எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வேகமாக நடையை எட்டிப் போட்டாள் வள்ளி. கவிந்து வந்த மேகங்கள் இருளைத் தோற்றுவித்தன. மழை வரும் போலிருக்கிறதே வானத்தை அண்ணாந்து பார்த்தாள் அவள்.
இன்னும் பூ பாதி கூட விற்கவில்லை. அதற்குள் எப்படி வீட்டுக்கு போவது! பசியுடன் காத்து நிற்கும் பிள்ளைகளின் நினைவு வரவே நடையைத் துரிதப்படுத்தினாள் அவள்.
“ஏய்! என்ன, இந்தப் பக்கம் காத்தாடிக்கிட்டு வரே!”
முரட்டுக் குரலில் சட்டென்று திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்த்தாள்.சிவந்த கண்களில் போதையுடன் அகம்பாவமாக ஒலித்தது அவன் குரல்.
“பூ விக்கிறியா! இல்லே , அந்த சாக்கில் எங்கேயாவது சுத்தறியா? போட்டுத் தள்ளிடுவேன் . ஜாக்கிரதை.”
‘அடச்சீ! என்கிட்ட வம்பு பண்ணினே கூட்டத்தைக் கூட்டி உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.”
“எங்கே கூப்பிடு பார்க்கலாம்! நான் உன் புருசன்டி! ஆம்பிளை! என்னைப் பகைச்சுகிட்டு நீ நிம்மதியா இருந்துடுவியா?”
“ஆம்பிளையா, வேட்டி கட்டினவனெல்லாம் ஆம்பளை ஆகமுடியாதுய்யா! தன்னை நம்பி வர பொண்சாதிக்கும் பிள்ளைக்கும் வயிறு வாடாம கஞ்சி ஊத்தறான் பாரு ! அவன் ஆம்பளை.”
‘அப்ப நான் யார்!’ எகத்தாளமாக அவன் கேட்க
“அசிங்கம்! ஆம்பிளைங்கிற பேரைக் கெடுக்க வந்த அசிங்கம். உன்னையும் பெத்துப் போட்டா பாரு ஒரு மகராசி அவளை சொல்லணும்..தூ”. என்று துப்பியவள் சட்டென்று வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“போயிடுவியா! எங்கேடி போவே! எங்கே போனாலும் உன்னை நான் நிம்மதியா இருக்க விடவே மாட்டேன்.”
காற்றில் கலந்து வந்த வார்த்தைகளை கேட்டபடியே கண்ணீரையும் வேதனையையும் அடக்கிக் கொண்டு நடந்தாள் அவள்.
அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவனைப் பெற்றவளே அவன் பக்கம் தானே பேசுகிறாள்.
“குடிகாரன் என்று ஒதுக்கி விடாதேடி! பொம்பளை அடங்கித்தான் போகணும். இன்னிக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் திருந்தத்தானே போறான்.”
அவளும் பொறுமையாகத்தான் இருந்தாள். பத்து வருடங்களாக அவன் செய்த அட்டூழியங்களைப் பொறுத்துத்தான் போனாள்.
முதலில் கொஞ்சம் ஒழுங்காக இருந்தவன் நாளாக நாளாக தலைகீழாக மாறிப் போனான். ஆரம்ப நாட்களில் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் கனவாகப் போயிற்று அவளுக்கு. அவளைப் போன்றவர்கள் பிள்ளைகளை வயிற்றில் மட்டுமில்லை! வாழ்க்கை முழுதும் சுமக்கும் பரிதாபத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். என்ன செய்வது !
“அம்மா ! உன்னை சார் வந்து பார்க்க சொன்னார்”, உள்ளே நுழைந்ததுமே ஓடி வந்த நித்யா அவள் கீழே வைத்த பூக்கூடையை ஆராய்ந்தாள்.
“என்னம்மா ! பாதி பூ தான் வித்திருக்கு ! சீக்கிரம் வந்துட்டே!”
“ஊம்! உங்களைப் பெத்த மகராசனை வழியிலே பார்த்தேன். அதுதான் கூட இரண்டு தெரு சுற்ற முடியாமல் வந்துட்டேன். பாவி! பிழைப்பிலும் மண்ணைப் போடுகிறானே! ஆமாம். உன் அண்ணன் எங்கேடி!”
“அவன் வரலைம்மா! விளையாடிட்டுதான் வருவேன்னு சொல்லிட்டான்.”
“அதைச் சொல்லு! இங்கே ஒருத்தி உங்களைப் படிக்க வைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறேன். இவன் என்னடான்னா,” சிலிர்த்துக் கொண்டவள்,
“சரி! நான் சார் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.”
கூடையில் இருந்து கொஞ்சம் பூச்சரத்தை எடுத்து இலையில் சுற்றி வைத்தாள். கலைந்திருந்த தலையையும் சேலையையும் சரி பண்ணிக் கொண்டு கிளம்பினாள்.
“வா, வா , வள்ளி எப்படி இருக்கே?”
“இருக்கேன் சார் ,”என்றவள் அங்கிருந்த பெஞ்சு ஒன்றில் அமர்ந்தாள். உள்ளிருந்து எட்டிப் பார்த்த சாரதாவிடம் பூவைப் கொடுத்துவிட்டு “நல்லா இருக்கீங்களாம்மா?” என்று குசலம் விசாரித்தாள்.
“கூப்பிட்டிருந்தீங்களாமே சார்! நித்யா சொல்லுச்சு.”
“ஆமாம்! சாரதா, இவளுக்கு ஏதாவது சாப்பிட கொடு”.
சில வருடங்களாக அவருடன் பழகி வருவதால் எந்த ஒரு விஷயத்தையும் அவர் காதில் போட்டு விடுவது அவள் வழக்கம். அவளுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தவர். பள்ளிக்கூடத்தில் அவளுடைய பிள்ளைகளைப் பார்த்து அவள் நிலைமையை புரிந்து கொண்டு பல சமயங்களில் ஆதரவுக்கரம் நீட்டியவர்.
எந்த ஒரு துணையும் இல்லாமல் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று அவள் படும் பாடு அவர் அறிந்ததே.
“என்ன வள்ளி! ஏதோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கு!”
“ஆமாம் சார்! இந்த பையன் பாலாஜி படிக்கிற நேரத்தை விட விளையாடத் தான் அதிகமாப் போறான்! எப்படி திருத்துறதுன்னு தெரியலை.”
இயலாமையும் ஏக்கமும் அவள் குரலில் வழிந்தது.
“கேட்கும் போதெல்லாம் பி.டி வாத்தியார் தான் கூப்பிட்டார் என்று சொல்றான்.”
“படிக்கறதை விட்டுட்டு இவனுக்கு எதுக்கு சார் இந்த விளையாட்டு வேடிக்கை எல்லாம்!”
அவருமே அவளிடம் அந்த விஷயமாகப் பேசத்தான் கூப்பிட்டிருந்தார்.
பி.டி மாஸ்டர் அவரிடம் பாலாஜியைப் பற்றி சொல்லியிருந்தார்.
“இந்தப் பையனுக்கு நல்ல வேகம் துடிப்பு இருக்கிறது. கால்களில் அப்படி ஒரு ஓட்டம் இருக்கு. கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் எங்கோ போய் விடுவான்.” அவளுக்கு புரிய வைக்க சொல்லியிருந்தார்.
ஆனால் வள்ளி ,அவளுக்கு என்ன தெரியும்! குடும்பத்தை ஒற்றை ஆளாக இழுத்துப் போராடிக் கொண்டிருப்பவள் எந்த விளையாட்டைக் கண்டாள்!
நாடே சதுரங்கப் போட்டி வெற்றியில் குதூகலித்துக் கொண்டிருக்கிறது. சதுரங்கம் என்றால் என்ன என்று கேட்பாள் இவள்.
ராஜாவுக்காக சக்தி மிக்க ராணியும் , குதிரை, யானை சேனைப் படைகளும் வியூகம் வைத்துப் போராடிக் காப்பாற்றும் அந்த விளையாட்டைப் பற்றி இவளுக்கு தெரியுமா?
இவள் பாவம், ராஜாவே எதிரியாக பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருக்க, ரத கஜ படைகள் எதுவும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே உயிர் மூச்சாக கொண்டு ஓடிக் கொண்டிருப்பவள். .பாவம், இது போல் எத்தனை வள்ளிகள்!
அவர் மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“நீ நினைக்கிறது தப்பு வள்ளி! அவன் பொய் சொல்லலை ! நிஜமாகவே விளையாடத் தான் போகிறான்.”
ஏதோ சொல்ல வந்த அவளைக் கை அமர்த்தி விட்டு மேலும் தொடர்ந்தார்.
“படிப்பு ஒண்ணுதான் வாழ்க்கையை உசத்தும் அப்படின்னு நீ நினைக்கிறே! .அது நிஜம்தான். ஆனா அது தவிர மத்தபடி எத்தனையோ இருக்கு அதுவும் படிப்பு மாதிரி தான்.”
“என்ன சொல்றது சார்! படிக்க வைக்க அவ்வளவு கஷ்டப்படுகிறேன். என் கஷ்டம் தெரியலையே.”
“ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்னு ஒரு பாட்டு வருமே அது மாதிரி என் புருஷன் ஒரு பக்கம் வறுமை ஒருபக்கம்னு போராடிக்கிட்டு இருக்கேன்.”
“அட! நீ பாட்டு எல்லாம் கேட்பியா?”
“அட போங்க சார்! எங்கேயோ பூ விக்கிற இடத்திலே கேட்டது அப்படியே மனசிலே பதிஞ்சு போச்சு.”
“இப்போ நீ சொன்னியே! இந்தப் பாட்டு பாடும் ஒரு கலைதான். இது மாதிரி நடிப்பு விளையாட்டு எல்லாத்துக்கும் ஒரு திறமை வேணும். திறமை இருக்கிறவங்க முயற்சி செய்யும் போது அது அவர்களை நல்ல உச்சத்தில் கொண்டு போய் விட்டு விடும். சினிமாலே எத்தனையோ பேர் அடிமட்டத்தில் இருந்து வந்தவங்க தான்.உத்வேகம் திறமை அயராத உழைப்பு அவர்களை உச்சத்தில் கொண்டு போய் வைக்கிறது .இந்த விளையாட்டுத் துறையும் அப்படித்தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு துறையில் நாட்டம் இருக்கும். அதை அவர்களே கண்டு பிடித்தாலும் சரி , இல்லை யாராவது கண்டுபிடித்து சொன்னாலும் சரி, அலட்சியப் படுத்தாமல் முன்னுக்கு கொண்டு வரணும் சரியா!”
“உன் பையனுக்கு விளையாட்டிலே நிறைய ஆர்வம் இருக்கு .அவன் கால்லே நல்ல வேகம் இருக்கு. கையில ஒரு லாவகம் இருக்கு. கண்ணிலே அப்படி ஒரு வெறித்தனமான ஆர்வம் இருக்கு. அதனால்தான் அவனுக்கு கூடைப்பந்து தொலைதூர ஓட்டங்களில் எல்லாம் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.”
“இதனால என்ன சார் பிரயோசனம்!” இன்னமும அவளுக்கு சரியாக விளங்க வில்லை என்று புரிந்து கொண்டவர் மேலும் தொடர்ந்தார்.
“உடம்புக்கு, மனசுக்கு ,எல்லாத்துக்குமே நல்லது. தவிரவும் மாநில அளவில் தேசிய அளவில் புகழ் கிடைக்கும்.”
“சார், நாங்க ஏதோ கஷ்டப்பட்டு காலம் தள்ளுறோம். இதிலே இவனுக்கு எதுக்கு சார் இதெல்லாம்!” அவள் தன் பிடியிலேயே நின்றாள்.
“குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுவது அப்படின்னு சொல்லுவாங்க, நீ கொட்டாங்கச்சியிலேயே குதிரை ஓட்டுறே! நீ நினைக்கிற மாதிரி விளையாட்டுங்கிறது ஏதோ பொழுது போகாமல் செய்யறது இல்ல.இதை முதல்லே புரிஞ்சுக்க. இது இன்னொரு உலகம். இதிலே வெற்றி பெறுகிற வீரர்களை நாடே கொண்டாடும். தவிர நிறைய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டு ஒன்றும் சாதாரணம் இல்லை. அதுக்கும் நிறைய உழைப்பு பயிற்சி கவனம் எல்லாம் வேண்டும்.”
“அடிமட்டத்தில் இருந்து கஷ்டங்களையே படிக்கட்டாக வைத்து ஏறி வந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்..அவர்களால் நம் நாட்டுக்கும் பெருமை . உன் பையனும் கண்டிப்பாக அப்படி ஜொலிப்பான் பார்!” தைரியம் கொடுத்தார் அவர்.
“அப்போ படிப்பு” என்று இழுத்தாள் அவள்.
“அதுவும் சரியாக நடக்கும். நீ உன் பையனை புரிஞ்சு வைச்சிறக்கிறது அவ்வளவு தானா? உன் கஷ்டங்களை புரிந்து கொண்டு உனக்கு தோள் கொடுக்க வேண்டும் என்று எவ்வளவு ஆவலாக இருக்கிறான் தெரியுமா?”
அவள் கண்கள் பனித்தன..
“சரி சார், ஆனா இதுக்கெல்லாம் எவ்வளவோ வேண்டி இருக்குமே!” அவள் கவலையுடன் கேட்க,
“நீ கஷ்டப்பட தேவையே இல்லை. நாடே இப்போது விளையாட்டு தன் துறைக்காக பல விதங்களிலும் உதவிக் கொண்டிருக்கிறது. தவிரவும் நம் நாட்டிலிருந்து வெளிநாடு சென்ற எத்தனையோ பேர் பல விதங்களிலும் உதவி செய்து ஊக்குவிக்கிறார்கள். நீ கவலைப்படவே தேவையில்லை. அவனை மட்டும் எதுவும் திட்டாமல் ஊக்கம் கொடு அது போதும்” என்றவர்
“உன்னால் இன்னும் எத்தனை வள்ளிகள் வாழ்வில் முன்னேற்றம் வரப் போகிறது பார்! இதனைப் பார்த்து நிறைய அவனுடைய நண்பர்கள் இந்த துறைக்கு வருவார்கள்.அதிலும் உனக்கு பெருமைதான் கிடைக்கும்.”
‘கவலைப்படாமல் போய் வா’ என்று ஆதரவாக சொல்லி அனுப்பி வைத்தார் அந்த ஆசிரியர் மகாதேவன்..
வந்த போதிருந்த சஞ்சல மேகங்கள் அகன்று மனதிலும் முகத்திலும் சிரிப்புடன் விடை பெற்றாள் வள்ளி.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings