எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கை வேலையாக இருந்த மீனாட்சி அழைப்பு மணி ஒலித்ததும் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.
நின்றுகொண்டிருந்த திவாகரனை பார்த்ததும் ஆச்சரியமாக ,”என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க” என்றவள் அவர் பின்னால் நின்ற பரதனை பார்த்ததும், வியப்புடன் ,’ வாங்க’ என்று உள்ளேஅழைத்தாள்.
பொதுவாக இவ்வளவு சீக்கிரம் வருபவரில்லையே! மாலையில் வெளியே போனால் பார்க்கில் உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டு வர இரண்டு மணி நேரமாவது ஆகும். இன்று என்ன ஆயிற்று என்று நினைத்தபடி தண்ணீர் எடுத்துவர உள்ளே சென்றாள்.
“மீனா! அவருக்கு ஏதோ மனசு கஷ்டம் போலிருக்கு! ஏதாவது கலந்துகொண்டு வா”.
சமையலறையில் வந்து மெதுவாக பேசிய திவாகரனிடம்,’ என்ன ஆச்சு’ என்றாள்
“தெரியலை! நாங்க பேசிக்கிட்டு இருக்கிற இடத்துக்கிட்டே ஏதோ பங்ஷன் போலிருக்கிறது. யாரோ ஒரு பெண் அங்கு வந்தவளை பார்த்து விட்டு இவர் மூட் அவுட் ஆகிவிட்டார்”.
வேகமாக சொல்லிவிட்டு ஹாலுக்கு விரைந்தார் அவர்.
என்னவாக இருக்கும்! ஒருவேளை அந்தப் பெண் அவர் மகளாக அல்லது மகனது காதலியாக இருக்குமோ! என்று யோசித்துக்கொண்டே வேகமாக தன் வேலையைச் செய்தாள் அவள். பரதனை அவர்களுக்கு ஒரு வருடமாகத் தெரியும். ஒரே பையன் டில்லியில் வேலை பார்க்கிறான் என்று சொன்னதாக நினைவு.
முகமெல்லாம் வேர்த்து அடிபட்ட தோற்றத்துடன் வந்தவரை பார்த்ததும் அவள் மனது கலங்கிப் போயிற்று.
“என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றபடியே காஃபியைக் கொடுத்துவிட்டு அமர்ந்தாள் அவள்.
பரதன் அவர்கள் இருவரையும் ஏறிட்டுப் பார்த்தார். தனக்காக அவர்கள் படுகின்ற மன வேதனை புரிந்தது. வம்புக்காக கேட்கவில்லை, உண்மையான அக்கறையுடன் தான் கேட்கிறார்கள் என்பது புரியத்தான் செய்தது. என்றாலும் அவரால் அந்த அவலத்தை சட்டென்று வெளியில் சொல்லமுடியவில்லை.
மனதில் அன்றைய காட்சிகள் நிழலாடின. மகனுக்கு திருமணம் என்றதும் எத்தனை உற்சாகமாக இருந்தார். எல்லாவிதத்திலும் பொருந்தி வந்த அந்த திருமணம் சிறப்பாக நடந்தபோது அவரும் அவர் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள்.
ஒரே பையன் நன்றாக இருப்பான் என்ற நினைப்பில் ஒரே வாரத்தில் மண் விழுந்தது.
மேலே சொல்லமுடியாமல் தயங்கினார்.
“இப்போ பார்த்தோமே அந்தப் பொண்ணு ஹேமா ஏற்கனவே யாரையோ விரும்பிய தாகவும், பெத்தவங்க சம்மதிக்கலைங்கறதாலே வேறுவழியில்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் சொன்னாள்.”
“என்ன தைரியம் அவளுக்கு! உங்களிடமே சொன்னாளா?” மீனாட்சி திகைப்புடன் கேட்டாள்.
திவாகர் இடைமறித்தார். “அதனால் என்ன! இன்னிக்கு எல்லாப் பெண்களும் ஏதாவது ஒரு கதை வைத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்லியிருக்கிறாள். எப்படியும் மனதை மாற்றிக் கொண்டு வாழத் தானே வேண்டும்!’
“அவள் அப்படி நினைக்கலை ! அந்தப் பையனோடு போகப் போவதாக சொன்னாள். அவளோட அப்பா அம்மாவுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கப் போவதாக சொன்னாள்”.
மீனாட்சியும் திவாகரனும் அதிர்ந்தே போனார்கள்.
“என்ன திமிர் அந்தப் பொண்ணுக்கு! உங்ககிட்டேயே இப்படி பேசியிருக்கிறாள்!நீங்க ஏன் அனுமதிச்சீங்க!”
அவர் வறட்சியான புன்முறுவலை சிந்தினார் “ஒரு பொண்ணு யாரைப் பத்தியும் கவலைப்படாமல் தன் இஷ்டப்படி நடக்கணும்னு நினைச்சப்பறம் அவளை எப்படி மனசோடு ஏத்துக்கறது! அதோட அவளும் எதுக்கும் கட்டுப்படறவளா தெரியலை”
இப்போ இந்த சோனம் மாதிரி திட்டம் போட்டு புருஷனைக் கொன்னுட்டு களவு போன மாதிரி நாடகம் ஆடலை.அது வரை என் பையன் தப்பித்தான்.அண்மையில் செய்திகளில் அடிபட்ட அந்த கொடூரமான விஷயத்தை சொல்கிறார் என்று புரிந்தது.
அடக்கமுடியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“அவளோட பெத்தவங்களை கூப்பிட்டு சொல்லி அவளை அனுப்பிட்டோம். அவங்களுக்கும் பயங்கர ஷாக் தான். இந்தப் பெண் இப்படி செய்வாள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை என்று அவர்களும் அழுது தீர்த்தார்கள்”.
“எல்லோரையும் விட என் மகனுக்குத் தான் மிகவும் தலையிறக்கம் . ஒரு பெண் தன்னை ஒரு மனுஷனாக கூட பார்க்கலையே என்று. யார் மூஞ்சியிலும் விழிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டு தான் எங்கேயோ மாற்றிக் கொண்டு போய்விட்டான்”.
“இதில் அவன் தப்பு என்ன இருக்கு! ” புரியாமல் கேட்டாள் மீனா.
“என்னம்மா! எத்தனை சொந்தக்காரங்க முன்னாலே எவ்வளவு பெரிய அவமானம்! அதை அந்தப் பொண்ணு நினைக்கவே இல்லையே! கல்யாணத்துக்கு முன்னாலேயே போயிருந்தா நமக்கு இத்தனை மனசு கஷ்டம் வந்திருக்காதே! அவங்க குடும்பத்தோட போயிருக்கும். இப்போ ஊரைக் கூட்டி எல்லோர் மூஞ்சியிலும் கரியைப் பூசிட்டுப் போன அவளை இன்னிக்கு பார்த்ததும் ஒரு மாதிரி ஆயிடுச்சு”.
“தாலி கட்டினப்புறம் இப்படி பண்றது அக்கிரமம் இல்லையா? எவ்வளவோ சாகச காட்சிகளை காண்பிக்கிற சினிமாவிலே கூட ஒரு தாலியை, ஏன் ஒரு மஞ்சக் கயிறைக் கட்டிட்டா கூட பெண்ணை அடக்கி விடலாம் என்று காட்டுகிறார்களே!”
“ஏன்! ஒரு படத்திலே பாக்கியராஜ் கூட சொல்லுவாரே! என்னுடைய காதலி உனக்கு மனைவியா வரும். ஆனா உன்னோட மனைவி எனக்கு மறுபடி காதலியா வரமுடியாது அப்படின்னு”.
“நீ எந்தக் காலத்திலே இருக்கே! இன்னிக்கு எல்லாப் பெண்களும் கை நிறைய சம்பளம் வாங்குறாங்க. அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம், கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை. அவங்களுடைய ஃலைப் ஸ்டைலே மாறிடுச்சு”.
“இதுக்கா நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம்! எங்க காலத்தில் கல்யாணம் ஆன பிறகு அப்பா அம்மாவை பார்க்க போக கூட எத்தனையோ தடை போடுவார்கள்!”
“சும்மா இரு மீனா! எதையாவது உளறாதே! “
“அவங்க பேசட்டும் திவாகர்! வீட்டில் மஞ்சுவும் அப்படித்தான் புலம்பித் தள்ளுவாள். அவங்க பட்ட கஷ்டங்கள், வேதனைகள், அவமானங்கள் எல்லாம் எதுக்காக! வெளியே தெரியக் கூடாது என்று எத்தனை கஷ்டங்களை மனசுக்குள்ளே வைத்து மறுகியிருப்பாங்க!”
“மஞ்சு சொல்றா, நாங்க நினைக்க கூட பயந்த விஷயங்களை சர்வ சாதாரணமாக அலட்சியமா பண்றாங்களே! அப்படின்னு”.
வறண்ட குரலில் பரதன் சொல்ல இருவரும்கலங்கிப் போனார்கள்.
சாதாரணமாக பத்திரிகையில் எத்தனையோ படிக்கிறோம். ஆனால் நிஜத்தில் நமக்கு தெரிந்தவர்களுக்கு நடக்கும்போது அந்த வேதனை சாதாரணமானதில்லை. அதுவும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் படும் பாடு நேரில் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த வலியும் ரணமும்.
மீனாட்சியும் திவாகரும் மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தார்கள்.
ஆறிவந்த புண்ணை அந்தப் பெண் கிளறிவிட்டு விட்டாள் என்று புரிந்தது. இவர் பையனுக்கு வேறு இடத்தில் திருமணமாகி இருந்தால் இந்த கஷ்டம் இருந்திருக்காது.
“நீங்க வேற பொண்ணு பார்க்கலையா? இப்படியே விட்டு விட்டு இருக்க முடியாது. இல்லையா? “
“எங்கேம்மா! என் பையன்தான் சூடு பட்ட பூனை மாதிரி பயப்படுகிறானே! முந்தி எல்லாம் கல்யாணத்துக்கு பார்க்கும்போது பையன் நல்லவனா, வேற சகவாசம் இருக்கா? என்றெல்லாம் பார்ப்பார்கள். இன்றைக்கு பெண்களையே நம்ப முடிவதில்லை. எல்லாம் உத்தியோகம் தரும் மமதை. தனக்கு தெரியாதது எதுவும் கிடையாது என்ற ஆணவம், யாரையும் எடுத்தெறிந்து பேசும் அலட்சியம், திமிர்”. அவர் அடுக்கிக்கொண்டே போனார்.
“நிஜம்தான்! சுதந்திரம் கிடைக்காதா என்று ஏங்கிய எங்களுக்கும் அதை தன்னிஷ்டப்படி பயன்படுத்தும் இந்த கால பெண்களுக்கும் எத்தனை வித்தியாசம்? “அவள் பெருமூச்சுடன் பேசினாள்.
கேட்டுக் கொண்டிருந்த திவாகர் சொன்னார். “அன்னிக்கு நியாயமே இல்லாத காரணங்களுக்கு கூட அடக்குமுறை செயல்படுத்தப்பட்டது. நாமும் பார்த்தும் பாராதது போல வாழ்ந்திருக்கிறோம். இன்றைக்கு எது சரி எது தவறு என்று யாருக்குமே புரியவில்லை. பாரதியார் தேச விடுதலைக்கு பாடுபட்டது மாதிரி பெண் விடுதலைக்கும் பாடுபட்டார்.பெண்களை சமமா நடத்த சொல்லி போராடினதெல்லாம் மறந்து போச்சு”
.”அதுதான் எங்களோட வருத்தமே! கலாசாரம், பண்பாடு , கட்டிக் காத்த குடும்ப பாரம்பரியம் எல்லாம் காற்றில் பறக்கும்படிதான் நடந்து கொள்கிறார்கள்”.
“சுதந்திரத்துக்காக போராடின, உயிரை விட்ட , சொத்துக்களை எல்லாம் இழந்த , வாழ்க்கையையே தொலைத்த எத்தனையோ வீரர்கள் இன்று நம் மனதிலே இல்லை. ஒரு நிமிடம் அவர்களின் தியாகங்களை நினைத்துப் பார்த்தால் மனது வலிக்கும்.ஆனால் இன்றைக்கு சுதந்திரமாக வளைய வருபவர்கள் நாட்டைப் பற்றி எங்கே கவலைப்படுகிறார்கள்!”.
“நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கு வித்திட்டவர்களை மறந்தே போய் விட்டோம்”.
“நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீரா! தெரியவில்லையே!”
மீனாட்சியின் வார்த்தைகள் அவர்கள் இருவரையும் மறுபடியும் வேதனையில் தள்ளியது.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை! கண்ணீரால் காத்தோம்! கருகத் திருவுள்ளமோ! “
மெல்லிய குரலில் திவாகர் பாட கேட்டுக் கொண்டிருந்த இருவரது கண்களிலும் கண்ணீர் வழிய எதுவும் சொல்லமுடியாது செயலற்றவர்களாய் அமர்ந்திருந்தார்கள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings