2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அம்மா எங்கம்மா போனே”, இருட்டில் தேடினேன் அம்மாவை. கைகள் துழாவின அருகில். கனவுதான், என்னை ஓடும் ரயிலில் விட்டு விட்டு இறங்கிப் போய் விட்டாள் அம்மா.
இது என் சிறு வயசிலிருந்து வரும் கனவு, எத்தனை முறை, எத்தனை முறை மீண்டும் மீண்டும் அதே கனவு. ஆனால் ஒவ்வொரு முறையும் வேர்த்து விறுவிறுக்க எழுந்திருப்பேன்.
நான் சுகன்யா, எனக்கு 10 வயது இருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். நானும் அம்மாவும்தான். அம்மா ஒரு கம்பெனில வேலை பாக்கறா, என் அம்மம்மாதான் சிறு வயதில் எனக்கு துணைக்கு. இப்ப அவங்களும் இல்லை. ஏனோ நான் அப்பாவை அவ்வளவு மிஸ் பண்ணலை, அப்பாவை நினைச்சா அவர் குடிச்சிட்டு வந்து அம்மாவை பாடாய் படுத்தியதுதான் ஞாபகம் வருது. அம்மா பாவம் எதிர்ப்பு கூட தெரிவிக்கத் தெரியாத சாது.
நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடிச்சிட்டு வேலை தேடிட்டிருக்கேன். என்னைப் பத்தி சொல்லவா? நான் படிப்புல ரொம்ப உஷார் இல்லை ஆனா மோசமும் இல்லை. பாக்க அழகாதான் இருப்பேன் (இது என் நினைப்பு) மும்பை பக்கத்துல தாணே சிடிக்கு எப்பவாவது வந்தா நீங்களே என்னை பாத்துட்டு சொல்லுங்க அழகா இருக்கேனான்னு.
இன்னிக்கு அம்மா வேலைக்கு எப்பவும் போல 8 மணிக்கே புறப்பட்டுட்டா, பஸ் பிடிச்சு ‘வாகலே இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ‘ போயி உள்ளே கொஞ்சம் நடந்தா அம்மா வேலை பாக்கற
‘ஸ்டார் என்ஜினியரிங் இண்டஸ்ட்ரி’ வந்துடும். நான் ஒரு தடவை எதோ கம்பெனி அனுவல் ஃபங்கஷன்னு போயிருக்கேன். சீ அங்கே வேலை பாக்கற பலர் மோசம் பாக்கற பார்வையே சரியில்லை. பேபி,பேபினு தொட்டுப் பேசதான் வராங்க. அம்மாவோட மேனேஜர் குரங்கு மடில உக்கார வச்சு பேசுது, எனக்கு சுத்தமா பிடிக்கலை. அதுக்கப்பறம் நான் அங்கே போறதில்லை.
‘ம்’ அது போகட்டும், அம்மா புறப்பட்டு போனவுடனே, குளிச்சு நீட்டா என் ஃபேவரைட் லக்கி டிரெஸ் உடுத்தி, கதவை சாத்தி பூட்டிட்டு, சாவியை பக்கத்து வீட்ல கொடுத்துட்டு புறப்பட்டேன். என் முதல் ஜாப் இன்டர்வ்யூ ஆச்சே. வீடு தாணே ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்துலதான்.
தாணேல இருந்து புறப்படற லோகல் டிரெயினை பிடிக்கணும். அப்பதான் உக்காந்து போக முடியும். அம்பர்நாத், கல்யாண் இன்னும் தூர ஸ்டேஷன்ல இருந்து வர லோகல்ல போனா இறங்கறப்ப தமிழ் பட வில்லன்கிட்ட தனியா சிக்கின ஹீரோயின் கோலத்துலதான் இறங்க முடியும்.
தாதர் ஸ்டேஷன்ல இறங்கி மகாலட்சுமி கோவில் பக்கத்துல இருக்கற அந்த மல்டி நேஷனல் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு டாக்சில போனேன். ஏற்கனவே 12 பேர் ரிசப்ஷன்ல காத்திருந்தாங்க.
என் பெயரை ரிசப்ஷனிஸ்ட்’கிட்ட பதிவு பண்ணிட்டு நானும் உக்காந்தேன். பக்கத்துல உக்காந்திருந்த இளைஞன் என்னைப் பாத்து ஸ்மைல் பண்ணினான். நானும் ஒரு அரைப் புன்முறுவல் பூத்தேன்.
“நான் கெளசிக் அகர்வால், டெவலப்பர் போஸ்டுக்கு அப்ளை பண்ணி இருக்கேன்”
“ஓ நான் சுகன்யா, நானும் அதே போஸ்ட்க்குதான் அப்ளை பண்ணி இருக்கேன்”
அவன் சிரித்துக் கொண்டே, “அப்ப எனக்கு போட்டியாளர்னு சொல்லுங்க”
அவன் பளிச் சிரிப்பு என்னை கவர்ந்தது.”ஏன் நிறைய வேகன்சி இருக்க வாய்ப்பு இருக்கே”
ஒரு பெண் உள்ளே இருந்து வந்து, ”மிஸ்டர் கெளசிக் அகர்வால்” என்றாள்.
அவன் என் பக்கம் பார்த்துக் கொண்டே எழுந்தான். நான் ஒரு முழுப் புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட் கெளசிக்”
அவன் முகம் பூரித்தது, ”தேங்க்யூ” உள்ளே போயிட்டான்.
திரும்ப வெளியே போக வேறு வாசல் போல இருக்கு, திரும்ப அவனை பாக்கலை. நான்தான் கடைசியா உள்ளே போனேன்.
அந்த இன்டர்வ்யூ பேனலில் 2 பெண்கள், 2 ஆண்கள். அதில் ஒருவர் HR போல இருக்கு, மீதி மூணு பேரும் மாறி மாறி கேள்வி கேட்டார்கள.
கடைசியா அந்த HR பேசினார். ”ஏம்மா ஏன் இந்த வேலை உனக்கு வேணும், முன் அனுபவம் இல்லையே, எந்த ஊர்ல போஸ்டிங் போட்டாலும் போவயா, வெளிநாடு அனுப்பினா போவயா, சம்பளம் இவ்வளவு வேணும்னு எதிர்பார்ப்பு இருக்கா” மூச்சு விடாமல் கேட்டு என் முகத்தை பார்த்தார்.
எனக்கு பதில் சொல்லத் தெரியலை இதுக்கு. மற்றவர்கள் இதை பார்த்து புன்னகைத்தனர், ”ஓகே மிஸ்.சுகன்யா வி ஆர் பிளீஸ்ட் டு கிவ் ஆன் ஆபர்சுனிடி டு யூ, வெயிட் இன் த கான்பரன்ஸ் ரூம், அவர் எச்.ஆர் வில் ஃபைனலைஸ்.”
கொஞ்சம் சந்தோஷ தேங்ஸ் சொல்லிட்டு, பக்கவாட்டு கதவின் வழி அந்த பெரிய ஹாலுக்கு வந்தேன். அனிச்சையா கண்கள் தேடியது, கெளசிக் அகர்வால் , ஒரு பையன், இன்னும் இரண்டு பெண்கள் ஏற்கனவே அங்கே இருந்தனர்.
ஐந்து பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். 15 நிமிடத்தில் ஒரு HR ஸ்டாஃப் ஒரு கத்தை பேப்பர்களுடன் வந்து பேர் சொல்லி கொடுத்தார். “இது ஆஃபர் லெட்டர் இதை நல்லா படிச்சிட்டு ஓகேன்னா sign பண்ணி என் கிட்ட கொடுக்கலாம்.”
லலிதான்ற ஒரு பெண்ணை தவிர மற்ற எல்லோரும் பேருக்கு படிச்சிட்டு sign பண்ணி கொடுத்தோம். அந்த பெண் ஏற்றகனவே எங்கோ பணியிலிருப்பவர் போல யோசிச்சிட்டு வரேன்னு போயிட்டா.
அடுத்த வாரத்தில இருந்து புனே ஹெட் ஆபீஸ்ல ஒரு மாசம் டிரெய்னிங் அப்பறம் போஸ்டிங் என்றார்கள். சம்பளம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மேலேயே இருந்தது. சந்தோஷமாய் வெளியே வந்தோம். மகாலட்சுமியை தரிசித்து விட்டு நால்வரும் அருகில் இருந்த ஒரு பழைய இரானி ஹோட்டல்ல டீ குடிச்சிட்டு கிளம்பினோம்.
நான் வீட்டுக்கு வரப்ப 4 மணி. பக்கத்து வீட்டு ஆண்ட்டிகிட்ட சாவி கேக்கப் போனேன், அவங்க முகத்தை சுளித்துக் கொண்டு உன் அம்மா வந்தாச்சுன்னா. கதவை தட்டினேன் அம்மா கதவை திறந்தா,
“வாடி சீக்கிரம் வந்துட்டே” குரலில் என்னவோ பதட்டம் தெரிந்தது.
சீக்கிரம் முடிஞ்சதும்மானு உள்ளே நுழைஞ்சேன்.
“என்ன சுகன்யா நல்லா இருக்கயா” னு கேட்டுட்டே எங்க
பாத்ரூமிலிருந்து வெளி வந்த அவனை பாத்து அதிர்ந்தேன். சொட்டை தலையை தடவிக் கொண்டே வெளியே வந்தது அம்மாவோட கம்பெனி மேனேஜர். என் பதிலை எதிர்பார்க்காமல், அப்ப நான் வரேன் பவானினு வெளியே போயிட்டான்.
நான் அம்மாவிடம் கோவமா, ”இந்த ஆள் ஏம்மா இங்கே வந்தான்”
அம்மா பதில் சொல்லலை புடவை முந்தானைல முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு, “உனக்கு காபி கொண்டு வரேன்” உள்ளே போனா.
இப்பதான் அம்மா தொலைந்து போனாளா, இல்லை அடுத்த சில நாட்களில் கெளசிக் அகர்வாலுடன் புனே நகரத்தில் நான் அந்த அபார்ட்மென்டில் இருந்த போது நான் தொலைந்து போனேனா????
தொலைஞ்சது யாரு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings