எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எப்போது சிட்னி ஏர்ப்போர்ட்டிலிருந்து விமானம் கிளம்பும் என்று ஆஸ்திரேலியா விமான அறிவிப்பாளர்கள் அறிவித்துக் கொண்டிருந்தனர்.
திலக் காதில் ‘வாக்மேனை’ மாட்டிக் கொண்டு ‘மெல்போர்ன் மலர் போல் சிரிப்பவள் இவளா’ கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று கையிலிருந்த செல்போன் உயிர் பெற, காதிலிருந்த வாக்மேனை உருவிப் போட்டு விட்டு “திவ்யா திலக் பேசறேன், சொல்லு என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“டியர் நீங்கள் கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு ஊருக்குப் போக வேண்டுமா?” என்று கேட்டாள்.
“என்னச் சின்னப்பிள்ளை மாதிரி நான் ஏர்ப்போர்ட் வந்த பிறகும் இப்படி கேட்டுக் கொண்டிருக்கிறாய். திருமணம் முடிந்து முதல் தீபாவளிக்கு ஊர் போய் வந்தது இன்றும் இப்படியே பத்து வருடம் போகாமலிருந்தால் இந்தியாவின் தென்கோடியிலிருக்கும் வீரவநல்லூர் மறந்து போய்விடும்”.
“என்னைத் தனியாக விட்டு விட்டு போகிறீர்களே?”
“நான் திரும்பத் திரும்பக் கூப்பிட்ட பிறகும் வர மறுத்து விட்டாய்”.
“காரணம் உங்களுக்கேத் தெரியும்.”
“திவ்யா எனக்கு நீயும் உனக்கு நானும் இருக்கும் போது இன்னொரு குழந்தை தேவை தானா?”.
“வீணாக என்னைத் திருப்திப்படுத்த எதுவும் சொல்ல வேண்டாம். எத்தனை முறை உங்கள் அம்மாவின் கடிதமும் தொலைபேசியும் என்னை மலடி என்று குத்திக் குதறியிருக்கும். என்னை அவர்களால் பார்க்க முடியுமா?”
“திவ்யா செக்கிங் கூப்பிட்டு விட்டார்கள். உன் தாய் தந்தையர் இங்கே மெல்போர்னிலே. இருக்கிறார்கள். உன் தங்கை, தம்பியரும் இங்கேயே இருப்பதால் உனக்கு ஊருக்குப் போக விருப்பமில்லை, ஆனால் என் உறவுகள் என்னைப் பார்க்க. விரும்புவார்கள் தானே”.
எதிர்முனையில் திவ்யா கோபத்தில் போனைத் துண்டித்து விட கொஞ்சம் வலியோடு ஏர்போர்ட் செக்கிங் வந்தான் திலக்.
“இந்தியா மும்பை வழியாக செல்லும் விமானம் திருச்சிக்கு இன்னும் சில மணித்துளிகளில் கிளம்ப உள்ளது. பயணிகள் தயவு செய்து உடனடியாக விமானத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறார்கள்” என விமான அறிவிப்பு வர செக்கிங் முடிந்து விமானம் நோக்கி வந்த திலக்கின் சட்டையை யாரோ பிடித்து இழுத்தார்கள்.
திலக் திரும்பி பார்த்த போது, அருகிலிருந்த பயணியின் கையிலிருந்த குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. எனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் இப்படித்தானே இருந்திருக்கும்.
டாக்டரிடம் நானும் திவ்யாவும் எல்லா முறைப்படியும் செக் பண்ணிப் பார்த்தாகி விட்டது. இருவரிடம் எந்தக் குறையுமில்லை. இருப்பினும் தாம்பத்யம் பத்து வருடங்கள் நடந்து ஒரு குழந்தை ஒரு வாரிசு இல்லையே. ஒரு குழந்தை பிறந்திருந்தால் குழந்தையோடு திவ்யாவும் என்னோடு வீரவநல்லூர் கிளம்பியிருப்பாள்.
பார்க்கலாம். இந்த வருட தீபாவளியாவது நமது வாழ்க்கையில் ஒளிஏற்றி வைக்கிறதா இல்லையா என்று எண்ணிக்கொண்டே விமானத்தில் ஏறுவதற்காக நடந்தான்.
மனது திவ்யாவையே சுற்றி வந்தது. திருமணமாகி பத்து வருடம் கழித்து முதல் முறையாக் அவளை பிரிந்து வந்தது கொஞ்சம் மனதிற்குள் கஷ்டமாக இருந்தது.
திரும்பவும் மொபைல்போன் ஒலிக்க நம்பரைப் பார்த்தான்; திவ்யாவின் அம்மா வீட்டு நம்பர், போன் பட்டனைத் தட்டி பேசினான்.
“அத்தான் நான் தமிழரசி பேசுகிறேன்”
“சொல்லு தமிழரசி என்ன விஷயம்”
“ம்… செய்றதையும் செய்துவிட்டு என்ன விஷயம் என்று கேளுங்கள்” சிரித்தாள் தமிழரசி.
“ஏய் நான் விமானத்தில் ஏறியாக வேண்டும். விஷயத்தை சொல், விஷயத்தை சொல்லு”
“அத்தான் அக்காவிற்கு திடீரென்று மயக்கம் வர, அம்மாவும் அப்பாவும் உடனடியாக உங்கள் வீட்டிற்கு போனார்கள். டாக்டரும் வந்து செக்கப் பண்ணிப் பார்க்க, நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள். அக்கா இந்த மகிழ்ச்சியை இந்த தீபாவளியில் உங்களோடு கொண்டாட விரும்புகிறாள். நீங்கள் இந்தியாவிற்கு சென்று உங்கள் தாய் தந்தையரை பார்க்க எவ்வளவு துடிக்கிறீர்கள் என்று எங்கள் எல்லோருக்குமே புரிகிறது. ஆனால் இந்தச் சூழ்நிலையில்…
‘அக்கா, அடுத்த வருடம் தீபாவளிக்குச் சேர்ந்து போகலாம்: அத்தானைத் திரும்ப வரச் சொல்” என்று சொல்லச் சொன்னாள்” என்று தமிழரசி சொல்லச் சொல்ல, மகிழ்ச்சியில் மொபைல் போனைத் தவற விட்டவன். திரும்பக் குனிந்து எடுத்துக் கொண்டு விமானத்தில் ஏறாமல் தளத்திற்கு திரும்ப வந்தான்.
விமானத்தளத்திலிருந்த சிப்பந்தி “நீங்கள் இந்தியா போகவில்லையா?” என்று கேட்டான்.
“இங்கே அதை விட மகிழ்ச்சியான விஷ்யம் காத்திருக்கிறது.”
“ஆனால் நீங்கள் போர்டிங் கார்டு வாங்கியதால் இப்போது வெளியே போக முடியாது.”
“எனக்கு எதைப் பற்றியும் கவலை கிடையாது” என்று துள்ளலுடன் அவனைத் தள்ளி விட்டு வெளியே நடந்தான திலக்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings