எழுத்தாளர் ஹேமா பிரேம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஐந்து வயது மகள் ஆதினியை ஹோம் வொர்க் செய்ய வைத்து, சாப்பிட வைத்து, அவளைத் தூங்க வைக்கும் போது மணி இரவு ஒன்பதாகி இருந்தது. அப்படியே மதுராவிற்கும், தூக்கம் கண்களைச் சுழற்றிட, நீயும் உறங்கிடேன் என அவளின் உடலும், விழிகளும் கெஞ்சின. ஆனால் முடியுமா?
வீட்டில் முடிக்கப்படாமல் இருந்த அத்தனை வேலைகளும், அவளை வந்து முடித்துவிட்டுப் போ, எனக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தன. பின்பு வேலைகளை எல்லாம் மளமளவென்று முடித்து, சாப்பிட்டுப் படுக்கையில் விழுந்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது.
‘கணவன் வெங்கடேஷ், இன்று ஊரிலிருந்து வருவதாக நேற்று சொல்லி இருந்தாரே… இன்று அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லையே?’ என எண்ணியவள் அலைபேசியில் கணவரை அழைத்தாள்.
மதுராவின் அழைப்பை ஏற்ற வெங்கடேஷ் “மது! மாலையிலிருந்து காய்ச்சல் வந்தது போல இருக்கிறது. உடம்பு மிக அசதியாய் இருக்கிறது மா, அதனால் தான் வர முடியல. பேசக் கூட தோணல சாரி பா” என்றான்.
அவனின் குரலே அவனின் உடல்நிலையைப் பற்றி உணர்த்திவிட்டது மதுராவிற்கு. “ஓ… சரி உடம்ப பாத்துக்கோங்க, சாப்பிட்டு மாத்திரை மறக்காம எடுத்துக்கோங்க, ரொம்ப முடியலன்னா கண்டிப்பா டாக்டர்கிட்ட போய்க் காட்டுங்க, சரியா?” என்று மட்டும் பேசிவிட்டு வைத்தாள். ஏற்கனவே துணுக்குற்றிருந்த அவளின் மனம் இப்போது மேலும் சோர்வாய் உணர்ந்தது.
‘நாளைக் காலை ஆதினியை என்ன சொல்லிச் சமாளிப்பது?’ என்று யோசனையில் ஆழ்ந்தவளிடத்தில், சற்று முன்னதாய் இருந்த தூக்கம், தடம் தெரியாமல் எங்கோ சென்றிருந்தது.
‘பாவம் சின்னக் குழந்தை, பெரிதாய் என்ன கேட்கிறாள்? இருபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற சிறுவர் பூங்காவிற்கு தானே அழைத்துப் போகச் சொல்கிறாள்.’
‘எப்போதுமே வீட்டுக்குள்ளேயே தான் விளையாடுகிறாள் பிள்ளை, அதுவும் தனியாகவே. ஊர்ல தனியா இருக்க அம்மாவை வரச் சொன்னால், அப்பா இருந்த இடத்தை விட்டு வரமாட்டேன்னு, அவங்களும் பிடிவாதமா இருக்காங்க. நான் ஒத்தையில என்ன செய்ய?’ என்று தனக்குள்ளாகவே மருகிக் கொண்டிருந்தாள்.
யாரோ வகுப்புத் தோழி ஒருவள் வந்து ஆதினியிடம் பூங்காவைப் பற்றிச் சொல்ல, அன்றிலிருந்தே ஆதினி ஆசையாய் கேட்டுக் கொண்டிருக்கிறாள், நாமும் போகலாம் என்று.
போகலாம், போகலாம் எனச் சொல்லி மூன்று வாரங்களைக் கடத்தி விட்டாள், மதுரா. ஆதினியை பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவளுக்கும் ஆசை தான். ஆனால் சூழ்நிலைகளோ அதைச் செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்துக் கொண்டிருந்தது.
இந்த முறை கணவர் வருவார், அவரோடு அனுப்பி வைக்கலாம், என எண்ணுகையில் அதுவும் இப்போது இல்லை என்றானது.
கணவன் வெங்கடேஷ் கோயம்புத்தூரில் ஒரு எலக்ட்ரிகல் நிறுவனத்தில் பணிபுரிகிறான். மாதம் இருமுறை மனைவியையும், மகளையும் வந்து பார்த்துச் செல்வான். மதுரா சொந்த ஊரான திருச்சியிலேயே இருக்கிறாள். வீட்டு வாடகை, அன்றாடத் தேவைகள், நாத்தனாரின் திருமணத்திற்காக வாங்கியக் கடன்…
மதுரா அவள் பெற்றோருக்கு ஒரே மகள், ஆதலால் அவ்வபோது அவர்களின் தேவை, ஆதினியின் பள்ளி படிப்புச் செலவு எனச் செலவுகள் நீள, கணவனின் வருமானம் மட்டும் போதவில்லை. எனவே ஆதினி படிக்கிற பள்ளியிலேயே, தனக்கும் ஒரு ஆசிரியர் வேலையைத் தேடிக் கொண்டாள் மதுரா.
ஒன்றைப் பெற வேண்டுமானால் ஒன்றை இழக்க வேண்டுமென்பது தானே நியதி. அதற்கேற்ப இப்போது பொருளாதார சிக்கலை ஓரளவு தீர்த்துக் கொண்டாலும், அவ்வபோது கிடைக்கிற சின்ன சின்ன மகிழ்ச்சிகளை இழந்து கொண்டிருந்தாள்.
மொட்டை மாடியில் நின்று நிலவை ரசிப்பது, அந்த நிலவொளியின் கீழ் மெல்லிசையில் நனைவது, ஆதினியின் மழலையோடு தானும் மழலையாக ஐக்கியமாவது, ஊரிலிருந்து வரும் கணவனுக்குப் பிடித்தமானதைச் சமைத்து சாப்பிட வைப்பது, இப்படி எதுவுமே இல்லாமல், இப்போதெல்லாம் வாழ்க்கையை எந்திரத்தனமாய் வாழ்வது, ஏகத்திற்கும் அவளுக்குள் சலிப்பை உண்டாக்கி இருந்தது.
ஏன்… சில அவசியமான விஷயங்களையும் கூட, விடுமுறை இன்மையின் காரணமாகச் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
போன மாதத்தில் மதுராவின் அம்மா “கண் பார்வை மங்குகிறது போல இருக்கு மா. ரொம்ப சிரமமா இருக்கு, ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போறியா”ன்னு கேட்கவும், இவள் பள்ளியில் சென்று விடுப்பு கேட்டாள்,
“வரும் சனிக்கிழமை அரை நாள் தான்மா வேலை. அப்போ போங்களேன்” எனத் தலைமையாசிரியர் சொல்ல
‘ம்க்கும்… வார நாட்களில் கவர்மென்ட் லீவு வந்தா, அன்னைக்கும் சில நேரங்களில் எங்களுக்கு மட்டும் வேலை நாள் தான். எல்லா நாளும் உங்களுக்கே உழைச்சு கொட்டுற அடிமைகளா மட்டுந்தான் நாங்க இருக்கணும். எங்க குடும்பத்த எப்போ தான்யா பாக்கறது’ மனதில் கனன்று கொண்டிருந்த வார்த்தைகளை வெளியே சொல்ல முடியாதே. ஒரு வழியாய் சமாளித்து விடுப்பு வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு.
வாரம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிற மனிதனுக்கு, வாரத்தின் இறுதியில் கிடைக்கிற, ஞாயிறு விடுமுறை என்பது கிடைப்பதற்கரிய வரப்பிரசாதம் தானே.
சமீப காலமாய் அதையும் கிடைக்க விடாமல் செய்து கொண்டிருந்தது, அவளின் பள்ளி நிர்வாகம். எனவே சலிப்பும், சோர்வுமாகவே நாட்களை நகர்த்த வேண்டியதாகி இருந்தது.
பெரும்பாலும் சனிக்கிழமைகளிலும், பிள்ளைகளுக்கு விடுமுறை என்றாலும், அரை நாளாவது ஆசிரியர்களுக்கு அது வேலை நாள் தான்.
இதற்கிடையில் ஆதினி வேறு பூங்காவிற்கு அழைத்துப் போகச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி, மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் கடந்து நான்காவது கிழமையும் வந்தாயிற்று. ஆனால் இப்போதும் அவளால் ஆதினியை அழைத்துப் போக முடியாத சூழல்.
ஞாயிற்றுக்கிழமை மட்டுமே செய்ய முடிந்த வீட்டு வேலைகளைச் செய்வதற்கே முதல் ஞாயிற்றுக்கிழமை சரியாகி விட்டது. அதற்கு அடுத்த வாரத்தில் டீச்சர்ஸ் மீட்டிங் என்று வரச் சொல்லி அங்கேயே அரை நாளாக்கி விட்டார்கள்.
அடுத்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம், அடுத்து நாளைப் பள்ளியில் புதுக் கட்டிடத் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள், என ஒவ்வொரு ஞாயிறும் வேலை நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்க, மதுராவிற்கு எரிச்சலாய் இருந்தது.
‘இந்த நிர்வாகத்தை நடத்துகிறவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே? வேலையைத் தாண்டிய சொந்தத் தேவைகள் இருக்கும் தானே? அது அவர்களிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இருக்கும் தானே? இதையெல்லாம் உணரவே மாட்டார்களா அவர்கள்?’
‘இதனால் தான் மக்கள் லஞ்சம் கொடுத்தாவது கவர்மென்ட்டு வேலைய வாங்கிடணும்னு இருப்பாங்க போல’ என மனதிற்குள், தனக்குத் தானே ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
‘என்னமோ போ, ஒண்ணு பெரிய பணக்காரனைப் போல மேல்தட்டு வர்க்கமா இருக்கணும், இல்லையா அடித்தட்டு வர்க்கத்துல இருக்கணும். இப்படி நடுத்தர வர்க்கமா மட்டும் இருக்கக் கூடாது.’
‘இல்லாமைகளை எல்லாம் இருப்பதாய் ஒப்பேற்றிக் கொண்டு வாழும் நடுத்தர வர்க்கம் நாங்கள்’
எங்கேயோ படித்த ஒரு கவிதையின் இறுதி வரிகள் தான் நினைவுக்கு வந்தது அவளுக்கு. இப்படி எதையெதையோ நினைத்துக் கொண்டு நடுநசிக்கு மேல் தான் உறங்க ஆரம்பித்திருந்தாள் மதுரா.
காலை விழித்து எழுந்ததுமே “அம்மா இன்று ஞாயிற்றுக் கிழமை தானே இன்னிக்கு பூங்காக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்ற ஆதினியின் நியாயமான ஆசையை, அன்று எதிர்கொள்ள முடியவில்லை அவளால்.
“இன்னைக்கும் அம்மாவுக்கு ஸ்கூல் இருக்குடா. அடுத்த வாரம் கண்டிப்பா போகலாம் டா” எனச் சொல்லும் போதே, ஏனோ அவளுக்குத் தொண்டை அடைத்தது. ஆனால் சின்னஞ்சிறிய குழந்தைக்கு அவளின் நிலை புரியவில்லை. மிகவும் அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில் மகளைச் சமாளிக்க முடியாமல் போகவே, அவளின் இயலாமையானது அன்று அதிபயங்கரமான கோபத்தை ஏற்படுத்தியது.
தன்னைவிட வலியவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை, முடியாத எளியவர்களிடம் காட்டுவது தானே மனித குணம். பள்ளி நிர்வாகத்தின் மீது காட்ட முடியாத மொத்த கோபத்தையும், மகளின் மீது கொட்டினாள்.
“சொன்னா கேக்க மாட்டியா சொன்னா கேக்க மாட்டியா” எனச் சொல்லிக் கொண்டே ஆதினியை இழுத்து வைத்து, கண்ணுமண்ணு தெரியாமல் அடித்து விட்டிருந்தாள். ஆனால் குற்றவுணர்வு பிடுங்கித் தின்ன, அது கண்ணீர் கோடுகளாய் வழிந்து கொண்டிருந்தது.
பின்பு நேரம் கருதி, முகம் திருத்தி பக்கத்து வீட்டினரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு, பள்ளிக்குச் சென்றாள். எதிரில் தாளாளர் சுப்ரமணி வரவும், வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அவருக்குக் காலை வணக்கத்தை மொழிந்தாள். அவரோ ஒற்றைத் தலையசைப்போடு அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.
எழுத்தாளர் ஹேமா பிரேம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings