in , ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கல்பனாவின் கடுமையான நடவடிக்கையால், தோல் பதனிடும் தொழிற்சாலை மூடப்பட்டு சுமார் நான்கு மாதங்கள் ஆனதால், கம்பெனி பயங்கர நஷ்டத்தில் இருப்பதாகவும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் புலம்பினார்கள்.

“நிலைமையை விசாரித்து மேலிடத்திற்கு அறிக்கை அனுப்புவதாடு என் பணி முடிவடைந்து விட்டது, அதற்கு மேல் நடவடிக்கை எடுப்பதெல்லாம் மேலிடம் தான்” என்று கையை விரித்து விட்டாள் கல்பனா.

ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரியாதது போல நடித்தார்களா என்று தெரியவில்லை.

“நீ தொடங்கிய பிராப்ளத்தை நீ தானே முடிக்க வேண்டும்” என்று கத்தி விட்டு, மிகுந்த கோபத்தில் அவர்கள், “இதற்கான பலனை இவள் தான அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறினார்கள். அவர்கள் சொல்வதை கல்பனா அப்போது பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கல்பனா சப்-கலெக்டராகப் பணியில் சேர்ந்ததில் இருந்து, ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு எட்டு மணி முதல் ஒன்பது அல்லது பத்து மணி வரை கட்டாயம் போன் பேச வேண்டும் என்று நிர்பந்தித்தான் கௌதம்.

அவளுடைய அன்றாட நிகழ்ச்சிகளைக் கேட்பான்.  ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையிலிருந்து கிளம்பி, டிரைவரையும் அழைத்துக் கொண்டு இவளிடம் வந்து விடுவான். வீட்டில் யாரிடமும் சொல்லாமல், அவன் அக்கா விஜயாவிடம் மட்டும் சொல்லிவிட்டு வருவான் போலிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில், கல்பனா படுக்கையிலிருந்து எழுந்து கொள்வதற்கே காலை எட்டு மணியாகி விடும். அதன் பிறகு வேலைக்காரியை அனுப்பி பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் இருந்து இட்லி, தோசை, பூரி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி வரச் சொல்வாள்.  

அதற்குள் காலை மணி பத்தாகிவிடும். கௌதமும் காரில் வந்து இறங்கிவிடுவான். சிறிது நேர ஓய்விற்குப் பின் பிரிட்ஜைத் திறந்து பார்ப்பான். அது அநேகமாக காலியாக இருக்கும். பிறகு கல்பனாவையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று நல்ல ஓட்டலாகப் பார்த்து அவளை சாப்பிட வைத்து, அங்கேயே இரவு உணவும் மூவருக்குமாக வாங்கி விடுவான்.

தேவையேயில்லாமல் அடிக்கடி கல்பனாவிற்கு ஏதாவது டிரஸ் வாங்குவான். நிறைய பூக்களும் பழங்களும் வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கி விடுவான். மொத்தத்தில் இவளுக்காகப் பார்த்துப் பார்த்து செய்வான்.

இந்த வேலைகளை முடித்துக் கொண்டு, அன்று மாலை அவளையும் அழைத்துக் கொண்டு வாக்கிங்கும் போய் வந்து விடுவான். பின்னர் இரவு ஏழு மணிக்கு அவனும் டிரைவரும் சென்னை கிளம்பி விடுவார்கள். இது கௌதமின் ஞாயிற்றுக்கிழமையின் முக்கியப் பணி ஆனது.

அந்த மாதிரி நேரத்தில் தான் கௌசிக் தன் மாமனார் வீட்டு உறவினர்களுடன் கல்பனாவைப் பார்க்க வந்தான். கல்பனா அதைப் பற்றி கௌதமிடம் கூறினாள். அவர்கள் வேண்டுதலையும், அதை இவள் மறுத்ததையும் கூறினாள். அதற்கு அவர்கள் கோபமாக அவளை பயமுறுத்திச் சென்றதையும் கூறி கேலியாகச் சிரித்தாள்.

“கல்பனா, அவர்கள் மிகவும் மோசமானவர்கள். பார்ப்பதற்குத்தான் பெரிய மனிதர்கள் போல் வெள்ளையும் சள்ளையுமாக இருப்பார்கள், ஆனால் கொடூரமானவர்கள். போகிற போக்கில் அடித்து சாய்த்து விட்டுப் போய் விடுவார்கள். நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றான் கவலையோடு.

“நான் என்ன செய்ய முடியும்? உள்ளதைத்தானே சொல்ல முடியும், சட்டப்படி தானே நடக்க முடியும்” என்றாள் கல்பனா.

“எனக்கு ரொம்ப பயமாகத் தான் இருக்கிறது, தேவையில்லாமல் உன்னை இங்கே மாற்றி வீண் பிரச்சனை ஆகி விட்டதோ என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது. நான் இல்லாமல் நீ எங்கும் தனியாகப் போகாதே” என்றான்.

கல்பனா சிரித்தாள். “அது எப்படி கௌதம்? நீ வருவது வாரத்தில் ஒரு நாள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை.  திங்கள் முதல் வெள்ளி வரை நான் ஆபீசிற்குப் போகத்தானே வேண்டும். முக்கியமான இடங்களுக்கு கோ-இன்ஸ்பெக்‌ஷன் போகத்தானே வேண்டும். அப்போதெல்லாம் ஜீப் டிரைவரும், என்னுடைய பர்சனல் கிளார்க்கும் கூடவேதான் இருப்பார்கள். ஆதலால் நடப்பது நடந்தே தீரும். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப் படுவதை விடுங்கள்” என்றாள் தைரியமாக.

ஒரு மாதம் ஒழுங்காக ஓடியது. யாருடைய தொந்தரவும் இல்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை, வழக்கம் போல் கௌதம் காலையிலேயே டிரைவருடன் வந்து விட்டான். கல்பனாவோடு வேலூர் போய் விட்டு வரும் போது ஒரு பெரிய துணிக்கடைக்குள் நுழைந்து விட்டான்.

“கௌதம் இது ரொம்ப அநியாயம். ஒவ்வொரு மாதமுமா டிரஸ் வாங்குவீர்கள், சிலவற்றை இன்னும் நான் உடுத்தவேயில்லை” என்று அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள்.

ஆனால் அவனோ வரவேற்பறையில் கண்ணாடிப் பெட்டியில் ஒரு பெண் பொம்மைக்கு அணிந்திருந்த புடவையைக் காட்டி அதே போல் வாங்க வேண்டுமென்றான். ரோஜா நிறத்தில் அங்கங்கே சிறிய ஜரிகை வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. உடம்போடு ஒட்டிய மெல்லிய ஜார்ஜெட் புடவை.

“உயிரில்லாத இந்த பிளாஸடிக் பொம்மைக்கே இந்தப் புடவை இவ்வளவு அழகாக இருக்கின்றதே, என் தங்கச்சிலை இந்தப் புடவையைக் கட்டினால் எப்படி இருக்கும்” என்று கண்களை மூடி கற்பனையில் மிதந்தான்.

பிடிவாதம் பிடித்து அந்தப் புடவையையும், புடவையின் விலையை விட அதிகமான விலையில் அதற்கு மேச்சான ஒரு பிளவுசும் வாங்கிக் கொண்டு தான் கடையை விட்டு வெளியே வந்தான்.

அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அந்த டிரஸ்ஸை அவள் உடனே போட வேண்டுமென்று அடம் பிடித்தான். இப்போதெல்லாம் கல்பனாவால் அவனுடைய எந்த ஒரு கோரிக்கையையும் நிராகரிக்க முடிவதில்லை.

அந்த ரோஜா வண்ண மெல்லிய ஜார்ஜெட் புடவையையும், அதே நிறத்தில் மேச்சாக அவன் வாங்கிய புதிய ஜாக்கெட்டும் போட்டு அவனை மெய்மறக்க வைத்தாள். தலையை ஷேம்பூ போட்டு குளித்து ஹேர்பின்கள் மட்டும் போட்டு அப்படியே லூஸாக விட்டிருந்தாள்.

கௌதம் அவளைப் பார்த்தவுடனே இமைக்க மறந்தான். “ரோஜாப் பூந்தோட்டம்” என்ற விசிலடித்துப் பாடியபடியே நடனமாடிக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தான்.

வெட்கத்தில் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள் கல்பனா. அவள் கைகளை எடுத்து அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான் கௌதம். கல்பனாவின் முகம் அந்த வானமாகச் சிவந்தது.

“கௌதம், போதும் நீங்கள் சென்னைக்குக் கிளம்புங்கள். நீங்கள் நேரம் கழித்துக் கிளம்பினால் அங்கு போய்ச் சேரவே இரவு வெகுநேரம் ஆகிவிடும். இரவு உங்களிடமிருந்து போன் வரும் வரை எனக்குத் தூக்கமே வராது” என்றாள்.

“ஒரு மணி நேரம் அப்படியே பேசிக் கொண்டு ஜாலியாக வாக்கிங் போய்விட்டு வந்து பிறகு கிளம்பி விடுகிறோம்” என்றான் கௌதம் கெஞ்சுதலாக.

தன் புதுப்புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே கௌதமுடன் வாக்கிங் சென்றாள் கல்பனா. வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான் கௌதம். அவன் அன்பு மழையில் நனைந்த கல்பனா, தன்னை மறந்து வானத்தில் பறப்பதைப் போல் உணர்ந்தாள்.

இருவரும் கை கோர்த்துக் கொண்டு ஒரு வித மயக்க நிலையில் நடக்கும்போது எங்கிருந்தோ வந்த ஒரு லாரி கல்பனாவை வேகமாக இடித்துத் தள்ளிவிட்டுப் பறந்து விட்டது. கல்பனா இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். அவளை இடித்த வேகத்தில் அவள் கையைப் பிடித்துச் சென்ற கௌதமும் சிறிது தூரம் தள்ளி வீசப்பட்டான்.

கல்பனாவிற்கு அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்கள் தங்கள் குறைகளுடன் அவளை அணுகும் போது அவர்களுக்குத் தன்னாலான உதவிகளை உடனடியாகச் செய்வாள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சப் கலெக்டருக்கும், அவருக்கு வேண்டிய டாக்டருக்கும் ஆக்ஸிடன்ட் என்றதும் அந்த மக்கள் துடித்து விட்டார்கள்.

உடனே ஆம்புலன்ஸிற்குப் போன் செய்து வேலூரில் உள்ள சி.எம்.ஸி. மருத்துவமனையில் கூடவே இருந்து அட்மிட் செய்தனர். டிரைவர் கண்ணனுக்கும் விவரம் தெரிவித்து ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்து வரும்படி செய்தனர்.

டிரைவர் கண்ணன் உடனே கௌதம் வீட்டிற்குப் போன் செய்து விவரம் தெரிவித்தான். விஜயா, அவர்களின் அம்மா, அப்பா எல்லோரும் உடனே வேலூர் வந்து சேர்ந்தனர்.

லட்சுமியோ, கண்களில் நீர் வழிய, “எங்கு போகிறேன், எதற்குப் போகிறேன் என்று கேட்டாலும் சொல்வதில்லை. இப்படி அடிபட்டு சுயநினைவில்லாமல் ஆஸபத்திரியில் சேருவதற்குத் தான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீட்டில் சொல்லாமல் ஓடி வந்தாயோ?” என்று நொந்து கொண்டாள்.

அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் ஐ.சி.யூ.விலிருந்து வெளியே வந்தனர். கௌதமின் உறவினர் அவர்களைச் சுற்றிப் பயத்துடனும், ஆவலுடனும் கௌதமைப் பற்றியும், கல்பனாவைப் பற்றியும் விசாரித்தனர்.

கல்பனாவின் உறவினரும் கூடவே இருந்தனர். கல்பனாவின் தங்கை காஞ்சனா ஒரு நர்ஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதால், அவளிடம் மட்டும் என்னவோ பேசினார்கள்.

“டாக்டர் கௌதமிற்கு, தூக்கி வீசப்பட்டதில் வலது தோளில் பால் அண்ட் சாக்கெட் ஜாயின்டில் தான் எலும்பு முறிவு, உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை” என்றும் தெரிவித்தனர்.

விஜயா உடனே, “டாக்டர், சப்-கலெக்டர் கல்பனா எப்படி இருக்கிறார்?” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டாள்.

“சப்-கலெக்டர் நிலமைதான் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்றவர்கள், உதட்டைச் சுழித்து தோளைக் குலுக்கிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டனர்.

விபத்தைப் பற்றி் கேள்விப்பட்டவுடனே மாவட்டக் கலெக்டரும், மற்ற சப்-கலெக்டர்களும், தாசில்தார்களும் அந்த மருத்துவமனையில் கூடி விட்டனர்.

மாவட்டக் கலெக்டர், “எனக்கு இருபத்தி நான்குமணி நேரத்தில், குற்றவாளி யார் என்ற ரிப்போர்ட் வந்தாக வேண்டும்” என்று போலீசிற்கு கடுமையான உத்தரவிட்டார்.

ஆம்புலன்ஸ் கூடவே வந்த அந்த ஊர் மக்கள், “கைப் புண்ணிற்குக் கண்ணாடியா? தெரிந்த குற்றவாளியைப் பிடிக்க ஒரு வாரம் எதற்கு? எல்லாம் தோல் பதனிடும் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள் தான் இந்த கொடூரமான வேலையைச் செய்தவர்கள். வேறு யாருக்கும் கலெக்டரம்மாவிடம் விரோதம் கிடையாது. எல்லோருக்கும் கலெக்டரம்மா நல்லது தான் செய்தார்கள்” என்றனர்.

“தவறு செய்தவர்களைக் கண்டுபிடிக்க ஆதாரமும் சாட்சியும் வேண்டுமல்லவா?” என்றார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

“ஆக்ஸிடன்ட் நடந்த இடம் ஒரு சிறிய மார்க்கெட் ஏரியா தான். இப்போதெல்லாம் திருட்டு பயத்திற்காகத்தான் எல்லாக் கடைகளிலும் சிசிடிவி காமிரா பொருத்தியிருக்கிறார்களே. அதைப் பரிசோதனை செய்தால், ஆக்ஸிடென்ட் செய்த லாரியின் பதிவு எண் தெரியப் போகிறது. அதை வைத்து சுலபமாக்க் குற்றவாளியை எளிதில் கண்டு பிடித்து விடலாமே” என்று பொது மக்களே ஐடியா கொடுத்தார்கள்.

போலீசும் ஆக்ஸிடென்ட் செய்த லாரியைக் கண்டுபிடித்து, டிரைவரை தக்கபடி விசாரித்ததில், பணம் கொடுத்து அவனை விலைக்கு வாங்கியவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டான். அவர்கள் வேறு யாருமல்ல, கௌசிக்கின் மாமனாரின் உறவினர்களே.

நினைவு திரும்பிய கௌதமும், அவர்கள் கல்பனாவின் வீடு தேடி வந்து மிரட்டியதை போலீசில் தெரிவித்தான். போலீஸ் குற்றவாளியை உடனே கைது செய்தது.

ஆனால் கல்பனாவின் நிலமைதான் மோசமாகவே இருந்தது. தலையில் அடி பலமாக இருந்தது. கைகளிலும் கால்களிலும் இருந்த எலும்புமுறிவு கூடப் பரவாயில்லை, இளம் வயது ஆதலால் எலும்பு சீக்கிரம் கூடிவிடும். ஆனால் தலையில் பட்ட அடிதான் அவள் நினைவை இழக்க வைத்திருந்தது. அவள் அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் கவலையோடு அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தனர்.

கௌதமிற்கு, சர்ஜரி செய்து, வலி நிவாரணிகளும் கொடுத்து ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். ஆனால் அவனோ கையில் கட்டுடன் வேலூரில் ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் போட்டு தங்கிவிட்டான். அவன், அப்பாவும், அம்மாவும் பிள்ளையைத் திட்டி விட்டு சென்னைக்குக் கிளம்பினார்கள்.

“யாரோ ஒரு பெண், அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் இருக்கிறார்கள். போதும் போதாதற்கு ஒரு கலெக்டரும் அவருடைய படையும் இருக்கிறது. இவன் அவளோடு ஊர் சுற்றி, உறவினர் மத்தியில் அவமானமாகி, லாரியில் ஆக்ஸிடென்ட் ஆகி இப்போது கையில் கட்டோடு சுற்றுகிறான். இதெல்லாம் தேவையா?” என்று அப்பா திட்டினார்.

அம்மாவோ, “போனதெல்லாம் போகட்டும். சங்கீதாவும், அவள் பெற்றோரும் உன்னை மன்னித்து அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாக உன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். நீ சென்னைக்கு வந்தவுடன் நல்ல நாள் பார்த்து நிச்சயம் செய்துக் கொள்ளலாம். இந்த கல்பனாவை ஏதாவது பணம் கொடுத்து ஏறக் கட்டுவதைப் பார்” என்றாள்.

எதற்கும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான் கௌதம்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அரூபன் (பயணம் 3) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு