இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அவர்கள் சென்ற பிறகு கௌதம் கல்பனாவின் தலையில் அடிப்பட்ட காயத்திற்கு அங்கே உள்ள மருத்துவர்களோடு தீவிரமாக யோசனை செய்து எலிஸாவின் அண்ணா விக்டரோடு கலந்து பேசினான். விக்டரும், கௌதமும் நல்ல நண்பர்கள்.
எலிஸா இறந்த பிறகு விக்டரே, இவனை வேறு ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தான்.
கௌதமும், கல்பனாவைப் பற்றி ஓரளவு அறிந்துக் கொண்டபின், அவள் போட்டோவை அவனுக்கு அனுப்பினான். கல்பனாவின் குடும்பச்சூழல், அவன் அவள் மேல் மஷ்ரூம் சூப் கொட்டியது முதல், தற்போது அவளிடம் மயங்கி நிற்பது, அவள் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்து தற்போது சப்-கலெக்டராகப் பணியில் இருப்பது வரை எல்லாமே அவனிம் விளக்கிக் கூறியிருந்தான்.
தற்போது லாரியில் அடிபட்டு இவன் கையெலும்பு முறிந்து கையில் கட்டுடன் இருப்பதையும், கல்பனா சுயநினைவின்றி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதையும், விக்டருக்கு எடுத்துக் கூறிவிட்டு இருவரின் நிலையும் வாட்ஸ்-அப்‘பில் போட்டோ எடுத்து விளக்கினான். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த விக்டர் திகைத்து நின்றான்.
‘கிளாஸ்கோ கோமா ஸ்கேல்’ அளவு எவ்வளவு என்று விசாரித்தான். GCS Score பதின்மூன்றுக்கு மேல் இருந்தால் லேசான தலை காயம் என்றும், 9திலிருந்து 12க்குள் இருந்தால் மாடரேட் தலைகாயம் என்றும், 8க்கும் கீழ் இருந்தால் பலமான காயம் என்பதும் விதி. கல்பனாவிற்கு ஏற்பட்ட காயம் 9திலிருந்து 12க்குள் என்று கௌதம், விக்டரிடம் தெரிவித்தான்.
விக்டர் லண்டனில் ஒரு சிறந்த நரம்பியல் நிபுணர். அவனுக்கு கௌதம் ஒரு சிறந்த நண்பன். கௌதமின் இன்ப துன்பங்களில் அதிக அக்கறை கொண்டவன்.
“கௌதம், நீ கவலைப்படாதே. என் நண்பன் லாரன்ஸ் ஒரு சிறந்த எலும்பு முறிவு நிபுணர். நானும் அவனும் உடனே இந்தியா வருகிறோம். கல்பனாவை சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்” என்றான் விக்டர்.
“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் உங்களை இந்த மருத்துவமனை அங்காகரிக்க வேண்டுமே?” என்று சந்தேகத்தைக் கிளப்பினான் கௌதம்.
“அந்தக் கவலை உனக்கு வேண்டாம். அதற்கு நாங்கள் பொறுப்பு” என்றவர்கள் நேரில் டீனை சந்தித்து ஏதோ சில சான்றிதழ்களையும், சில ஆராய்ச்சிப் பேப்பர்களையும் காட்டினார்கள்.
என்னென்னவோ பேசி அங்கே பணிபுரியும் மருத்துவர்களுடன் சேர்ந்து கல்பனாவிற்கு தலையில் ஆப்பரேஷன் செய்ய ஒப்புதல் வாங்கி, சர்ஜரியையும் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டனர். பிறகு தான் கௌதமிற்குப் போன உயிர் திரும்பியது.
இதற்குள் கௌதமின் கையில் எலும்பு முறிவிற்காகப் போடப்பட்ட கட்டு பிரிக்கப்பட்டது. ஆப்பரேஷனுக்குப் பிறகு கொடுக்கப்படும் பிசியோதெரபியும் கொடுத்துக் கொண்டு வருவதால் அவனது கை ஓரளவிற்கு தேறிவிட்டது.
கையை முழு உயரமாகத் தூக்க முடியவில்லை, ஆனால் சுமாராக எல்லா வேலைகளையும் அவனாகவே செய்ய முடிந்தது.
அவன் பெற்றோர்களும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வரும்போதெல்லாம் சங்கீதாவுடன் அவன் திருமணத்தைப் பற்றியே அதிகம் வற்புறுத்தினர். ஆனால் இவன் எதற்கும் பதில் சொல்வதில்லை. கல்லூளி மங்கனாகவே இருப்பான்.
அப்படியும் அவர்கள் மிகவும் வற்புறுத்தவே ஒரு நாள் கோபத்துடன் தன் பான்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் கயிற்றில் தொங்கும் தாலியை எடுத்து பெற்றோர் கண் முன்னே ஆட்டினான்.
“இங்கே பாருங்கள். அவள் இன்னும் சரியாக மயக்க நிலையில் இருந்து தெளிவடையவில்லை. நீங்கள் இப்படி விடாமல் சங்கீதாவைத் திருமணம் செய்துக் கொள் என்று வற்புறுத்தினால், எனக்கு வேறு வழி இல்லை. இங்கே உள்ள பேஷன்ட்டுகளையும், என் டாக்டர் நண்பர்களையும் சாட்சியாக வைத்து கல்பனாவின் கழுத்தில் இந்த தாலிக் கயிற்றைக் கட்டி விடுவேன். இதில் உங்களுக்கு சம்மதமா?” எனக் கேட்டான் கெளதம்.
“அடப்பாவி! நீ செய்தாலும் செய்வாய், நாங்கள் கல்பனாவிமே பேசிக் கொள்கிறோம்” என்று சலித்துக் கொண்டாள் லட்சுமி.
இதற்குள் சர்ஜரி செய்த மயக்கத்தில் இருந்து மெதுவாக முனகினாள் கல்பனா. அந்த மயக்கத்திலும் அவள் “கௌதம்” என்றே முனகிக் கொண்டிருந்தாள். அருகே சென்ற கௌதம் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
லேசாகக் கண்களைத் திறந்த கல்பனாவிற்கு கௌதமைத் தவிர வேறு ஒன்றும் கண்ணுக்கோ அல்லது கருத்திற்கோ புலப்படவில்லை. அவன் கைகளை இறுகப் பிடித்து தன் கழுத்தில் புதைத்துக் கொண்டாள்.
“கௌதம், எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என்னை விட்டு எங்கும் போகாதே” என்று மெதுவாக கூறிக் கொண்டிருந்தாள்.
கௌதமின் கண்களில் லேசாக்க் கண்ணீர் கசிந்தது. “கண்ணம்மா, உன்னை விட்டு நான் எங்கும் போக மாட்டேனடா என் செல்லமே” என்றான். ஆனால் அதைக் கேட்கும் நேரம் கூட அவள் நினைவு அவளிடம் இல்லை.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு லேசாகக் கண்ணீர் கசிந்தது. ஆனால் அதை அவள் தன் கணவருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். அப்போது டாக்டர் விக்டரும், லாரன்ஸும், அந்த மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு டாக்டர்களுடன் விசிட் செய்தனர்.
கல்பனா இன்னும் அரைகுறை மயக்கத்தில் தான் இருந்தாள். அவளை நன்றாகப் பரிசோதித்து விட்டு, “தலையில் செய்த அறுவைச் சிகிச்சையும் நன்றாக ஆறி வருகிறது,, அதனால் இனி பயம் இல்லை” என்று கூறினர்.
“ஒரு கலெக்டரைக் காப்பாற்றி, எங்களுக்கு மிகப் பெரிய ஆறுதலையும், எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட இருந்த கெட்ட பெயரிலிருந்தும் காப்பாற்றி மிகப் பெரிய ஆறுதலையும் கொடுத்தீர்கள். அதனால் இன்று உங்களுக்கு மிகப் பெரிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்கிறோம். மறுக்காமல் நீங்கள் இருவரும் வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்” என்று வக்கீல் சந்துரு மிகவும் பௌவ்யத்துடன் கேட்டுக் கொண்டார்.
அன்று இரவு வேலூரில் மிகவும் சிறந்த ரெஸ்டாரன்டில் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கல்பனாவை கவனித்துக் கொள்ள ஒரு நர்ஸை ஏற்பாடு செய்து விட்டு, பார்டிக்கு அவள் அம்மாவையும், தம்பியையும் தொந்தரவு செய்து அழைத்துச் சென்றனர்.
அடுத்த நாள் லண்டனில் இருந்து வந்த இரண்டு டாக்டர்களும் தங்கள் தாயகம் திரும்பினர். விமானம் ஏறும் முன்னர் கௌதமிடம் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு தங்கள் நாட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அடுத்த நாள் லட்சுமியும், லாயர் சந்துருவும் சென்னைக்குப் புறப்படுவதாகவும், அதனால் டிரைவரிடம் கூறி காரை தகுந்த முறையில் செக் செய்து வைக்க வேண்டும் என்று கௌதமிடம் கூறினர்.
கௌதமும் டிரைவருக்கு டிபன் வாங்கிக் கொடுத்து விட்டு காரைப் பற்றி தகுந்த இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுத்து விட்டு வர கீழே கார் பார்க்கிங் சென்றான். அது தான் அவன் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறதென்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அவன் கீழே சென்ற போது தான் லட்சுமியும் சந்துருவும், கல்பனாவிடம் தங்களின் பணப்பெருமையையும், ஜாதிப் பெருமையையும் பேசி, பெற்றோர் சம்மதமில்லாமல் இனிமேல் எக்காரணம் கொண்டும் கௌதமுடன் தேவையில்லாமல் உறவாடக் கூடாதென்று சத்தியம் வாங்கிக் கொண்டனர்.
கௌதமிடம் இதைப் பற்றித் தெரிவிக்கக் கூடாதென்றும், தங்கள் மகனின் நல்வாழ்க்கையில் இவள் குறுக்கிடக் கூடாதென்றும் என்றும் வாக்குறுதி வாங்கிக் கொண்டனர்.
டிரைவருக்கு உணவு வாங்கிக் கொடுத்த பின்னர் தன் பெற்றோருக்கும் சூடாக இட்லியும் சாம்பாரும் வாங்கிக் கொண்டு திரும்பினான். வந்தவுடன் கல்பனாவைப் பார்த்தான்.
எப்போதும் சிரிப்பை சிந்திக் கொண்டிருக்கும் அவள் கண்களும் முகமும், கனத்த கார்மேகத்தை சுமந்தாற்போல் வெளியில் சிரித்துக் கொண்டும், மனதிற்குள் சோகத்தைப் புதைத்துக் கொண்டும் இருந்தது தெளிவாகத் தெரிந்தது்.
அப்போது முதலே கல்பனாவிடம் நிறைய மாற்றங்கள். கௌதமிடம் மனம் விட்டுப் பேசவில்லை, சிரிக்கவில்லை. தன் பெற்றோர்கள் தான் அவளிடம் ஏதோ பேசி குழப்பி இருக்கிறார்கள் என்று மனதிற்குள் ஊகித்துக் கொண்டான்.
அன்று முதல் அவள் புறக்கணிப்பே வேறு மாதிரி இருந்தது. வெளிப்பார்வைக்கு அவள் கௌதமை ஒதுக்கினாளே தவிர, மறைவில் கல்பனா கண் கலங்கி நிற்பதும் கௌதமிற்கு நன்கு தெரிந்தது.
‘இவள் ஏன் இப்படி இருக்கிறாள்? ஒன்றும் புரியவில்லையே’ என்று குழம்பினான் கௌதம்.
மருத்துவமனையிலிருந்தும் டிஸ்சார்ஜ் ஆகி விட்டாள். அப்போது, “நானே பார்த்துக் கொள்கிறேன், என் ப்ரண்ட்ஸும் மாவட்டக் கலெக்டரும் என்னுடன் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் கை காயத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி என்னைத் தேடி வராதீர்கள், அதனால் நம் இருவருக்குமே கஷ்டம்” என்று கூறிவிட்டு பட்டென்று போனை வைத்து விட்டாள் கல்பனா.
கௌதமிற்கும் மருத்துவமனையில் திடீரென வேலை அதிகமாகிவிட்டது. கோவிட் 19 ஜுரத்தின பாதிப்பு குறைந்தாலும், திடீரெனக் கொட்டித் தீர்க்கும் மழையால் ஜுரம் ‘மெட்ராஸ் ஐ’ போன்றவை அதிகமாகப் பரவத் தொடங்கின.
இதனால் கௌதமிற்கு ஓய்வில்லாமல் வேலை மிக அதிகமாக இருந்தது. அதனால் அவனால் கல்பனாவுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் ஆங்கில நாளிதழில் ‘அப்பிஷியல் போஸ்டிங்க்ஸ் அண்ட் டிரான்ஸ்பர்’ பகுதியில் வரிசையாக நிறைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆபீசர் மாற்றங்களைப் போட்டிருந்தது. அதில் கல்பனாவின் பெயரும் இருக்கக் கண்டான் கௌதம். அவளை சென்னை மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு மாவட்டத்தில் உதவி கலெக்டராக பதவி மாற்றி இருந்தார்கள். கல்பனா அந்த மாறுதல் பற்றி கௌதமிடம் தெரிவிக்கவில்லை.
சந்துருவும், லட்சுமியும், வீட்டில் காத்திருக்கும் சம்பந்திகளுக்கும், தங்கள் மருமகள் கீதாவிடமும் இதைப் பற்றித் தெரிவித்தனர். சத்யாவும், அவள் கணவரும் மட்டும் அவர்கள் பெற்றோரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
“நீங்கள் ஏன் அவர்கள் பேசுவதையும், பழகுவதையும் தடுக்கிறீர்கள்? ஏன் கல்பனாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என்று வாதிட்டனர். விஜயாவும் தன் எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை.
கௌதமோ, தலைமைச் செயலகத்தில் கல்பனா பணிபுரியும் அலுவலகத்தின் முகவரியைக் கேட்டு அறிந்து கொண்டான்.
நேரில் சென்று பார்த்த போது, அவள் சரியாகப் பேச மறுத்ததுடன் அவனுக்கு சங்கீதாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று புத்திமதியும் கூறினாள் கல்பனா. பேசிப்பேசி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு தான் ஏற்பட்டது.
“நீயாக என்னைத் தேடி வந்தாலன்றி, சத்தியமாக நானாக இனி உன்னைத் தேடி வரமாட்டேன். ஆனால் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணும் என் வாழ்க்கையில் கிடையாது” என்று சூளுரைத்து விட்டு சென்னை திரும்பினான் கெளதம்.
இருவருக்கும், வருத்தமும் வீம்பும் தான் அதிகமாக இருந்ததே தவிர, மற்றவர் மனதைப் பற்றி கவலையில்லை.
‘கேட்காத கடனும் போகாத பாதையும் பாழ்’ அல்லவா? பேசாத உறவும் அப்படித்தான் போலும்.
வேலை, வேலை என்று கடமையிலேயே கண்ணாக மூச்சு விடுவதற்குக் கூட நேரமின்றி யாருக்காகப் பாடுபடுகின்றோம், எதற்காகப் பாடுபடுகின்றோம் என்ற கருத்தில்லாமல் பாடுபட்டனர். அதன் விளைவு? அவர்கள் எந்தத் தொடர்பும் இன்றிப் பிரிந்தே சில மாதங்கள் ஆகியிருந்தன.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings