எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராகவனின் டேபிளுக்குள் ஒரு போஸ்ட் கார்டை பார்த்த ஞாபகம் இருந்தது பார்வதியம்மாளுக்கு.
அந்தக் கார்டை எடுத்து இரண்டே வரி, “என்னைய இங்கிருந்து கூட்டிட்டு போய் விடுடா… இந்த ஜெயில்ல இருந்து என்னைக் காப்பாத்துடா!”ன்னு எழுதி கிருஷ்ணனுக்கு அனுப்பி விட வேண்டியதுதான்!… கண்டிப்பாக அதைப் பார்த்ததும் கிருஷ்ணன் உடனே புறப்பட்டு வந்து என்னைக் கூட்டிக்கிட்டு போய் அவன் கூடவே கோயம்புத்தூரில் வெச்சுக்குவான்!… அவனுக்குத்தான் என் மேலே பாசம் ஜாஸ்தி!… இந்த ராகவனும் இருக்கானே?….
பேருக்குத்தான் மூத்த மகன்!… கொஞ்சம் கூட பாசமே இல்லை!… புருஷனும்… பொண்டாட்டியும் வேலைக்குப் போகணும்!… குழந்தையைப் பார்த்து ஆள் வேணும்!… அதுக்காகத்தான் என்னை இந்த ஆமதாபாத்தில் கொண்டு வந்து கூடவே வெச்சிட்டிருக்கான்!… பேரு மட்டும் “எங்க அம்மாவை நான்தான் வெச்சுக் காப்பாத்துறேன்!”னு!…”
“அட… பெத்த மகன்தான் அப்படின்னா… இந்த மருமகப் பொண்ணாவது என் கூட அனுசரிச்சு… பேசிப் பழகக் கூடாதா?… ஹும்… மிஷின் மாதிரிப் பொழைக்குதுக ரெண்டும்!… அய்ய… இந்த மாதிரி இருக்க என்னால முடியாதப்பா!…” தனக்கு தானே பேசியபடி குழந்தைக்கு டிரஸ் மாத்தினாள்.
காலிங் பெல் அழைத்தது.
“கோன் ஹை?” என்று கேட்டுக் கொண்டே சென்று கதவை திறந்தாள்.
லெண்டிங் லைப்ரரி லோகு நின்று கொண்டிருந்தான். “வாப்பா லோகு!… இந்த ஊர்ல…. எனக்குப் பேச்சுத் துணைக்கு கிடைச்சிருக்கற ஒரே தமிழ் ஆள் நீதான்!… என் மகனும் மருமகளும் காலையில் போனா ராத்திரி தான் வர்றாங்க!…மத்தவங்களோ… கரா…முரா…ன்னு இந்தில பேசறாங்க!..” என்றாள் பார்வதியம்மாள் முக மலர்ச்சியுடன்.
“இந்தாங்க பாட்டி…. இந்த ரெண்டு புக்கை வெச்சுகிட்டு… முந்தா நாளு கொடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுங்க!” என்றபடி இரண்டு தமிழப் பத்திரிக்கைகளை நீட்டினான். அதை வாங்கிச் சென்று உள்ளே வைத்து விட்டு பழைய புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்தாள்.
“என்ன பாட்டி… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?…
உடம்பு கிடம்பு சரியில்லையா?”
“உடம்புக்கு என்ன கேடு?… நல்லாத் தான் இருக்கு!… மனசுதான் சரியில்லை” என்றாள் சோகமாய்.
“என்ன பிரச்சனை சொல்லுங்க?” லோகு கேட்டான்.
“ஏதோ நீயாவது என்ன பிரச்சனை?ன்னு கேட்கறியே… அதுவே சந்தோஷம்பா”.
“அட என்ன பாட்டி நீங்க?… நாமெல்லாம் நம்ம சொந்த ஊரை விட்டு ஆயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி… இங்க வந்து பொழச்சுக்கிட்டு இருக்கோம்!… வந்த இடத்துல நம்ம ஊர்க்காரருக்கு ஒரு கஷ்டம்ன்னா நாம… “என்ன?… ஏது?”ன்னு விசாரிச்சு உதவி செஞ்சால் தானே நாளைக்கு நமக்கும் நாலு பேர் கூட வருவாங்க?” என்றான் சிறிதும் கபடமின்றி.
“என்ன செய்யறது தம்பி?… இந்தக் குழந்தையையும் பார்த்துக்கிட்டு, வீட்டு வேலைகளையும் செய்யறது ரொம்பச் சிரமமாயிருக்கு!… வயசாகிப் போச்சு இல்லையா?… உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது!… இந்தக் குழந்தையா?… தூங்கற நேரம் தவிர மத்த நேரமெல்லாம் இடுப்பை விட்டுக் கீழே இறங்கவே மாட்டேங்குது!… நானெல்லாம் பெரிய தொட்டிக்கட்டு வீட்டில்… சுதந்திரமா ஓடியாடிப் பொழச்சவ!… இந்தச் சின்ன ரூமுக்குள்ளார காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் அடைஞ்சே கிடக்கிறது ஜெயில் வாசமாட்டம் இருக்கு!”… சொல்லும் போதே தொண்டை கமறியது பார்வதியம்மாளுக்கு
.
“சரி…. மகன் கிட்டஸ் சொல்லிட்டு ஊருக்கே போயிஆ வேண்டியதுதானே?”.
“சொல்லிட்டேன் தம்பி!… சும்மா… “அதோ…. இதோ!”ன்னு போக்கு காட்டுறானே தவிர… பிடி கொடுத்து பேச மாட்டேங்குறான்!… என்னை ஊருக்கு திருப்பி அனுப்பிச்சிட்டா வீட்டு வேலைக்கும், குழந்தையை பாத்துக்குறதுக்கும் ஒரு வேலைக்காரியைப் போடணும்… செலவாகும்… அதுவும் இல்லாமல் நம்பிக்கையான ஆளு கிடைக்கிறது சந்தேகம்!… அதான் பயல் தயங்குறான்”.
“உண்மைதான் இந்த ஊர்ல நம்பிக்கையான வேலைக்காரி கிடைக்கிறதும் கஷ்டம்…. அப்படியே கிடைச்சாலும் அவங்க கேட்கிற சம்பளத்தை கொடுக்கிறதும் கஷ்டம்… அவ்வளவு சம்பளம் கேட்பாங்க” என்றான் லோகு.
“இவன் என்னைக் கூட்டிக்கிட்டுப் போகாட்டி என்னால இந்த ஊரிலிருந்து போக முடியாதா என்ன?… அதுக்குத்தான் ஒரு யோசனை வெச்சிருக்கேன்!… அதுக்கு நீதான் உதவி செய்யணும்”.
அவள் மேல் இரக்கப்பட்ட லோகு, “சரி பாட்டி சொல்லுங்க!… என்னால முடிஞ்சதைச் செய்யறேன்” என்றான்.
ராகவனுடைய டேபிளைக் குடைந்து, அந்தப் போஸ்ட் கார்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து, எழுதச் சொன்னாள்.
அவனும் அவள் சொன்ன செய்தியையும் கொடுத்த முகவரியையும் எழுதி முடித்தான்.
“நீயே போற வழியில் எங்கேயாவது போஸ்ட் பண்ணிடுப்பா” என்றாள்.
“சரி” என்று தலையாட்டியபடி அவன் புறப்பட்டுச் சென்றான்.
மனதில் இருந்து ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போலிருந்தது பார்வதியம்மாவிற்கு.
“எப்படியும் இந்தக் கார்டு ரெண்டு மூணு நாள்ல போய்ச் சேர்ந்திடும்!… அதுக்கப்புறம் கிருஷ்ணன் புறப்பட்டு இங்க வந்து சேர ஒரு நாலஞ்சு நாள் ஆயிடும்!… மொத்தத்துல இன்னும் அதிக பட்சம் பத்து நாளைக்குத்தான் இந்த அகமதாபாத் வாசம்” மனதிற்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் புகுந்து விட, உடம்பும் மனசும் புத்துணர்ச்சி பெற்றது போலிருந்தது பார்வதியம்மாவிற்கு.
****
கோயமுத்தூர்.
“போஸ்ட்” என்று கூறியபடி அந்தக் கார்டை வீசிச் சென்றான் போஸ்ட்மேன்.
வாரப் பத்திரிக்கையில் மூழ்கியிருந்த கிருஷ்ணனின் மனைவி உமா சலித்துக் கொண்டே எழுந்து சென்று அதை எடுத்துப் படித்தாள்.
படித்ததும் முகம் சுருங்கியது.
“இது என்னது?… இந்தக் கிழம் இங்கே வரப் பார்க்குது!… ம்ஹும்… அது ஆகாது!… என்ன பண்ணலாம்?” யோசித்தாள் உமா.
“கரெக்ட்!… இந்தக் கடிதம் வந்ததையே அவருக்குச் சொல்லக் கூடாது!… அப்படியே அமுக்கிட வேண்டியதுதான்!… இல்லைன்னா அடுத்த ரயிலைப் பிடிச்சு உடனே அகமதாபாத் புறப்பட்டுப் போயிடுவாரு மனுஷன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அந்த போஸ்ட் கார்டை சுக்கல் சுக்கலாய்க் கிழித்து காம்பவுண்டுக்கு வெளியே இருந்த பெரிய டிச்சில போட்டு விட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வீட்டிற்குள் திரும்பினாள் உமா.
*****
அகமதாபாத்.
“என்ன ஆச்சு?…. லெட்டர் போட்டு பத்து நாளைக்கும் மேல ஆச்சு… இன்னும் கிருஷ்ணனையும் காணோம்…. பதிலையும் காணோம்?… ஒருவேளை என் பையனுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ?… ஐயோ… ஆண்டவா!… என் மகனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது!… அவன் வரலேன்னாலும் பரவாயில்லை!… என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போகலேன்னாலும் பரவாயில்லை!… அவன் உடம்புக்கு எந்தைப் பிரச்சினையும் இல்லாமலிருக்கணும்!” என்று எல்லா தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்தது அந்தத் தாயுள்ளம்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings