எழுத்தாளர் வள்ளி எழுதிய சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நண்பகல் சூரியன் மேக கூட்டத்திற்குள்ளே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். ஆங்காங்கே கருப்பு குன்றுகளாய் சில கருமேகங்களும் வானில் காணப்பட்டன.. நேற்று போல் இன்று மதியமும் மழை வருமோ என்று எண்ணியபடி, கொடியில் கிடந்த துணிகளை எடுக்க விரைந்தாள் சங்கீதா .
துணிகளைக் கொண்டு வந்து உள்ளே போட்டவள், பக்கத்து ரூமை எட்டிப் பார்த்தாள். அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.பாவம் அம்மா ..எப்படி இருந்தவள் இப்படி கஷ்டப்படுகிறாளே என்ற எண்ணம் அவளை அழுத்தியது.
சங்கீதாவும், அவள் அம்மா பார்வதியும், ரம்யா வீட்டுக்கு.. சென்னைக்கு வந்து நான்கு நாட்கள் ஆகிறது ..அவர்கள் இருவரும் இருப்பது திருச்சியில் …சங்கீதா எப்படி பார்வதி அம்மாவின் ஒரே மகளோ அதேபோல ரம்யா சங்கீதாவின் ஒரே மகள். ரம்யாவின் கணவன் சந்தர் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு குழந்தைகள் …மூத்தவன் ராஜேஷ் ஆறாம் வகுப்பும், சின்னவள் அவந்திகா நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள் .
துணியைக் கொண்டு வந்து உள்ளே கட்டிலில் போட்டவள் ஹாலை எட்டிப் பார்த்தாள்.மகள் ரம்யாவும், அவள் கணவன் சந்தரும், ஹாலில் பிள்ளைகளோடு உட்கார்ந்து ஸ்கூல் ப்ராஜெக்ட் ஏதோ பண்ணிக் கொண்டிருந்தார்கள்.எப்படியும் அவர்கள் இப்போதைக்கு சாப்பிட வர மாட்டார்கள்.. அம்மாவும் தூங்குகிறாள்.. இந்த நேரத்தில் கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரிக்கலாம் என்று தன் ரூமுக்கு வந்தாள்.
இந்த ஆவணி வந்தால் அவளுக்கும் 62 வயது முடிகிறது. இப்போதெல்லாம் அதிக நேரம் நின்று வேலை செய்ய முடியவில்லை.. முதுகு வலி வந்து விடுகிறது..முன்பெல்லாம் காலையிலோ, மதியத்திலோ, ஒரு பத்து நிமிடம் கூட தூங்க மாட்டாள் சங்கீதா..
இப்போது வயது ஏற, ஏற , இரவை விட பகலில் தான் தூக்கம் அதிகம் வருகிறது …முதுமை தான் ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது ..உடலும் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது ..ஒரு சிறு புன்னகை உதட்டில் மலர கட்டிலில் படுத்தாள்.
காலையிலிருந்து வேலை பார்த்த அசதியில் படுத்தவுடன் லேசாக கண்ணயர்ந்தாள். தூங்கி ஒரு அரைமணி நேரம் கூட ஆயிருக்காது ரம்யாவின் குரல் அவளை எழுப்பியது …
“அம்ம்ம்ம்ம்மா ..” ரம்யாவின் அலறிலில் கண்ணயர்ந்த சங்கீதா படபடவென எழுந்து ஹாலுக்கு ஓடினாள் .ரம்யா கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
“அம்மா என்ன செஞ்சுகிட்டிருக்க… ஆச்சியை கவனமா பாத்துக்க மாட்டியா காமன் பாத்ரூம போய் பாரு.. அசிங்கம் பண்ணி வச்சிருக்கா… என் பிள்ளைங்க மட்டும் பாத்தாங்கன்னா ஜென்மத்துக்கும் அந்த பாத்ரூம யூஸ் பண்ண மாட்டாங்க…”
“விடு ரம்யா பாவம் பெரியவங்க வேணும்னு தெரிஞ்சா செய்றாங்க. அவங்க உடல் நிலைமை அப்படி.. இதை ஒரு பெரிய விஷயமா ஆகாத…கிளீன் பண்ணிக்கலாம்” என்றான் ரம்யாவின் கணவன் சந்தர் தன்மையாக .
அலங்க மலங்க முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் பார்வதி ..
.”அம்மா நீ ரூம்ல தூங்கிட்டு தானே இருந்த…எப்பம்மா எழுந்த…பாத்ரூம் வந்துச்சுன்னா என்னை எழுப்பி இருக்கலாமே …சரி சரி.. வா ” என்று மெல்ல கையைப் பிடித்து பாத்ரூமுக்கு அழைத்து போனாள் சங்கீதா.
ஒன்றும் பேசாமல் நின்ற அம்மாவை சுத்தப்படுத்தி, சேலை மாற்றி, கொண்டு வந்து ரூமில் படுக்க வைத்து விட்டு, பாத்ரூமை நன்றாக டெட்டால் போட்டு அலம்பி விட்டாள். ரம்யா கோபம் அடங்காமல் கத்திக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
முளுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது. இவளை தூக்கி வளர்த்த ஆச்சியை எப்படி இரக்கமில்லாமல் பேசுறா.. வெளிலிருந்து வந்த பையன் சந்தர் கூட இரக்கப்பபடுறான். சொந்த ஆச்சி என்ற பாசம் இவளுக்கு கொஞ்சம் கூட இல்லையே. இவ வீட்டுக்கு வந்தா தனக்கும், அம்மாவுக்கும் ஒரு மாறுதல் கிடைக்கும்னு நினச்சு, இங்க வந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று நினைத்துக் கொண்டாள்.
அதுவும் அம்மா இப்படி இருக்கும் நிலையில் அவளை கூட்டி வந்திருக்க வேண்டாம். ரம்யாவின் நடத்தையும் பேச்சும் ரொம்பவே சங்கீதாவுக்கு மன வருத்தத்தை உண்டாக்கியது. இருந்தாலும் என்ன செய்ய மகள் என்ற உறவு மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் தடுத்தது.
அம்மா என் பொறுப்பு அவள நான் தான் கவனிச்சுக்கனும் ரம்யாவை குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்ல ..ரம்யாவிடம் எப்போதுமே ஒரு சுயநலம் உண்டு ..அவளுக்கு கல்யாணமான புதுசில் வீட்டு வேலைகளை பாக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும், நானும், அம்மாவும் தேவைப்பட்டோம்.
எத்தனையோ தடவை சங்கீதாவுக்கு வேலையில் லீவு போட முடியாத சமயங்களில் பார்வதி அம்மாவே தனியாக வந்து ரம்யாவுக்கு ஒரு மாதம் கூட இருந்து உதவி செய்துவிட்டு போயிருக்கிறாள். இப்ப பிள்ளைங்க எல்லாம் வளந்தாச்சு. அவளுக்கு நானும் அம்மாவும் தேவையில்ல ..சங்கீதாவின் மனம் பலவாறாக எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்தது .
அம்மா தான் எப்படிப்பட்ட இரும்பு மனுஷி…அவளைப் போல ஒரு தைரியமான பெண்மணியை உதாரணத்திற்கு கூட காட்ட முடியாது…எவ்வளவு போராட்டங்களை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள்…என்னை வளர்க்க தான் எவ்வளவு போராடி இருப்பாள் …சங்கீதாவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன …
#######################
பெரிய மாளிகையா இல்லாவிட்டாலும் நல்ல வசதியான பெரிய வீடு தான் அவர்களது,,சொந்த வீடு, வயல் வரும்படி, அத்துடன் ரயில்வேயில் வேலை பார்த்த அப்பாவின் மாச சம்பளம் என்று வருமானத்திற்கு பஞ்சமில்லாம வாழ்க்கை இனிமையாகத் தான் நகர்ந்து கொண்டிருந்தது.
கதிரேசன்- பார்வதி தம்பதியின் ஒரே செல்ல மகள் சங்கீதா ..அதுவும் கதிரேசனுக்கு மகள் என்றால் உயிர். சங்கீதா என்ன கேட்டாலும் இல்லை என்று சொன்னது கிடையாது.
“பாரு.. என் மகளுக்கு சங்கீதான்னு ஏன் பெயர் வெச்சேன்னு தெரியுமா ..அவ சங்கீதத்துல சிறப்பா வரனும். பெரிய பாடகியா வரனும் பெரிய பெரிய மேடைல எல்லாம் பாடனும்” என்பான் ஆசையாக.
“ஆனாலும் கல்யாணம் பண்ணி கொடுத்து வேற வீட்டுக்கு போற பொண்ணு. ரொம்ப தான் ஆசை வைக்கக் கூடாது. அவளுக்கு ஏது புடிக்குமோ.. முடியுமோ அதை செய்யட்டும். நீங்க சங்கீதான்னு பெயர் வைச்சதுக்காக அவ சங்கீதம் எல்லாம் கத்துக்க முடியாது” என்பாள் போலி சிணுங்கலோடு .
“அப்பா நீங்க கவலைப்படாதீங்க. நான் பெரியவளாகி நிறைய படிச்சு பெரிய சிங்கராகி மேடைல எல்லாம் பாடுவேன். கதிரேசன் பொண்ணுன்னு என்னை பெருமையா பேசுவாங்க” என்று தன் மழலை மாறாத குரலில் மகள் சொல்லும்போது கதிரேசன் உச்சி குளிர்ந்து போவான்.
சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த பார்வதியின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் ..யார் கண் பட்டதோ குருவிக்கூடு மாதிரி இருந்த அந்த குடும்பத்தில் …இடி விழுந்தது போல் ஒரு நிகழ்வு.. நிலைகுலைந்து போனாள் பார்வதி ..
எழுத்தாளர் வள்ளி எழுதிய சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings