எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘உனக்கு வரையணும்னு தோணுது தப்பில்ல ஷானு…! அதுக்காக இந்த பட்டப்பகல்ல குளத்தங்கரைக்கு கூப்பிட்ட பாரு, அதான் தப்பு’ சொன்னாள் தேவகி.
ஷானு என்கிற ஷானவாஸ் புன்சிரிப்புடன் ‘நேரம் காலம் பாத்தா ஐடியா வரும்?’ என்றவாறு கான்வாஸில் வரைந்து கொண்டிருந்தான்.
அந்தக் குளம் அன்னவாயல் குளம், மிகவும் பெரிய குளம். ஆமணக்குச்செடிகளும், கோரைப்புற்களும் பெயரறியா இன்னபிற சிறு செடிகள் சூழ அசையாமல் இருந்தது.
பகல் வெயிலின் உக்கிரம் காற்றில் தெரிந்தது. ஆனால் ஷானவாஸுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவன் தேவகி வருவதற்கு சற்றுமுன் அவளுக்கு தொலைபேசிய போது ‘தேவா, வெயில் குளத்துக்கு நடுவுல இருக்க சீமக்கருவேல மரத்துல பட்டு மரநிழல் குளத்துல தெரியுது. மரத்துல ஒரு கொக்கு உட்கார்ந்திருக்கறதும் நிழல்ல பாக்க சூப்பரா இருக்கு, நா வரையப்போறேன்! நீ உடனே வா’ என்றான்.
அவன் அப்படிப்பட்ட ஒரு தினுசான கலைஞன். அவனுக்கு எப்போது ஓவியம் வரையத் தோன்றும் என்றோ, கவிதை எழுதுவானென்றோ, புல்லாங்குழல் வாசிப்பானென்றோ, புகைப்படம் எடுப்பானென்றோ சொல்லவே முடியாது. எல்லாமே திடீரெனத் தோன்றும். தேவகியும் கொஞ்சம் கவிதை, ஓவியம் என்றிருந்த காலம். இரண்டரை வருடங்களுக்கு முன் பண்ணிரண்டாம் வகுப்பு கோடை விடுமுறையில் வீட்டருகே இருந்த தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் வகுப்புக்கு போயிருந்தபொழுது தான் முதன்முதலாக அவனை சந்தித்தாள். கைபேசிகள் வந்திராத இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம் அது.
‘ஹாய்! ஐ ஆம் ஷானவாஸ்! இது எப்டிருக்கு பாருங்க?!’ வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது ஒரு காகிதத்தை நீட்டிக்கொண்டே கேட்டான்.
அதில் தேவகி தட்டச்சு செய்து கொண்டிருப்பது வரையப்பட்டிருந்தது. மிக நேர்த்தியான பால்பாயிண்ட் பேனாக்கோடுகளால் அவள் டைப் செய்வது, அந்த மேசை, மேலே தொங்கும் ஃபேன் எதிரே தெரிந்த ஜன்னல் எல்லாம் துல்லியமாக வரையப்பட்டிருந்தது.
அதைவிட அந்த ஜன்னலுக்கு வெளியே தெரிந்த புளியமரம் அதில் கட்டப்பட்டிருந்த வண்டிக்காளையும் படுத்திருந்த கிழவனும் அழகாக வரையப்பட்டிருந்தது தான் தேவகியை ஆச்சரியப்படுத்தியது.
‘வாவ்’.. தன்னையுமறியாமல் கத்திவிட்டாள். சுற்றியிருந்தவர்களும் வாங்கிப் பார்த்து பாராட்டினர்.
‘சாரி! உங்க அனுமதியில்லாம உ ங்கள வரஞ்சதுக்கு, இத நீங்களே வச்சுக்குங்க’
‘பரவால்ல, அற்புதமா வரைஞ்சிருக்கீங்க! அதனால மன்னிச்சுடறேன்’ பொய்யாய் சொல்லிவிட்டு ஓவியத்தை வாங்கிக்கொண்டாள்.
அப்படி தொடங்கி வளர்ந்த அந்த நட்பு இரு வீட்டாருக்கும் இருந்த ஆரம்ப சந்தேகத்தை தெளிவாக்கி நேர்த்தியாக போய்க்கொண்டிருந்தது.
ஒருநாள், ‘ஏன் தேவா? ஒராணுக்கும் பெண்ணுக்கும் உடல் கவர்ச்சியற்ற நட்புக்கு சாத்தியமே இல்லையா?’ என்று கேட்டான்.
‘ஏனில்லை? இப்ப நம்ம இல்லையா? நம்ம குடும்பங்களும் நம்மை நல்லா புரிஞ்சிருக்கே? இதவிட என்ன வேணும்?’
‘அவங்களுக்கும் ஆரம்பத்தில நம்ம மேல சந்தேகம் இருந்துச்சே? உன் வீட்டுக்கு நான் வந்து பழகி, என் வீட்டுக்கு நீ வந்து சொல்லி அப்புறம்தான நம்பினாங்க’
‘ஷானு! ஒரு விஷயத்தை நீ மறந்துட்ட! நம்ம இரண்டு பேரும் இரண்டு மதத்த சேர்ந்தவங்க. அப்படிப்பட்ட ரண்டு பேர் பழகும்போது சமூகத்தோட பார்வையை பத்தி உனக்குத் தெரியாதா? எவ்வளவு சந்தேகங்கள் வரும்? அதெல்லாம் நம்ம குடும்பங்களைத்தானே பாதிக்கும்?’
‘சரிதான்! ஆனா ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலித்தான் இருக்கும்னு நினைக்கிறது மாறவே மாறாதா?’
‘நாமெல்லாம் பண்பாடு, கலாச்சாரம்னு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வாழ்ந்துகிட்டிருக்க சமூக விலங்குகள். சிலதெல்லாம் திடீர்னு மாறாது ஷானு! மாத்திடவும் முடியாது.’
அவனுக்கு சினிமா டைரக்டர் ஆனதுதான் கனவு. ‘ஒருநாள் நானே என் கதைக்கு திரைக்கதை எழுதி, படங்களா வரைஞ்சு, படமாவும் எடுப்பேன். இந்த உலகத்துக்கே அது புது ட்ரீட்மெண்டா இருக்கப் போவுது’ என்றான்.
‘கனவு நனவாகணும்னு நான் பிரார்த்தனை பண்றேன். அப்படி நடந்தா நானும் வெளில பெருமையா சொல்லிக்கலாம்ல என் ஃபிரண்ட் தான் இந்தப்படத்தோட டைரக்டர்னு’ சிரித்துக்கொண்டார்கள்.
கல்லூரி முடிந்ததும் தேவகியை தூரத்து உறவினர் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைச் சொன்னபோது, ‘பைத்தியமா தேவா உனக்கு? உன் லட்சியமே பத்திரிக்கையாளராவது. அதைவிட்டுட்டு இந்தக் கல்யாணம்கிற ஜெயில்ல மாட்டி உன் வாழ்க்கையை கெடுத்துக்கப் போறியா?’
‘ஷானு! எங்க ஆச்சாரமான குடும்பத்துல போயி ‘எனக்கு கல்யாணம் பண்ணப்பிடிக்கல, நான் ஜர்னலிசம் படிக்க விரும்பறேன்னு சொன்னேன்னு வை’ அவ்வளவு தான் மொத்தக்குடும்பமும் சொந்தக்காரங்களும் ரவுண்டு கட்டி மூளைச்சலவை பண்ணி ஒருவழியாக்கிடுவாங்க’..
‘அப்ப அவங்கள விட்டு வெளில வந்துடு தேவா! நம்ம எங்காவது போய் ஏதாவது வேல செஞ்சு நம்ம லட்சியத்தை நிறைவேத்தலாம்’. அதிர்ச்சியானாள். இப்படிச் சொல்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை.
‘என்ன பேசுற ஷானு?! ஏற்கனவே நம்ம ஃபிரெண்ட்ஷிப்புக்காக குடும்பங்கள்ல நிறையப் பேசி, போராடி நம்பவச்சிருக்கோம். அப்படியிருக்க நாம ஓடிப்போனா அது எப்பேர்ப்ட்ட களங்கமாகும்னு யோசிச்சியா? அப்ப நம்ம சொன்ன ஃபிரெண்ட்ஷிப்போட அர்த்தம் என்னவாகும்?’
அவன் ஒன்றும் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் பேசாமல் எழுந்து போனான். திருமணப் பத்திரிக்கை கொடுக்கும சென்றிருந்த போது பரிதாபமாகப் பார்த்தான்.
தனியே கூப்பிட்டு, ‘என்னை நம்புற என் குடும்பத்த என்னால சங்கடப்படுத்த முடியாது ஷானு, புரிஞ்சிக்க’. அவன் ஒன்றும் பேசவில்லை. பின்பு திருமணம் முடிந்து அவள் பாம்பே வந்துவிட்டாள்.
வாரம் ஒருமுறை ஸ்கெட்ச் பேனாவால் ஏதாவது இயற்கை காட்சி வரைந்து, அந்த வார விஷயங்களைப் பற்றி கதைபோல எழுதப்பட்ட கடிதம் அவளைத் தேடி வந்தது. அவளும் பதில் எழுதினாள். ஆனால் இது அவள் கணவனுக்குப் பிடிக்காமல் போலவே, இனி இதைத் தொடரவேண்டாம் என்று எழுதியனுப்பிவிட்டாள்.
பின்னர் அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஊருக்குப் போன போது ஷானவாஸ் வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனதாக தகவல் கிடைத்தது. அவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பின்னர் அப்படியே வாழ்க்கை கடந்துபோனது.
வருடங்கள் கரைந்து போனது. ஒருநாள் தினசரியில் வந்த ஒரு திரைப்பட விளம்பரத்தில் இயக்குநரின் பெயர் ‘ஷானவாஸ்’ என்றிருந்ததைப் பார்த்து ‘அவனாக இருக்குமோ’ என்று யோசித்தாள்.
அந்த ஊரைவிட்டு அவள் குடும்பமும் வந்து பலவருடங்கள் ஆனதால் யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் தேடிக் கண்டுபிடித்துவிட்டாள்.
‘டியர் ஷானு! நான் தேவா! நல்லாருக்கியா? படம் பார்த்தேன், ரொம்ப நல்லாருக்கு. எப்படியோ லேட்டானாலும் உன் லட்சியத்தை அடைஞ்சுட்ட! வாழ்த்துக்கள்!’ என்று மட்டும் அனுப்பியிருந்தாள்.
பதில் வரவில்லை. ஒருவேளை பிஸியாக இருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டாள்.
பல வாரங்களுக்குப் பிறகு, புதிய இயக்குநர் ஷானவாஸ் தன் முதல் திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழாக் கொண்டாட்டத்தின் பொழுது விழா மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழநதார். சில வாரங்களுக்கு முன் வெளியான…….’ என்று ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்தாள். அது அவன்தான் என்று உறுதியானதும் நடுங்கிப் போனாள்.
சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings