எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராமச்சந்திரன் தன் பூர்வீக கிராமமான கே.வி.குப்பத்தில் வந்து நிரந்தரமாக செட்டில் ஆக வேண்டும் என்று வந்து விட்டார். எழுபது வயது பெரியவர். அவரது ஒரே மகன் ரிஷி அவரை லீனியர் சிட்டிசன் ஹோமில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினான்.
அவரோ “வேண்டாம், என் கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்த மண்ணில் என் கடைசிக் காலத்தில் வாழத் தான் விரும்புகிறேன்“ என்று உறுதியாகக் கூறி விட்டார்.
“அப்பா, வயதான உங்களை, பெற்ற மகன் இருந்தும் தனியாக அனுப்பி விட்டேன்‘ என்று அங்குள்ள நம் உறவினர்கள் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்களா?“ என்றான் ரிஷி.
“யாரும் தவறாக நினைக்க நான் அனுமதிக்க மாட்டேன். கிராமத்தில் நம் வீடு, விளக்கேற்றுவதற்குக் கூட ஆள் இல்லாமல் பாழாய் கிடக்கிறது. நிலத்தைப் பயிர் செய்யும் குத்தகைக்காரன் ஒழுங்காகப் பணத்தைத் தருவதில்லை. ஒரு பழமொழி சொல்வார்களே ‘பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்’ என்று. அப்படித்தான் தான் இருக்கிறது நம் நிலமை” என்றார் ராமச்சந்திரன்.
“அப்பா, நம் வீட்டையும் நிலத்தையும் காப்பாற்ற மட்டும்தான் நம் கிராமத்திற்குப போகிறீர்கள் என்றால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் என்னிடமோ இல்லை என் மனைவி அமுதாவிடமோ ஏதாவது மனக்கஷ்டம் என்றால் மனம் திறந்து சொல்லிவிடுங்கள். நான் இங்கேயே ஏதாவது ஒரு நல்ல ஹோமில் பணம் கட்டி சேர்த்து விடுகிறேன்” என்றான் ரிஷி. எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா.
“எனக்கு உங்கள் இருவரிடமும் எந்த மனக்கசப்பும் கிடையாது. நம் சொத்துக்களை நாம் தானே காப்பாற்ற வேண்டும், அதற்காகத்தான் போகிறேன்“ என்றார் ராமச்சந்திரன்.
அமுதாவிடமும் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினார். அவள் வழக்கம் போல் வெர்ட்டிகலாகவும் இல்லாமல், ஹரிசான்டலாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாகத் தலையசைத்தாள். அதையெல்லாம் அவர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.
சென்னையில் இருந்து ரிஷி தான் கே.வி.குப்பத்து வீட்டிற்கு அழைத்து வந்தான். அங்குள்ள வீட்டின் சாவி அவருடைய நண்பன் சங்கரனிடம் தான் கொடுத்து வைத்திருந்தார். ராமச்சந்திரன் இப்போது பெர்மனென்ட்டாக அங்கேயே வந்து தங்கப் போகிறார் என்றதும், அவருடைய நண்பர்கள் நால்வருக்கும் மிகவும் சந்தோஷம்.
ரிஷி ஒரு நாள் தந்தையுடன் தங்கி விட்டு, எல்லோரிடமும் விடை பெற்று சென்னையில் அவனுடைய வீட்டிற்குச் சென்றான்.
ராமச்சந்திரன், சங்கரன், சுந்தரம், இக்பால் நால்வரும் அந்த ஊர் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். நால்வரும் நல்ல நண்பர்கள். சங்கரனும், இக்பாலும் தான் மனைவி மக்களோடு இருப்பவர்கள். ராமச்சந்திரனும், சுந்தரமும் மனைவியை இழந்தவர்கள். ஆனால் அவர்கள் நால்வர் நட்பும் ஜாதி, மதங்களைக் கடந்தது.
வீடெல்லாம் சுத்தமாக பெருக்கி, துடைத்து வைத்திருக்கிறார்கள். பெயிண்ட்டும் அடித்திருந்தார்கள். ராமச்சந்திரன் எல்லா வேலைகளுக்கும் பணமும் கொடுத்து விட்டார்.
வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம் தான் காடு போல இருந்தது. அவர் நிலத்தில் வேலை செய்யும் ஆட்களைக் கொண்டு தோட்டத்தில் பூசைக்கு வேண்டிய பூச்செடிகளும், காய்கறி செடிகளும். பின்னால் முருங்கை மரமும், தென்னை மரமும் வைத்தார்.
இவருக்குத் தேவையான சமையலை இரண்டு மணி நேரத்தில் முடித்துக் கொள்வார். மேல் வேலைக்கு ஒரு வயதான பாட்டியை வைத்துக் கொண்டார். இவர் அந்தப் பாட்டிக்கும் சேர்த்தே சாப்பாடு செய்வதால் ஆதரவில்லாத அந்த பாட்டி, அங்கேயே சாப்பிட்டு விட்டுத் தெருத் திண்ணையில் படுத்துக் கொள்வாள்.
“பிள்ளை, மருமகள் எல்லோரும் இருந்தும் இப்படித் தனிமையில் இருக்க வேண்டுமா? தனியாக இருப்பது கஷ்டமாக இல்லையா? நாங்கள் வேண்டுமானால் தினம் ஒருவர் வந்து உன்னுடன் இருக்கட்டுமா?” என்றார்கள் நண்பர்கள்.
“தனியாக இருப்பது எனக்கொன்றும் கஷ்டமாக இல்லை. மேலும் நான் எங்கே தனியாக இருக்கிறேன்? மேல் வேலை செய்யும் பாட்டி இருக்கிறார், அழகான தோட்டம் இருக்கிறது. ஒவ்வொரு செடியில் பூக்கும் பூக்களையும், காய்க்கும் காய்களையும் பார்த்தால் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது“ என்றார் ராமச்சந்திரன்.
“இருந்தாலும் பிள்ளை, மருமகளும் பேசிப் பொழுதைக் கழிப்பது போல் ஆகுமா?” என்று நண்பர்கள் இவர் வாயை நோண்டினார்கள்.
அவர்கள் இருப்பது நாகரிகம் அவ்வளவாகப் பரவாத கிராமம். இதை நாகரிகம் என்பதைவிட சுயநலம் பரவாத என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நம் சென்னையில் இப்போது பாசம் எல்லாம் கூட பிஸினஸ் ஆகிவிட்டதல்லவா! அதை விளக்கிச் சொன்னால் நம் அந்தரங்க வாழ்க்கையைச் சொன்னது போலத் தான்.
அமுதாவை முதன்முதலில் பெண் பார்க்கப் போகும்போது, “எங்கள் பெண் மிகவும் அமைதியானவள். வாயைத் திறந்து பேசமாட்டாள்” என்றார்கள்.
ரிஷி எதையும் மறைக்க மாட்டான், கலகலப்பானவன். இரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமாகத்தான் இருக்கும் என்று சந்தோஷப்பட்டார் ராமச்சந்திரன். ஆனால் ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற பழமொழி அமுதாவிற்குத் தான் பொருந்தும்.
ராமச்சந்திரன் படித்ததெல்லாம் ‘மௌனமாக இருப்பதால் உறவுகள் பிரிவதில்லை; வளரும்’ என்றுதான். ஆனால் அமுதா மௌனமாக இருந்தே ராமச்சந்திரனை வெறுப்படைய வைத்தாள். அவருடன் முகம் கொடுத்துப் பேசமாட்டாள். வாய்ச் சண்டையில்லாமல் மௌனமாக இருந்தே உறவை வெட்டிவிடலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறாள்.
எதற்கும் பதிலும் சொல்லமாட்டாள். அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ,அவள் போனி டெய்லை ஒரு ஆட்டம் ஆட்டிக் கொண்டு போய்விடுவாள். ரிஷி இதெல்லாவற்றையும் கவனித்திருக்கிறான் என்று சில காலம் கடந்த பின்னர் தான் தெரிந்தது.
ஆனால் அவன் எதையும் வாயைத்திறந்து கேட்கவில்லை. கோபம் வந்து அப்பாவுடன் யாராவது சண்டை போட்டால் கூட பொறுத்துக் கொள்வான், ஆனால் அலட்சியப் படுத்தினால் விஸ்வாமித்திரனாகி விடுவான்.
ஒரு நாள் தற்செயலாக அவர்கள் படுக்கை அறையை கடந்து போக நேரிட்டது. அப்போது ரிஷி மனைவியிடம் ஏதோ காரசாரமான விவாத்த்தில் இருந்தான் . பதிலுக்கு அவள் பலமாக கத்திப் பேசினாள்.
“உங்கள் அப்பாவிடமிருந்து பென்ஷன் பணம் முழுசாக வாங்குகிறீர்களா? என் பணத்தை மட்டும் ஏன் கேட்க வேண்டும்?” என்றும் இன்னும் பலவாறும் அவனைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
ராமச்சந்திரனுக்கு மிகவும் ஆச்சரியம். தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ,அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்து விட்டுப் போகும் அந்த அமுதாவா இப்படிக் காட்டுக் கத்தலாக கத்துகிறாள் என்று. மனிதர்களுக்குள் பல முகம் என்று கேள்விப்பட்டு இருக்கிறார், இப்போது நேரில் பார்த்து விட்டார்.
ராமச்சந்திரனுக்கு ரிஷியை நினைத்தால்தான் பரிதாபமாக இருந்தது. அவள் பால் கோபத்தை வெளியிட்டால், குடும்பம் பிரிந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருவருக்குமே இருந்தது.
அதனால் தான் இந்த வெளி நடப்பு. இதையெல்லாம் நண்பர்களிடம் சொல்ல முடியுமா? ‘மல்லாந்து துப்பினால் மார் மேல்’ என்று சொல்வார்கள் இல்லையா?
அமுதா அந்த வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அவருக்கு அது தன் வீடு என்ற உணர்வு போய், யார் வீட்டிலோ விருந்தாளி என்ற எண்ணம் வந்து விட்டது. இப்போது எல்லா மனஅழுத்தங்களலிருந்தும் விடுதலை.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனிதர்களைவிட வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு, காலையில் எழுந்து வந்தால் ’குட் மார்னிங்‘ சொல்வதுபோல் காற்றில் தலையசைத்து மணம் பரப்பும் இந்தச் செடிகள் அவருக்கு இன்பத்தைக் கொடுத்தது. இதையெல்லாம் விடவா வேறு இன்பம் வேண்டும்?
ராமச்சந்திரன் தனிமையில் இனிமை கண்டார். இனிமை மட்டுமா? நிம்மதியும்தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்று அவஸ்தைபட்டுக் கொண்டிருந்த ரிஷிக்கும் விடுதலை. மாமனார் என்ற உறவே வேண்டாம் என்று நினைத்திருந்த அமுதாவிற்கும் விடுதலை. வயதானவர்களுக்கு தனிமையும் இனிமையே!
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings