in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கரத்தின் முக்கியமான இடத்தில் இருந்த அந்தப் பெண்கள் கல்லூரி, வழக்கம் போல் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்தது.

மதிய உணவு இடைவேளையில், மரங்கள் நிறைந்த அந்த கல்லூரியின் தோட்டத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள் சத்யாவும் கல்பனாவும். இருவரும் நெருங்கிய தோழிகள். குணத்தில் தான் இருவரும் ஒரே மாதிரி, வசதியில் இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருந்தார்கள்.

சத்யா, பணக்கார வசதியான ஒரு கிரிமினல் வக்கீலின் மகள்.  அவள் உடம்பிலும், உடையிலும் செல்வச் செழிப்பு தெரியும். நல்ல உயரமாகவும், அதற்கேற்ற கனமாகவும் இருப்பாள். மாநிறம் சுமாரான அழகு, ஆனால் ஒரு ராணியின் கம்பீரத் தோற்றம்.

கல்பனாவோ, மெல்லிய உயரமான உருவம். பாலும் சந்தனமும் கலந்த ஒரு நிறம். பெரிய கண்களும், நீண்ட மூடித் திறக்கும் இமைகளுமாகக் கொள்ளை அழகு.

ஒருமுறை பார்த்தால் நம்மை அறியாமலேயே மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. விண்ணிலிருந்து இறங்கி வந்த தேவதை போல் இருப்பாள். அவள் அழகிற்கு முன்னால் அவள் அணிந்திருந்த எளிய உடை மற்றவர்கள் கண்ணுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.

அவள் அழகிலும், பண்பான பேச்சினாலும் மயங்கி, உடன் படிக்கும் மாணவிகள் கூட அவளுடைய நட்பை விரும்புவர். பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் மாணவி. படிப்பிலும் எப்போதும் முதல் மாணவி.

சத்யா பி.ஏ. பொருளாதாரம். அவளுக்குத் தன் தந்தையைப் போலவே கறுப்புக் கோட் அணிந்து புகழ் பெற்ற வக்கீலாக ஆக வேண்டுமென்று ஆசை.

இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா ஆகியோருக்கு சத்யா ஒரே தங்கை. பெரிய அண்ணா கௌசிக் ஒரு ஆடிட்டர், அவருக்கு உலகில் உள்ள எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே அளக்கும் ஒரு பணக்கார கர்வமிக்கப் பெண்தான் மனைவி. எப்போதும் ஒரு நாற்பது பவுன் நகையுடன் தான் வலம் வருவாள்.

இரண்டாவது அண்ணா கௌதம் ஒரு டாக்டர், இன்னும் திருமணம்   ஆகவில்லை. சத்யாவின் அக்கா விஜயாவும் ஒரு வக்கீல் தான். படிக்கும் போது ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள். அப்பாவுடனும், தனியாகவும் கேஸ்களை எடுத்து நடத்துகிறாள். எல்லாவற்றிலும் மிகவும் நேர்மையாகவும், கண்டிப்பாகவும் இருப்பாள். அதனால் வீட்டில் அவளுக்கு ‘லேடி ஹிட்லர்’ என்று பெயர்.

இரண்டு வேறுபட்ட குடும்பச் சூழ்நிலையில் வாழ்பவர்கள், உயிர்த் தோழிகளாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யம். வழக்கமாக வாக்கிங் போகும் போது ஏதாவது தொணதொணவென்று பேசிக்கொண்டு வரும் கல்பனா, இன்று அமைதியாக வருவது சத்யாவிற்கு மிகவும் ஆச்சர்யம்.

“ஏய் சாட்டர் பாக்ஸ், உன் பேச்சும் சிரிப்பும் எங்கே போச்சு? ஏன் இந்த மௌன விரதம்?” என்றாள் சத்யா.

உஸ்’ஸென்று சலிப்பாக பெருமூச்சு விட்டாள் கல்பனா. “வீட்டில் அம்மாவிற்கும், தங்கை காஞ்சனாவிற்கும் ஒரே வாக்குவாதம். குடும்பச் சூழலைப் புரிந்து நடக்காமல் எல்லாவற்றிற்கும் காஞ்சனா சண்டை போடுகிறாள்”

“சின்னப்பெண் தானே விடு. எல்லோரும் உன்னைப் போல் சாமியாராகவே இருப்பார்களா? இப்படியும் ஒரு கேரக்டர் என்று ரசனையுடன் பார். எனக்குக் காஞ்சனா போல் ஒரு தங்கை இருந்தால் சண்டை போட எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? உன் தம்பி ரகு எப்படி? காஞ்சனாவுடன் சண்டையெல்லாம் போட மாட்டானா?”

“அவன் சாப்பிடும் போது தான் வீட்டில் இருப்பான். மற்றபடி எப்போதும் எதிர் வீட்டில் இருக்கும் அவன் நண்பன் இப்ராஹிம் வீட்டில் தான் வாசம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கல்பனாவின் கைபேசி அழைத்தது.

“என்னால் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை தான் வேலை செய்ய முடியும்” என்றவள், மேலும் கொஞ்ச நேரம் பேசி விட்டுத் தன் கைபேசியை அணைத்தாள்.

“கல்பனா… மும்முரமாக வேலைக்கு முயற்சிக்கிறாயா? இது கடைசி வருடமாயிற்றே. பாடம் நிறைய இருக்குமே, வேலை செய்து கொண்டு படிக்க முடியுமா?” என்றாள் சத்யா.

“முடிந்து தான் ஆக வேண்டும் சத்யா. அம்மாவின் பளு கொஞ்சம் குறையுமல்லவா?” என்று சொல்லிச் சிரித்தாள் கல்பனா. அவளுடைய அழகிய பல் வரிசையின் வெண்மையில் சத்யாவே மயங்கி நின்றாள்.

“கடவுள் ஏன் உனக்கு இத்தனை கஷ்டம் கொடுத்திருக்கிறார் தெரியுமா?”

“ஏனாம்?”

“கொள்ளை அழகாய் உன்னைப் படைத்திருக்கிறார். அழகைக் கொடுத்தக் கடவுள், உன் அழகில் அவரே மயங்கி செல்வத்தைக் கொடுக்க மறந்து விட்டார்” என்றவள் கலகலவென்று சிரித்தாள். அவள் அடித்த ஜோக்கில் கல்பனாவும் சேர்ந்து சிரித்தாள்.

கல்லூரி, லைப்ரரி எல்லாம் முடிந்து கல்பனா வீட்டிற்கு வர மிகவும் நேரமாகி விட்டது. வீட்டில் அம்மாவிற்கும், காஞ்சனாவிற்கும் சண்டை முடிந்து சமாதானப்படலம் நடந்துக் கொண்டிருந்தது.

அவர்கள் இருவரும் அப்படித்தான். எப்போது சண்டை போடுவார்கள், எப்போது சேருவார்கள் என்றே தெரியாது. எல்லாம் இல்லாத கொடுமைதான். இளம் வயதுப் பெண்ணான காஞ்சனாவிற்குப் பார்ப்பதெல்லாம் அடைந்து விட ஆசை.  எதுவும் வாங்க இயலாத வறுமை அம்மாவிற்கு, அதனால்தான் இந்த சண்டை.

டுத்த நாள் விடியற்காலை எழுந்து, முதல் நாள் நடந்த பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள் கல்பனா. எப்போதும் முதல் மதிப்பெண்களை மற்றவர்களுக்கு விட்டுத் தர மாட்டாள். வெளியே காரின் ஹார்ன் சப்தம் கேட்கவே, பக்கத்தில் இருந்த சன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். சத்யா தான் நின்றிருந்தாள்.

இவ்வளவு காலையில் இவள் ஏன் நம் வீட்டிற்கு வருகிறாள் என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்து அவளை வரவேற்றாள்.

“கல்பன… உடனே கிளம்பு. உனக்கு ஒரு பார்ட்-டைம் வேலை ஏற்பாடு செய்து விட்டு வந்திருக்கிறேன்” என்று அவசரப்படுத்தினாள் சத்யா.

“நீயா? நீ எப்படி?” ஆச்சர்யத்துடன் கேட்டாள் கல்பனா.

அப்போது கல்பனாவின் அம்மா கையில் இரண்டு கப் காபி எடுத்து வந்து ஒன்றை சத்யாவிடம் கொடுத்து, “சத்யா, உனக்குக் காபி என்றால் பிடிக்குமே!  இந்தா, உனக்காகவே கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே போட்டேன்” என்றாள்.

சத்யா அதையும் அவசரமாகக் குடித்து விட்டு, கல்பனாவையும் இழுத்துக் கொண்டு காரில் கிளம்பினாள்.

“ஏ சத்யா, இப்போதாவது சொல்லேன். என்ன வேலை? எங்கே வேலை?” என்று ஆவலுடன் கேட்டாள் கல்பனா.

“என் அக்கா விஜயாவிடம் தான் வேலை. அவளிடம் இத்தனை நாள் ’கிளார்க்’காக வேலை செய்தவர் வேலையை விட்டு நீங்கிவிட்டார். தவறு அவருடையதில்லை, என் அக்காதான் கஞ்சப் பிசினாறி. ரொம்ப நாளாக அவர் சம்பள உயர்வைக் கேட்டுக் கொண்டிருந்தார். இவள் கண்டுகொள்ளாமல் கல்லுளிமங்கன் போல் இருந்தாள். நீ கூட அவள் சொல்லும் சம்பளத்திற்கு அப்படியே ஒத்துக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறிக் கொண்டு வந்தாள்.

அட்வகேட் விஜயா அவள் தொழிலுக்கு ஏற்றாற் போல் கம்பீரமாக இருந்தாள்.   வெட்டு ஒன்று துண்டு இரண்டென்று பேசினாள்.

“சம்பளம் எவ்வளவு எதிர்ப்பார்க்கிறாய்?” என்றாள் நறுக்குத் தெரித்தாற் போல்.

“நான் இதுவரை எங்கும் வேலை செய்ததில்லை, அதனால் சம்பளம் நீங்கள் என் வேலையைப் பார்த்து விட்டு நிர்ணயம் செய்யுங்கள்” என கல்பனா கூற

“சரி… இப்போது ஐயாயிரம் ரூபாய் தருகிறேன், பிறகு உன் வேலையைப் பார்த்து யோசிக்கிறேன்” என்றாள் விஜயா.

அதற்கு ஒத்துக் கொண்டு தலையாட்டினாள் கல்பனா. ஆனால் சத்யா கோபமாக அவள் கையைப் பிடித்து எழுப்பினாள்.

“எந்திரிடி, அவள் ஐந்தாயிரம் ரூபாய் தருவாளாம் அதற்கு இந்த லூஸ் சரியென்று தலையாட்டுவாளாம். இங்கே காலையில் வந்து ஒரு மணி நேரம் வீட்டு வேலை செய்து விட்டுப் போகிறாளே அவளுக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளம். இங்கே வந்து சமைத்து விட்டுப் போகிறாளே, அவளுக்குப் பத்தாயிரம் தருகிறோம். உனக்குத் தகுந்த சம்பளம் கொடுத்தால் வேலையில் சேர், இல்லையென்றால் என் அப்பாவிடம் சொல்லி வேறு எங்காவது வேலை தருகிறேன்” என்று பொங்கினாள்.

“கொஞ்சம் பொறு சத்யா. எனக்கு இப்போது இந்த வேலையும் முக்கியம், இதில் கிடைக்கும் சம்பளமும் முக்கியம். லாயர் மேடம், நான் உங்களை அக்கா என்று கூப்பிடலாமா? நீங்கள் முதலில் வேலையைச் சொல்லுங்கள், பிறகு மாதக் கடைசியில் சம்பளம் நிர்ணயம் செய்யுங்கள்” என்றாள் கல்பனா.

“ஸேம் சைட் கோல் போடுகிறாள் பார், இடியட். எக்கேடும் கெட்டு ஒழி” என்றாள் சத்யா கோபமாய்.

“வெரி குட் கல்பனா” என்ற விஜயா, “நாளையிலிருந்து நேரத்தோடு வேலைக்கு வந்து விடு. நான் இங்கேயிருந்தாலும், கோர்ட்டில் இருந்தாலும் நீ உன் வேலையைச் செய்ய வேண்டும். எல்லாக் கோப்புகளும் கண்டபடி கிடக்கும். முதலில் கோப்புகளை வருடக் கணக்கின்படியோ, கேஸின் தன்மைப்படியோ அடுக்கி விடு. ஒவ்வொரு கோப்பின் மேலும் அதன் ஸிநாப்ஸிஸும், காலமும் குறிப்பிட்டு ஒரு துண்டுச்சீட்டு ஒட்டி விடு. நான் கேட்கும் கோப்பை உடனே எடுத்துத் தர வேண்டும். அந்த நேரத்தில் நீ பைலைத் தேடினால் எனக்குப் பயங்கரக் கோபம் வரும். வேலையைத் தொடங்கினால் உனக்கே எல்லாம் புரியும்” என்ற விஜயா ‘போகலாம்’ என்று தலையசைத்தாள் .

டுத்த நாள், கல்லூரி முடிந்தவுடன் மூன்று மணிக்கெல்லாம் சத்யாவின் வீட்டில் இருந்தாள் கல்பனா.

பிளைவுட்டினால் தன் அறையை இரண்டாகத் தடுத்திருந்த விஜயா, ஒரு பாதியை கல்பனாவிற்கென்று ஒதுக்கியிருந்தாள்.  அதில் கல்பனாவிற்கென்று ஒரு கம்ப்யூட்டரும், சுழலும் நாற்காலியும், ஒரு கம்ப்யூட்டர் டேபிளும் வைத்துக் கொடுத்திருந்தாள். ஒரு சைட் ரேக்கில் நிறைய கோப்புகளும் சட்டப்புத்தகங்களும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது ஷூ காலுடன் ஒரு இளைஞன் உள்ளே வந்தான். தன் வெண்ணிற ஓவர் கோட்டைத் தோளில் போட்டுக் கொண்டு, கலைந்த தலையுடன், தாடியும் மீசையுமாக, ஏதோ ஒரு வாடையுடன் உள்ளே வந்தான். அது சிகரெட் நாற்றமா இல்லை ஏதாவது விஸ்கியின் நாற்றமா என்று கல்பனாவிற்குப் புரியவில்லை. ஆனால் அந்த நாற்றம் கல்பனாவின் முகத்தைச் சுளிக்க வைத்தது. அவன் விஜயாவின் எதிரில் வந்து அமர்ந்தான்.

“என்னடா கௌதம் இப்படி இருக்கிறாயே, யாராவது உன்னைப் பார்த்தால் ஒரு டாக்டர் என்று சொல்வார்களா?” என்றாள் விஜயா. அவள் முகத்தில் துயரமும், குரலில் கோபமும் கொந்தளித்தன.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்கண்ட தெய்வம் (சிறுகதை) – சுஶ்ரீ

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 14) – முகில் தினகரன், கோவை