in ,

திரிசங்கு சொர்கமும் லிவிங் டுகெதரும் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

               2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சப்பாத்தி போடுவதற்காக, ஒரு பேஸினில் கோதுமை மாவைக் கொட்டி , அதில் உப்பையும் போட்டு ,ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அன்னலட்சுமி. சமையல் அறையில் போய் ஒரு சொம்பில் தண்ணீரும் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, கையோடு மறக்காமல் எதிரில் உள்ள  தொலைகாட்சிப் பெட்டியையும் ‘ஆன்’ செய்து விட்டு, சுவர் ஓரமாக தரையில் ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி உட்கார்ந்தாள்.

அவளுடைய பெயர் லட்சுமி மட்டும் தான், ஆனால் வீட்டில் எல்லோருக்கும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டுவதால்  அவள் தவப்புதல்வன் ராஜேஷ், அன்னலட்சுமி என்னும்  இந்தப் பெயரைச் சூட்டினான்.

காலிங்பெல் மூன்று முறை விட்டு விட்டு அடித்தது. அவள் கணவர் ராமலிங்கம் தான் அப்படி அழைப்பார் . புடவையைச் சரி செய்து கொண்டு ‘அப்பாடா’ என்று முழங்காலை ஊன்றிக் கொண்டு எழுந்துச் சென்று கதவைத் திறந்தாள்.

“என்ன லட்சுமி உன் ‘பிராடிகல் சன்’ வீட்டிற்கு வந்தானா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

அவரே மறுபடியும் “அவன் எங்கே வரப் போறான்?  அந்த நாய்க்குட்டி ஒன்று, ஜானியோ, போனியோ என்று அதோடு சுற்றிக் கொண்டிருப்பான்” என்று பொருமினார்.

“அந்தப் பெண் ஜானவியைச் சொல்கிறீர்களா? அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள், அந்தப் பெண் ஏன் அப்படிச் சுற்றுகிறாளோ தெரியவில்லை. வெட்கமே இல்லாமல் ஷாட்ஸ் என்று மேல் தொடைக்கு மேல் ஒரு ஜட்டி மாட்டிக் கொண்டு சுற்றுகிறாள். அழகான தலை முடியை வேறு ‘கட்’ செய்து அதற்கு மிட்டாய் கலரில் வேறு கலர் அடித்துக் கண்ராவியாக இருக்கிறது”

“எல்லாம் லட்சங்களில் சம்பாதிக்கிற திமிரு” என்றார் வெறுப்போடு.

அதே நேரத்தில் விசில் அடித்துக் கொண்டு, கையில் பைக் சாவியைச் சுற்றிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜேஷ் .

“அம்மா ரொம்பப் பசிக்கிறது, சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்றான்.

“எல்லாம் இருக்கிறது, நீ போய் குளித்து விட்டு வா. சாதம், கூட்டு, குருமா எல்லாம் இருக்கிறது, சப்பாத்தியும் போடுகிறேன். நீயும் உங்க அப்பாவும் சாப்பிட வாருங்கள்”

“அம்மா, நான் இங்கே சாப்பிடவில்லை. ஜானி வேறு பசியோடு காத்திருப்பாள், ரெண்டு சப்பாத்தி எக்ஸ்ட்ராவாக வைத்து கட்டிக் கொடேன். நீ செய்யும் உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி குருமா என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும்… எனக்கும் பிடிக்கும்” என்றான்.

லட்சுமி தன் கணவன் என்ன சொல்வாரோ என்று தயங்கினாள். அவரோ… அவன் கேட்பதை செய்து கொடு என்று கண்ணாலேயே ஜாடை காட்டினார்.

லட்சுமி மகன் கேட்ட சாப்பாட்டை தயார் செய்ய சமையலறைக்கு சென்றாள். காது மட்டும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

ராஜேஷ் தந்தையின் எதிரில் உட்கார்ந்து கொண்டு தன் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

“ராஜேஷ், உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றார் அப்பா.

“பேசுங்கள் அப்பா” என்றவன் தன் செல்போனை ‘ஆப்’ செய்து எதிரில் உள்ள டீபாயின் மேல் வைத்தான்.

“உனக்குத்தான் அந்தப் பெண் ஜானி மேல் அவ்வளவு பிரியமாக இருக்கிறதே ! அவள் பசியாக இருக்கிறாள் என்று நீ கூட சாப்பிடாமல் அவளுக்கும் சேர்த்து சாப்பாடு கட்டி எடுத்துப் போகிறாய் ! அவள் மேல் அவ்வளவு பிரியம் வைத்துள்ள நீ ஏன் அவளைத் திருமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்கக் கூடாது?”

“இப்போது நடைமுறையில் இருக்கும் பெரியோர்களால் ஏற்பாடு செய்யும்  திருமணம் எல்லாம் இடையில் வந்தது தான் அப்பா. ஆனால் இப்போது நாங்கள் இருக்கும் லிவிங் டுகெதர் நம் பண்டைத் தமிழர் திருமண முறை டாடி. காந்தர்வ மணம் என்று உங்கள் தமிழ் இலக்கியத்தில் படித்திருப்பீர்களே அதே தான். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாத திருமணம்” என்றான் ராஜேஷ்.

“பிரச்சனை இல்லாத திருமணமா? எங்கள் வாழ்க்கை எல்லாம் அமைதியாகத்தானே போகிறது, எந்தப் பிரச்சனையும் இல்லையே  பிரச்சனை என்று எதைச் சொல்லுகின்றாய்?”

“அப்பா , நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள்.  உங்கள் திருமண வாழ்க்கை தொடங்கும் போதே பிரச்சனையுடன் தானே தொடங்கியது. உங்கள் விருப்பப்படி உங்கள் திருமணம் நடந்ததா? நீங்கள் விரும்பிய பெண் வேறு, திருமணம் செய்தது உங்கள் பெரியவர்கள் விருப்பப்படி என் அம்மாவை. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இல்லை, இதெல்லாம் ஒரு வாழ்க்கையா டாடி?” என்றான்.

“அதனால் என் வாழ்க்கை ஒன்றும் கெட்டு விடவில்லையே. நானும் நன்றாகத் தான் இருக்கிறேன். உன் அம்மாவையும் சந்தோஷமாகத்தானே வைத்திருக்கிறேன். நீயும் நன்றாகத்தான் படித்து ஒரு வேலையும் தேடிக் கொண்டாய். அதன் பிறகு தான் உன் விருப்பப்படி நடந்து இப்போது நடுத்தெருவில் நிற்கின்றாய்” என்றார் அதிருப்தியோடு ராமலிங்கம்.

“ஏதோ என் அம்மா பெருந்தன்மையானவராக இருந்தாரோ, நீங்கள் தப்பித்தீர்கள். உங்கள் காதல் கதையை இப்போது கூட எதிர்வீட்டுத் தாத்தா சொல்லிச் சொல்லி சிரிக்கிறாரே” என்ற ராஜேஷ் கேலியாக சிரித்தான்.

“மற்றவர்கள் சிரிப்பதற்கோ இல்லை அழுவதற்கோ நாம் வாழ முடியாது. என் பெற்றோர்கள் கடைசி காலம் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், என் திருமணத்தால் என் குடும்பத்தில்  ஏதும் கஷ்டம் வரக் கூடாதென்றும், மேலும் அந்தக் காலத்தில் இப்போது உனக்கு இருப்பது போல் பைனான்ஷியலாக விடுதலை கிடையாது என்பதாலும் தான் அந்தக் காலத்தில்  நாங்கள் பெரியோர்கள் அமைத்துக் கொடுத்த, செப்பனிட்ட பாதையில சென்றோம். ஆனால் நீ இப்போது வாழும் வாழ்க்கை திரிசங்கு சொர்கம் போல் இருக்கிறது” என்றார் ராமலிங்கம்.

“அது என்னப்பா திரிசங்கு சொர்கம்?”

“அதை நீ கூகிளில் தேடிப்பார், முழுக்கதையும் தெரியும். உன்னைப் போல் சத்ய விரதன் என்ற ஒரு ‘பிராடிகல்சன்‘ தன் மனித உடலுடன் சொர்கம் போக வேண்டுமென்று ஆசைப்பட்டு, ஒரு முனிவரிடம் வரம் வாங்கி, தன் மனித உடலுடன் சொர்கத்திற்குப் போகும் சத்யவிரதன் என்னும் திரிசங்குவை இந்திரன் தடுத்து நிறுத்தியதால், விசுவாமித்திரர் என்னும் முனிவர், பூமிக்கும் சொர்கத்திற்கும் இடையில் இரண்டுங் கெட்டானாக ஒரு சொர்கம் அமைத்துக் கொடுத்தார். பூமியிலும் இல்லாமல் சொர்கத்திலும் இல்லாமல் ஒரு இரண்டுங் கெட்டான் உலகம்” என்றார் கேலியாக சிரித்துக் கொண்டு.

“அப்பா… உங்களுக்கு சொன்னால் புரியாது, ஏனென்றால் இது ஜெனரேஷன் கேப். உண்மையில் நாங்கள் வாழ்வது தான் சொர்கபூமி. நான் சம்பாதிப்பது எனக்கு, அவள் சம்பளம் அவளுக்கு. இரண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை வந்தால் கூட பிரச்சினை இல்லை. எந்த கோர்ட்டுக்கும் போக வேண்டாம், யாருக்கும் ஜீவனாம்சம் தர வேண்டாம். எந்த மத்தியஸ்தமும் வேண்டாம், இருவரும் பொறுமையாகப் பேசி நண்பர்களாகவேப் பிரியலாம்”

“நீங்கள் பிரிந்து விடுவீர்கள், ஆனால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன? பிரிந்து சென்ற அம்மா வேறு ஒரு திருமணம் செய்து கொள்வாள். அப்பாவும் வேறு மறுமணம் செய்து கொள்வான். குழந்தைகள் ஏதாவது ஒரு அனாதை ஆஸ்ரமத்திற்குப் போக வேண்டியது தான். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் பாவப்பட்ட ஜன்மங்கள்”

“அப்பா… உங்கள் கருத்தை வெளியே சொல்லாதீர்கள். இப்போது உள்ள ‘யங்ஸ்டரஸ்’ பெரும்பாலும் விரும்புவது ‘லிவிங் டுகெதர் தான். அவர்கள் பெரிய கூட்டம் போட்டு உங்களுக்கு எதிராகக் கொடி பிடிப்பார்கள்”

“பிடித்தால் பிடிக்கட்டும். எல்லோருக்கும் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது” என்றார் ராமலிங்கம் பிடிவாதமாக.

“லிவிங் டுகெதராக வாழ்வதற்கே, ஏராளமான பணம் செலவு செய்து நீங்கள் செய்து வைத்துள்ள திருமணங்கள் தான் காரணம்”

“என்னடா சொல்கிறாய்? எங்கள் பழக்க வழக்கங்களின் மேலேயே பழி சொல்கிறாயா?”

“ஆமாம், இரு வீட்டார்களும் ஊர்பட்ட செலவு செய்து தான் கல்யாணம் செய்து வைக்கிறீர்கள். ஆனால் முதல் இரண்டு வருடங்கள் ஓடுவதே கஷ்டமாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்ன காரணத்தினாலோ தகராறு சண்டை. ஊர் கூடி திருமணம் செய்து கொண்டவர்கள் ஊரறிய கோர்ட் வாசலில் விவாகரத்து கேட்டு  நிற்கிறார்கள். திருமணத்திற்கு ஆன செலவு போல் கோர்ட், வக்கீல் என்று செலவாகிறது. இந்த விவாகரத்து எல்லாம் பெருகிய பிறகு தானே குடும்ப நீதிமன்றம் என்ற ஒன்று ஏற்பட்டது. இதனால் காலமும் , பணமும் தான் வீணாகிறது. கோர்ட்டிற்கும் வீட்டிற்குமாக அலைந்து மனக்கஷ்டம் வேறு. இதற்கு ஒரே தீர்வு லிவிங் டுகெதர் தானே டாடி. உங்கள் திருமண முறையிலும் தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதெற்கென்ன செய்வது?”

“ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து ஓடுவது எதற்குமே தீர்வு அல்ல. சத்தியத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் கட்டுப்பட்டு சுயநலமாக சிந்திக்காமல், பிறக்கும் குழந்தைகளின் நலத்தையும் குடும்ப கௌரவத்தையும் காக்க பொறுமையுடன் வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் தான் என்ற உறுதியோடு வாழ்ந்தால் குழந்தைகளின் எதிர்காலமும், பெற்றவர்களின் சந்தோஷமும் காப்பாற்றப்படும்” என்றார் ராமலிங்கம்.

சமையல் அறையிலிருந்து வெளியே வந்த அன்னலட்சுமி, ராஜேஷ் கேட்ட சாப்பாட்டை ஒரு கேரியரில் வைத்து அவனிடம் கொடுத்தாள்.

“இந்தப் பெருசுகளுக்கென்ன வேலை! இதுவும் ‘ஜெனரேஷன் கேப்‘ என்று நினைக்காதே. சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில் ‘செட்டில் ‘ ஆவதைப் பார்” என்று உபதேசித்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேசி விடு என்னிடம் ❤ (கவிதை) – வைஷ்ணவி

    விஸ்வநாதன்… திண்ணை வேண்டும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை