொண்டிருந்தது..
சாலை கழுவி விட்டது போல தண்ணீரில் பளபளத்துக் கொண்டிருக்க …அந்தப் பகுதியே அதிக நடமாட்டம் இல்லாமல் கனத்த மௌனத்தைப் போர்த்திக் கொண்டிருந்தது.பின் மாலைப் பொழுது…நேரம் அதிகம் ஆகவில்லையென்றாலும், மேகங்கள் கவிந்திருந்ததால் பின்னிரவு போல காட்சியளித்தது.
அந்த மிகப்பெரிய இடத்தின் நடுவே அமைந்திருந்த கட்டடம் பிரபல மார்பிள்ஸ் கம்பெனியின் கோடௌன் .வாசலில் அமைந்திருந்த மிகப்பெரிய ஆர்ச்சில் “ராகவ் மார்பிள்ஸ்” என்ற பெயர் பளபளத்துக் கொண்டிருந்தது. ‘ அதிக வெளிச்சமில்லாமல், அரையிருளில் மூழ்கியிருந்தது.
ராகவ் மார்பிள்ஸ்’ கோடௌனில் மிகக் குறைந்த அளவு ஆட்களே அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
கம்பெனிக்கு சப்ளை ஆகும் மார்பிள்ஸ்ஸின் முக்கால்வாசி ஸ்டாக் அந்த இடத்தில் தான் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சாயங்காலம் வேலை முடிந்து ஆட்கள் எல்லாம் போய்விட்டனர், சின்ன முதலாளி வருண் குமாரின் நம்பிக்கைக்குரிய ஆட்களே அங்கே வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராகவ் மார்பிள்ஸ் முதலாளி ராகவேந்தர் மிகச் சிறிய கடையாக ஆரம்பித்த அந்த பிசினஸ் இன்று இந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ந்திருந்ததற்கு அவருடைய நேர்மையும் உண்மையும் அயராத உழைப்புமே காரணம்.
ஊழியர்கள் அனைவருக்குமே முதலாளி என்றால் மிகப்பெரிய அபிமானம் உண்டு. ராகவேந்தருக்கும் வயது கூடிக் கொண்டே போவதால் இயலாமையினால் கோடௌன் வருவது குறைந்து விட்டது ..எப்போதாவது ஒருமுறை தலை காட்டுவார். மற்றபடி அந்த இடம் முழுக்க முழுக்க சின்னவர் வருண்குமார் பொறுப்பில் இருந்தது .
வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி, அந்த குளிருக்கு இதமாக அருகில் உள்ள டீக்கடையில்’ டீ சாப்பிட்டுவிட்டு வரலாமா’ என்று யோசிக்கும்போது சின்ன முதலாளி வருண்குமாரின் கார் வருவது தெரிந்து விரைப்பானான் …வருண்குமாரின் ஆடி கார் அதி வேகத்தில் சீறி வருவதைப் பார்த்ததும்… முதலாளிக்கு மூடு சரியில்லை என்பது மனதில் பொறி தட்ட… அவசரமாக கேட்டைத் திறந்து சல்யூட் அடித்தான் .
வருண்குமார் ராகவ் மார்பிள்ஸ் முதலாளியின் இளைய மகன்…அவன் அப்பா குணத்தில் தங்கம் என்றால் இவன் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம். ..
இந்த கம்பெனியில் எல்லோருமே சின்ன முதலாளி வருண் குமார் என்றால் உள்ளூர நடுங்கத்தான் செய்வார்கள்.கார் உள்ளே நுழைந்து, போர்ட்டிகோவில் நிற்க, கார் சத்தம் கேட்டு மேனேஜர் ஓடி வந்தார்.
கோபமாக இறங்கிய வருண்குமார் கார் கதவை ஓங்கி அடித்ததிலிருந்தே அவனது மனநிலை மேனேஜருக்குப் புரிய, உள்ளூர ஒரு நடுக்கம் ஏற்பட்டது..அவன் அப்பா காலத்திலிருந்தே வேலை பார்க்கிறவர் என்றாலும் இப்போதுள்ள இளைய தலைமுறையுடன் மல்லுக்கட்டுவது சற்று சிரமமாகவே தெரிந்தது..அதிலும் வருண்குமார் நினைத்ததை சாதிக்கும் முரடன்.
அப்பாவுக்குத் தப்பிப் பிறந்த பிள்ளை. அப்பாவின் குணத்தின் சாயல் ஒன்று கூட இவனிடம் கிடையாது. மேனேஜர் மனதில் எண்ணங்கள் தாறுமாறாக ஓட …“எங்க அந்த துரோகி? கட்டிப் போட்டிருக்கீங்களா?” வருண் குமாரின் கத்தல் மேனேஜரை நினைவுலகத்திற்கு மீட்டது …
“வாங்க தம்பி… இங்கதான் பாதுகாப்பா வச்சிருக்கோம்” தன் எண்ணங்களை வெளிக்காட்டாமல் சின்ன முதலாளியை வரவேற்றார்.
உள்ளே ஒரு நாற்காலியில் அசோக்குமார் கட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தான்..
“ஏண்டா நாயே… உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் வீட்டு உப்பை தின்னுட்டு , அடுத்தவனுக்கு விசுவாசமாய் இருப்ப…. எத்தனை நாளா இந்த வேலை நடக்குது? நீ மட்டும் தானா இல்ல உனக்கு கூட்டாளியா கருப்பு ஆடு எவனும் இந்த கம்பெனில இருக்கானா? எங்களுக்கு கிடைக்க வேண்டிய டெண்டர் ரெண்டு தடவையா கிடைக்காததற்கு காரணம் நீதானே ..நாங்க டெண்டர்ல குறிப்பிட்ட தொகையை தெரிஞ்சுகிட்டு எதிரி கம்பெனிக்கு விசுவாசமா போய் சொல்லியிருக்கே…என்ன பத்தி தெரிஞ்சும் உனக்கு பயமில்லை ..குளிர் விட்டுப் போச்சுல்ல..”
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அசோக்குமார் தலையை தூக்கி… “ஐயா… என்னை மன்னிச்சிடுங்க… காசுக்கு ஆசைப்பட்டு செஞ்சுட்டேன். இனியொருமுறை தப்பு பண்ண மாட்டேன். எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தீங்கன்னா, நான் வடக்க எங்கயாவது போய் பொழச்சுக்குவேன்…இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடுங்க ஐயா… நான் புள்ள குட்டிக்காரன்.. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்குது ..”
நாற்காலியை எட்டி உதைத்த வருண்குமார் ..”ஏன்டா தப்பு செய்யறதுக்கு முன்னாடி இதெல்லாம் புத்தியில உரைக்கலையா? கோழி எங்க வீட்டில மேஞ்சிட்டு அடுத்த வீட்டில போய் முட்டை போடுமாம்..எங்களை என்ன இளிச்ச வாயன்கள்னு நினைச்சிட்டாயா… குடும்பம், புள்ளை குட்டின்னு சென்டிமெண்ட் பேசினா, விட்டுடுவேன்னு நினைச்சியா.. மன்னிப்புங்கறது என் அகராதியிலேயே கிடையாது…
என்னை எங்கப்பாவை மாதிரி “இந்த ஒரு தடவை மன்னிக்கிறேன்.. இனி இந்த மாதிரி செய்யாத.. உனக்கு புள்ள குட்டி இருக்கு ..அத நெனச்சு ஒழுங்கா இரு. நான் உங்கள மாதிரி தொழிலாளர்களை எல்லாம் என் குடும்பமா தான் நினைக்கிறேன் நீயும் அப்படி நினைக்கனும்னு எதிர்பார்க்கிறேன்”னு எங்க அப்பா மாதிரி வசனம் பேசுவேன்னு நினைச்சுகிட்டியா?” அப்பா குரலில் பேசி காட்டியவன் கடகடவென ஆத்திரத்துடன் சிரித்தான் .
அவனுடைய சிரிப்பில் அங்கே இருந்தவர்கள் பயத்தில் உறைந்தனர் .
“வளவளன்னு எதுக்கு பேசிகிட்டு… காசி கிட்ட சொல்லி இந்த நாய படகில கொண்டு போயி, கொன்னு நடுக்கடல்ல வீசிட்டு வரச்சொல்லுங்க” என்று ஆத்திரத்தோடு மேனேஜரிடம் உத்தரவிட்டான்.
“தம்பி.. கொஞ்சம் யோசிங்க… பெரியவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்… இவனை கொல்ல வேண்டாம்..” என்று மெதுவாக இழுத்தார் மேனேஜர்.
“அவனுக்கு சப்போர்ட் பண்ணினா, உங்களுக்கும் இதே கதிதான் ..என்று ஆத்திரத்தோடு கத்திய வருண்குமார் விடுவிடுவென வெளியே நடந்தான். அதிர்ந்து போய் நின்றார் மேனேஜர் .
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும். ..
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings