எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திருமணம் நடக்கவில்லை என்பதில் மணப்பெண்ணை விட மிகவும் கலங்கிப் போயிருந்தவர் பெண்ணின் தந்தை பூவிளங்கும் பெருமாள்.
அரைமணி நேரம் முன்பு வரை அந்தக் கல்யாண மண்டபத்தில் அலங்காரமும், உணவு தயாரிப்பவர்களை விரட்டும் தர்பாரும், குழந்தைகளின் கும்மாளமும் ஏதோ மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்திருந்த போது தான் செய்தி வந்து இடிந்து போய் அமர்ந்து விட்டார் பெருமாள்.
“மிகவும் ராசியான கல்யாண மண்டபம் சார். விரும்பித் திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட ஆயுளோடும் வசதியோடும் இருப்பார்கள் சார். உங்கள் விருப்பத்தோடு தானே சார் கல்யாணம் நடத்துகிறீர்கள். எல்லாம் துரிதமாகவும், அனுசரணையாகவும் கல்யாணம் நடக்க உதவி செய்வோம் சார்” என்று திருமண மண்டப முதலாளி செங்கப்பன், சொன்ன மாதிரியே திருமண ஏற்பாடுகள் மிகவும் வேகமாக மளமளவென்று நடந்ததால், முதலில் மகிழ்ந்து போன பெருமாள் இப்போது சோகத்தில் மூழ்கி விட்டார்.
வீட்டிலே முதல் பெண் பிரதிபா தேவிக்கு திருமணம். எப்படியெல்லாமோ நடத்த வேண்டும் என்று கனவுகண்டு, தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த கடைநிலை ஊழியரான தங்கவேலுவை ஒரு மாதம் விடுப்பு எடுக்கச் சொல்லி பார்த்துப் பார்த்து எல்லா காரியமும் செய்து முடித்து நாளைக் காலையில் கல்யாணம் என்று சந்தோஷத்திலிருந்த வேளையில்தான் அந்தச் செய்தி வந்தது.
“மாப்பிள்ளை விட்டார் வந்த காரும், லாரியும் மோதி மாப்பிள்ளை இறந்து போனார். அவருடன் வந்த நாலைந்து பேரும் விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” என்று விபத்தில் சிக்கிய ஒரு நபர் தொலைபேசியில் சொல்ல, என்ன செய்வது என்று திகைத்துப் போனார் பெருமாள்.
திருமணத்தில் கலந்து வந்திருந்த கொள்ள உறவினர்கள், ஆங்காங்கே சீட்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள், பட்டுச்சேலை பற்றி விலை பேசிக் கொண்டிருந்த பிரதிபா தேவியின் தோழியர் அனைவரும் இனி என்ன செய்வது என்று பெருமாளின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தனர்.
அத்தனை நேரமும் தூணுக்குத் தூண் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கூட ஏதோ தமக்குள் துக்கம் சூழ்ந்து விட்டதாக தாய், தந்தையரின் மடியில் புகுந்து கொள்ள, விளையாடத் துடித்த ஓரிரு மழலைகள் கூட தாய் தந்தையரின் நிர்ப்பந்தத்தினால் ஆங்காங்கே அமர்ந்து கொள்ள, திருமண மண்டபமே மயான அமைதியில் ஆழ்ந்து போயிருந்தது.
சமையல் ஆள் வந்து, “இனி என்ன செய்ய வேண்டும்” என கேட்டு விட்டுப் போக வந்தவர் இருந்த அமைதியையும், நிலவிய சோகத்தையும் பார்த்து விட்டுத் திரும்பிப் போய் விட, இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார் பெருமாள்.
அழுது கொண்டிருந்த தேவியைப் பார்த்தவர், தனக்கு உதவிக்கு வந்த தங்கவேலுவைக் கூப்பிட்டு ஒரு தனி அறைக்குள் போனார்.
“இனி என்ன செய்யலாம் வேலு…?”
“நீங்கள் பெரிய ஆள். இந்த மாதிரி நேரத்திலே என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களுக்குத்தான் தெரியும்”
கண்களில் குபுக்கென்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்த பெருமாள், “ஆதரவில்லாமல் அப்பா அம்மாவை தவற விட்டு விட்டு திருநாள் கடையிலே அலைக்கழிந்து நிற்கும் பிள்ளை மாதிரி ஒன்றும் புரியாமல் நிற்கிறேன் வேலு… என்ன செய்ய.. உனக்கே தெரியும்… எத்தனை விதமாகக் கற்பனை பண்ணி இந்தக் கல்யாணத்தை செய்து முடிக்க நினைத்திருந்தேன்” என்றார்.
“சார்… நீங்கள் தப்பா நினைக்காவிட்டால் நான் ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்”
“சொல்லுப்பா”
“நீங்கள் பார்த்த எஞ்ஜினியர் மாப்பிள்ளை இறந்து போனார். அதற்காக இப்போது உங்கள் மகள் தேவியின் திருமணத்தை நிறுத்துவது அவ்வளவு நல்லதாகப் படவில்லை”
“வேறு என்னதான் செய்ய சொல்றே?”
“வேறு ஏதாவது ஒரு பையனைப் பார்த்து இந்த மூகூர்த்தத்திலே திருமணம் நடத்தி வைத்து விடுவது நல்லது. இந்தக் கல்யாணம் நின்று போய், நாளைக்கு உங்க மகளை யாராவது பொண்ணு பார்க்க வந்தால் இந்த விஷயம் தெரிய வந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏதாவது உங்களிடம் கேட்டால் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சின மாதிரி இருக்கும்”
“நீ சொல்றது சரிதான் வேலு… நாளை காலையில் முகூர்த்தம்… நான் பார்த்த மாப்பிள்ளை பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டான். இனி இன்றைக்கு இரவுக்குள்ளே எங்கே போய் நான் மாப்பிள்ளை பார்க்கப் போகிறேன்…”
“உங்க சொந்தத்திலே..”
“பார்க்கலாம் வா” என்று தங்கவேலுவை வெளியே கூட்டிக் கொண்டு வந்தவர், “அலங்காரம் எல்லாம் நடக்கட்டும், சாப்பாடு வேலை எல்லாம் மும்முரமாகட்டும். நான் பார்த்த மாப்பிள்ளை இறந்து போனாலும் என் மகள் பிரதிபா தேவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டேன். அவளுக்கு நாளைக்கு காலையிலே குறித்த முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கும்” என்றார் பெருமாள்.
எல்லோரும் திகைப்புடனும் சந்தோசத்துடனும் கல்யாண வேலைகளை தொடர, முகூர்த்த வேளை வரை மாப்பிள்ளை யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்த பெருமாள், தங்கவேலுவைக் கூப்பிட்டு, “உன் மகன் பழனியை என் மகளை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு, இந்தா இந்த டிரஸ்ஸைப் போட்டுட்டு வரச் சொல்லு” என்றார் பெருமாள்.
“அய்யா நீங்க எங்கே? நாங்கள் ஏழைகள்..” என்று பின் வாங்கினான் தங்கவேலு.
“என் மகளை உன் மகனுக்கு கட்டி வைக்கிறதிலே விருப்பமில்லையா உனக்கு…?”
“அப்படியில்லை…”
“பின்னே ஏன் இழுக்கிறே?”
“முன்னாலே ஒருமுறை என் பையனும், உங்க பொண்ணும் பழகறதா சொல்லி என்னைக் கூப்பிட்டுத் திட்டி அனுப்பினீங்க”
“ஏண்டா பழைய விஷயங்களைச் சொல்லி குத்திக் காட்டறியா?”
“அப்படியில்லே சார்…நீங்கள் சொன்னால் நான் ஏத்துக்கிறேன்” என்றவர் தன் மகனை அழைத்து புதிய உடைகளை உடுத்திக் கொண்டு மணமேடைக்கு வரச் சொன்னார் தங்கவேலு.
இரவு.
முதலிரவில் பிரதிபா தேவியிடம் “இந்த கல்யாண மண்டபம் மிகவும் ராசியானதுதான் நமக்கு” என்றான் பழனி.
“ஏன் அப்படிச் சொல்கிறீங்க?”
“உங்க அப்பா இந்த மண்டபத்தை புக் பண்ணுவதற்கு முன்னால், இந்த கல்யாண மண்டபத்தை நீங்கள் புக் பண்ணினால் கண்டிப்பாக விரும்பியவர்களுக்கு கல்யாணம் நடக்கும் என்றார். ஏதோ ஒரு எஞ்ஜினியர் மாப்பிள்ளையை சாகடித்தாலும் இந்த ராசியான கல்யாண மண்டபம் இருவரையும் சேர்த்து வைத்ததே” என்று பழனி சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings