in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கல்பனாவை அறிமுகப்படுத்தி, “என்னுடைய அசிஸ்டென்ட், அன்றைக்கு நீங்கள் கூட அவளைப் பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களே” என்றாள் விஜயா.

“ஞாபகம் இருக்கிறதம்மா. கல்பனா உட்காரம்மா, உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்” என்றார் வக்கீல் சந்துரு.

“அப்பா, நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் என் கேபினுக்குப் போகிறேன்” என்று கூறி விட்டு விஜயா சென்று விட்டாள்.

“கல்பனா, உன்னைப் பற்றி சத்யா அடிக்கடிப் பேசிக் கொண்டே இருப்பாள். நான் அப்போது அவள் உன் மேல் உள்ள அதிகப்படியான பிரியத்தினால் அப்படிப் பேசுகிறாள் என்று நினைத்தேன் அம்மா. ஆனால் என் மகன் கௌதம் குடித்துக் கண்டபடி சுற்றிக்கொண்டு இருந்தவன், இப்போது ஒழுங்காக டாக்டர் கௌதமாக இருப்பதற்கும் நீ தான் காரணம் என்கிறாள் என் மகள் விஜயா. உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை அம்மா” என்றார் குரல் தழுதழுக்க.

“ஐயோ சார், நீங்கள் எனக்குப் போய் நன்றி சொல்வது கொஞ்சம் கூட சரியில்லை சார். டாக்டர் கௌதம் மிகவும் நல்லவர், எல்லா வகையிலும் எங்கள் எல்லோரையும் விட அதிக புத்திசாலி என்று சத்யா கூறியிருக்கிறார். ஏதோ அவருடைய கெட்ட நேரம், கொஞ்சம் பாதை மாறிப் போயிருக்கிறார். இப்போது அவரே உணர்ந்து திருந்தி விட்டார். அவர் திருந்தியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்” என்றாள் மிகுந்த தன்னடக்கத்துடன்.

 “மற்றொரு விஷயத்திலும் உன்னை நினைத்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது. விஜயா ஒரு கேஸ் கட்டை உன்னிடம் கொடுத்து அதன் முடிவைப் பற்றிக் கேட்டாளாமே. நீ சொன்ன முடிவைக் கேட்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உங்கள் வீட்டில் யாரும் வக்கீலாக இருக்கிறார்களா? உன் அப்பா என்னம்மா செய்கிறார்?”

“எனக்கு அப்பா இல்லை சார். அவர் ஒரு டிப்ளமோ சிவில் இன்ஜினியராக இருந்தார். என் பெரியப்பா ஒரு ‘ப்ளாட் பிரமோட்டர். பெரியப்பாவிடம் தான் அப்பா வேலை செய்தார். அங்கு நடந்த ஒரு விபத்தில் அப்பா இறந்து விட்டார்” என்று இறுகிய முகத்துடன் பேச்சை நிறுத்தினாள்.

“ஸாரி கல்பனா, பழைய நினைவுகளைத் தூண்டி உன்னை வருத்தப்பட வைத்து விட்டேன். உன் பெரியப்பா பெயர் என்னம்மா? அநேகமாக சிட்டியில் உள்ள எல்லா பெரிய ப்ளாட் புரமோட்டர்களையும் எனக்குத் தெரியும்” என்றார்.

 “அவர் பேர் தர்மா சார்” கல்பனா.

“அப்படியானால் நீ அவர் தம்பி அர்ஜுனின் மகளா?” என்றார் ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் சார், உங்களுக்கு என் அப்பாவைத் தெரியுமா?”  என்றாள் கல்பனா அவளும் மிகுந்த வியப்புடன்.

“தெரியுமாவா? நானும் அவனும் உயிர் நண்பர்களாக இருந்தோம். அப்போது அவன் அரசாங்க வேலையில் இருந்தான். அரசாங்க வேலையில் அடிக்கடி மாற்றம் செய்வதால் பிடிக்கவில்லையென்றும், அவனுடைய அண்ணா அவனுக்குக் கணிசமான சம்பளத்துடன் வேலை தரப் போவதால் வேலையை ராஜினாமா செய்து விட்டு அண்ணாவுடன் போய் சேருவதாக்க் கூறினான். 

நான் அரசாங்க வேலையை ராஜினாமா செய்யாதே என்று பலமுறை கூறினேன், ஆனால் அவன் என் பேச்சைக் கேட்கவில்லை. அதன் பிறகு எங்களுக்குள் தொடர்பு இல்லாமல் போயிற்று. இப்போது என் நண்பனின் மகளை, என் மகளின் தோழியாகப் பார்க்கிறேன். இது தான் காலத்தின் கோலம்” என்றவர் பெருமூச்செறிந்தார்.

“சரியம்மா, நீ போய் வேலையைப் பார். உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். என் நண்பன் அர்ஜுனை நேரில் பார்த்தது போல் இருக்கிறது. உனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளம்மா” என்றார் கனிவுடன்.

“சரிங்க சார்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவள் ‘உலகம் மிகவும் சிறியது தான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போது அவசரமாக சத்யாவின் அண்ணி கீதா அங்கிருந்து வெளியேறினாள். அவள் ஏனோ அடிக்கடி அவளைக் கண்காணிக்கிறாளோ என்று கல்பனாவிற்குத் தோன்றியது.  அவள் சந்தேகத்தை சத்யாவிடம் கேட்டாள்.

அவளோ, “அவள் கேரக்டரே அது தான், எப்போதும் யாரையாவது நோட்டம் போட்டுக் கொண்டிருப்பாள். அதைப் போய் பெரிது பண்ணிக் கொண்டு, போடி போய் வேலையைப் பார்” என்றாள்.

கல்பனாவிற்கும் சத்யாவிற்கும் கடைசி வருடம், இறுதித் தேர்வும் நெருங்கி விட்டது. அப்போது கூட கல்பனா விஜயாவின் ஆபீஸில் வேலைக்கு வந்து கொண்டு தான் இருந்தாள். விஜயா கூட அவளிடம் பரீட்சை முடியும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளச் சொன்னாள், ஆனால் கல்பனா மறுத்து விட்டாள். 

வேலை முடித்து விட்டுப் போய் இரவு பகலாகப் படித்தாள். அன்று கடைசி பரீட்சையை முடித்து விட்டு விஜயாவின் வீட்டிற்கு வருவதற்காக பஸ் ஸ்டேண்டில் காத்திருந்தாள்.

அப்போது அங்கு வந்த ஒரு பி.எம்.டபுள்யூ. கார் அவளை உரசிக் கொண்டு வந்து நின்றது. அதிலிருந்த கௌதம் இறங்கினான்.

“ஹலோ டிடெக்டிவ் மேடம், என்ன பஸ்ஸுக்காக்க் காத்திருக்கிறீர்களா? ப்ளீஸ் வாருங்கள், காரில் போகலாம்” என்றான்.

“உங்கள் காரிலா? நானா? ஆமாம், அதென்ன டிடெக்டிவ் மேடம்?” என்றாள்.

“முதலில் காரில் ஏறுங்கள், இங்கேயே எல்லாம் சொல்ல முடியாது” என்றான் குறும்பாக சிரித்தபடி.

“அதெல்லாம் வேண்டாம் சார். இன்னும் கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விடும். நான் உங்கள் வீட்டிற்குத் தான் வரப் போகிறேன்” என்றாள்.

“அது தான் தெரியுமே. இப்போது உங்கள் ஆபீஸ் டைம், தாமதமானால் என் அக்கா உங்கள் சம்பளத்தில் கை வைத்து விடுவாள் ஜாக்கிரதை” என்றான்.

மேலும் மேலும் அவன் பலவாறாக வற்புறுத்தியதாலும், அங்கே பஸ்ஸுக்காகக் காத்திருந்தவர்கள் இவர்களையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததாலும், வேறு வழியின்றி அவனைப் பார்த்து முணுமுணுத்தவாறு காரில் ஏறினாள்.

“ஹலோ கல்பனா, நீங்கள் என்ன டயட்டில் இருக்கிறீர்களா? நான் உங்களைப் போன முறைப் பார்த்ததைவிட இப்போது மிகவும் மெலிந்தாற்போல் இருக்கிறீர்கள். இப்போது கூட நீங்கள் சாப்பிடவில்லை போல் இருக்கிறதே” என்று பலவும் பேசிக் கொண்டே, ஒரு பெரிய ஹோட்டலில் காரைக் கொண்டு போய் நிறுத்தினான்.

“என்ன சார் இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றாள் காரிலிருந்து இறங்காமல்.

 “கல்பனா எனக்கு பயங்கரப் பசி. ப்ளீஸ் இன்று எனக்குக் கம்பெனி கொடுங்கள், சீக்கிரம் போய்விடலாம்” என்றான்.

“சார் இதெல்லாம் நல்லதற்கில்லை, எங்கே போய் முடியப் போகிறதோ?” என்று முணுமுணுத்தாள்.

“எங்கே போய் முடியும்? இந்த ரோடு நேரே வீட்டில்தான் முடியும்? வாங்க கல்பனா, ஏதாவது லைட்டாக சாப்பிட்டு விட்டு உடனே போய் விடலாம்” என்றான் கௌதம்.

ஆளுக்கொரு மசாலா தோசையும் பலூடாவும் இருவருக்கும் ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்கினார்கள்.

“உங்கள் அண்ணி கீதா ஏனோ என்னை அதிகம் நோட்டம் இடுகிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்தால் தேவையில்லாத பிரச்சினை” என்றாள் சுற்றிலும் பார்த்துக் கொண்டு.

“அதெல்லாம் பிறவிக் குணம், இரத்தத்தில் ஊறியது என்றும் மாறாதது, மாற்ற முடியாதது” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

“என்னை இரண்டு வீடுகளுக்கு முன்பே இறக்கி விடுங்கள். வீட்டிற்குள் இறக்கி விட்டால் ‘எப்படி இருவரும் ஒன்றாக வந்தீர்கள்’ என்ற கேள்வி வரும்” என்றாள் கல்பனா.

“அதெல்லாம் தவறு கல்பனா. நாம் என்ன தவறு செய்தோம் ஒளிந்து, மறைந்து போவதற்கு?” என்றவன் அவன் பங்களாவின் கார் பார்க்கிங்கில் தான் தன் காரை நிறுத்தினான்.

முதல் மாடியின் படுக்கைஅறை பால்கனியில் இருந்து இரண்டு கண்கள் அவர்களையே உறுத்தும் பார்த்துக் கொண்டு இருந்தன.

தன் அலுவலக அறையில் கல்பனா சந்தோஷமாக உட்கார்ந்திருந்தாள். கல்லூரியில் இருந்து வரும் போது பசி வயிற்றைக் கவ்வி இழுத்தது. கௌதம் வாங்கிக் கொடுத்த மசாலா தோசையின் மணம் இன்னும் கைகளில் மணத்தது. பலூடா இதுவரை அவள் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை.

அடேயப்பா என்ன சுவை! அம்மாவின் சாப்பாட்டுக் கடை உணவைத் தவிர கல்பனா வேறு எங்கும் இதுவரை சாப்பிட்டதில்லை. அப்பா இருக்கும் போது பாய்கடை மட்டன் பிரியாணியும், ஐஸ்கிரீமும் சம்பளம் வாங்கும் அன்று வாங்கித் தருவார். அப்பா மறைந்த பிறகு எல்லாம் வெறுத்து விட்டது.

சத்யா அங்கே வந்து எதிரில் அமர்ந்தாள். அவளிடம் எதையும் இதுவரை மறைத்ததில்லை.

ஆகவே, “சத்யா இன்று தேர்வு எழுதி முடித்து விட்டு வரும் போது உன் அண்ணா கௌதம்…” என்று தொடங்க

“தெரியும், கௌதம் அண்ணா என்னிடம் எல்லாம் சொன்னார். அண்ணா அப்படித்தான். நீ எக்ஸாம் எப்படி எழுதினாய் என்று கேட்கத்தான் வந்தேன்” என்றாள்.

“நன்றாகத்தான் செய்திருக்கிறேன்” என்றாள் கல்பனா.

“ஹலோ டிடக்டிவ் மேடம். இன்று கடைசித்தேர்வு எழுதி முடித்து விட்டீர்கள், அடுத்தபடி என்ன செய்யப் போகிறீர்கள்? நீயும் சத்யாவைப் போல் சட்டம் படியேன் கல்பனா” என்றாள் அப்போது அங்கு வந்த விஜயா.

“இல்லை மேடம், நான் பி.எட். அப்ளை செய்யலாம் என்று இருக்கிறேன். ஆனால் என் அம்மா பிஸிக்ஸில் பி.ஜி. படிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். எப்படியோ ஆசிரியராகப் போனால் சீக்கிரமாக வீட்டிற்கு வருமானம் கிடைக்கும், அம்மாவிற்கும் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தேர்வு முடிவுகள் வந்த பிறகு தான் எதையும் முடிவு செய்ய முடியும், இல்லையா மேடம்” என்றவள், “மேடம் எனக்கொரு சந்தேகம், ஏன் நீங்கள் என்னை டிடக்டிவ் என்றீர்கள்? டாக்டர் கௌதம் சார் கூட என்னை அப்படித் தான் அழைத்தார், ஏன் மேடம்?” என்று கேட்டாள்.

சிரித்த விஜயா, “ஹலோ மேடம், எல்லாம் உங்களால்தான். நான் ஒரு கேஸ் கட்டை உன்னிடம் கொடுத்து அதன் ரிப்போரட் கேட்டேன். நீ கொடுத்த தீர்ப்பும் கோர்ட் அளித்த தீர்ப்பும் ஒன்றே, அதனால்தான் உனக்கு அந்தப் பெயரை என் டாடி சூட்டினார்” என்றாள்.

“என்னது, பெரிய வக்கீல் வைத்த பெயரா?” என்று ஆச்சர்யப்பட்டாள்.

அடுத்த நாள் காலை எழுந்தது முதல் அம்மாவிற்கு உதவியாக டிபன் சென்டரில் சமையலிலும், பேக்கிங்கிலும் உதவி செய்தாள்.

சிறிது நேர ஓய்விற்குப் பின், விஜயாவின் வக்கீல் ஆபீஸற்குக் கிளம்பினாள். அப்போது கௌதம் அவள் நினைவில் வந்தான். அவனைப் பற்றி நினைக்கும் போதே மனக்குதிரை இறக்கைக் கட்டிக் கொண்டுப் பறந்தது. அவள் மனம் படிப்பு, அந்தஸ்து எதையும் யோசிக்கவில்லை.

சத்யா வீட்டு வாசலில் புத்தம் புதிய பென்ஸ் கார் நின்று கொண்டு இருந்தது. கல்பனா ஆபீஸ் அறையில் உட்கார்ந்து ஏதோ ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் நிறைய விருந்தினர்கள் போலும், ஒரே இரைச்சலும் சிரிப்பு சப்தமுமாக இருந்தது. விஜயாவின் அம்மா ஒரு பீங்கான் கப்பில் ஸ்பூன் வைத்து பாயஸம் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள். அந்த நேரத்தில் கௌதம் அங்கு வந்தான்.

“அம்மா எனக்கு வேண்டாம்” என்றாள் பயந்த குரலில்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இருப்பதை விட்டு (சிறுகதை – பிற்பகுதி) நாமக்கல் எம்.வேலு

    அப்பாவுக்கோர் அதிர்ச்சி வைத்தியம் – (சிறுகதை) – முகில் தினகரன்