எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘வர வர சாப்பாட்ட வாயில வைக்க முடியறதில்ல, ஒண்ணு உப்பு ஜாஸ்தியா… இல்லைன்னா உப்பே இல்லாம..’ மதுமிதாவை திட்டிக்கொண்டிருந்தான் ராஜேஷ்.
‘இப்பல்லாம் அடிக்கடி தலை வலிக்குதுங்க…தாங்கவே முடியலை…’ மெல்லிய குரலில் சொன்னாள்.
‘அதுக்குத்தான் போனமாசமே டாக்டரப்பாத்து செக்கப் பண்ணிட்டோமே… ஒனக்கு ஒடம்புல எந்தப்பிரச்சினையும் இல்லையே… அப்பறம் எப்படி தலைவலி?’
‘தெரியலைங்க…ஆனா முன்னவிட அடிக்கடி வருது…வந்தா வலி பின்னியெடுக்குது’. எல்லா பரிசோதனைகளிலும் ஒன்றுமில்லை என்றுதானே வந்தது. இது என்னவாக இருக்கும்?’ யோசித்துக்கொண்டே காலுறையை அணிந்துகொண்டான் ராஜேஷ்.
மதுமிதா சமையலறைக்குள் ஓடி மதிய உணவுக்கான பாக்ஸை எடுத்துவந்து நீட்டினாள். ‘வேண்டாம் வேண்டாம், காண்டீனிலயே சாப்பிட்டுக்கறேன்’ என்றுவிட்டு வெளியே வந்து காருக்குள் ஏறினான். கார் போனதை கவனிக்காதது போல முன்கதவில் சாய்ந்து நின்று ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள் மதுமிதா.
ராஜேஷ்! ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை சொந்தமாக வைத்திருந்தான். நகரத்தின் பிரபல ஆயுர்வேத மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்து மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பொறுப்பு.
ஆயுர்வேத சிகிச்சைக்காக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அந்த மருத்துவமனையில் தங்குவது வழக்கம். அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நட்பு பாராட்டுவது அவனுக்கு எளிதாக இருந்தது. ஞாயிற்றுககிழமைகளில் கூட வீட்டில் தங்கமுடியாத அளவிற்கு பிஸியாக இருந்தான்.
கல்யாணத்திற்குப் பிறகு இந்த வீட்டிற்கு வந்த மதுமிதா ஆச்சரியப்பட்டுப்போனாள். பிரதான வாயில் கடந்ததும் நீரூற்று போன்ற வடிவமைப்புள்ள பாறையும் விசாலமான பூந்தோட்டமும் இருந்தது. தோட்டவேலைக்கு நான்குபேர் இருந்தனர். அத்தனை நாகரீக வசதிகளுடன் இருந்த வீடு பிரம்மிப்பை கூட்டியது.
சமையலுக்கு ஆள்வேண்டாம் என்றிருந்தாள் மதுமிதா. நன்றாக சமைப்பாள். ராஜேஷுக்கு அவளின் சமையலும் வீட்டை ஒழுங்காக வைத்திருக்கும் நேர்த்தியும் பிடித்திருந்தது.
மதுமிதாவிற்கு அவனது அருகாமை போதுமானதாக இல்லை என்பதைத்தவிர குறை இருக்கவில்லை. ஆனாலும் அவனது தொழிலின் தன்மையை உணர்ந்து வெறுமையை பழக்கமாக்கிக் கொண்டாள். தனிமை அவளுக்குக் கொடுமையான இனிமையைத் தந்திருந்தது.
‘ஆ!’ கதவையொட்டி அப்படியே சரிந்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தாள். தலைவலி வாட்டியது. எழுந்து கதவை மூடிவிட்டு படுக்கையறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள். உணவுமேசை மேல் காலை உணவும் ராஜேஷின் மதிய உணவும் அப்படியே கிடந்தது. தூங்கிப்போனாள்.
‘டிங்..டிங்’ அழைப்புமணி ஒலித்தது. திடுக்கிட்டெழுந்து ஓடி கதவைத் திறந்தாள். ஆச்சரிய அதிர்ச்சி! அவளது அபிமான நடிகன், கோலிவுட்டில் முன்னணியில் வந்து கொண்டிருக்கும் கதாநாயகன் அபிலாஷ் புன்னகைத்தபடி நின்றுகொண்டிருந்தான்.
‘கனவா? நிஜமா?’ குழப்பமாக இருந்தது அவளுக்கு. ஆனால் இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.
‘ஹாய்! உள்ள வரலாமா?’ வசீகரக் குரலில் கேட்டான்.
‘ஷ்யூர்…வாங்க..’ ஆனந்தமும் குழப்பமுமாக இருக்க, உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்வையிட்டு ‘நைஸ் ஹவுஸ்’ என்றபடி சோபாவில் அமர்ந்தான்.
ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்துப் போயிருந்தாள் மதுமிதா. ‘இவன்…இவர் எப்படி வந்தார்? காரிலா?!’ வெளியே கார் இல்லையே! ‘யார்கண்ணிலும் படாமல் எப்படி வரமுடியும்?’ இந்த முகவரி எப்படி கிடைத்திருக்கும்?’ ‘தன்னை எப்படி தெரிந்திருக்கும்?’ தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
‘என்ன டிராப் பண்ணிட்டு கார் போய்டுச்சு. ராஜேஷுக்கும் எனக்கும் ஹாஸ்பிட்டல பழக்கம். ரிஜுவனேஷன் ட்ரீட்மெண்ட்காக வந்திருக்கேன். நீங்க என் ஹார்ட்கோர் ஃபேன் அப்டின்னு ராஜேஷ் சொன்னான். அவன்கிட்ட அட்ரஸ் வாங்கிட்டு சர்ப்ரைஸ் தரலாம்னு வந்துட்டேன்’
அவள் மனதை அறிந்ததுபோல பேசினான் அபிலாஷ். ‘ என்னங்க மதுமிதா, இப்டி ஷாக்கா ஆனா எப்டீங்க? டீ காபி வேணுமான்னு கேட்கமாட்டீங்களா?’
‘ஸ்..ஸாரி! என்ன சாப்பிடறீங்க? குழப்பம் தீராமலேயே கேட்டாள். ‘சாப்பிடக்கூடிய எதுனாலும் ஓகேங்க. நல்ல பசி!’
மேசை மீதிருந்த ஹாட்பாக்ஸில் ஆப்பமும் குருமாவும் இருந்தது. அதற்குள் அவன் எழுந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
‘ஆகா! ஆப்பம் குருமாவா? குடுங்க குடுங்க!’ அவன் சிறுகுழந்தைபோல கண்விரியச் சொன்னதும் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனுக்கு பரிமாறினாள்.
உணவுக்குப் பின் முன்னறையிலமர்ந்து கொண்டு ஏதேதோ பேசினான். ஷூட்டிங் ஸ்பாட் கதைகள் பற்றி சொன்னான். மிக இயல்பாக இருந்தான். பொழுதுபோனது தெரியாமல் மெய்மறந்து போனாள் மதுமிதா. எப்போதோ கார் வந்து புறப்பட்டுப்போனான்.
‘மதுமிதா.. இந்த நாள மறக்கவேமாட்டேன்.. அடுத்ததடவ ட்ரீட்மெண்ட்க்கு வந்தா நிச்சயமா சந்திப்போம்’ போய்விட்டான்.
‘ராஜேஷிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’ நினைத்துக்கொண்டே அவனது எண்ணை கைபேசியில் அமர்த்தினாள்.
மறுமனை தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது. மீண்டும் முயற்சிக்க, இம்முறையும் அதையே சொன்னது. ‘சரி! வீட்டுக்கு வரட்டும். சொல்லிக்கலாம்’ நினைத்தபடி சோபாவிலேயே படுத்து உறங்கிப்போனாள்.
ராஜேஷுக்கு மதுமிதாவின் டாக்டரை சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து கலக்கமும் குழப்பமுமாக இருந்தது. இன்றும் தலைவலி என்றாளே’ டாக்டரைப் பார்த்து கேட்டுவிடலாம், வேண்டுமென்றால் அவளை அழைத்துக்கொள்ளலாம்’ என்ற யோசனையுடன் அலுவலகம் போகும்முன் அங்கே சென்றிருந்தான்.
அதன்பின் அவர் சொன்னதுதான் இப்போது அவனை படுத்தியது. ‘ எல்லா டெஸ்ட்டிலும் நார்மல், ஆனாலும் தலைவலி விடாம வருதுன்னா… ராஜேஷ்! எனக்கென்னமோ இது மனசு சம்பந்தப்பட்ட விஷயமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு. நான் ஒரு நம்பர் தர்றேன். காண்டாக்ட் பண்ணிட்டு கூட்டிட்டுப் போய் பாருங்க.. கிளினிக்கல் ஸைக்கியாட்ரிஸ்ட் தான்.. என் ஃபிரண்ட் டாக்டர் பிரபாகரன்’ என்றார்.
அடுத்த நாள் மாலை அந்த டாக்டரைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டு, மதுமிதாவை தயாராக இருக்கச்சொல்லிவிட்டு ஆபிஸிற்கு சென்றான் ராஜேஷ். வழக்கம்போல மதுமிதா அன்றும் அழைப்புமணி கேட்டு கதவைத்திறக்க இம்முறை மகேஷ்பாபு நின்றிருந்தார்.
ஆமாங்க! அவரேதான்!
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings