எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பிரசவ வார்டின் முன் பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கத்தல்களும், களேபரங்களும் சீஃப் டாக்டர் நந்தினி வர, சட்டென்று அடங்கிப் போயின.
“என்ன… என்ன.. இங்க சத்தம்?… இதென்ன பிரசவ ஆஸ்பத்திரியா?… இல்லை மீன் மார்க்கெட்டா?” குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்ய, சற்று தைரியமான ஒரு நர்ஸ் மட்டும் முன் வந்து பதில் சொன்னாள்.
“டாக்டர்… ஒரு சிக்கலான பிரசவ கேஸ் அட்மிட்டாகியிருக்கு!…. இவங்கெல்லாம் அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க”.
“இருக்கட்டும்!… அதுக்காக சத்தம் எதுக்கு போடணும்?” டாக்டர் அந்தக் கூட்டத்தைப் பார்த்து முறைத்தபடி கேட்டார்.
“இல்லை டாக்டர்… அந்தப் பொண்ணு… சொன்ன பேச்சைக் கேட்காம… பிரெக்னண்ட்டா இருப்பதை மறந்திட்டு… இந்த நிலைல டூவீலர் ஒட்டிப் பழகப் போய்… கீழே விழுந்திருக்கு!… வயித்துல எக்கச்சக்கமா அடிபட்டிருக்கு!… அதான் சொந்தக்காரங்க எல்லோரும்… அதோட புருஷன் உட்பட அந்தப் பொண்ணை திட்டி தீர்த்திட்டிருக்காங்க!”.
“வாட் நான்சென்ஸ்?… எதுக்கு அந்தப் பொண்ணை திட்டணும்?… அவளை திட்டிட்டா எல்லாம் சரியாயிடுமா?… இந்த கூட்டத்தில் அந்தப் பொண்ணோட புருஷன் யாரு?… காட்டு…. நான் கேட்கிறேன்!” சீஃப் டாக்டர் நந்தினி கடுப்பாகிக் கேட்க, சற்று மாநிறமாய், அகன்ற முகத்துடன், குள்ளமாய், குண்டாய் இருந்த ஒருவனை நர்ஸ் முன்னுக்கு அழைத்தான்.
வந்தவனிடம் பேச சீஃப் டாக்டர் நந்தினி வாயெடுக்கும் முன் அவனே முந்திக் கொண்டு. “த பாரு டாக்டர்!… நானும் எங்க ஆத்தாவும் இந்தச் சனியன் புடிச்சவங்ககிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னோம்… “வாயும்… வயிறுமா இருக்கே… வண்டியை எடுக்காதே”ன்னு… கேட்டாளா?… கேட்கலையே?… இப்ப வந்திடுச்சில்ல கேடு?… அதோட வயிற்றில் இருக்கிறது எங்க வம்சத்தோட வாரிசு!…. அதுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருக்கட்டும்… அவளை… அவளை அப்புறம் கவனிச்சிக்கிறோம்”.
“எங்க குலவிளக்கு மட்டும் உசுரோட பொறக்கல… இந்தச் சிறுக்கி மகளுக்கு நானே சங்கு ஊதி… நானே சடங்கு பண்ணி… நானே கொள்ளி போட்டுடுவேன்” மாமியார்க்காரி போல் தெரிந்த ஒருத்தி சாமியாடினாள்..
டென்ஷனாகி போன சீஃப் டாக்டர் நந்தினி, “இங்க பாருங்க… இதெல்லாம் எதிர்பாராமல் நடக்கிற விபத்துக்கள்!…. யாரும் வேணும்னே எதுவும் செய்யறதில்லை”. என்று சொல்ல,
“நீ என்ன வேணா சொல்லுங்க டாக்டரம்மா… எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை இங்க நடக்கிறதே வேற!”.
சொல்லித் திருத்த முடியாத இந்த ஜென்மங்களிடம் தொடர்ந்து பேசுவதில் சிறிதும் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த சீஃப் டாக்டர் பிரசவ அறையை நோக்கி வேக வேகமாக நடக்க, கத்தல்களும், களேபரங்களும் மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தன.
பிரசவ அறை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் கடுமையாகப் போராடிய சீஃப் டாக்டர் நந்தினியால் பெரிய உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
“எங்க குலவிளக்கு மட்டும் உசுரோட பொறக்கல… இந்தச் சிறுக்கி மகளுக்கு நானே சங்கு ஊதி, நானே சடங்கு செஞ்சு… நானே கொள்ளி போட்டுடுவேன்” என்ற மாமியாரின் மிரட்டலும்.
“எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை… இங்க நடக்கிறதே வேற” என்ற புருஷனின் அதட்டலும், சீப் டாக்டர் நந்தினியின் காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, குழம்பிப் போனார் டாக்டர்.
“இப்ப என்ன செய்யறது?… எப்படிச் சமாளிக்கறது?… இந்தச் சூழ்நிலையில் வெளியே நிற்கிற கூட்டத்துக்கு தகவல் தெரிஞ்சுது… அவ்வளவுதான்… இந்தப் பொண்ணோட கதி… அதோ கதி தான்”.
“டாக்டர்…. இப்ப என்ன பண்றது?” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா கேட்க.
நெற்றியை தடவிக் கொண்டு யோசித்த சீஃப் டாக்டர் நந்தினி திடீரென ஒரு முடிவுக்கு வந்தவராய், “கரெக்ட்!… அதுதான் ஒரே வழி” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
“டாக்டர்….?”.
“மிஸ் விமலா… ஆறாவது வார்டுல இன்னிக்கு காலைல ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆச்சல்ல?… பெண் குழந்தை பிறந்ததே?”.
“ஆமாம் டாக்டர்”.
“அந்தப் பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்தாச்சா.?”
“இல்ல டாக்டர்… இன்னும் தெளியலை” என்ற அசிஸ்டெண்ட் சர்ஜன், “ஏன் டாக்டர்?… எதுக்குக் கேக்குறீங்க?”.
“அந்த பொண்ணு நேத்திக்கு என்கிட்ட ஒரு வேண்டுகோள் வெச்சுது”.
“வேண்டுகோளா?… என்ன வேண்டுகோள் டாக்டர்?”.
“ஏற்கனவே அவளுக்கு மூணு பெண் குழந்தைகளாம்!…. இப்ப நாலாவதா பிறக்கப் போறதும் பெண்ணாக இருந்துட்டா… மயக்கம் தெளியறதுக்கு முன்னாடியே டாக்டரான நான் அதைக் கொன்னுடணுமாம்!… இல்லேன்னா எப்படியும் வீட்டுக்குப் போனதும் அவ புருஷனும் மாமியாரும் அந்தக் காரியத்தைத்தான் செய்யப் போறாங்களாம்!…. ஒரு டாக்டரான நான் உயிர்களைக் காப்பாற்ற மட்டுமே செய்வேன் அதை அழிக்க முற்பட மாட்டேன்னு… பாவம் அந்த பொண்ணுக்கு தெரியல!”.
“டாக்டர்…. நீங்க என்ன சொல்ல வர்றீங்க?ன்னு புரியலை?” அசிஸ்டெண்ட் சர்ஜன் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்க.
“அந்தப் பெண் மயக்கம் தெளியறதுக்கு முன்னாடி அந்த குழந்தையை எடுத்துட்டு வந்து இங்க போட்டுடு!…. அதே மாதிரி இறந்து பிறந்த இந்தக் குழந்தையைக் கொண்டு போய் அங்க போட்டுடு”.
“டாக்டர்….!”.
“யோசிக்கவே வேண்டாம்!…. எப்படியும் அந்தப் பெண் குழந்தை வீட்டுக்கு போனதும் கள்ளிப்பாலுக்கு இரையாகத்தான் போகுது… எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டாத அந்த ஜென்மங்கள்கிட்டயிருந்து இந்தப் பெண் குழந்தையை காப்பாற்ற ஒரே வழி இதுதான்!”.
“டாக்டர் நீங்க சொல்றதெல்லாம் சரிதான்!…. ஆனாலும்…. இது”.
“மிஸ் விமலா அப்படியே இந்த பக்கமும் கொஞ்சம் பாருங்க குழந்தை மட்டும் செத்துப் பிறக்கட்டும் உன்னைய கவனிச்சிக்கிறேன்னு கட்டினவனும் அவனோட உறவுக்காரங்களும் குமரி கூட்டிருக்கிற இந்த நிலையில நாம போய் குழந்தை இறந்து தான் பிறந்ததுன்னு சொன்னா என்ன நடக்கும் யோசிச்சு பாரு”
“ஐயோ… டாக்டர் அந்தக் கும்பல்… அந்தப் பொண்ணை இங்கேயே வெச்சு கொன்னுடுவாங்க!” சொல்லும் போதே அசிஸ்டன்ட் சர்ஜன் விமலாவின் உடல் லேசாக நடுங்கியது.
“புரியுதா… இப்பப் புரியுதா… நான் ஏன் அப்படி செய்யச் சொன்னேன்!னு”.
“இருந்தாலும்…. டாக்டர்…. இது தப்பில்லையா?”.
“விமலா… ஆண்டவன் சில சமயம் சில தவறுகளை செய்து விடுகிறான்!… அதாவது வேண்டாம்ன்னு நினைக்கிறவங்களுக்கே திரும்பத் திரும்ப நிறைய குழந்தைப் பேற்றைக் கொடுக்கிறான்… அதே சமயம் வேணும்னு ஆவலாய் இருப்பவங்களுக்கு… இல்லாமப் பண்ணிடறான்!… அதான் ஆண்டவனோட இந்தச் சிறிய தவறை நான் திருத்தறேன்!…. அவ்வளவுதான்!… நான் செய்கிற இந்த செயலினாலே ஒரு குழந்தை இந்த உலகத்துல உசுரோட இருக்கும்!… ஒரு தாய் இந்த உலகத்துல சந்தோஷமா இருப்பா!… அது போதும்மா எனக்கு”.
அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா பதிலேதும் பேசாது அமைதி காக்க, “என்னடா இது?… அதிகப் பிரசங்கித்தனமா… ஆண்டவனையே திருத்தறேன்!னு சொல்றாளேன்னு நீ நினைக்கிறது எனக்குப் புரியுது!…. அதே நேரம் நீயும் இன்னொண்ணையும் புரிஞ்சுக்கோ… டாக்டர்களும் ஆண்டவனோட பிரதிநிதிகள்தான்… அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு!”.
நெகிழ்ந்து போய் சீஃப் டாக்டர் நந்தினியைக் கையெடுத்து கும்பிட்ட அந்த அசிஸ்டெண்ட் சர்ஜன், அவர் இட்ட கட்டளையை படு நாசூக்காக யாருக்கும் சிறிதும் சந்தேகம் ஏற்படாத வகையில் செய்து முடித்தாள்.
ஆறாவது வார்டில், “இன்னாது?… பொட்டக் கொழந்தையா?… செத்துப் பொறந்துச்சா?.. ரொம்ப சந்தோசம்!… நமக்கு வேலை மிச்சம்” கல் மனசுக் கணவன் கரகரத்த குரலில் சொல்ல, அவன் தாய் முக மலர்ச்சியுடன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள்.
அதே நேரம் பிரசவ வார்டில்.
“எப்படியோ டாக்டர்… எங்க வம்ச வாரிசை உசுரோட பொறக்க வெச்சு எங்க கைல கொடுத்துட்டீங்க!… நீங்க நல்லா இருக்கணும்!” புருஷங்காரன் சீஃப் டாக்டர் நந்தினியைக் கும்பிட.
அவன் அம்மாக்காரி மருமகளின் தலையை தடவிக் கொடுத்தபடி சொன்னாள். “பின்னே?… எப்பேர்ப்பட்ட வம்சத்தில் வந்து உதிச்சிருக்கிற குழந்தை இது?… இந்த மாதிரியான சின்ன சின்ன விபத்துக்கெல்லாம் செத்திடுமா என்ன?”.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings