எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஆபீஸ் புது மேனேஜரின் வரவுக்காக காத்திருந்தது. கேஷியர் கண்ணன் கையில் பெரிய பொக்கேயுடன் வாசற்கதவருகே நின்று கொண்டிருந்தான். மற்ற ஸ்டாவ்ஸ் அனைவரும் வரிசையில் ஒரு கலவையான உணர்வுகளுடன் புதிய மேனேஜரை வரவேற்க காத்திருந்தனர்.
“நம்ம புது மேனேஜர் ஒரு லேடி தெரியுமா” என்றார் ஹெட் கிளார்க் சுந்தர்.
“ஹெட் ஆபீஸில் தப்பு செய்தவங்களை இவங்க டெர்மினேட் பண்ணி இருக்காங்களாமே” -இது ரிஸப்ஷனிஸ்ட் உமா.
“ஆமா…. இப்படியெல்லாம் யார் ரூமர்ஸ் கிளப்பி விடறது” என்றார் மற்றொரு ஸ்டாவ்.
“இதெல்லாம் ரூமர்ஸ் இல்லைப்பா, நிஜம்தான் இவங்க பயங்கர ஸ்ட்ரிக்ட் நான் கேள்விப்பட்டு இருக்கேன்” என்றார் சுந்தர் சற்று திகிலுடன்.
“அவங்க ஃபாரின் ரிட்டர்னாம், ரொம்ப அழகா இருப்பாங்களாமே” என்றார் மற்றொரு லேடி ஸ்டாவ்.
“அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் போல” என்றான் பியூன் முருகன்.
அவர்கள் பேசியதை காதில் வாங்கிய கண்ணன் “பொம்பளைங்க எல்லாம் இப்ப நல்லா படிச்சுட்டு கெத்து காட்டுறாளுக” என மனதில் எரிச்சலுற்றவன் அவர்களிடம் “சரி சரி இதெல்லாம் யாரும் இப்ப பேச வேண்டாம் அவங்க வர நேரமாயிடுச்சு” என்று கண்ணன் சொல்லும் போதே ஆபீஸ் வாசலில் ஹோண்டா ஸிட்டி கார் ஒன்று பறவை போல் மெதுவாக வந்து நின்றது.
அனைவரும் காரின் கதவையே ஆவலோடு பார்த்தனர். காரிலிருந்து இறங்கி வந்தவளைப் பார்த்து வியந்து போய் அனைவரும் அட்டென்ஷனில் நின்றனர். கண்களில் கூலர் அணிந்து தலைமுடியை அழகாக போனி டெயில் போட்டு வெங்கடகிரி காட்டன் ஸாரியில் சராசரிக்கும் சற்று உயரமாக மாநிறத்தில் மிடுக்குடன் நின்றவளைப் பார்த்து முதலில் திகைத்தது கண்ணன் தான்.
பின்னால் நின்ற ஹெட் க்ளார்க் கண்ணனை உசுப்பி “சார் பொக்கேயை மேடம் கையில கொடுங்க ” என்ற பின்னரே அவசரமாக அவன் பொக்கேயை அவள் கையில் கொடுத்தான்.
“நன்றி” என்றவள் அதை வாங்கி முருகனிடம் கொடுத்தாள். அதன் பிறகு “மிஸ்டர் கண்ணன் கம் டு மை கேபின்” என்று கூறி விட்டு மற்றவர்களிடம் “நீங்க உங்க வொர்க்க பாருங்க நான் உங்களை எல்லாம் லன்ச் அவர்ல மீட் பண்றேன்” என்றவள் மின்னலாய் மறைந்து போனாள்.
அதிர்ச்சியில் திகிலடித்து தன் சீட்டுக்கு வந்து அமர்ந்த கண்ணனை பியூன் முருகன் “சார் மேடம் உங்களை வரச் சொன்னாங்க” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினான்.
“தெரியும் பா நான் போய்க்கறேன்” என்று எரிச்சலுடன் கூறிய கண்ணன் மெதுவாக எழுந்து மேனேஜரின் கேபின் அருகில் சென்று நின்றான். அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. ‘அவதானா இவ அவள மாதிரியே இருக்காளே’ என அவன் முணுமுணுக்கையில் மேனேஜரின் அறையிலிருந்து மணி சத்தம் கேட்டது.
“சார் போங்க ,மேடம் கூப்பிடறாங்க” என்றான் ஃபைலை சுமந்து வந்த முருகன்.
கதவை திறந்து உள்ளே நுழைந்த கண்ணனை “வாங்க மிஸ்டர் கண்ணன் இன்வாய்ஸ் ஃபைலை எடுத்துட்டு வாங்க, ஹெட் ஆபீஸிலிருந்து நிறைய புகார் வந்திருக்கிறது. அதெல்லாம் திரும்ப செக் பண்ணனும்” என்று கட்டளையிட்டவள் தன் லேப்டாப்பிற்கு கண்களை திருப்பினாள்.
கண்ணன் அதிர்ந்து தான் போனான். அவளை மிக அருகில் பார்த்தவன் ‘இவ கல்யாணியே தான்’ என நினைத்துப் பின், ‘இல்லை இவ என்ன கம்பீரமா தோரணையா இருக்கா பேர் என்னவோ மிஸஸ் கால்யான்னு சொன்னாங்களே’ மிதமிஞ்சிய குழப்பத்துடன் தன் சீட்டுக்கு வந்து அமர்ந்தான்.
அன்று மதியம் வரை ஆபீஸில் அனைவருக்கும் நிமிர முடியாத அளவுக்கு வேலை இருந்தது. அதுவரை சரிவர முடிக்காத வேலைகளை எல்லாம் அனைவரும் சரி பார்த்து முடித்து வைத்தனர்.
லன்ச் அவர் முடிந்ததும் கான்ஃபிரன்ஸ் ஹாலில் ஸ்டாவ்ஸ் அனைவரையும் மேனேஜர் கால்யா சந்தித்தாள். அவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறி அசத்தினாள்.
“நாம் எல்லோரும் நமது வேலையை சரியாக செய்தாலே நம் உறவு சுமுகமாக இருக்கும்” என்று பொதுவாக கூறிய கால்யா “செய்யும் வேலையை பிடிச்சு செய்யுங்க வேலையும் நல்லா முடியும் நாமும் நல்லா இருப்போம் “என்று பேசி முடித்தாள்.
மாலை வீடு திரும்பிய கண்ணன் தன் அம்மாவிடம், “ஏம்மா கல்யாணி இப்போ எங்கே இருக்கான்னு தெரியுமா அம்மா” என்று கேட்டான்.
அவன் கேள்வியில் திகைத்துப் போன அவன் அம்மா, “ஏண்டா இத்தனை வருஷம் கழிச்சு அவளைப் பற்றி உனக்கு என்ன கவலை” என்றார் அதிர்ச்சியுடன்.
“ஒண்ணும் இல்லைம்மா” என்று சலிப்புடன் பதில் கூறிய கண்ணனின் மனம் தன் வாழ்க்கை பக்கங்களை திரும்பி பார்த்தது.
“இருபத்து அஞ்சு வயசு தான் ஆகுது, எனக்கு எதுக்கும்மா இப்பவே கல்யாணம் செய்து வைப்பேன்னு அப்பா இப்படி பிடிவாதம் பிடிக்கிறாரு. அதுவும் எங்கேயோ பர பட்டிக்காட்டுல பொண்ணு பார்த்து வைச்சிருக்காரு” என கோபத்தில் தன் அம்மாவிடம் எரிந்து விழுந்தான் கண்ணன்.
“அது அவர் சிநேகிதர் பொண்ணுடா ரொம்ப நல்ல குடும்பம்” என்ற தன் அம்மாவிடம்
“ஏம்மா அவ பத்தாவது தான் படிச்சு இருக்கா நான் எம்.காம். முடிச்சு நல்ல கம்பெனியில் வேலையில இருக்கேன். எனக்கு போய் ஒரு கிராமத்து மக்கு பொண்ணை கட்டி வைக்கிறேன்னு சொல்றாறே” என்ற கண்ணனின் மறுப்புகளை அவன் தந்தை காதிலேயே வாங்காமல் ஒரு சுபயோக சுப தினத்தில் கண்ணனுக்கு கல்யாணியே மணம் முடித்து வைத்தார்.
பிடிக்காத மனைவி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று இருந்தான் கண்ணன். கல்யாணியோ தான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் புழுங்கி அவன் முன் வரவே தயங்கினாள்.
“சாக்கடை புழு மாதிரி இருந்தவ இப்போ எப்படி இப்படி மாறினா.” அவன் மனம் நிகழ் காலத்துக்கு தாவியது.
ஆனால் என் வாழ்க்கை ஏன் வெறுமையானது. பெண் பாவம் பொல்லாததுன்னு அம்மா சொல்வது உண்மை தானோ. பட்டிக்காட்டுப் பெண் என அவளை வெறுப்பேற்றி, முடிவில் என் ஆபீஸ் கொலீக் மதுவை விரும்புவதாகக் கூறி நான் அவளை டைவர்ஸ் செய்தது தவறோ.
இப்போது மதுவுடனான வாழ்க்கையும் சோபிக்கவில்லை. அல்ட்ரா மார்டனாக இருக்கும் அவள் என்னை பட்டிக்காட்டான் மாதிரி பண்ணாதீங்கன்னு சொல்றா. மாதத்தில் பாதி நாட்கள் ஆபீஸ் டூர் என்று போய் விடுகிறாள். திரும்பி வீட்டுக்கு வந்தாலும் என்னுடன் சண்டை போடுகிறாள். அவளையும் விட்டு நான் விலகினால் எனக்குத் தான் பொண்டாட்டியை வைத்து வாழத் தெரியவில்லைன்னு சொல்லுவாங்க.
எண்ணச் சுமையினால் கண்ணனுக்கு உடம்பு பாரமானது போல் இருந்தது. இருக்கறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க போன மாதிரி ஆயிடுச்சு. அவன் மனம் புலம்பி தவித்தது.
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கல்யாணி என்ற கால்யாவின் மனம் சிறகடித்து பின்னோக்கி பறந்தது. கண்ணன் கல்யாணி பெயர் பொருத்தம் எவ்வளவு அழகா இருக்கு என்று நினைத்ததெல்லாம் பொய்யாகிப் போனது.
“கல்யாணியாம் பேரைப் பாரு உனக்கு அறிவில்லையா முட்டாள் காமன்ஸென்ஸ் இருக்கா பட்டிகாடு” இது போன்ற வசவுகள் தான் நிஜம்.
திட்டு வாங்கி வாங்கி மனம் மரத்துப் போனது. அதுதான் அவன் இன்னொரு பெண்ணை விரும்புவதாக சொன்ன போது என்னை விட்டுவிடு நான் போறேன் என பேச செய்ததோ. அம்மாவும் அப்பாவும் தான் கலங்கிப் போயினர்.
ஆனால் கண்ணன் அவளை டிவோர்ஸ் செய்ததும் எந்த படிப்பு அவளுக்கு இல்லை என்று சொன்னானோ அது அவளுக்கு அபரிமிதமாக கிடைத்தது. அவள் சித்தப்பா உடன் டெல்லி சென்றதும் அவள் உலகமே மாறி விட்டது.
அவள் பெயர், உடைகள் மொழி என அனைத்தும் மாறியது. படித்து முடித்தபின் பெரிய கம்பெனியில் வேலை வெளிநாட்டு வாசம், சில வருடங்களில் வருணுடன் திருமணம் என முடிந்து தற்போது அவளுக்கு நிகர் அவளே என்று ஆகிவிட்டாள்.
என் வாழ்க்கையின் இந்த மாற்றத்திற்கு காரணம் கண்ணனின் உதாசீனமே. கால்யாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. போன் மணி அடிக்கவும் எண்ண அலைகள் அவளை விட்டு விலகியது.
போனில் வருணின் பெயரைப் பார்த்து மகிழ்ச்சியாக, “ஹாய் வருண்” என்றவளிடம் “ஹவ் வாஸ் த டே மை டியர்” என்றான் வருண் சிரித்து கொண்டே.
“ம்.. நல்லா இருந்தது. ஆனால் கண்ணன் தான் கொஞ்சம் அப்சட் ஆகி கன்ஃயூஸ் ஆகிட்டாரு” என்றாள் கால்யா.
“போக போக சரியாகிடும் விடும்மா ” என்ற வருணிடம் “இல்லைப்பா இதுக்கு ஏதாவது ஒரு மாற்று ஏற்பாடு செய்யணும்” என்றாள் கால்யா உறுதியுடன்.
மறுநாள் ஆபீஸ் வந்த கண்ணனைப் பார்த்தவர்கள், “இவருக்கு என்னாச்சு காய்ச்சல் வந்த மாதிரி இருக்காரே” என நினைத்தனர்.
சற்று நேரத்தில் கண்ணன் கால்யாவின் கேபினுக்குள் சென்றவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான்.
அவளிடம் “நீ…நீங்க கல்யாணி தானே” என்றான் தவிப்புடன்.
இதை எதிர்பார்த்திருந்த கால்யா ஒன்றும் புரியாதது போல் தோளைக் குலுக்கி “ஹு இஸ் கல்யாணி” என்றவள் “மிஸ்டர் கண்ணன் உங்களுக்கு உடம்பு சரியில்லையா, லீவு எடுத்துக்குறீங்களா” எனக் கேட்டாள்.
“இல்லை மேடம் நான் வரேன்” என்று கூறி தன் கேபினுக்குத் திரும்பினான் கண்ணன்.
மனக்குழப்பத்தில் அதுவரை வேலையில் தவறே செய்யாதவன் அன்று அடுக்கடுக்காக தவறுகள் செய்தான். இப்படியே போனால் வேறு வேலைதான் பார்க்கணும் போல என மனதுக்குள் ஓடியதில் துணுக்குற்றான்.
“ஏன் கல்யாணி இப்போ கால்யாவா மாறியதில் உனக்கு பொறாமையா” மனம் மேலும் இடித்துரைத்ததில் நொந்து போனான் கண்ணன்.
மறுநாள் ஆபீஸுக்கு வரவே விருப்பமில்லாமல் வந்தான். அவன் வந்த சிறிது நேரத்தில் கால்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. அவன் கைகளில் ஒரு கவரைக் கொடுத்து “கங்கிராட்ஸ்” என்றாள் கால்யா.
அனைவரும் கண்ணனை சூழ்ந்து கொண்டு கை குலுக்கி அவனுடைய பிரமோஷனுக்காக வாழ்த்தினர் .”சார் உங்களுக்கு செம லக் சார் பிரமோஷனுக்கு பிரமோஷன் வேற ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகாம உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நம்ம டெலிவரி ஆபீஸுக்கே நீங்க இன்சார்ஜ் ஆகிட்டீங்க சூப்பர் சார்” என்று வாழ்த்தினார் ஹெட் க்ளார்க் சற்று பொறாமையுடன்.
கண்ணன் பதிலாக அவருக்கு ஒரு அசட்டு புன்னகையை அளித்தான். என் நிலையறிந்து எனக்கு இந்த மாற்றத்தை கொடுத்த இவ என் முன்னாள் மனைவியின்னு வெளியே சொல்லவா முடியும் என நினைத்தவனின் கண்கள் பனித்தன.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings