in , ,

தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 4) – தி. வள்ளி, திருநெல்வேலி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கணவன் மறைவு சங்கீதாவுக்கு பேரிழப்பாக இருந்தது. தாங்க முடியாத துயரத்தில் தவித்தாள். ரெண்டும் கெட்டான் வயசில் தந்தையை இழந்து நிற்கும் ரம்யாவை பார்க்க மனம் ஆறவில்லை ..

செந்திலுக்கு ஏற்பட்ட முடிவால் பார்வதி ரொம்பவே நிலை குலைந்து போனாள்..தன் கணவன் இறந்தபோது கூட அசராமல் மீண்டு வந்தவள், மருமகன் போனதும் மனதளவில் சோர்ந்து போனாள்.

தனக்குத்தான் அப்படி ஒரு கஷ்டம் வந்தது என்றால், தன் மகள் வாழ்க்கையிலும் அதே மாதிரி ஒரு சோதனையா என்று இடிந்து போனாள்.வயதின் மூப்பால் உடலும் தளர ஆரம்பித்தது.

எப்படியும் வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆகனும்…மனதை தேற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். ரம்யாவும், கல்லூரி போக ஆரம்பித்து விட்டாள் …

ரம்யாவும் அவளுக்கு அதிகம் சிரமம் வைக்கவில்லை. படிப்பில் சூட்டிக்கமாக இருந்தாள். நல்ல மதிப்பெண் பள்ளியில் வாங்கியதால், நல்ல கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. கல்லூரியிலும் நல்ல மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்தாள்.

பேத்தி நன்றாக படிப்பது குறித்து பார்வதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.. அதிகப்படியான செல்லம் ..அப்பா இல்லை என்ற குறை தெரியக்கூடாது என்று அம்மாவும், ஆச்சியும் போட்டி போட்டுக் கொண்டு அருமையாய் வளர்த்ததில் கொஞ்சம் பிடிவாதக்காரியாகவே வளர்ந்தாள் ரம்யா…

நினைத்ததை சாதிக்கும் குணம் இயல்பாகவே அவளிடம் இருந்தது. நன்றாக படித்ததில் கேம்பஸ்ஸில் செலக்ட்டாகி நல்ல கம்பெனியில் வேலையும் கிடைத்தது.

அடுத்து சில வருடங்கள் உருண்டோட …தன் கூடப் படிக்கும் சந்தரை ரம்யா கைகாட்டிய போது, சங்கீதாவும், பார்வதியும் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. சந்தோஷமாக அவள் திருமணத்தை நடத்தி வைத்தனர். அவள் சந்தோஷமே அவர்களுக்கு முக்கியமாக தோன்றியது.

ரம்யாவின் செலக்சனும் ஒன்றும் சோடை போகவில்லை சந்தர் மிக அருமையான மருமகனாக சங்கீதாவிற்கு வாய்த்தான்.ரம்யாவின் பிடிவாத குணத்திற்கு அவன் அனுசரித்துப் போய்விட்டதால் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை ஓடியது.

ஆண் ஒன்றும் பெண்ணொன்றுமாக குழந்தைகள் பிறக்க.. குடும்பத்தில் மீண்டும் குதூகலம் எட்டிப் பார்த்தது. இவர்கள் திருச்சியில் இருக்க.. ரம்யா தன் கணவன், குழந்தைகளுடன் சென்னையில் இருந்தாள். ரம்யா பிரசவத்திற்கு தாய் வீடு வந்ததோடு சரி, பிறகு பார்வதியும், சங்கீதாவும் மாறி, மாறி போய் ரம்யாவின் குழந்தைகளை பார்த்துக் கொண்டார்கள். 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் பார்வதிக்கு பிரச்சனை ஆரம்பித்தது. நல்ல ஞாபகத்தோடு சாதாரணமாக இருக்கும் போதே, திடீரென்று ஒரு ஞாபக தடுமாற்றம் வந்துவிடும். வருடம், தேதி, கிழமை, இதெல்லாம் நினைவில் இருக்காது . வயதிற்குண்டான பிரச்சனை என்று சங்கீதா கவலைப்படவில்லை.

அன்றும் அப்படித்தான்.. சாப்பிட்ட பிறகு ஹாலில் சங்கீதாவும், பார்வதியும் உட்கார்ந்தனர். கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டுடிருந்து விட்டு ..சங்கீதா எழுந்திரித்தாள்..

“சங்கீதா. நாம இன்னும் சாப்பிடலையே சாப்பிட்டுட்டுவோமா” என்றாள்.

“என்னம்மா நாம சாப்பிட்டுட்டு தான வந்து ஹால்ல உட்கார்ந்தோம் .. மறந்து போயிட்டியா?”

“ஓ அப்படியா.. நான் இன்னும் சாப்பிடலையோன்னு நினைச்சுக்கிட்டேன் …” என்றாள் சிரித்தபடி…

காலையில் வீடு பரபரப்பாக இருந்தது ..பார்வதி காய் வெட்டிக் கொடுக்க, சங்கீதா சமையலை முடித்துக் கொண்டிருந்தாள். ரம்யா, குழந்தைகளுடன் லீவுக்கு வந்திருந்தாள். அம்மாவும் மகளும், ஆளுக்கொரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமைத்த உணவை டிபன் பாக்ஸ்ஸில் எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினாள் சங்கீதா.. ரம்யா பிள்ளைகளுடன் வெளியே போயிருந்தாள்.

“அம்மா பூட்டிக்கோ. லஷ்மி வந்தா வேலையை பார்க்கச் சொல்லு. …ரம்யா, புள்ளைங்க துணி எல்லாம் வாஷிங் மெஷின்ல போட்டு எடுத்து காய போடச் சொல்லுமா ..”என்றபடி கீழே இறங்கினாள்.

அப்பார்ட்மெண்டின் கீழே பேங்க் காருக்காக காத்துக் கொண்டிருக்க…கேஸ் சிலிண்டர் டெலிவரி பையன் ..வண்டியை நிறுத்தி சிலிண்டரை இறக்கிக் கொண்டிருந்தான் ..சங்கீதா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..

“அக்கா உங்க வீட்டுக்கு நேத்திகே சிலிண்டர் டெலிவரி பண்ணிட்டேன்.பெரியம்மா இருந்தாங்க ..பாவம் கேஸு புத்தகத்தை கூட தேடுனாங்க. மேசையில தானே வைச்சிருப்பீங்க.. அப்புறம் நான் தான் எடுத்துக் கொடுத்தேன். ஆனா அக்கா பத்து வருஷமா உங்க வீட்டுக்கு வந்து போய்கிட்டிருக்கேன். நேத்து பாட்டியம்மா என்ன பாத்து…’ நீ யாரு புது பையனா இருக்கியே…உன்ன நான் இதுவர பாத்ததில்லை யேன்னாங்க… 

நான் “பெரியம்மா நான் வழக்கமா வர்ற ராசு” ன்னு சொல்ல, எனக்கு நினைவில்லைன்னு சொல்லிட்டாங்க. அதான் எனக்கு வருத்தமாப் போச்சு” போகிற போக்கில் அவன் சொல்லிக் கொண்டே மாடிப்படி ஏற சற்று அதிர்ந்தாள் சங்கீதா .’வயதானால் இப்படி தெரிந்த முகம் எல்லாம் மறந்து போகுமா.?’

அன்று முழுக்க மனம் சஞ்சலத்துடனே இருந்தது .இது வயதுக்கு உண்டான மறதியா.. இல்லை வேறு ஏதும் பிரச்சனையா? டாக்டரிடம் காண்பிப்போமா என்ற பலவித குழப்பத்தில் வந்தவளுக்கு …அம்மா டேபிளில் உட்கார்ந்து ரம்யாவின் மகனுக்கு ஸ்கூல் நோட்டில் வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். 

“பெரியாச்சி.. வரைய மட்டும் செய்ங்க ..பேர் எல்லாம் நான் எழுதிக்கிறேன். ஹாண்ட் ரைட்டிங் மாறுச்சுன்னா மேம் கண்டு பிடிச்சிடுவாங்க “

“ஏண்டா சஞ்சு… இது உனக்கே நியாயமா இருக்கா? நான் ஒரு ஸ்டிரிக்ட்டான டீச்சரா வேல பாத்தவ.. உன் ஸ்கூல் நோட்ல வரைய வச்சிருக்க …உங்க மிஸ் நீ வரைஞ்சேன்னு நினைக்கப் போறாங்க. ஆக மொத்தம் உன் திருட்டுத்தனத்துக்கு நானும் உடந்தை” என்று சிரித்தாள்.

சஞ்சலத்துடன் வந்த சங்கீதாவின் மனம் இதைப் பார்த்ததும் லேசானது. நான்தான் வீணா மனசை போட்டு குழப்பிக்கிறேன். அம்மா நார்மலாகத் தான் இருக்கிறாள். அச்சு பிரதி போல எவ்வளவு அழகாக நோட்டில் வரைந்திருக்கிறாள்.

ஒரு வாரம் வரை ரம்யாவும், குழந்தைகளும் வீட்டில் இருந்ததில் வேறு எந்த வேலையும் பார்க்க முடியவில்லை. நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது ..பார்வதியும் சங்கீதாவும் ரம்யாவுக்கு கொடுத்து விட பொடி வகைகள்.. புளிக்காய்ச்சல்.. பலகாரங்கள் எல்லாவற்றையும் தயார் செய்தார்கள் .

பிள்ளைகளும் ரம்யாவும் கிளம்பி விட வீடு வெறீச்சிட்டது .

மறுநாள் பேங்க் லீவு என்பதால் வீட்டில் இருந்தாள் சங்கீதா. அப்போது பார்மஸிலிருந்து வழக்கமாக பார்வதிக்கு வாங்கும் மாத்திரைகளை கொண்டு வந்து ஒரு பையன் கொடுத்தான் …”அம்மா 2000 ரூபாய் பில் ” என்றான்.

“நேத்து வருவேன்னு பணத்த ரெடியா எடுத்து அம்மாட்ட குடுத்துட்டுப் போனேன் ..”

“நேத்திக்கு வந்தேம்மா.. பெரியம்மா நல்ல தூங்கிகிட்டு இருந்தாங்க. கதவும் திறந்திருந்தது .வேலை பார்க்கிற லஷ்மி அம்மாவும் இல்ல, அதனால அவங்கள எழுப்ப வேண்டாம்னு போயிட்டேன் …”

“சரி சரி… இருப்பா பணம் தர்றேன் என்று மருந்தை வாங்கி வைத்துவிட்டு அம்மாவிடம் திரும்பி ” அம்மா மருந்து வந்தா வாங்குறதுக்குன்னு 2000 ரூபா உங்கிட்ட கொடுத்தேனே அத எங்கம்மா வச்சிருக்க? எடுத்து குடு..மா …”

பார்வதி பர்ஸை திறந்து பார்த்துட்டு “பணம் இல்லையே நான் நேத்தே கொடுத்துட்டேனே, இந்த பையனுக்கு “..என்று கூற அவன் அவசரமாக “பெரியம்மா நேத்து நீங்க தூங்கிகிட்டு இருந்தீங்க மருந்தே கொடுக்கல… நான் உங்ககிட்ட எங்க பணம் வாங்கினேன் ” என்றான் படபடப்பாக. 

“இல்லையே நான் கொடுத்தேனே, யாருக்கோ பணம் கொடுத்தேனே..உனக்கு கொடுக்கலையா அப்ப யார்கிட்ட கொடுத்தேன்? “

சங்கீதா நொந்து போனாள்..”சரிப்பா கொஞ்சம் இரு” என்று சொல்லிவிட்டு பீரோவில் இருந்து பணத்தை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து அவனை அனுப்பினாள். 

“அம்மாவிடம் நிதானமாக யோசித்துப் பாரும்மா ..2000 ரூபாயை யார்கிட்ட கொடுத்த ..லட்சுமியும் நேத்து லீவு ..”

“பணத்தை யார்கிட்ட கொடுத்தேன்னு நினைவில்லையே எனக்கு என்னமோ பண்ணுதுடி சங்கீதா …சில நேரம் எல்லாமே மறக்கறாப்புல இருக்கு …எவ்வளவு யோசிச்சுப் பாத்தாலும் நினைவுக்கு வர மாட்டேங்குது “

அம்மாவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று உள்ளுணர்வு உணர்த்த அன்று டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு அம்மாவை அழைத்துக் கொண்டுப் போனாள்.

எல்லாவற்றையும் கவனமாக கேட்ட டாக்டர் சில டெஸ்டுகளுக்கு எழுதிக் கொடுத்தார் …

“எதற்கும் ஒரு C.T… M.R.I. ஸ்கேன் எடுத்தால் நல்லது” என்று கூற, அதையும் ரெண்டு நாள் பேங்குக்கு லீவு போட்டுவிட்டு அலைந்து எடுத்துவிட்டு, திரும்ப டாக்டரிடம் அம்மாவை கூட்டிச் சென்றாள்.

எல்லா ரிசல்ட்களையும் ஆராய்ந்த டாக்டர் இது “அல்சீமர் “என்னும் மறதி நோயின் ஆரம்ப கட்டம்” என்று கூற அதிர்ந்து போனாள் சங்கீதா.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 3) – தி. வள்ளி, திருநெல்வேலி

    தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 5) – தி. வள்ளி, திருநெல்வேலி