in ,

துடுப்பு இல்லாத படகுகள்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கோவில் வாசலில் அன்று நல்ல கூட்டம். எதிர்பார்த்ததை  விட சீக்கிரமே பூ விற்றுத் தீர்ந்து விட்டது. காலியான கூடையையும் குலுங்கிய சுருக்குப் பையையும் ஒருமுறை பார்த்தவள் சந்தோஷமாக உணர்ந்தாள்.

இன்றைக்கு நேராக வீட்டுக்கு போய் விடலாம். அலைச்சல் மிச்சம். மீனாட்சி சந்தோஷமாக சிரித்துக் கொண்டாள். அபூர்வமாக வந்த சிரிப்பு ,ஓய்வு  இரண்டையும் அனுபவித்தவாறே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று யாருக்கு தெரியும்? 

கல்யாணமாகி குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகள் பெறும் வரை வேலு ஒழுங்காகத் தான் இருந்தான். யார் வைத்த சாபமோ ஒழுங்காக இருந்தவன் குடிகாரனாக மாறிப் போனான். குணமும் சேர்ந்து கெட்டது. ஆண்பிள்ளை என்ற அகம்பாவமும் சேர்ந்து கொண்டது. தினமும் சண்டை, கூச்சல் அடி என்று அவள் சுருண்டு போனாள். யாருமே அவள் வலியைப் புரிந்து கொள்ளவில்லை. அனுசரித்துப் போ என்று தான் சொன்னார்கள்.

வீட்டுக்கு வந்தால் ஆக்கிக் போட மனைவி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் ஆயிற்றே!.விதிமீறல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. பொறுமையிழந்து   மீனாட்சி வெளியேறினாள். குழந்தைகளுடன் தனியாக ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் போய் உட்கார்ந்தாள்.

மனதில் உறுதியும் வெறியும் இருந்தது எப்படியும் தலை தூக்கி விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவன்கூட இருக்கும் போதே பூக்கட்டித் தந்து கொண்டிருந்தாள். மாதா மாதம் அவன் பெயரில் சீட்டு கூட போட்டுக் கொண்டிருந்தாள்.

அதெல்லாம் கனவாகி விட்டது. இரண்டு மூன்று முறை வேலு வந்து தகராறு செய்தான். எப்படியும் அவளை வீட்டுக்கு. கூட்டிப் போய் விட வேண்டும் என்று நாலு பேரைக் கூட்டிக் கொண்டு வந்து வம்பு செய்தான்.

அவர்களும் அவனுக்குத்தான் ஆதரவாகப் பேசினார்கள். “பொம்பளைக்கு இவ்வளவு அடம் கூடாதும்மா!” ஒருவர் சொல்ல அவள் எரிமலையானாள்.

“அட ! போய்யா நீயும் உன் நியாயமும்! பொம்பளைன்னா அடி வாங்கி சாகணும்னு தலையெழுத்தா? சாப்பாட்டுக்கு கூட பணம் தரமாட்டேன்கிறான். இவன் ஒரு மனுஷன்னு நீங்களும் பேச வந்துட்டீங்க!”

தூக்கி எறிந்து பேசினாள் அவள்.

“இருடி! எப்படியும் நீ என்கிட்ட வந்து தான் ஆகணும்! அப்போ பார்த்துக்கறேன்.”

மீசையை முறுக்கிக் கொண்டு சவால் விட்டான் அவன்.

அவளுடைய‌ அம்மா அப்பாவுக்கு கூட அவள் முடிவில் அவ்வளவு விருப்பமில்லை.

அவள் அங்கலாய்த்த போது  அவள் சொன்னாள்.

“இதோ பாரும்மா! முந்தி ஒரு சினிமாவே கூட காண்பிச்சாங்களே! ஒரு கோடு அழிக்காம சின்னதாக பண்ணனும்னா என்ன பண்ணனும்னு! அது மாதிரிதாம்மா புருசன் பெரிசுதான்! ஆனா அதைவிட பெரிசு  குழந்தைங்க!அதுங்க எதிர்காலத்துக்கு முன்னால் என்னோட வாழ்க்கை ,ஆசை எல்லாம் ஒண்ணுமே இல்லை. பெத்துப் போட்டுட்டு அதுங்க எப்படியோ போகட்டும்னு அந்த ஆள் நினைக்கிற மாதிரி என்னால முடியாதும்மா. படிக்க வைக்க பணம் , நிம்மதி எல்லாம் வேணும்.”

அவள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள். பொழுது போக்குக்காக செய்த வேலையை தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக மாற்றிக் கொண்டாள். அவனை வழியில் எங்கு பார்த்தாலும் கண்டும் காணாமல் போக கற்றுக் கொண்டாள்.

சிந்தித்தபடியே வீட்டை அடைந்தாள் மீனாட்சி. குழந்தைகளுக்கு உணவளித்துவிட்டு  அவளும் அன்றைய வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு  அப்பாடா என்று படுத்தாள்.

தினமும் வரும் நினைவுகள் சுழற்றி அடித்தன. எப்படி இருந்த நாம் இப்படி மாறிட்டோம் என்று! ஆனால் இந்த நிம்மதி தேவையாக இருந்தது.

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும் என்ற வெறியும் திடமும் உடலை உருவேற்றிக் கொண்டிருந்தன.

“என்ன மீனாட்சி! இந்த பக்கமே வரதில்லை உன்னைப் பார்க்கணும்னு சொல்லி விட்டிருந்தேனே!”

“ஆமாம் சார் , அதான் இன்னிக்கு கொஞ்சம் நேரம் கிடைச்சது.என்ன சார் விஷயம்? “

அங்கிருந்த பானைத் தண்ணீரில்  ஒரு செம்பு எடுத்து குடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டவளை பரிவுடன் பார்த்தார் அவர்.

“இதோ பாரு மீனாட்சி, முன்னாடி ஒரு சீட்டு போட்டுகிட்டு இருந்தியே! கவனம் இருக்கா? “

“ஆமாம் சார் ! அந்த ஆள்தான் எல்லார் பணத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டானே! “

“அவன்தான், இப்போ பிடிச்சுட்டாங்க! எல்லாரோட  பணத்தையும்  திருப்பி  வாங்கிட்டாங்க. உன்னோடதும் வாங்கி கொடுத்துட்டாங்க.ஆனா எல்லாம் செக் போட்டு கொடுத்திருக்காங்க”

விவரம் சொன்னவர் ,”ஆனா அது வேலு பேரில வந்திருக்கு ! அதான் உன்னைக் கூப்பிட்டு விட்டேன்.”

“அதுசரி! இந்த செக்கை வச்சு நான் என்ன சார் பண்ண முடியும்?”

“நீ தானேம்மா கட்டினே!  யார் மூலமாவது அவனுக்கு தெரியப்படுத்து. பணம் எடுத்து கொடுக்கிறானா பார்க்கலாம்.”

அவளுக்கு சிரிப்பு வந்தது.

“அந்த ஆள் பணம் தருவான்னு நம்புறீங்களா நீங்க! அது என் பணம் தான். என் வாழ்க்கையே அந்த ஆளால போச்சு! இது என்ன சார் பெரிசு!”

“ஆறாயிரம் ரூபாய்  மீனாட்சி! கொஞ்ச நஞ்சம் இல்லை.அதனால்தான் கேட்டுப் பாரேன்! நானும் உன் கூட வருகிறேன்.”

அவள் யோசித்தாள். வாஸ்தவத்தில் அவள் கட்டிய பணம்தான். ஆனால் அதில் என்ன அவள் பேர் எழுதியா இருக்கும்! உழைத்து உழைத்து காய்த்துப் போன விரல்களால் ஒவ்வொரு ரூபாயாக எண்ணி எண்ணிப் பார்த்து கட்டிய பணம்தான்.என்ன செய்வது! 

‘கேட்டுப் பார்க்கலாம் ‘என்றார் அவர் முடிவாக.

‘உன் பிள்ளைகளுக்கு கொஞ்ச நாளைக்காவது வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ளலாமே!’

அவள் அரை மனதாக சம்மதித்தாள். வாத்தியாரும் கூட வருவதால் தருவதற்கு  வாய்ப்பிருக்கிறது. அவர் அவனிடம் விவரம் சொன்னார்.

“செக் மாத்தி பணத்தை கொடுத்துவிடு !” என்றதும் அவன் அவளைப் பார்த்தான்.

கெஞ்சுவாள் என்று நினைத்தான் போலிருக்கிறது. அவள் மௌனமாக நின்றதும் அவன் கொக்கரித்தான்.

“வந்தியா வழிக்கு! ஒழுங்கா மரியாதையா என் கூட வந்து இருக்கேன்னு சொல்லு. அதுக்கு மேலேயே உனக்கு பணம் தரேன்.”

அவள் சீறினாள்.

“அடச்சீ! என்னவோ யார்கிட்டயோ பேசற மாதிரி பேசற! உன் பணம் எனக்குத் தேவை.யில்லை. நான் கட்டின பணம்.என் புள்ளைங்களுக்காக வந்தேன். பாதியாவது எடுத்துக் கொடு. மீதியை  உனக்கு குடிக்கு வைத்துக் கொள். குடிதானே உனக்கு முக்கியம்!.”

எகத்தாளமாக சொன்னாள் அவள்.

“என்னடி! வாய் நீளுது! ஆம்பளையான்னு கேட்டே இல்ல! இப்போ பார் ! என் கால்ல விழ தயாராயிட்டே! தரமுடியாதுடி ! ஒத்த பைசா கூட தரமாட்டேன். உன்னை அழ வைத்து பார்க்கணும்டி. அது என் துட்டு. உன்னையே இரண்டு தட்டு தட்டி இழுத்துக்கிட்டு  போக முடியும் என்னால். உன்னால் என்னடி பண்ணமுடியும்.!”

திமிர்த்தனமான அவன் வார்த்தைகளில் வெகுண்டு எழுந்தாள் அவள்.

“என்ன சொன்னே! என்னால் என்ன செய்ய முடியும்னா! உனக்குத்தான் எல்லாம் செய்ய முடியுமா! என்னாலும் முடியும்.”

“அந்தப் பணம் உன் கைக்கு வந்தா குடிச்சே சீரழிப்பே! அதை விட” என்றவள் கையில் அந்த செக்கை எடுத்து விரித்துப் பிடித்தாள்.

“போகட்டும்.! உனக்கும் இல்லாமல் போகட்டும்!” என்றபடியே  அந்த தாளை நாலாக எட்டாக கிழித்து  அவன் முகத்தில் விட்டு எறிந்துவிட்டு திரும்பி நடந்தாள் அவள்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    26 வயதினிலே! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    வானில் பறக்கும் பட்டம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்