in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காரில் போகும் போதே, சத்யா தன் அப்பா, அம்மாவிடமும், அக்கா விஜயாவிடமும் கல்பனாவை அழைத்து வரும் விவரத்தை உற்சாகமாகக் கூறிக்கொண்டு வந்தாள்.

கார் வந்து நின்றதும் விஜயாவும், அவள் அப்பா சந்துருவும் கல்பனாவை வரவேற்க வாசலுக்கே வந்து விட்டனர். விஜயா, கல்பனாவை அணைத்து வரவேற்றாள். உணர்ச்சிப் பெருக்கில் விஜயாவின் கண்களில் லேசாக நீர் கசிந்தது.

 “பார்த்தாயா கல்பனா, இத்தனை நாள் உன்னைக் கண்டு கொள்ளாதவர்கள் கூட, உன்னை உற்சாகமாக வெளியில் வந்து வரவேற்கிறார்கள். எல்லாம் ஐ.ஏ.எஸ். டிகிரி படுத்தும் பாடு” என்று தன் தந்தையைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தாள்.

“உஸ், ரொம்ப கலாட்டா செய்யாதே சத்யா. என்ன இருந்தாலும் இப்போது கல்பனா சப்-கலெக்டர் இல்லையா? அதுவுமல்லாமல் கல்பனா என் நண்பரின் மகள்” என்றார் சிரித்துக் கொண்டே சங்கடத்துடன்.

அவர்கள் அம்மாவும் சிரித்துக் கொண்டே வரவேற்றாள். சங்கீதாவும், அவள் கணவன் கௌசிக்கும் கூட அங்கே ஒப்புக்கு நின்றிருந்தனர். ஆனால் சத்யாவின் அப்பாவும், அம்மாவும் கல்பனாவைத் தொந்தரவு செய்து அன்று இரவு டின்னர் சாப்பிட வைத்தனர். விஜயா அவளைத் தன் அறையில் படுத்துக் கொள்ள அழைத்துச் சென்றாள்.

அப்போது, அவர்கள் அம்மா ஒரு தட்டில் மிகவும் விலையுயர்ந்த பனாரஸ் பட்டுப்புடவையும், ஜாக்கெட்டும் வைத்துக் கொடுத்தார்கள். புடவை மிகவும் அழகாக இருந்தது. மயில் கழுத்து வண்ணத்தில் புடவையும், இரண்டு விரல் அகலத்தில் மெல்லிய, ஆனால் அடர்த்தியான ஜரிகைக்கரையும், உடலெல்லாம் கண்ணாடி பதிந்த சின்னச்சின்ன எம்பிராய்டரி பூ வேலைகளுமாய் மிக அழகாக இருந்தது. விலை மிக அதிகமாக இருக்கும் என்று கல்பனா நினைத்தாள். விலைப்பட்டியல் நீக்கப்பட்டிருந்தது.

“கல்பனா, நாளைக் காலை முகூர்த்தத்திற்கு நீ இந்த புடவைதான் கட்ட வேண்டும்” என்று உத்தரவிட்டாள்.

“எனக்குப் புடவையெல்லாம் வேண்டாம் அம்மா. நான் வீட்டிலிருந்து வரும்போது ஒரு பட்டுப்புடவை கொண்டு வந்திருக்கிறேன். அதிகமாகப் பட்டுப்புடவையே உபயோகப் படுத்துவதில்லை அம்மா” என்றாள் கல்பனா.

“பரவாயில்லை கல்பனா, உன் தோழியின் திருமண நாளின் நினைவாக இதை வைத்துக் கொள். மறக்காமல் கட்டாயம் நாளை காலை முகூர்த்தத்தில் இதைத்தான் உடுத்திக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டாள்.

கோவிட் நேரமானதால் திருமண மண்டபத்தில் கூட்டம் அதிகமில்லை. மிகக் குறைந்த ஆட்களே வந்திருந்தார்கள். வந்தவர்கள் மத்தியில் கல்பனா மிக அழகாகத் தனியாகத் தெரிந்தாள்.  மயில் கழுத்து வண்ணப் பட்டுப்புடவையில், ஷேம்பு போட்டுக் குளித்த தலைமுடியை, ஹேர்பின்கள் மட்டும் போட்டு அடக்கி, விரித்து விட்டிருந்தாள்.

நெற்றியில் சிறிய சிவப்புக் கலர் ஸ்டிக்கர் பொட்டு, காதில் முத்துக்கள் தொங்கிய சிறிய வளையங்கள். கழுத்திலே ஒரு சிறிய பதக்கம் வைத்த மெல்லிய தங்கச் சங்கிலி. ஒரு கையில் கறுப்பு லெதர் ஸ்ட்ராப் வைத்த சிறிய கறுப்பு நிற டயல் கொண்ட கைக் கடிகாரம். இன்னொரு கையில் வளையல்கள் கூட இல்லை. அவள் நீண்ட வெண்ணிறக் கைகள் தந்தம் போல் காட்சி அளித்தது. மொத்தத்தில் அவளைப் பார்த்தவர்கள் அவளையே பார்த்தபடி நின்றிருந்தனர்.

மாடியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த கௌதம், ஒரு கணம் அவள் அழகில் மயங்கி திகைத்து நின்றான்.

மிக நெருக்கமாக அருகில் வந்து காதருகில், “இதென்ன பொதிகையிலிருந்து பறந்து வந்த மயிலோ? இந்த மயில் பறக்காமல் என் அருகிலேயே இருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கிசுகிசுத்தான்.

மணமேடையில் சத்யாவின் அருகில் உட்காரந்திருந்த மாப்பிள்ளை கூட அய்யர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லாமல் ஒரு கணம் தன்னை மறந்து கல்பனாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சத்யா அவன் தொடையில் கிள்ள ‘ஆ’வென்று அலறிப் பிறகு சுயநினைவிற்கு வந்து மந்திரங்களைச் சொன்னான்.

விஜயா, “கல்பனா, நீ இப்போது போகும் போது நானும் உன்னுடன் வரட்டுமா? ஒரு சப்கலெக்டரின் அதிகாரங்களையும், அவருடைய வேலைகளையும் பார்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது” என்றாள்.

“கட்டாயம் வாருங்கள் அக்கா. நான் அனுபவமில்லாத புது ஐ.ஏ.எஸ். ஆபீசர் தானே. என் பதவிக்கு என்று தனியாக ஒன்றும் அதிகாரம் கிடையாது. மேலதிகாரிகளின் ஆணையை நிறைவேற்றுவது தான் என் வேலை” என்றாள் கல்பனா.

பேசிக் கொண்டே தன்னைச் சுற்றி ஒரு தரம் பார்த்தாள் கல்பனா. ஒரு பக்கம் ஒரு புகழ் பெற்ற ஆர்க்கெஸ்ட்ரா குழு உலகப்புகழ் பெற்ற பாடலான, ’ஒய் திஸ் கொல வெறி’ என்ற பாடலை நடனமாடிக் கொண்டே பாடிக் கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் பட்டிமன்றம் மிகுந்த ஆரவாரத்துடன் நடந்து கொண்டிருந்தது. பட்டிமன்றத்தின் தலைப்பு ‘இன்றைய கால கட்டத்தில் சிறந்தது திருமண வாழ்க்கையா அல்லது லிவிங்க் டு கெதர் எனப்படும் சேர்ந்து வாழும் வாழ்க்கையா?” என்பதுதான்.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணத்தில் போய் இப்படி ஒரு தலைப்பில் பேச்சுப் போட்டியா என்று மனதிற்குள் நொந்து கொண்டாள். இரு பக்கமும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இதில் அங்கங்கே டி.வி. வேறு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பணக்காரர் வீட்டுத் திருமணம் இல்லையா, பணம் தண்ணீராக செலவழிந்துக் கொண்டிருந்தது.

அப்போது கௌதம் கீழேயிருந்து மாடிக்கு கல்பனாவிடம் ஓடி வந்தான். “கல்பனா டி.வி.யில் செய்திகள் பார். அதில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஏதோ மதக்கலவரம் என்று காட்டுகிறார்கள். குடியாத்தம், ஆம்பூர் எல்லாம் உன் ஜூரிஸ்டிக்ஷனில் தானே வருகிறது?” என்றான் கவலையுடன்

 “ஆமாம்” என்றவள் டி.வி.யில் செய்திகளை உன்னிப்பாக கவனித்தாள். இதற்குள் சத்யாவின் கழுத்தில் கெட்டி மேளம் முழங்க மாப்பிள்ளை தாலியைக் கட்டி மூன்று முடிச்சு போட்டார்.

கல்பனா, கையில் உள்ள அட்சதையை மணமக்கள் மேல் தூவி விட்டு, அருகில் இருந்த விஜயாவிடம், “அக்கா, நான் உடனே போய் டியூட்டியில் சேர வேண்டும். போகிற வழியில் அம்மாவிற்குப் போன் செய்து விடுகிறேன்” என்றவள், சத்யாவிடமும் மாப்பிள்ளையிடமும் நிலமையை விளக்கிச் சொல்லி விட்டு அப்படியே கிளம்பினாள்.

 “கல்பனா… இந்த நேரத்தில் உனக்கு ரயிலும் கிடையாது, நேர் பஸ்ஸும் கிடையாது. நீ என் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பு, நான் என் காரில் கொண்டு வந்து விடுகிறேன்” என்றான் கௌதம்.

“நீங்கள் வேண்டாம் கௌதம். கல்யாணப் பெண்ணுக்கு அண்ணாவான உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். ஏதாவது டாக்ஸி ஏற்பாடு செய்து கொண்டு நானே போய் விடுவேன்” என்று கூறி விட்டு அவசரமாகக் கீழே இறங்கினாள்.

சத்யாவின் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். சத்யாவின் அப்பாவோ, “நீ அவ்வளவு தூரம் தனியாக டாக்ஸியில் போக வேண்டாம் கல்பனா. நீ இப்போது பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரி. எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்துவிட்டுத் திரும்பும் நீ, பத்திரமாகப் போய் டியூட்டியில் சேர வேண்டும். கௌதமும், டிரைவர் கண்ணனும் நம் காரில் கொண்டு போய் உன்னை விடுவார்கள்” என்றவர், “கௌதம், நீ கல்பனாவை கொண்டு போய் ஜாக்கிரதையாக நம் ஆடி காரில் டிராப் பண்ணிவிட்டு வந்து விடு” என்றார்.

அதற்காகவே காத்திருந்தவன் போல் வேகமாக்க் கீழே இறங்க வந்தான் கௌதம். கல்பனா காரில் ஏறி உட்கார்ந்ததும், சத்யாவின் அம்மா, தனித்தனியே இரண்டு ஹாட் பேக்குகளைக் கொண்டு வந்து காரில் வைத்தாள்.

“இவ்வளவு தூரம் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து விட்டு சாப்பிடாமல் போவதா? அதனால் உனக்கும் கௌதமிற்கும் இதில் கல்யாணச் சாப்பாடு. டிரைவருக்குத் தனியாகக் கட்டிக் கொடுத்து விட்டேன்” என்றாள்.

அவள் பின்னால் நின்றுக் கொண்டிருந்த கீதா சங்கீதா இருவரும், கல்பனாவை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த கல்பனா, “சாப்பாடெல்லாம் வேண்டாம் அம்மா, வழியில் எங்காவது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றாள்.

“ஹோட்டலில் நிறுத்தி சாப்பிடவதெற்கெல்லாம் நிறைய நேரம் ஆகும். ஆபீசிற்கு சீக்கிரம் போய் சேர வேண்டாமா? அம்மா… நீங்கள் சாப்பாடு கொடுங்கள், போகும் போதே காரில் சாப்பிட்டுக் கொள்கிறோம்” என்று கூறிவிட்டு கௌதம் ஹாட்பேக்கை வாங்கி பின் ஸீட்டில் வைத்து விட்டான்.

டிரைவர் பக்கத்தில் கௌதம் உட்கார்ந்து கொண்டான். கல்பனா பின் ஸீட்டில் உட்காரந்து கொண்டு அவள் அம்மாவிற்கும், தம்பி ரகுவிற்கும் போன் செய்து விஷயத்தைக் கூறி விட்டாள்.

பின்னர் அவளுடைய பர்ஸனல் கிளார்க்கான ஷீலாவிற்கும் போன் செய்தாள். அவள், “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மேடம். போலீஸ் இலாகாவும், ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஆட்களும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததால் இப்போது ஊரே கொஞ்சம் அமைதியாகி விட்டது. அதனால் இப்போது எந்த கலாட்டாவும் இல்லை. நீங்கள் இருந்து திருமணத்தைப் பார்த்து விட்டு நாளை வந்திருக்கலாம்” என்றாள்.

 “நோ நோ ஷீலா, நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன்” என்றாள் கல்பனா.

ஷீலா அவளுடன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு, “மேடம் உங்களுக்கு ஹோட்டலிலிருந்து ஏதாவது டிபன் வாங்கி வைக்கட்டுமா?” என்று கேட்டாள்.

 “அதெல்லாம் வேண்டாம் ஷீலா. மணப்பெண்ணின் அம்மா, கல்யாணச் சாப்பாடே கட்டிக் கொடுத்து விட்டார். ஆமாம், அந்த ஊரில் திடீரென்று மதக்கலவரம் ஏன் ஏற்பட்டது? மிகவும் அமைதியான ஊராயிற்றே” என்றாள் கல்பனா.

“எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடுதான். ஒரு முதலியார் பெண் ஒரு முஸ்லிம் பையனை மதம் மாறித் திருமணம் செய்து கொண்டாள். அந்தப் பெண்ணின் உறவினர் அந்தப் பெண்ணை ஆவணக் கொலை செய்து விட்டனர். பையன் அந்தப் பெண்ணை மிகவும் நேசித்திருக்கிறான். அவன் தன் சகாக்களோடு வந்து பெண்ணின் அண்ணாவைத் தீர்த்து விட்டான். இதுதான் கலவரம் நடக்கக் காரணம் மேடம்” என்றாள் ஷீலா.

நீண்ட பெருமூச்செறிந்தாள் கல்பனா. “காதல் ஒரு வழுக்கு மரம், அதில் ஏறி வெற்றிக் கொடி நாட்டுவதென்பது கடினம் தான்” என்றவள் தன் கைபேசியை அணைத்தாள். கௌதம் கேலியாக சிரித்தான். 

“ஏன் சிரிக்கிறீர்கள் டாக்டர்?” என்றாள் கல்பனா லேசான கோபத்துடன்.

“காதலுக்கு என்னென்ன டெபனிஷன்ஸ் வைத்திருக்கிறீர்கள். ஒரு நாள் தொடுவானம் என்றீர்கள், இப்போது வழுக்குமரம் என்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் மனதைக் குளிர வைத்த ஒரு தென்றல். உயிர்காக்கும் இனிமையான சுனை நீர்” என்று அவளப் பார்த்து கண்களைச் சிமிட்டியவன், “டிரைவர் அண்ணா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கார் டிரைவர் கண்ணனை வம்பிற்கு இழுத்தான் கௌதம்.

“போங்க தம்பி, இதெல்லாம் போய் என்னைக் கேட்டுக்கிட்டு?”  என்று கண்ணன், அநியாயத்திற்கு வெட்கப்பட்டான்.

“கல்பனா, அந்த ஊர் பேரென்ன? குடியேற்றம். மிகவும் அமைதியான ஊர் என்றாயே. நீ அரசாங்க ஜீப்பில், அதிகாரிகள் புடை சூழ போயிருப்பாய். மேலோட்டமாகப் பார்த்து விட்டு எப்படி நீ அந்த ஊர் அமைதியான ஊர் என்கிறாய்?” என்றான் கௌதம்.

“டாக்டர், அந்த ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் தெரியுமா? அவர்களில் பெரும்பாலோர் நெசவுத் தொழிலாளர்கள். ஏழையோ, பணக்காரனோ தங்கள் குலத்தொழிலை விட மாட்டார்கள்.  அந்த ஊரில் ஒரு பகுதி முழுவதும் இந்துக்கள், பெரும்பாலும் நெசவாளர்கள். மற்றொரு பகுதியில் முஸ்லிம்கள். வேற்றுமையில் ஒற்றுமை, யூனிட்டி இன் டைவர்சிட்டி. தனித்தனியே வாழ்ந்தாலும் மதம் சம்பந்தமான சண்டையோ, சச்சரவோ இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். இடையில் இந்த காதல் என்னும் சகுனிதான் மனிதர்களைப் பிரித்து வைக்கிறது” என்றாள் கல்பனா கோபமாக.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு சிக்கன் பிரியாணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    மன அழகு (சிறுகதை) – இரஜகை நிலவன்