இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மனம் முழுக்க குழப்பத்துடன் இருந்த சங்கீதாவுக்கு அம்மாவின் முன் இதைப் பற்றி டாக்டரிடம் பேச வேண்டாம் என்பது மட்டும் புரிய ..வீட்டுக்கு கிளம்பினார்கள். அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் மறுநாள் போய் டாக்டரை சந்தித்தாள்.
” டாக்டர் நீங்க அம்மாவுக்கு வந்திருக்கிறது அல்சைமர் நோய்னு சொன்னீங்க…எனக்கு சரியாப் புரியலை… அம்மாவுக்கு இதைப் பத்தி தெரிய வேணாம்னு தான் நேத்து உங்ககிட்ட நான் விவரமா கேட்டுக்கல ..”
“மிஸஸ் சங்கீதா.. நான் உங்களுக்கு இந்த நோயை பற்றி சொல்கிறேன்..உங்களுக்கு இதைப் பத்தின சரியான புரிதல் இருந்தால் தான் நீங்க உங்க அம்மாவை சரியானபடி கவனிக்க முடியும் ..உங்க அம்மாவுக்கு ” அல்சைமர் ” கொஞ்சம் காலத்திற்கு முன்னாடியே ஆரம்பிச்சிருக்கும் .நீங்க தான் கவனிக்காமல் விட்டிருக்கீங்க.”
” ஆமாம் டாக்டர் கொஞ்சம் காலமாகவே அவங்களுக்கு ஞாபக தடுமாற்றம் இருந்தது. நான் தான் வயசின் காரணமாக இருக்கும்னு நினைச்சு விட்டுட்டேன் …மத்தபடி அம்மா நல்ல ஆக்டிவான லேடி ..சுறுசுறுப்பா இருப்பாங்க. எனக்கு உதவியா வீட்ல நிறைய வேலைகள் செய்வாங்க. அதனால நான் அதை பெரிதாக எடுத்துக்கல .அம்மாக்கு வந்திருக்கிறது என்ன பாதிப்பு டாக்டர்? ” என்றாள் கவலையோடு .
” அல்சைமர் நோய் என்பது மூளையை பாதிக்கக்கூடிய ஒரு நரம்பியல் நிலைமா… இதுல மூளையில் உள்ள செல்கள் இறப்பதுனால நினைவாற்றல் இழக்கிற நிலை ஏற்படுகிறது.
இந்த நோய் பாதிப்பினால் மூளையின் பல பகுதிகளுக்கு இடையே உள்ள தசை தகவல்களை மூளை பரிமாற்றம் செய்ய முடியாது ..அதனாலதான் அவங்களுக்கு தெரிஞ்சவங்களையே அடையாளம் கண்டுபிடிக்கிறது கடினமா போயிடும் …நடக்கிற நிகழ்வுகளை நினைவுல வச்சுகிறதும் கஷ்டமா இருக்கும். ஒரு கட்டத்துல தான் எங்க இருக்கிறோம்ன்னு கூட மறந்துடும் . அவங்களுக்கு முழு நேரம் யார்உதவியாவது தேவைப்படும் சூழ்நிலை வந்துடும்.
இப்படிப்பட்டவங்கள நீங்க ஜாக்கிரதையா பாத்துக்கனும். அவங்க எப்போதும் உங்க கண்காணிப்பில் இருக்கனும்.
கடவுள் செயலா இப்போதைக்கு அவங்க இன்னும் அந்த நிலைமைக்கு வரல …இதுக்கு பெருசா ட்ரீட்மென்ட் ஒன்னும் இல்ல நான் சில மாத்திரை எழுதிக் கொடுக்கிறேன்.. ஏதாவது தொந்தரவு இருந்தால் கூட்டிட்டு வாங்க …
அவங்க கிட்ட நிறைய பேசுங்க ..அதுவும் முன்னாடி நடந்த சம்பவங்களை பத்தி பேசி நினைவுபடுத்திகிட்டு இருங்க …
அவங்க ரொட்டீனா செய்ற வேலைய செய்ய வேண்டாம்னு தடுக்காதீங்க… அப்படி செஞ்சீங்கன்னா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம் ..” டாக்டர் கூறியவற்றை கவனமாக கேட்டுக் கொண்டாள் …
” டாக்டர் அம்மாவை முழுசா இந்த நோயிலிருந்து குணப்படுத்த வழி இல்லையா? எவ்வளவு கம்பீரமா வேலைக்கு போயிட்டு வந்த மனுஷி எப்படி நிலைகுலஞ்சு போய் இருக்காங்க…அவங்கதான் என் வாழ்க்கையில எல்லாமே” என்று கூறியவள் கண் கலங்கினாள்.
“மிஸஸ் சங்கீதா நீங்க இடிஞ்சு போறதுல அர்த்தமில்லை. தைரியமா ஃபேஸ் பண்ணுங்க …நீங்க தைரியத்தை கைவிட்டுட்டீங்கன்னா அம்மாவை நல்லபடியா கவனிச்சுக்க முடியாது . முதுமையின் சாபக்கேடு இதுபோல உள்ள வியாதிகள் ..நான் முன்ன சொன்னது தான் ..கூடிய வரைக்கும் அம்மாகிட்ட பேசிகிட்டே இருங்க ..அவங்க எந்த இடத்துக்கு போனால் சந்தோஷப்படுவார்களோ அந்த இடத்துக்கு கூட்டிட்டு போங்க …அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களை நிறைய செய்ங்க ..அது ஓரளவு பலன் கொடுக்கும் “
தலையாட்டிய சங்கீதா டாக்டரிடம் விடைபெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். மனம் அலைபாய்ந்தது …இன்னும் அவளால் டாக்டர் கூறியவற்றை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை ..அம்மாவை நல்ல கவனிச்சுக்கனும் என்ற விஷயம் மட்டுமே அவள் மனது முழுக்க வியாபித்திருந்தது.
தான் இல்லாத நேரங்களில் லட்சுமியை அம்மாவுக்கு துணையாக இருக்கச் சொல்லி சொன்னாள்.
மறதி மட்டுமே பிரச்சனையாக இருக்க, அப்போதைக்கு பெரிதாக பிரச்சனை இல்லாமல் ஓடியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பழைய போட்டோ ஆல்பங்களை எடுத்து சம்பவங்களை கோர்வையாக பொறுமையாக சொல்லுவாள் சங்கீதா. ..அவளும், அம்மாவும் தனிமையில் இருக்கும்போது நடந்த நிகழ்வுகளை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருப்பாள் ..அவளுடைய முயற்சி ஓரளவு பலன் கொடுத்தாலும் நாளாக நாளாக நோயின் தீவிரம் கூடத்தான் செய்தது.
ஒருநாள் வேலை முடித்து சங்கீதா வர, வீடு திறந்திருந்தது. அம்மாவை காணவில்லை. முதல் முதலாக ஒரு பயம் மனதை கௌவியது..அப்பார்ட்மெண்ட் வாசலுக்குப் போய் செக்யூரிட்டியிடம் “அண்ணா அம்மாவை பார்த்தீங்களா?” என்று கேட்டாள்..
“இல்லம்மா நான் டீ குடிக்க கடைக்குப் போயிட்டு இப்பதான் வரேன்.. பார்க்கலையே..” என்று செக்யூரிட்டி கூற வெளியே வந்தாள் சங்கீதா .
அம்மாவை தேடிக்கொண்டே நடந்தாள். எதிரே வந்த ஸ்திரிகாரரிடம் “அண்ணா அம்மாவை பார்த்தீர்களா? “
“யாரு நம்ம டீச்சரம்மா தானே.. அரை மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தேன்மா… பெரியம்மா இந்த பக்கமா தான் போனாங்க. கையில ஒரு பை வச்சிருந்தாங்க” என்றார்.
அவர் காட்டிய திசையில் நடந்தவள், அந்த வழியில் வழக்கமாக வாங்கும் காய்கறி கடை, பல சரக்கு கடை என்று கேட்க ஒருவரும் அங்கு வரவில்லை என்று கூறிவிட்டனர்.
சங்கீதா சோர்ந்து போனாள். கடவுளே! அம்மாவை எங்கே போய் தேட ஒரு பயம் மனதை கௌவியது. அம்மாவுக்கு தானாக வீடு திரும்பக் கூட தெரியாதே .டாக்டர் சொன்னபடி தன் பேரு.. வீட்டு அட்ரஸ், எல்லாம் மறந்து போய் இருக்குமோ? அதுதான் வீட்டுக்கு வரத் தெரியாமல், எங்கோ தவித்துக் கொண்டிருக்கிறாளோ?
கண்ணில் நீர் நிரம்பியது. அம்மா நான் தப்பு பண்ணிட்டேன். உன்னை தனியா விட்டுட்டு போனது தப்பு .’கடவுளே எப்படியாவது அம்மாவை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடு’ என்று மனமுருக பிராத்தித்துக் கொண்டாள்.
கடவுள் என்றதும் ஒருவேளை கோயிலுக்கு போயிருப்பாளோ என்ற எண்ணம் தோன்றியதும், கோவிலைப் பார்க்க நடந்தாள். கோயிலுக்குள் நுழையும் போது வாசலில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான பாட்டி “அம்மா அம்மா இங்க சித்த வாங்க” என்று கூப்பிட்டாள். சங்கீதா அருகில் போனாள்.
“அம்மா நீங்க டீச்சரம்மா பொண்ணு தானே.. அவங்க எனக்கு தர்மம் போடுறேனு சொல்லி பர்சுல உள்ள துட்டு பூராவையும் போட்டுட்டாக .இந்தாங்கம்மா…” என்று கத்தையாய் பணத்தை அவள் கையில் கொடுக்க ..மனம் முழுக்க பாரம் அழுத்த சங்கீதா இதை வாங்கிக்கொண்டு ஒரு நூறு ரூபாய் நோட்டை அவளிடம் கொடுத்தாள்.
அம்மா ஒருவேளை கோயிலுக்குள்ள தான் உட்கார்ந்திருப்பா என்ற எண்ணம் மனதில் ஒரு ஓரத்தில் நிம்மதி கொடுக்க கோவிலுக்குள் உள்ளே செல்ல முற்பட்டாள்.
“அம்மா அம்மா உங்கம்மா கோயிலுக்குள்ள போகல.. எனக்கு தர்மம் போட்டுட்டு அப்படியே எதுத்தாப்புல போயிட்டாங்க “
” ரொம்ப நன்றி மா.. அம்மா எந்த பக்கம் போனாங்க தெரியுமா? “
“அதோ அந்த பக்கம் தான் டீச்சரம்மா போச்சு …” எதிர்த்த திசையை நோக்கி கையை காண்பித்தாள்.
அவள் காண்பித்த திசையில் வேகமாக நடந்தாள் சங்கீதா..
“கடவுளே அம்மாவை என் கண்ணில் காட்டு” என்று மனதிற்குள் வேண்டியபடி ..அந்தப் பெரிய தெருவில் கண்ணில் எதிர்ப்பட்ட வரை அம்மாவை காணும். இதுக்கு மேல அம்மாவால நடக்க முடியுமா? நடந்திருப்பாளா? என்ற ஒரு கணம் தோன்றினாலும் அடுத்த தெருவிலும் பார்த்து விடுவோம் என்று அடுத்த தெருவுக்குள் நுழைந்தாள்.
“அதோ அம்மா…” பார்வதி ரோட்டோர இட்லி கடை பக்கம் தரையில் அமர்ந்து தட்டில் இட்லியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அம்மாவை பார்த்த சந்தோஷம் மனதில் வந்தாலும், அவள் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்து சங்கீதா அதிர்ந்து போனாள்.
“என்னம்மா பண்ற இங்க..உங்களத் தேடிகிட்டு நான் ஊர் பூரா அலைகிறேன்…நீங்க தரையில உட்கார்ந்து …என்னம்மா இது ” என்று பதறினாள்.
கடைக்காரன்.. “இவக உங்க அம்மாவா… பாவம் ரொம்ப நேரமா கடையாண்ட நின்னுட்டிருந்துச்சு.. பசிக்குதான்னு கேட்டேன். தலைய ஆட்டுச்சு… அதான் தட்டுல இட்லி வச்சு கொடுத்தேன்” என்றான்
“எழுந்திரி.. வாம்மா போகலாம்..” என்றாள்.
“இரும்மா சாப்பிட்டுகிட்டிருக்குதில்ல..பாவம் பசி போல… சாப்பிட்டதும் கூட்டிட்டு போ ” என்றான்.
வேதனையோடு அவனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தாள். அம்மாவுக்கா இந்த நிலை குமறி…குமறி அழுதாள்..
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings