2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“நான் பெரியார்ர பக்கத்துலயே பாத்துருக்கேன்.. அவருக்கு கை கொடுத்துருக்கேன்”
“அப்படியா தாத்தா..” காயத்ரி தன் தாத்தா பேசுவதை ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆமா கண்ணு.. அவரு ரொம்ப எளிமையா இருப்பாரு”
‘போன வாரம் பேசுறப்ப எம். ஜி. ஆர பார்த்தேன்னு சொன்ன தாத்தா”
“அவரையும் தான் பார்த்திருக்கேன்”
“சூப்பர் தாத்தா நீ”
“இன்னும் பல தலைவர பார்த்திருக்கேன்.. அண்ணாவ பார்த்துருக்கேன்… ஏன் இந்திரா காந்தி, ராஜிவ் காந்திய கூட பார்த்துருக்கேன்.. அப்போல்லாம் அரசியல்வாதிங்க எப்படி இருந்தாங்க தெரியுமா.. அரசியல் எப்படி இருந்தது தெரியுமா”
“ஆரம்பிச்சிட்டாரா உங்க தாத்தா” காயத்ரியின் தந்தை உள்ளிருந்து வெளியே பேசிக் கொண்டே வந்தார்
“அப்பா தாத்தா என் புக்ல வந்த லீடர்ஸ பார்த்தேன்னு சொல்றாருப்பா”
“என் அப்பா சுதந்திரம் வாங்கிறதுக்கு முன்னாடியே பொறந்துட்டாரு.. அதனால உன் புக்ல வர நிறைய தலைவர்கள பார்த்துருப்பாரு”
“காந்தி சாகுறப்ப எனக்கு விவரம் தெரிற வயசு தான்”
“அப்போ அவர் கதைலாம் உன்கிட்டயே கேட்டுப்பனே தாத்தா”
“அப்புறம் வந்து கேட்டுக்கோ.. இப்போ டியூசனுக்கு டைம் ஆச்சு காயு.. வா போலாம்”
தன் மகளை அழைத்து சென்றார் சரவணன். தன்னிடம் இருந்து விடைபெற்று கிளம்பும் மகனையும் பேத்தியையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் பெருமாள் தாத்தா.
பெருமாள் தாத்தாவிற்கு வயது எண்பத்தி ஏழு. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் பொழுது அவருக்கு வயது பதினொன்று. உண்மையில் பல தலைவர்களை பார்த்து வளந்தவர் தான்.
சராசரியான உயரம். ஒல்லியான உடல்வாகு. முழுவதும் நரைத்த ஆனாலும் அடர்த்தியான தலைமுடி. உடல் முழுவதும் சுருக்கம் இருந்தாலும் அதையும் தாண்டிய கம்பீர தோற்றம்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாகத் தான் இருப்பார். அதற்கு காரணம் தான் தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி தான் என்பார்.
“காலைல நேரமா எழுந்திருங்க.. என்னை பாத்தியா நான் மட்டும் நடக்கலன்னா இந்நேரம் படுத்துர்ப்பேன்.. நடை தான் உடம்பு வலி இல்லாம என்னை வெச்சிருக்கு” பேரன் பேத்திகளிடம் இதை அடிக்கடி கூறுவார்
பெருமாள் தாத்தா அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். குளிர் இல்லையெனில் அப்பொழுதே வெளியில் கிளம்புவார். குளிர் இருந்தால் ஆறு மணிக்கு கிளம்புவார். ஒரு மணி நேரம் நடப்பார். எவ்வளவு தூரம் செல்லத் தோன்றுகிறதோ அவ்வளவு தூரம் செல்வார். நடந்து முடித்து வீட்டிற்கு வந்ததும் போதும் என்று சோர்ந்து அமர மாட்டார். அடுத்த வேலைகளில் ஈடுபட துவங்குவார்.
பெருமாள் தாத்தாவின் மனைவி இரத்தினாம்பாள் இறந்து இருபத்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. இத்தனை வருடங்களாக அவர் துணிகளை அவரே தான் துவைத்து கொள்வார். அவர் அறையை சுத்தம் செய்வது அவர் பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்வது என்று தன் வேலைகளை தானே செய்து கொள்வார்.
பூர்வீக வீட்டில் வாழ்ந்து வருகிறார். தன் மனைவி இறந்ததில் இருந்து நான்கு மகன்களின் வீட்டில் இருந்தும் வரும் உணவினை உண்டு வருகிறார். இவராக போய் யார் வீட்டிலும் உண்ண மாட்டார். அவர்களே ஒவ்வொருத்தராக நேரம் பார்த்து உணவு வைத்து விடுவார்கள். மருத்துவ செலவிற்கு முதியோர் உதவித் தொகையை பயன்படுத்திக் கொள்வார். அதில்லாமல் யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பணம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பது மகன்களின் யூகம். எப்பொழுது பேரன் பேத்திகள் ஆசீர்வாதம் வாங்க போனாலும் ஐந்நூறு ரூபாய் நோட்டு தாளாக வரும்.
அவருடைய பொழுதுபோக்கு என்றால் தொலைகாட்சி பார்ப்பது எஞ்சிய நேரத்தில் இப்படி பேரன் பேத்திகளிடம் தான் கடந்து வந்த நிகழ்வுகளை பகிர்வதுமாக இருப்பார்.
ஒருமுறை காயத்ரி தாத்தாவின் பழைய போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் அவர் தாஜ்மஹாலுக்கு கீழ் அமர்ந்து எடுத்திருந்த புகைப்படம் இருந்தது. அவளுக்கு ஒரே ஆச்சர்யம். அவள் தாத்தாவிடம் சென்று இதுபற்றி கேட்டாள்.
“தாத்தா தாஜ்மஹால் உலக அதிசயம் தான அங்கயும் நீ போயிருக்கியா”
“ஓ.. முப்பது வருஷத்துக்கு முன்னாடி போனோம்”
“எப்படி போன தாத்தா”
“பஸ்ல தான் போனோம்”
“என்னது இங்க இருந்து அவ்ளோ தூரம் பஸ்ல போனீங்களா”
“ஆமாடா.. அம்பது பேர் ஆள் சேர்த்தி கூட்டிட்டுப் போனாங்க.. எங்களுக்கு பஸ்.. பின்னாடி எங்களுக்கு சமைக்க தேவையான பொருள்லாம் லாரில வரும். முப்பது நாள் இப்படியே பஸ்ல போய்ட்டு வந்தோம்”
“முப்பது நாளா.. அவ்ளோ நாள் உனக்கு ஆபீஸ்ல எப்படி லீவு கொடுத்தாங்க தாத்தா” காயத்ரி ஆவலாக கேட்டாள்
“ஆபீஸ்சா… நான் எங்க அங்கலாம் போனேன்.. சின்ன வயசுல விவசாயம்.. காட்டுல வேலை செய்வோம். கை கால்லாம் அதான் இன்னும் தெம்பா இருக்கேன். அப்புறம் தறி ஓட்டுனேன். பசங்கள வளத்தினேன். நான் போறப்ப பணத்துக்கு கஷ்டம் தான் பாட்டி தான் பரவால்ல நான் பாத்துக்கிறேன் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வெச்சா”
“அப்படியா தாத்தா”
“எப்படியோ சமாளிச்சா ஒரு மாசம்.. நான் எங்க இருக்கேன் என்ன பண்றேன்னு கவலைப்படாம.. என் பெரிய பையனும் அதான் உன் அப்பனும் அப்போ தறி ஓட்டுனான்”
“எங்கலாம் போனீங்க தாத்தா”
“டெல்லிக்கு போனோம்.. இந்தியா கேட், செங்கோட்டை எல்லாம் சுத்திட்டு ஆக்ரா தாஜ்மஹால் ஆக்ரா கோட்டை, முக்கியமா காசி அப்புறம் கங்கா யமுனா சரஸ்வதி மூணு சேர்ற ட்ரிவேணி சங்கமம், அப்புறம் கேதர்நாத் பத்ரிநாத் இன்னும் கூட வழில நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க.. மறந்துட்டேன் பேரெல்லாம்”
“இவ்ளோ இடம் பாத்துருக்கியா.. சூப்பர் தாத்தா நீ.. சாப்பாடுலாம் நீங்களே செஞ்சிக்கிடிங்களா..”
“ஆமா.. அரிசி பருப்பு வெங்காயம் தக்காளி எல்லாம் கொண்டு வந்தாங்க.. ஆரியம் கொண்டு வந்தாங்க களி கூழும் செய்வாங்க.. கோதுமை இருந்தது சப்பாத்தி சுடுவாங்க.. அப்பப்ப போற ஊர்லயும் ஏதாவது வாங்கிப்போம்.. முப்பத்து நாளும் கடைலயே சாப்ட்டா உடம்பு ஒதுக்காதுல”
“காயத்ரி டிபன் ரெடி.. வா சாப்பிடலாம்” காயத்ரியின் அம்மா குரல் கேட்டது.
“தாத்தா நீ சொல்ல சொல்ல எனக்கு பசி எடுத்தது.. கரெக்ட்டா அம்மாவும் கூப்பட்றாங்க.. நான் போய் சாப்பிடுறேன் தாத்தா”
“போ நேரத்துக்கு சாப்பிடு.. ஓடு”
காயத்ரி அங்கிருந்து கிளம்பினாள்.
இதே கதையை அவ்வப்போது மற்ற பேரன் பேத்திகளிடமும் பெருமாள் தாத்தா கூறுவார்.
தன் சின்ன வயது கதை, திருமணம் நடந்த கதை, பிள்ளைகளை வளர்த்த கதை மேலும் மனைவி இல்லாத வாழ்க்கையிலும் தானே எல்லாம் செய்து கொள்ளும் நிலை, நடைப்பயிற்சியின் சிறப்பு இப்படி பலவற்றை பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்.
சில நேரம் ஜோசிய குறிப்புகளும் கூறுவார்.
“உன் அப்பன் ராசிக்கு உன் ராசிக்கு எல்லாம் சூப்பரா இருக்கு.. இனிமே எந்த கஷ்டமும் உங்களுக்கு இல்லை. நல்லா இருப்பிங்க” என்பார்
தான் பேசுவதை தன் பேரன் பேத்திகள் பிடித்து கேட்கிறார்களா பிடிக்காமல் கேட்கிறார்களா என்றெல்லாம் குழப்பிக் கொள்ள மாட்டார். மனதிற்கு தோன்றுவதை பேசிக்கொண்டே இருப்பார்.
காயத்ரியின் தங்கை ஸ்ரீநிதி தன் பிறந்தநாள் அன்று தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்க போவதாக அப்பாவிடம் கூறினாள்.
“எதுக்காக இவ்ளோ வேகமாக போற ஸ்ரீ.. தாத்தா ஆசீர்வாதம் பண்ணி பர்த்டேக்கு காசு தருவாரே அதுக்காகவா” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் சரவணன்.
“இல்லை அப்பா.. தாத்தா மாதிரி ஹெல்த்தியா ஹாப்பியா நிறைய வருஷம் வாழணும்னு ஆசீர்வாதம் வாங்க போறேன்”.
“நானும் தாத்தா பார்த்துட்டு வரேன்பா” பின்னாடியே காயத்ரியும் ஓடினாள்.
தன் மகள்களை நினைத்து பெருமை கொண்டார் சரவணன். அதையும் தாண்டி தன் தந்தை தாத்தாவாக பேரன் பேத்திகள் மனதை வென்று விட்டார் என்பதை நினைத்து நெகிழ்ந்து போனார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings