in , ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“காதலுக்கு சகுனி என்பது மூன்றாவது பெயரா கல்பனா? டிரைவர் அண்ணா, இப்படியெல்லாம் பேர் வைத்தால் நன்றாகவா இருக்க்கிறது?” என்றான் கௌதம்.

கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்து விட்டுப் பிறகு, “டாக்டர் சார், கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் இதய மாற்று சிகிச்சை என்று சொல்லலாமா?” என்றான்.

“வெரி குட்!” என்றான் கௌதம்.

ஆச்சர்யப்பட்டு வாயைப் பிளந்து கண்ணனைப் பார்த்தாள். “கண்ணன் அண்ணா, உங்களுக்கு இவ்வளவு அழகாகப் பேசத் தெரியுமா?” என்றாள் கல்பனா வியப்புடன்.

இவர்கள் கார் அந்த ஊருக்குள் நுழையும் போது ஊரே மிக அமைதியாக இருந்தது. புயலுக்குப் பின்னே அமைதி என்பது போல் இருந்தது.  ஆனால் போலீஸ் அதிகாரிகள் அங்கங்கே நின்றிருந்தனர்.

ஷீலா இவர்களை வரவேற்று, கலவரம் நடந்த இடங்களைச் சுட்டிக் காட்டினாள். மீண்டும் இதே போல் கலவரம் நடந்தால் துப்பாக்கிச் சூடு நடத்த மாவட்டக் கலெக்டர் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாள்.

“ஷூட்டிங்கெல்லாம் வேண்டாம் ஷீலா, நான் கலெக்டரிடம் பேசிக் கொள்கிறேன். இன்ஸ்பெக்டரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏற்கனவே ஒரே குடும்பத்தில் இருவரை இழந்திருக்கின்றனர். இரண்டு பக்கமும் முக்கியமான தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த ஊர் மக்களில் பெரும்பான்மையோர் மத்திய தர வகுப்பினரே! பெரும்பாலும் நெசவாளிகள், பயிர் தொழிலும், குடிசைத் தொழில்களும் செய்பவர்கள் தான். மானம் காக்கும் நெசவுத் தொழில் செய்யும் புண்ணிய பூமியில் துப்பாக்கிச் சூடெல்லாம் வேண்டாம்” என்று நீண்ட உரையாற்றி பெருமூச்செறிந்தாள் கல்பனா.

அவளுடைய திறமையான பேச்சினால், போலீஸ் அதிகாரிகளின் துணையோடு, அவள் இரண்டு பக்கத்துத் தலைவர்களையும் வைத்து நடத்திய பேச்சினால், இனிமேல் அடிதடி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று வாக்குக் கொடுத்தனர்.

“இந்த ஊர் முனிசிபாலிட்டி அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கிறது. ஆனால் பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளைப் பாருங்கள், குப்பை கூளங்கள் வழிந்து ஒரே நாற்றமடிக்கிறது. தெருவெங்கும் மனிதக் கழிவுகள், சாக்கடையில் புரண்டு தெருவெங்கும் சுற்றித் திரியும் பன்றிகளைப் பாருங்கள்.

அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து நீங்களும் ஊரைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், பெருகி வரும் நோய்களிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாமல்லவா? வீணாக ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதைத் தவிர்த்து, எல்லோரும் ஒற்றுமையாக நற்பணிகளில் ஈடுபடலாமில்லையா?” என்று ஒரு நீண்ட சொற்பொழிவு கொடுத்தாள் கல்பனா.

ஷீலாவையும், கல்பனாவையும் அவரவர் வீட்டில் இறக்கி விட்டப் பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, கௌதம் டிரைவரோடு சென்னை திரும்பினான். சத்யா, தன் கணவருடன் மறுவீடு விருந்திற்குக் கிளம்பினாள்.

இந்த ஆரவாரமெல்லாம் முடிந்த பிறகு கீதாவின் பெற்றோர், தங்கள் இரு மகள்களிடமும், சம்பந்தியிடமும் சொல்லிக் கொண்டு ஊருக்குக் கிளம்பத் தயாரானார்கள். அப்போது கௌதமும் அங்கேயிருந்தான்.

 “சம்பந்தி, நான் இப்போது ஊருக்கு கிளம்புகிறேன். கடைசியாக எனக்கு பதில் சொல்லுங்கள், எங்கள் பெண் சங்கீதாவை உங்கள் மகன் டாக்டர் கௌதமிற்குத் திருமணம் செய்து கொள்வீர்களா?  எங்கள் பெண்ணிற்கும் நல்ல டாக்டர் வரன்களும் அமெரிக்காவில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் வரன்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எனக்கும் என் கணவருக்கும் உங்கள் பிள்ளை கௌதமிற்கு, எங்கள் மகளைக் கொடுத்தால் அக்காவும், தங்கையும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள். மேலும் இப்படிப்பட்ட நல்ல குணமுள்ள மாமியார், நாத்தனார் எல்லாம் அமைவதும் கஷ்டமல்லவா?” என்றாள் சங்கீதாவின் அம்மா மூச்சுவிடாமல்.

எல்லா பேச்சு வார்த்தைகளையும் கேட்டவாறு மாடியிலிருந்து இறங்கி வந்தனர் கீதாவும், அவள் கணவன் கௌசிக்கும்.

 “அத்தை, மாமா, பெரியவர்கள் பேசும்போது நான் குறுக்கிட்டுப் பேசுகின்றேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் என் தங்கை சங்கீதாவை உங்கள் மருமகளாக்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நானும் கௌசிக்கும் தனிக் குடித்தனம் போய்விட முடிவு செய்திருக்கிறோம்.  தகாதவர்களோடு சேர்ந்து வாழ எங்களால் முடியாது. சத்யாவின் திருமணம் முடிய வேண்டுமென்று தான் இத்தனை நாள் காத்திருந்தோம்” என்றாள் கீதா.

அவள் பேச்சைக் கேட்டு வக்கீல் சந்துருவும், அவர் மனைவி லட்சுமியும் திகைத்தனர். ஆனால் கௌதம் விழுந்து விழுந்து சிரித்தான்.

“உங்கள் தங்கையின் திருமணத்திற்காக நீங்களும் எப்படியெல்லாமோ ‘பிளாக் மெயில்’ செய்கிறீர்கள். அதெற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அண்ணி, தெரியாமல் தான் கேட்கிறேன். நீங்கள் இதே வீட்டில் மாடியில் தனியாகத்தானே இருக்கிறீர்கள். அப்படியிருந்தும் எந்த நல்ல விஷயத்திலும் நீங்களோ அல்லது கௌசிக்கோ பைனான்ஷியலாக எந்த உதவியும் செய்வதில்லையே! அப்படியிருக்கும் போது நீங்கள் எங்கிருந்தால் தான் என்ன? இப்போது சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். யார் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் கல்பனா தான் என் மனைவி” என்றவன், தன் ஓவர்கோட்டைத் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியே சென்று விட்டான்.

அவனையே வெறுப்புடன் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீதாவின் அம்மா. அவள் வாய் ஏதோ முணுமுணுத்தது. அந்த நேரத்தில் அவளை எல்லோரும் பார்த்தனர். ஆனால் லட்சுமியின் கண்களுக்கு மட்டும் அவளை அப்படிப் பாரக்க பயமாக இருந்தது. வேட்டையாடத் தயாராக நிற்கும் ஒரு புலியின் கண்களைப் போல் அவள் கண்கள் மின்னின, ஆனால் யாரும் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை.

குடியாத்தத்தில் நடந்த மதக்கலவரம் பெரிதாகாமல், மோசமான விளைவுகளைத் தவிர்த்ததற்காக கல்பனாவை மேலதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் வாழ்த்தினர். அதைத் தொலைகாட்சிச் செய்தியிலும் அறிவித்தனர்.

ஒரு மாதம் போல், எந்த கலாட்டாவும் இல்லாமல் காலை பத்து மணிக்கு ஆபீஸ் போய் மாலை ஐந்து மணிக்கு ஆபீஸ் திரும்புவதாகவும், கோப்புகளுக்கு நடவடிக்கை எடுத்து உத்தரவு போடுவதாகவும் இருந்தாள் கல்பனா.

அப்போது திடீரென்று ராணிப் பேட்டை, ஆற்காடு போன்ற ஊர்களில் மக்கள் கடுமையான விஷ ஜுரத்தினால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் பாதங்களும் பயங்கரமாக வீங்கியிருந்தன என்று செய்தி பரவியது.  ராணிப்பேட்டை மாவட்டக் கலெக்டர் அந்த ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால், வேலூர் மாவட்டக் கலெக்டருக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.

மாவட்டக் கலெக்டர், சப் கலெக்டரான கல்பனாவின் கடின உழைப்பின் மேல் உள்ள நம்பிக்கையால் கால் வீக்கம் மற்றும், ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட ராணிப்பேட்டை ஆற்காடு போன்ற ஊர்களுக்கு நேரிடையாக சென்று இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட் தரும்படி கேட்டார்.

கல்பனா தன் பி.ஏ.வுடன் ஒவ்வொரு ஏரியாவாக நேரில் சென்று ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கெடுத்தாள். பெரும்பாலானவர்களுக்கு, கால் வீங்கி, உடல் வலியுடன் காய்ச்சலும் அடிப்பதாக குறிப்பெடுத்து மேலிடத்திற்கும் அனுப்பி வைத்தாள்.

அதே ஊரில் உள்ள அரசு மருத்துவரின் உதவியுடன் காய்ச்சலுக்கும், உடல் வலிக்கும் மருந்து கொடுத்தனர். ஆனால் அது தற்காலிக மருத்துவ உதவிதான். கொசு கடித்ததால் வந்த கால் வீக்கமும், ஜுரமும் என்று ஏதோ ஒரு அனுமானத்தினால் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தனுப்பினர். இரத்தப் பரிசோதனையில் ஒன்றும் பிடிபடவில்லை. அந்தந்த ஊர்களில் உள்ள முனிசிபாலிட்டி சுகாதார இலாக்கா மூலம் ஊரெங்கும் கொசு மருந்தும் தெளிக்கப்பட்டது.

சில நேரங்களில் குழாய்களில் வரும் தண்ணீரே தெளிவில்லாமல், கலங்கலாக வருவதைக் கண்டாள் கல்பனா. அந்தத் தண்ணீரைச் சென்னையில் உள்ள தண்ணீர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிய போது தான் ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற் சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பூமியில் ஊறி நிலத்தடி நீரைக் கெடுத்திருக்கிறது என்று தெரிய வந்தது.

ஆற்று நீருடன் பூமியிலிருந்து எடுக்கப்படும் நீரும் கலந்து குடிநீராக பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதால் தான் இந்தக் கால் வீக்கமும், ஜுரமும் என்று பரிசோதனை ரிப்போர்ட் தெரிவித்தது. உடனே அரசாங்கமும், சுகாதாரத் துறையும் துரித நடவடிக்கை எடுத்தது. ராணிப்பேட்டையில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தது.

சுற்றுச்சூழல் துறையும், தோல் பதனிடும் தொழிற்சாலையிருந்து வெளியேற்றப்படும் நீரில் இருக்கும் காட்மியம், குரோமியம், செம்பு போன்ற உலோக்க் கலவைகள், பூமியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரில் கலந்து, கிரௌண்ட் வாட்டரைக் கெடுக்கிறது. அதனால் அந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இப்படிப்பட்ட நோய்களை உண்டாக்குகின்றன என்று அறிவிப்பு கொடுத்தது.

அதனால் மேலதிகாரிகளின் ஆணையின்படி, அங்கேயுள்ள சட்டத்தை மதிக்காத கம்பெனிகளுக்கு வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட் மூலம் தண்ணீர் சுத்திகரிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தாள் கல்பனா. ஆனால் அவள் கொடுத்த எச்சரிக்கை நோட்டீஸை எந்த கம்பெனியும் மதிக்கவில்லை.

மாவட்டக் கலெக்டரின் ஆணையின்படி சட்டத்தை மீறிய கம்பெனிகளுக்கு மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு ஆகியவற்றைத் துண்டிக்க உத்தரவு கொடுத்தாள். கழிவுநீர் வடிகால் வாரியம் மூலமாக கழிவுநீர் இணைப்புகளையும் துண்டித்தாள். அந்தக் கட்டிடங்களுக்கு போலீஸ் கண்காணிப்பும் ஏற்படுத்தினாள்.

டாக்டர்கள் குழு அடங்கிய ஒரு மருத்துவ முகாமும் ஏற்படுத்தினாள். அவர்களோ இந்தத் தண்ணீரில் கலந்துள்ள உலோகக் கலவையால் தோல் சம்பந்தமான நோய்களும், கர்பப்பை கோளாறுகளும், புற்றுநோய்களும் கூட உண்டாக வாய்ப்பு அதிகம் என்றே வலியுறுத்தினர்.

எல்லா கம்பெனி முதலாளிகளும் பண முதலைகள். சுயலாபம் ஒன்று மட்டுமே போதும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள். அதனால் அரசியல் செல்வாக்கும் அதிகம் உடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் மாவட்டக் கலெக்டர் மிகவும் நேர்மையானவர். அதனால் சப்-கலெக்டர் வரை அவர்கள் ஆதிக்கம் போகாமல் அவரே எல்லா எதிர்ப்புகளையும் கவனித்துக் கொண்டார்.

ஒருநாள் அவளுடைய பி.ஏ. ஷீலா அவள் அலுவலத்தில் இண்டர்காம் மூலம் தொடர்பு கொண்டு அந்த ஊர் லோகல் எம்.எல்.ஏ.வும், இரண்டு கட்சிக்காரர்களும் அவளைப் பார்க்க வேண்டுமென்று காத்திருப்பதாகத் தெரிவித்தாள்.

வந்தவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கால் கல்பனாவை பயமுறுத்தினார்கள். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதி ஊதிப் பெரியதாக்கி சுயவிளம்பரம் தேடிக் கொள்வதாக பிரஸ் மூலமாகவும், டி.வி. மூலமாகவும் அறிவித்தனர்.

அவர்களுக்குத் தகுந்த பதில் கொடுப்பதற்காக, அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு பிரஸ் மூலமாகவும், டி.வி. மூலமாகவும் அறிவித்தாள் கல்பனா.

ஒவ்வொரு கம்பெனியும் வாட்டர் பிளான்ட் மூலம் தண்ணீர் சுத்திகரித்தால் தான் மேற்கொண்டு உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் சென்ற பின்னர், கல்பனாவின் வீட்டிற்கே யாரோ சிலர் தேடி வந்தனர். அவர்கள் கையில் ஒரு பெட்டி. பார்த்ததுமே கல்பனா புரிந்து கொண்டாள். அவர்களை உள்ளே விடாமல் வழிமறித்து விசாரித்துக் கொண்டிருந்தவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

நல்லவர்கள் போல் அவளோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு தாங்கள் எடுத்து வந்த பெட்டியைத் திறந்து காட்டினார்கள். உள்ளே கட்டுக் கட்டாக கரன்ஸி நோட்டுகள்.

கம்பெனி மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தை விட, நாட்டிற்கு அந்நியச் செலாவணியால் கிடைக்கும் லாபம் அதிகம் என்று பேசினார்கள். அந்தத் தொழிற்சாலை மூலம் வாழும் குடும்பத்தின் நிலமையைச் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் கல்பனா, ‘ஏழை மக்களின் உடல் ஆரோக்யமே மிகவும் முக்கியம் என்றும், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்றும் அறிவுறுத்தினாள்.

ஆனால் அவர்கள் எந்த அறிவுரையையும் கேட்கும் மன நிலையில் இல்லை. ஆகவே, இனிமேல் இது போன்ற லஞ்சப் பணத்துடன் வந்தால் போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவதாகவும் எச்சரித்து அவர்களை விரட்டினாள்.

ஒரு நாள் கௌதமின் அண்ணா கௌசிக் கல்பனாவைப் பார்க்க அவள் வீட்டிற்கே வந்தான். கூடவே இன்னும் சில நடுத்தர வயதினர். கல்பனா அவர்களை சங்கீதாவின் பெற்றோருடன் சென்னையில் பார்த்திருக்கிறாள்.

கல்பனா, அவர்களை ஒன்றும் விசாரிக்காமல், வந்தவர்களை வரவேற்று டீ கொடுத்து உபசரித்தாள்.

‘கௌசிக் சென்னையிலேயே முகம் கொடுத்துப் பேசமாட்டான். இங்கே இவ்வளவு தூரம் தேடிக் கொண்டு வர என்ன காரணமோ’ என்று யோசித்தாள் கல்பனா. இவள் யோசிப்பதை உணர்ந்து அவர்களே பேசினார்கள்.

“ராணிப்பேட்டையில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலை என் மச்சானுடையது தான். அதில் பெரும்பான்மையான ஷேர் என்னுடையதே” என்றார் கௌசிக்கின் உடன் வந்தவர்களில் ஒருவர். அப்போது தான் கல்பனாவிற்கு அவர்கள் வந்த நோக்கம் புரிந்தது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்வின் வண்ணங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    கண்ணே கனியமுதே (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி