இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“நான் எந்தளவு உங்கள நம்புனேன்? இந்த உலகத்திலேயே முதன்முதலா உங்களத்தான அவ்வளவு நேசிச்சேன்? என் உலகமே நீங்கனு தான நெனச்சிட்டிருந்தேன்! என்ன இப்படி ஏமாத்திட்டிங்களே” என்று கதறினாள் பவித்ரா.
“ஆமா அதுக்கென்ன இப்போ?” என்றான் மாதேஷ்
“அதுக்கென்ன…வா? அவ என்ன ஏமாத்திட்டா, துரோகம் பண்ணிட்டா. ஒரு நெஜமான அன்புக்காக ஏங்கினேன், நாலு வருஷமா கடவுள்ட்ட வேண்டினேன், அதனால தான் உன்ன எனக்குத் தந்தாருன்னு சொன்னிங்களே? அவளுக்கு உங்க மேல லவ்வே இல்லன்னு சொன்னிங்களே?” என்றாள் பவித்ரா.
“ஆமா. ஆனா, நா…ன் அவள லவ் பண்ணித்தான கல்யாணம் பண்ணினேன்?” என்றான் மாதேஷ்
பவித்ராவின் கோபம் தலைக்கேறியது.
“அப்போ எதுக்கு எங்கிட்ட வந்தீங்க?“
“தெரியாம வந்துட்டேன். அதுக்கென்ன இப்ப? என்ன பழி வாங்கப் போறீயா?“
“எங்கிட்ட இருக்க ஃபோட்டோஸெல்லாம் உன் பொண்டாட்டி பானுவுக்கு அனுப்பினா என்னாகும் தெரியும்ல?“
“ஒண்ணும் ஆகாது. அவள சமாளிக்கத் தெரியாதா எனக்கு? அவ உன்ன மாதிரி செண்டிமெண்ட்டல் ஃபூல் இல்ல. அவ ரொம்ப ஷார்ப். என்ன விட்டுப் போய், இந்த பணம், அந்தஸ்து இதெல்லாம் இழக்க விரும்ப மாட்டா“
அடுத்த நாள் கோபத்துடனும், பதற்றத்துடனும் அலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டு இவனிடம் ஓடி வருகிறாள், மாதேஷின் மனைவி பானு.
“என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க? யாரிவ? அவ தோள்ல கை போட்டுக்கிட்டும், மடியில படுத்துக்கிட்டும் ஃபோட்டோக்கு போஸ் கொடுக்கறீங்க?“ என்று கத்துகிறாள்.
ஒரு நொடி திகைத்தாலும், சமாளித்துக் கொண்டு, “சீச்சீ நான் அப்டி பண்ணுவேனா? எதாவது ஃபோட்டோஷாப்பா இருக்கும். என் தேவத நீ உன்ன விட எனக்கு யாருடீ வேணும்?“ என்று கேட்டுக் கொண்டே, அவளை அணைக்க நெருங்குகிறான் மாதேஷ்.
“சீ… தொடாதீங்க. என்ன ஏதுன்னே பாக்காம, கேக்காம ஃபோட்டோஷாப்புங்கறீங்கள்ல. அப்போ, இந்த ஃபோட்டோஸ் இருக்குங்கறது உங்களுக்கு முதல்லயே தெரியுந்தான? நீங்க பண்ணின வேல, நம்ம கொழந்தைய ஸ்கூல்லருந்து கடத்திட்டுப் போய்ட்டா அவ“ என்கிறாள் அழுதவாறே.
“என்னடி சொல்ற?“ என்றான் திகைத்தவாறே.
“ஆமா. நான் அவள ஸ்கூல்லருந்து கூப்பிடப் போறப்ப, எனக்கு முன்னாடியே ஒருத்தி அவள கார்ல ஏத்திட்டுப் போறத பாத்தேன். கொஞ்ச தூரம் கத்திக்கிட்டே பின்னாடி போனேன். ஆனா, என்னால அவளப் பிடிக்க முடியல“ என்றாள் அவள் மூச்சு வாங்க.
“சரி பொறுமையா இரு. அவதான் கடத்திட்டுப் போயிருக்கான்னு தெரியுதில்ல? எங்க போய்டுவா? பிடிச்சிடலாம். ஃபோட்டோஸ வேற அனுப்பிச்சிருக்கால்ல. போலீஸ்ல மாட்டிப்பாள்ள?“
“ஆமா, அவ போலீஸ்ல மாட்டிக்கறது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி இந்த ஃபோட்டோஸெல்லாம் போட்டு உங்க கதையை நியூஸ் பேப்பர்லயும், டி.வி.லயும் போட்டு கிழிப்பானே நம்ம குடும்ப மானம் கப்பல்ல இல்ல, காத்துல பறக்கும்“ என்றாள் பானு.
“சரிடி, கொஞ்சம் அமைதியா இரு. முதல்ல கொழந்தைய கூட்டிட்டு வர்றேன்“ என்றவாறே கார் சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் மாதேஷ்.
பவித்ராவின் குடியிருப்புக்குள் அவன் நுழையவும், “டா…டீ!“ என்று அவன் பிரிய மகள் பிரியாவின் குரல் அலறலாய் தொனிக்க, மேல்நோக்கி இவன் பார்ப்பதற்குள் இவன் காலடியில் அவள் உடல் தொப்பென விழ, அவளின் சூடான இரத்தத் துளிகள் இவன் முகத்தில் தெறிக்க… பதறிக் கொண்டு கண் விழித்தான் மாதேஷ்.
அவன் படுக்கையில் இருக்க, எட்டாவது படிக்கும் அவனது செல்ல மகள் ப்ரியா ஒரு கையில் காஃபிக் கோப்பையுடன், ஒரு கையால் அவனை, “டாடீ!“ என உலுப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் உலுக்கிய உலுப்பில், அவள் கையிலிருந்த கோப்பையிலிருந்து சூடான காஃபித் துளிகள் அவன் முகத்தில் சிதறின. இவன் விழித்துப் பார்க்கவும், “அவசரமா காலையில மீட்டிங் போணும், காஃபியோட எழுப்புனு சொல்லிட்டு, எழுப்ப, எழுப்ப இப்டி தூங்குறியே, ராத்திரி பூரா கடல்ல எரிஞ்ச தீய வைக்கோலப் போட்டு அணைச்சிட்டு இருந்தியா டாடி?“ என்றாள் சிரித்தபடியே.
கனவின் பயங்கரமும், பாதியில் பதறி எழும்பியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும் ஒன்று சேர கை, கால்களை அசைக்க முடியாதபடி சோர்வும், படபடப்பும் அடங்க சிறிது நேரமானது மாதேஷூக்கு. அதனால் ப்ரியாவின் கிண்டலைக் கூட இரசிக்க முடியாமல் போனது.
பிரயாசப்பட்டு, கை கால்களை மெதுவாக அசைத்து… எழும்பி அமர்ந்து, காஃபியை வாங்கி உறிஞ்சியவாறே கனவின் பயங்கரத்தை விழுங்க முயன்றான். காஃபி நாவைச் சுட, அதன் மீது ஊதினான். காஃபியின் மேற்பரப்பில் அலைகள் எழ, அவன் நினைவலைகள், பவித்ராவை முதலில் சந்தித்த தருணத்தை நோக்கிச் சென்றது.
இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்கில் அவளது நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி, அவள் தெளிவாக எடுத்துரைத்த விதமும், ‘கோயில் சிலைதான் உயிர் பெற்று, சேலை கட்டி வந்ததோ!’ என்றெண்ணும் படியான அவளது தேக வளைவுகளும், அவள் பேசும் போது அசைந்த இதழ்களின் நளின நடனமும், அவனுள் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்திற்று.
அவள் பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்தாலும், அவளது கண்களில் வழிந்த கருணையும், அவளின் அங்க அசைவுகளும், அவள் எவ்வளவு மென்மையானவள் என உணர்த்திற்று. தனியாக அவளை அழைத்து, “உங்க பேச்சு அவ்வளவு தெளிவா, ஒவ்வொரு பாய்ண்ட்டும் ரொம்ப ஷார்ப்பா, பெர்ஃபெக்டா, இன்வெஸ்டர்ஸ கட்டி இழுக்கற மாதிரி இருந்தது. எக்ஸெலண்ட் ஸ்பீச்“ எனப் பாராட்டினான்.
“தேங்க் யூ ஸர்“ என்றவள் கண்களில் படர்ந்த மெல்லிய ஈரம், ‘அவள் ஆறுதல் தேடி ஏங்குகிறாள்’ என்பதைப் புரிய வைத்தது. இது போதாதா அவனுக்கு! அவளுக்காகவே அவளது நிறுவனத்தில் முதலீடு செய்ய உற்சாகமாக ஒத்துக் கொண்டான்.
அவளுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்தான். மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட அவளது கணவன் சரியான குடிகாரன் என்றும், இவளது இளகிய மனதைப் பயன்படுத்தி, இவளது நகைகளையெல்லாம் வாங்கி, விற்று வியாபாரத்தில் போட்டுவிட்டு, அதையும் சரிவரக் கவனிக்காமல், குடித்துக் கூத்தாடி நிறுவனத்தில் பெருத்த நஷ்டமும், அதனால் கடனும் ஏற்பட தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிந்து கொண்டான்.
அதன் பின் இவளது மனஉறுதியாலும், விடா முயற்சியாலும் நிறுவனத்தை கடனிலிருந்து மீட்டு லாபகரமாக நடத்துவதையும் பார்த்து இன்னும் அதிகமாய் அவள் மீது தாபம் கொண்டான்.
‘அவள் தனிமையில் தான் இருக்கிறாள்’ என்பது இன்னும் வசதியாகப் போயிற்று. அப்போதே அவன் மடியில் அவள் விழுந்து விட்டதாகக் கற்பனை செய்து கொண்டு, உற்சாகமாய் விசிலடித்துக் கொண்டான்.
தினம் தினம் அவளுடன் பேசும் போதெல்லாம், இவனும் அன்புக்காக ஏங்குவதாகவும், அழகைப் பார்த்து ஏமாந்து பானுவைத் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், அவள் இவனுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், இவனுடைய பணமும் அந்தஸ்தும் மட்டும் தான் அவளது தேவை எனவும், இவனுக்காக அணுவையும் அசைக்க மாட்டாள் எனவும், இவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தும் இவனது தேவையனைத்தையும், இவனே பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லிச் சொல்லி, அவள் இருதயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இளக்கினான்.
ஒரு நாள் பைக்கில் வந்தவன், இவளது காரைப் பார்த்துவிட்டு, வேகமாய்ப் பின்னால் வர, இவளும் பக்க கண்ணாடி வழியே அதைப் பார்த்து வேகத்தைக் குறைக்க, அவன் முன்னால் வர முயல, ஒரு ஆட்டோ வேகமாக குறுக்கே வர… “படார்…” ஆட்டோவுடன் பைக் மோதியதில், பைக் சறுக்கிக் கொண்டு போக இவன் இடது புறமாக சரிந்து கீழே விழுந்து கிடந்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings