இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“கல்பனா… டாக்டர் அக்காவை விஜி என்று அழைத்தவுடன் அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தாயா?”
“ஆம் பார்த்தேன், இது ஒரு நல்ல சகுனம் என்று தான் நினைக்கிறேன்”
“இதில் என்ன நல்ல சகுனம்?”
“புரியவில்லையா கௌதம்? அவர்களால் ஒருவரை ஒருவர் மறக்க முடியவில்லை. அவர்கள் உள் மனதில் உள்ள காதல் தான் கண்ணீராகவும், வார்த்தைகளாகவும் ‘அவுட்-பர்ஸ்ட்’ ஆகிறது. அதனால் நாம் நினைத்தது சுபமாக முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. சரி, பேசி முடித்து இருப்பார்கள் என நினைக்கிறேன். போய் பார்க்கலாம்” என பேசிக் கொண்டே இருவரும் அறைக்குள் நுழைந்தனர்.
அங்கே அவர்கள் இருந்த நிலை இவர்களுக்கே வெட்கமாகி விட்டது. அலாவுதீன் கைகளுக்குள் விஜயா, அவன் மார்பில் முகம் புதைத்துத் தேம்பிக் கொண்டிருந்தாள். கௌதமையும் கல்பனாவையும் பார்த்த விஜயா, டக்கென்று அலாவுதீன் பிடியிலிருந்து விலகினாள்.
“அக்கா இவ்வளவு காதலையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்களே?” என கல்பனா கேட்க
“எங்கள் காதல்தான் உலகமே அறிந்ததாயிற்றே. அம்மாவும் அப்பாவும் சம்மதிக்க மாட்டார்களே, அது தானே பிரச்சினை” என வருத்தமாய் கூறினாள் விஜயா.
“சார், உங்கள் வீட்டில் எல்லோருக்கும் சம்மதம் தானே?” என்று கல்பனா அலாவுதீனிடம் கேட்க
“எங்கள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. எங்கள் அம்மா அப்பா இருவரும் டாக்டர்கள். ஒரே ஒரு தங்கை, அவள் ஒரு சாப்ட்வேர் இஞ்ஜினீயர். அவள் ஒரு அமெரிக்கனை லவ் மேரேஜ் செய்து கொண்டு அங்கேயே இருக்கிறாள். என்னையும் அங்கே வரும்படி தொந்தரவு செய்கிறாள், ஆனால் நான் தான் போக மறுத்து விட்டேன்” என அலாவுதீன் கூற
“ஏன்? அம்மா அப்பாவை தனியாக விட்டுவிட்டுப் போக வேண்டுமென்றா?” என்றாள் கல்பனா.
“நோ நோ… கல்பனா. விஜயாவோடு சேர்ந்து வாழத்தான் முடியவில்லை, இங்கே இருந்தால் எங்கேயோ தொலைவில் இருந்தாவது பார்த்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?” என்றான் விரக்தியாக சிரித்துக் கொண்டு.
“அப்படியெல்லாம் வெறுப்படையாதீர்கள் சார். காலம் மாறும், பெரியவர்கள் மனமும் மாறும். நாம் மாற்றி விடலாம், நம்பிக்கை தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நீங்கள் இருவருமே என்ன சொல்லப் போகிறீர்களோ என்று நானும் கௌதமும் பயந்தோம், ஆனால் எங்கள் நம்பிக்கையில் பால் வார்த்தீர்கள். இனி நாங்கள் வக்கீல் சாருடனும் மேடத்துடனும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பேசுவோம்” என்றாள் கல்பனா நம்பிக்கையுடன்.
“அடுத்த பிளான் என்ன? ஆந்திராவில் போய் கலெக்டர் மீட்டிங் ஏதாவது அட்டெண்ட் பண்ண வேண்டுமா?” என்றான் அலாவுதீன்.
“இல்லை, விஜயா அக்காவின் அம்மா அப்பாவிடம் பேச வேண்டும்” என்றாள் கல்பனா.
“நடக்க முடியாததெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறார்கள். இவளே அவர் பேச்சில் காயப்பட்டுத் தான் கௌதம் சென்னைக்கு வரும் போது அவளுடைய அம்மா வீட்டற்கு ஓடிப் போய் அங்கிருந்து ப்ளைட் பிடித்து அவளுடைய ஆபீசிற்கு சென்றாள். இவள் போய் என்ன பேசப் போகிறாளோ, அது எவ்வளவு தூரம் வெற்றி பெறுமோ தெரியாது. இருந்தாலும் நமக்கென்று வருத்தப்பட ஒரு ஜீவன் இருக்கிறதே என்று சந்தோஷம். உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்” என்றாள் விஜயா.
கல்பனாவும் கௌதமும் அவனுடைய காரில் கௌதம் வீட்டிற்குச் சென்றார்கள். போகும் போது, “கல்பனா என்னை மன்னித்து விடு” என்றான் கௌதம்.
‘என்ன?’ என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் கல்பனா.
“என் மேல் உள்ள கோபத்தால் தான் நீ, நான் சென்னை வரும்போது உன் அம்மாவிடம் போய் விட்டாயோ என்று நினைத்தேன். அப்பாவின் பேச்சு உன்னை அவ்வளவு காயப்படுத்தியது போலும், ஆனாலும் எனக்கு மிகவும் அவசர புத்தி” என்றான்.
அவன் முகம் வருத்தத்தாலும் அவமானத்தாலும் கன்றிச் சிவந்தது. அவள் சிரித்தாள்.
“அவ்வளவு கோப்பபட்டு வீட்டை விட்டு கிளம்பிய நீ, மறுபடியும் தைரியமாக அங்கே வருகிறாயே எப்படி?” என்று வியந்தான்.
“சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கத்தான்” என கலகலவென்று சிரித்தாள், “மேலும் இப்போது நமக்காக நாம் வாதாடப் போவதில்லை. இதில் சுய நலமில்லை, அதனால் பயம் இல்லை” என்றவள், தன் வெண்ணிறப் பற்கள் தெரிய அழகாக சிரித்தாள்.
அவள் சிரிப்பிலும், அழகிலும் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டு காரை ஓட்டினான் கௌதம். அவன் முகத்தை சாலையைப் பார்க்கும்படி திருப்பினாள் கல்பனா.
ஒரு வழியாக கௌதம் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். சத்யா அங்கே தன் கணவருடன் வந்தருந்தாள். அவர்கள் காரின் ஹார்ன் சப்தம் கேட்டவுடன் வெளியே ஓடி வந்தாள் சத்யா.
”மணமகளே மருமகளே வா வா” என்று பழைய கால சினிமாப் பாடலைப் பாடி சிரித்துக் கொண்டே இவர்களை வரவேற்றாள்.
“சத்யா, உன் அரட்டைத் தனத்திற்கும் விளையாட்டிற்கும் அளவே இல்லாமல் போகிறது” என கண்டித்தாள் கல்பனா.
“நான் அரட்டையும் அடிக்கவில்லை, விளையாடவும் இல்லையடி சகியே… உண்மையைத் தான் சொல்கிறேன். அம்மாவும் அப்பாவும் இப்போது தான் என் கணவருடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் இவர், ‘நீங்கள் இருவரின் இளமையையும் வாழ்க்கையையும் ஜாதி, மதம் என்னும் நரகத்திற்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்கள் சந்தோஷமும் அவர்கள் மகிழ்ச்சியும் தான் பலிகடா ஆகிறது’ என்று பலவாறாக்க் கூறி அம்மா, அப்பாவுடன் வாதாடினார். இன்னும் நிறையப் பேசினார். இப்படி ஒருவழியாக உங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டார்” என்ற சத்யா, “வாங்க அம்மா அப்பாவைப் போய்ப் பார்க்கலாம்” என்று இவர்களை அம்மா அப்பாவின் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள்.
சத்யாவின் அம்மா அங்கே படுத்துக் கொண்டிருந்தாள். வக்கீல் சந்துருவும், சத்யாவின் கணவனும் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் சிரித்துக் கொண்டே இவர்களை வரவேற்றனர்.
“கௌதம், உங்கள் அம்மாதான் ‘திருமணம் என்பது எதற்காக செய்கிறோம்? நம் குடும்பம் நல்ல முறையில் வளர வேண்டும் என்று தானே, ஜாதி வளர்வதற்காகவா திருமணங்கள் நடை பெறுகின்றன? மனதிற்குப் பிடித்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தால், நல்ல குழந்தைகள் பிறந்து குடும்பம் வளரும் என்று தானே. ஏற்கெனவே வீட்டில் பணம், நல்ல படிப்பு இருந்தும் விஜயா கன்னியாகவே நிற்கிறாள். நம்மால் கல்பனாவின் வாழ்க்கை கெடவேண்டா’ என்கிறாள்” என்றார் அப்பா.
“ஆனால் எங்களுக்கு இப்போதுத் திருமணம் வேண்டாம்” என்றான் கௌதம் மொட்டையாக.
லட்சுமியின் அருகில் வந்த கல்பனா, “அம்மா, உங்களுக்கு இப்போது உடம்பு எப்படி இருக்கிறது? இப்போது வார்த்தைகள் குழறவில்லை, கை கால்கள் எல்லாம் அசைக்க முடிகிறதா அம்மா?” என கல்பனா கேட்க
“இந்த நிலை எனக்குக் கடவுள் கொடுத்த பாடம் கல்பனா. பிறக்கும் போதும் எடுத்து வந்ததும் ஏதுமில்லை, இறுதியில் போகும் போது எடுத்துச் செல்வதும் ஏதுமில்லை என்பதை ஆறு மாதங்கள் செயலற்று படுத்திருக்கும் போது தான் உணர்ந்து கொண்டேன். இதில் ஜாதியும் மதமும் எங்கிருந்து வந்தது? விஜயாவின் வாழ்க்கையைத்தான் கெடுத்து விட்டோம், அதனால் உங்கள் திருமணத்தைப் பார்க்க ஆசைப்படுகின்றேன். ஆனால் கௌதம், நீ ஏன் கல்பனாவுடன் திருமணம் வேண்டாம் என்று சொல்லுகிறாய்?”
“விஜயா அக்காவின் கண்ணீர் கதை போலவே எழுதப்பட்ட எங்கள் வாழ்க்கை மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்? அக்காவின் காதல் திருமணத்திற்கு நீங்கள் சம்மதம் கொடுத்தால் நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம், இல்லையென்றால் இப்படியே போகட்டும் எங்கள் வாழ்க்கையும்” என்றான் கௌதம்.
“விஜயாவின் காதல் ஒரு முஸ்லிமுடன், அதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?” என்றார் சந்துரு.
“ஏன் அப்பா ஒத்துக் கொள்ளக் கூடாது? உங்கள் மதம், உங்கள் ஜாதி, சமஅந்தஸ்து என்று எல்லாம் பார்த்துத்தானே அண்ணா கௌஷிக்கின் திருமணம் செய்தீர்கள். உங்கள் கூடவே இருந்தான், உங்கள் பணத்திலேயே வாழ்ந்தான், கடைசியில் உங்களுக்கு உதவி தேவையான நேரத்தில் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தனிக்குடித்தனம் போய் விட்டான். இப்போது ஜாதி, மதம், சம அந்தஸ்து ஏதாவது உதவியதா?” என்றான் கௌதம் உணர்ச்சிமயமாக.
“வக்கீல் சார், மேடத்திற்கு உடல் நலம் கெட்டபோது உதவிக்கு, மனஆறுதலுக்குக் கணவனாக, உற்ற துணையாக நீங்கள் இருந்தீர்கள். உங்கள் காலத்திற்குப் பிறகு விஜயா அக்கா வயதான காலத்தில் சாய்வதற்கு ஒரு தோள் வேண்டுமல்லவா? அந்த ஆதரவை கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனையும் தவிர யார் தர முடியும்? நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் சார்” என்றாள் கல்பனா.
“இன்னும் என்ன சார்? மாமா என்று சொல்” என்றாள் சத்யா.
விஜயாவும் அலாவுதீனும் கல்பனா போன் செய்து அழைத்தவுடனே வந்து விட்டார்கள். ஆனால் அப்பா என்ன சொல்வாரோ என்று தயங்கி நின்றார்கள். வக்கீல் சந்துருவோ இருவரையும் அழைத்து அணைத்துக் கொண்டார். எல்லோரும் கொண்டாட இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் விமரிசையாக நடந்தது.
தோட்டத்தில் மா மரத்தடியில் நின்று, பட்டுப்புடவை சரசரக்க தன் கணவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் விஜயா. அதை தங்கள் அறையின் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் கல்பனா.
அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்ட கௌதம் அவள் காதில் தன் இதழ்கள் குறுகுறுக்க, “கல்பனா நீ ஒரு நாள் காதலுக்கு ஒரு டெபனிஷன் சொன்னாயே ‘தொடுவானம்’ என்று, இப்போது என்ன சொல்கிறாய்?” எனக் கேட்க
“தொடுவானம் மிக அருகில்” என்றபடி, அவன் மார்பில் முகம் புதைத்துச் சிரித்தாள் கல்பனா.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings