in ,

திரும்ப வா… திருந்தி வா! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

முகில் தினகரன் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      கந்தசாமிக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்படும் போது அவன் ராமு சலூனில் முகச்சவரம் செய்து கொண்டிருந்தான். 

துணைச்செயலாளர் துரைக்கண்ணுதான் அவனைத் தேடி வந்து அதைச் சொன்னான்.  வரும் போதே மூச்சு வாங்கிக் கொண்டு பதட்டமாய்த்தான் வந்தான். “அண்ணே… நம்ம தலைவரைக் கைது செய்திட்டாங்களாம்!… ஒரு மணி நேரமாச்சாம்!… இப்பத்தான் மாவட்ட செயலாளர் ஆள் விட்டுச் சொல்லியனுப்பினார்!… அவருக்கும் போன்லதான் தகவல் வந்திச்சாம்!…” 

      “என்னது?… நம்ம தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டானுகளா?… எதுக்காம்?” பாதி சேவிங்கிலேயே எழுந்தான்.

      “ஏதோ ஊழல் கேஸாம்… அதுல தலைவர் சம்மந்தப்பட்டிருக்கார் என்பதற்கான ஆதாரங்கள் ஸ்ட்ராங்கா கிடைச்சிருக்காம்!… அதனால அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்!..,. ஹூம்… எல்லாம் பொய்யண்ணே… எதிர்க்கட்சிக்காரனுகளோட சதிண்ணே” எல்லாம் தெரிந்த மாதிரி பேசினான் துரைக்கண்ணு.

      “சரி… மாவட்டத் தலைவர் வேலு என்ன சொன்னார்?” முகத்திலிருந்த சோப்பை ராமு கொடுத்த அழுக்குத் துணியால் துடைத்தபடியே கேட்டான் கந்தசாமி.

      “உடனடியா கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கச் சொன்னார்!… ஆர்ப்பாட்டம்ன்னா வேறென்ன?…… நம்ம பகுதில நாம வழக்கமாய்ச் செய்யற ஒரே காரியம்…. ரோட்டுக்குக் குறுக்கால மரங்களை வெட்டிச் சாய்க்கறதுதான்!… உடனே ஆளுங்களைத் திரட்டிட்டுப் போய்…ஆரம்பிச்சிட வேண்டியதுதான்” துரைக்கண்ணு துடித்தான்.

      “டேய்… .நாம ரெண்டு பேரும் மட்டும் பேசி… முடிவெடுக்கற காரியமல்ல இது!… மொதல்ல கட்சிக் கூட்டத்தைக் கூட்டி… எல்லோருக்கும் கைது தகவலைச் சொல்லணும்!… அப்புறமா… எல்லோரும் அவரவர் ஏரியாவுல ஆர்ப்பாட்டத்தைப் பண்ணனும்!.” வார்டு மெம்பரான கந்தசாமி தெளிவாய்ச் சொல்ல,

      “அப்ப காலைல கூட்டத்தைப் போட்டு… முடிவு பண்ணிட்டு… மதியத்துக்கு மேலே மரங்களை வெட்டிச் சாய்க்கலாம்!… இந்த தடவை கொறைஞ்சது அம்பது மரங்களையாவது வெட்டிச் சாய்ச்சிடணும்!” துரைக்கண்ணு சொன்னான்.

      ஜீவராசிகளின் ஜீவன் உய்ய தான் வழங்கிய கொடையை அழிக்கத் துடித்தவனைப் பார்த்து இயற்கை புன்முறுவல் பூத்தது.

      காலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், வழக்கம் போல் மரம் வெட்டும் போராட்டமே நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊருக்கு வெளியே இருக்கும் தோட்டத்தில் வைத்து பட்டைச்சாராயத்தை வயிற்றில் நிரப்பிக் கொண்டு, மரம் வெட்டிக்கும்பல் கோடாரியும் கையுமாய் அந்த ஊருக்குள் வரும் பிரதான சாலையை நோக்கி நடந்தது.

அந்தப் பிரதான சாலையை அடைந்த அந்த கும்பல் அங்கு கண்ட காட்சியில் அப்படியே உறைந்து போய் நின்றது.

“இதென்னடா இது?… ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு தொட்டில் தொங்குது!” 

“வெறும் தொட்டிலா?… இல்லை உள்ளார குழந்தை இருக்கா?” கேட்டவாறே தொட்டிலை நோக்கி எட்டு வைத்த ஒருவனை, தொட்டிலுக்குள்ளிருந்து வீறிட்ட குழந்தையின் அழுகுரல் நிறுத்தியது.

“எல்லாத் தொட்டிலையும் அவிழ்த்துக் கீழே போட்டுட்டு மரங்களை வெட்டுங்கடா” யாரோ ஒருவன் சாராய வீரியத்தில் ஆவேசமாய்க் கத்த,

“எவனாச்சும் தொட்டில் மேலே கையை வெச்சீங்க?…. அப்புறம் நடக்கறதே வேற”  மரத்தின் பின்னாலிருந்து பச்சையம்மாள் வெளியில் வர, அவளைத் தொடர்ந்து ஒவ்வொரு மரத்தின் பின்னாலிருந்தும் ஒவ்வொரு பெண்ணாய் வெளியில் வந்து தொட்டிலுக்கு  காவலாய் நின்றனர்.

“ஏய்… பச்சையம்மா… நீ இங்க எதுக்கடி வந்தே?… தொட்டிலுக்குள்ளார இருக்கறது நம்ம குழந்தையாடி?” வார்டு மெம்பர் கந்தசாமி பச்சையம்மாளைப் பார்த்துக் கேட்டான்.

“நீ எதுக்குய்யா வந்திருக்கே?…” திருப்பிக் கேட்டாள்.

சகாக்களின் முன்னிலையில் தன்னை அவள் அப்படிக் கேட்டதில் தர்மசங்கடமாகிப் போன கந்தசாமி, “ஏய்.. தலைவரை அரெஸ்ட்டு பண்ணிட்டாங்கடி… அதுக்குப் போராட்டம் பண்ணத்தான் வந்திருக்கோம்” என்றான்.

“சரி… போராட்டம் பண்றதுக்கு கோடாரி எதுக்கு?”

“என்னடி புரியாதவளாயிருக்கே?… மரங்களை வெட்டி ரோட்டுக்கு குறுக்கால போடணுமல்ல?” சாராய போதையில் வார்த்தைகள் தள்ளாடிக் கொண்டு வந்தன.

“ஏன்?… மரங்கள் என்ன பாவம் பண்ணிச்சுக?” பச்சையம்மாள் புன்னகையோடு கேட்டாள்.

“த பாரு… நீ ரொம்ப அதிகமா கேள்வி கேட்கறே?… அப்புறம் பொண்டாட்டின்னு கூடப் பார்க்காம….”

“ச்சூ… சும்மா கத்தாதய்யா!… என்னமோ இவங்க தலைவன் புரட்சி பண்ணிக் கைதான மாதிரி பேச வந்துட்டானுக….. கேவலம் ஊழல் பண்ணிக் கைதாயிருக்கான்.. அதுக்குப் போயி போராட்டமாம்… ஆர்ப்பாட்டமாம்” சற்றும் பயமில்லாமல் பேசினாள் பச்சையம்மாள்.

அதைக் கண்டு கொதித்துப் போன கந்தசாமி, “ஏய்… பச்சையம்மா எங்க தலைவரைப் பத்தி உன்னை  மாதிரி அடிமைப் பொம்பளைகளுக்கு என்ன தெரியும்?” என்றான்.

இடையில் புகுந்த இன்னொரு பெண், “தெரியாதுய்யா… உங்க தலைவனைப் பத்தி எங்களுக்குத் தெரியாது!…. ஆனா நீங்க வெட்டிச் சாய்க்கணும்னு வரிஞ்சு கட்டிட்டு வந்து நிக்கறீங்களே?…. இந்த மரங்களைப் பத்தி நல்லாத் தெரியும்”

“ஹே…. நான் தலைவரைப் பத்திப் பேசறேன்…. இதுக மரங்களைப் பத்திப் பேசுதுக” சொல்லி விட்டு அவன் நக்கலாய்ச் சிரிக்க,

“சும்மா சிரிக்காதே… அந்த மரத்தை விட உங்க தலைவன் எந்த விதத்திலும் உசத்தி இல்லை… அதை ஞாபகத்துல வெச்சுக்கோ”

“ஏய்ய்….”அவன் விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கத்தினான்.

“இந்த மரம் வேகாத வெயில்ல வெந்து போய் வர்றவங்களுக்கு இளைப்பாற இடங் குடுக்குது… நெழல் குடுக்குது!… காக்கா குருவிங்க கூடு கட்டி வாழ உதவுது!… உங்க தலைவனோ… நாம குடியிருக்கற பொறம்போக்கு குடிசைப்பகுதி நெலத்தை தன் பேருக்கு பட்டா பண்ணிக்கிட்டு… நம்ம கிட்டேயே தண்டம் வசூலிக்கற ஆளு”

இன்னொருத்தி குறுக்கே புகுந்து, “அதுமட்டுமா?… குளுகுளுன்னு இதமா காத்து குடுக்குது… உங்க தலைவன் பக்கத்துல வந்தாலே சீமச்சரக்கு நாற்றமடிக்குது… த்தூ” என்றாள்.

“ஏய்… என்னா விட்டா பேசிட்டே போறீங்க?” யாரோ ஒருவன் கூவ,

“அடச்சீ… அடங்குடா!…”என்று அவனை அடக்கிய பச்சையம்மாள், “த பாருங்கடா… இந்த நாட்டுல அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா மழை எட்டிப் பார்க்குதுன்னா… அது இந்த மட்டிலுமாவது மரங்கள் இருப்பதினாலதான்!… உங்க தலைவன் மாதிரி அக்கிரமம் பிடிச்ச ஆளுங்க இருந்தா நாட்டுக்கு வர்ற மழை கூட வராது!..”என்றாள்.

இதுவரையில் அமைதியாய் நின்று நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீச்சரம்மா, “அய்யா… நாம மூச்சு விடறதுக்கான பிராணவாயுவைக் குடுக்கறதே இந்த மரங்கள்தான்!… ஆனா… அந்தப் பிராணவாயுவைக் கெடுத்துக்கிட்டிருக்கறது… உங்க தலைவனோட கெமிக்கல் ஃபேக்டரில இருந்து வர்ற விஷவாயுதான்!… இந்த ஊர்ல பத்துப் பதினஞ்சு கொழந்தைக… கை சூம்பி… கால் சூம்பிப் பொறந்திருக்குன்னா… அதுக்கு காரணமே உங்க தலைவன்தான்”

கோடாரிக் கூட்டம் மறுபேச்சு எதுவும் பேசாமல் அமைதி காத்து நிற்க, அவர்கள் மனதில் தங்கள் பேச்சு மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது, என்பதைப் புரிந்து கொண்ட பச்சையம்மாள்,

“யோசிச்சுப் பாருங்க… போன வருஷம் நீங்க இதே மாதிரி மரம் வெட்டிப் போராட்டம் பண்ணினப்ப ஒரு பெரிய மரம் மேலே விழுந்து செத்துப் போனானே உங்க கட்சித் தொண்டன்?… அவன் குடும்பத்துக்கு  “அம்பதாயிரம் குடுக்கறேன்!”னு சொல்லிக் கைதட்டல் வாங்கிட்டுப் போனானே உங்க தலைவன் குடுத்தானா?… குடுத்தானா?… .ம்ஹூம் இதுவரைக்கும் குடுக்கலை!…அவன் பொண்டாட்டி எப்படிக் குழந்தைகளைக் காப்பாத்திட்டிருக்கா தெரியுமா?… காட்டுல சுள்ளி பொறுக்கி வித்து சம்பாதிக்கறா… தென்னைமர ஓலைகளிலிருந்து குச்சியெடுத்து விளக்குமாறு செஞ்சு சம்பாதிக்கறா… அவளுக்கு இன்னிக்கு சோறு போடறது…மரங்கள்தான்!… உங்க தலைவனில்லை”

“த பாருங்கப்பா… நீங்க வெட்டிப் போட்டாலும்… அதுக விறகாகவோ… இல்லை மேஜை நாற்காலியாகவோ மாறி உங்களுக்குத்தான் உபயோகப்படும்!… உங்க தலைவனை வெட்டிப் போட்டுப் பாருங்க அடுத்தநாளே நாறிப் போயிடும்!”

கோடாரியோடு வந்த கூட்டம் ஆவேசம் அடங்கிப் பின் வாங்கியது.

“சரி போகலாம் வாங்கடி… இதுக்கு மேலேயும் இவனுக மரத்தை வெட்டினாங்கன்னா… இவனுகளைத் திருத்த அந்த ஆண்டவன்தான் வரணும்”

தொட்டில்களை அவிழ்த்துக் கொண்டு, பெண்கள் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.

மறுநாள்,

மரங்கள் வெட்டப்படாத சாலை அமைதியான போக்குவரத்தோடு இயல்பாயிருக்க, கட்சித்தலைமையகத்தில் பல பெருந்தலைகள் கொதித்துக் கொண்டிருந்தன. “என்னடா ஆச்சு அந்த மரமண்டைகளுக்கு?… போராட்டமே பண்ணலையாமே?”

அந்த மரமண்டைகள் மரங்களைப் பற்றியும், தங்கள் தலைவனைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொண்ட விஷயம் அவர்களுக்குத் தெரியாது.

முகில் தினகரன் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முள் பாதை (அத்தியாயம் 8) – பாலாஜி ராம்

    முள் பாதை (அத்தியாயம் 9) – பாலாஜி ராம்