in ,

தடயம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கதிரவன் இன்னும் முழுதாக வானில் எழவில்லை. தூங்கி எழுந்த கமலம் மாடிக்கு போக …அங்கிருந்த நிலைமை அவளை அதிரவைத்தது ..

“என்னங்க! இங்க வாங்க ….சீக்கிரம் வாங்க….” காஞ்சனாவின் குரல் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்நாதனை தட்டியெழுப்பியது.

‘காலங்காத்தால எதுக்கு இப்படி கத்திகிட்டிருக்கா?’ என்று எரிச்சலோடு எழுந்த செந்தில்நாதன், கண்ணாடியை தேடி எடுத்து போட்டுக் கொண்டு மாடி ஏறினார்.

காஞ்சனா அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள். மாடி அறை பீரோ திறந்து கிடக்க… எல்லாம் கலைக்கப்பட்டிருந்தது.

“ஐய்யய்யோ என்ன காஞ்சனா.. பீரோ திறந்து கிடக்குது …திருடன் வந்திருக்கான் போல… என்னவெல்லாம் காணாம போச்சு?”

“50 பவுனு நகையை லாக்கரிலிருந்து கொண்டு வந்து வைச்சிருந்தேன். அதோட இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணமும் காணும் ” அழுகையுடன் காஞ்சனா கூற…

“நாம கீழ ரூம்ல தானே படுத்திருந்தோம். நமக்கு சத்தம் ஒன்னும் கேக்கலையே…கனகா ஹால்ல தானே படுத்திருந்தா… அவளைத் தாண்டி யார் மாடிக்கு போயிருக்க முடியும் …”

“அவளை தான் நம்ப முடியாதுங்க… கும்பகர்ணன் மாதிரி தூங்குவா. “

“கனகா… கனகா…”

மேலே வந்த கனகா அதிர்ச்சியானாள்.” என்னமா இது பீரோ தொறந்து கிடக்கு!”

“என்ன கேளு! நீ ஹால்ல தான படுத்திருந்த? உனக்கு சத்தம் எதுவும் கேட்கலையா?”

“இல்லம்மா… காலைல நாலரை மணிக்கு வழக்கம் போல பால்காரன் வந்தான்…பால வாங்கிட்டு திரும்ப 6 மணிக்குதான் எந்திரிச்சேன்”

செந்தில்நாதன்,” நாம பேசிக்கிட்டு இருக்கறதுல அர்த்தமில்லை. நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வர்றேன் ” என்று ஸ்டேஷனுக்குக் கிளம்பினார்.

பாபநாசம் சின்ன கிராமம்… சின்ன போலீஸ் ஸ்டேஷன். ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டையா, ரெண்டு கான்ஸ்டபிளுடன் இயங்கி வந்தது.

செந்தில்நாதன் வீட்டுத் திருட்டு, இப்போதைக்கு அந்த ஊரின் பேசுபொருள் ஆகிப்போனது.

விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் மாதவன் கான்ஸ்டபிள் இருவருடனும் வந்தவர், மாடிக்குப் போய் திருட்டு நடந்த அறையை சுற்றிப் பார்த்து விட்டு கீழே இறங்கினார். கைரேகை நிபுணர்களும் பக்கத்து ஊரிலிருந்து. வரவழைக்கப்பட்டனர் .மாதவன் திறமையான, நேர்மையான இன்ஸ்பெக்டர்.

செந்தில்நாதனிடம்” சார்! நீங்க கவலைப்பட வேண்டாம் கூடிய சீக்கிரம் திருட்டுப் போன பொருள்களை மீட்டு உங்களிடம் ஒப்படைப்பேன்” என்று ஆறுதலாக கூறிவிட்டு. நான் மதியம் விசாரணைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினார்.

***********************

மதியம் 3 மணியளவில் வந்த மாதவன் தன் விசாரணையை செந்தில்நாதன் மற்றும் காஞ்சனாவிடம் தொடங்கினார்.

“மிஸ்டர் செந்தில்நாதன்! உங்கள் வீட்டிற்கு தினசரி வரக்கூடியவர்கள் யார் யார் …உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா?”

“காலை நாலு மணிக்கு பால்காரன் மணி அடிப்பான்… ஹாலில்ல தான் கனகா படுத்திருப்பா. பாலை வாங்கி வைச்சிட்டு ,படுத்துக்குவா… அப்புறம் பேப்பர் போடுற பையன் 6 மணிக்கு வாசல்ல பேப்பரைப் போட்டுட்டு போவான் …எட்டு மணிக்கு ஒரு பாட்டி காய்கறி கொண்டு வருவா ..”

“உங்கள் கார் டிரைவர் ..”

“ஆமாம் சார்…அவனை மறந்துட்டேன் அவன் எட்டு முப்பதுக்கு வருவான்.. நான் கம்பெனி போன பிறகு, வேலை அதிகமாக இருந்தால், மதிய சாப்பாடு வாங்க வீட்டிற்கு வருவான். சாயங்காலம் என்னை வீட்டில விட்டுட்டு, போயிடுவான் ரொம்ப நல்ல பையன் .”

பிறகு கான்ஸ்டபிள் சாமிநாதனை கூப்பிட்டு,” சாமிநாதன் இவங்க குறிப்பிட்ட எல்லாரையும் உடனே இங்க வரச் சொல்லுங்க. அப்புறம் அவங்க எல்லார்கிட்டயும் ரேகையை புரட்டி வாங்கிடுங்க.”

அது சின்ன ஊர் என்பதால் அடுத்த அரை மணி நேரத்துக்குள் எல்லோரும் அங்கே ஆஜராக…

மாதவன் “செந்தில்நாதன் திருட்டு நடந்த அறையை திரும்ப பார்க்க வேண்டும்”

“வாங்க சார்? மாடிக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றார்.

ரூமை நன்றாக சுற்றிப் பார்த்தவர், அதனை ஒட்டியுள்ள பால்கனியை திறக்கச் சொல்லி அங்கிருந்து பார்த்தார். பால்கனியில் இருந்து பார்க்கும்போது வீடுகள் எதுவுமில்லை. பாதி கட்டிய நிலையில், இருந்த கட்டடம் மட்டுமே அருகில் கண்ணுக்குத் தெரிந்தது.

“செந்தில்நாதன் பின்னாடி கன்ஸ்ட்ரக்ஷன் பண்றாங்க போல”

“அயன் பில்டர்ஸ் பண்றாங்க சார்… சின்ன சின்ன வீடுகள் கட்டுறாங்க … சாதாரணமா வேலை நடந்துகிட்டிருக்கும். இப்போ நாலு நாள் வேலை நடக்கல..”

“செந்தில்நாதன்! இந்த பீரோ இருக்கிற அறை பூட்டியிருக்குமா? சாவியை எங்க வைப்பீங்க? வழக்கமா இந்த ரூமுக்குள்ள வேற யார் வந்துட்டு போவாங்க?”

 “என்னையும், காஞ்சனாவையும் தவிர வேற யாரும் இந்த ரூமுக்கு வர மாட்டாங்க …கனகா மட்டும் கூட்டி துடைக்க வருவா. சாவி அநேகமாக பீரோ மேலதான் இருக்கும். வழக்கமா நிறைய நகையும் பணமும் வீட்டில வைக்க மாட்டோம். இப்ப காஞ்சனாவோட வீட்டு கல்யாணம் ஒன்னு இருக்கு. அதனால பேங்க் லாக்கரில் இருந்து நகையும், பணத்தையும் எடுத்துட்டு வந்தோம்.”

” கனகாவை தவிர வேற யாரும் அந்த ரூமுக்குள்ள வரல அப்படித்தானே சார் …”

“கனகாவை சந்தேகப்படாதீங்க …அவ கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா இங்கே தங்கி தான் வேலை பார்க்கிறா..ரொம்ப நம்பிக்கையானவ…”

கீழே இறங்கியவர் ஹாலில் கூடி நின்ற எல்லோரையும் ஒவ்வொருவராக வரச்சொல்லி விசாரிக்கத் தொடங்கினார் ..பால்காரனை முதலில் கேட்க …

” காலையில நீ பால் ஊத்த வந்தப்ப கதவு திறந்திருந்ததா …. வேற யாராவது வெளியில போறத பாத்தியா?”

  “சார்! நான் எப்போதும் போல நாலு மணிக்கு கதவை தட்டினேன் …கனகா வந்துச்சு பாலைக் கொடுத்துட்டு போயிட்டேன்..”

“என்ன கனகா… பால் வாங்கிட்டு கதவை தாழ் போட்டியா? இல்ல மறந்துட்டியா?”

கனகா ஒரு நிமிடம் யோசிக்க…”என்னம்மா என்ன பதில் சொல்லலாம் யோசிக்கிறீயா? உண்மையை மறைக்க முடியாது சொல்லு”என்று அதட்டினார் …

“இல்ல சார்… எப்போதும் அம்மா தூக்குல பால் வாங்க சொல்லுவாங்க .இன்னைக்கி கோயிலுக்கு கொடுக்க இன்னொரு செம்பிலேயும் பால் வாங்கி வைக்க சொன்னாங்க. ரெண்டு கையிலயும் பால் பாத்திரம் இருந்ததுனால, உள்ள வந்து மேஜையிலே வச்சுட்டு திரும்ப வந்தப்ப தாழ் போட்டனா… இல்லையான்னு நினைவில்லை…”

சாமிநாதன் மெதுவாக” சார்! எனக்கு என்னவோ அந்த பால்காரனும், கனகாவும் சேர்ந்து இதை பண்ணியிருப்பாங்களோன்னு தோனுது ..இவ திறந்து விட்டுருப்பா இவன் நகையை எடுத்திருப்பான்”.

அடுத்து பேப்பர்காரனை விசாரிக்க அவன் பேப்பரை கேட்டிலிலேயே சொருகிவிட்டு போனது உறுதியானது.

 கார் டிரைவர் நாகராஜனை ..”நீ முதல்நாள் போனவன் திரும்ப ராத்திரி வந்தியா? உன்னை இந்தப்பக்கம் பார்த்ததா ஊர்ல ஒருத்தர் சொன்னாரு” என்றார் மாதவன் …

“ஐயோ சார்! நான் வரவே இல்ல… நேத்து சாயங்காலம் அய்யாவை கம்பெனியிலிருந்து இறக்கி விட்டுட்டு, பெட்ரோல் போட்டுட்டு வந்த பிறகு ஐயாகிட்ட சொல்லிட்டு சாவியை ஹால்ல வச்சுட்டு அப்படியே கிளம்பிட்டேன் .”

“அப்ப ராத்திரி உன்னை ஊருக்குள்ள பார்த்தேன் சொன்னது…”

“சத்தியமா நான் ஊருக்குள்ள வரல சார்…. எங்க கிராமத்தில தான் பொண்டாட்டி பிள்ளைகளோட இருந்தேன் “

“கீரைக்காரியும், இஸ்திரிகாரனும்,நாலு நாளா வரலை ..”என்றாள் காஞ்சனா .

“நீங்க பேங்க்குக்கு போய் நகை எடுத்துட்டு வந்தது என்னைக்குன்னு ஞாபகம் இருக்கா?”.

“சார்… பத்தாம் தேதி எடுத்துட்டு வந்தேன் “

“அது வேறு யாருக்கும் தெரியுமா?”

” இல்ல சார் தெரியாது… யாருகிட்டயும் சொல்லலை”.

“கார்ல தான் போயிட்டு வந்திங்களா?”

” ஆமாம் சார்… நாகராஜன் என்ன கூட்டிட்டு போயிட்டு, கொண்டு வந்துவிட்டான்”

“ஓகே மிஸ்டர் செந்தில்நாதன்! நான் அப்புறமா உங்களை பார்க்கிறேன்,” என்றபடியே ஜீப்பில் ஏறினார் மாதவன். “சாமிநாதன்… பின் தெருவுக்கு போங்க… பின்னால இருக்கிற அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கொஞ்சம் பாக்கணும்”

 *******************

மூன்று மாடி கொண்ட சின்ன கட்டடம். சின்ன சின்ன ரூம்கள் கல்லும் மண்ணுமாக, ஒரு பக்கம் கிடக்க… ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் உள்ளே நின்றிருந்தார்.

 போலீசை பார்த்ததும் பயந்த வாட்ச்மேன் “சார்! எனக்கும் அந்த வீட்டுக்கு சம்பந்தம் கிடையாது. ” பயத்தில் உளறினான்

“கடைசியா எப்ப வேலை நடந்தது ..தேதி ஞாபகமில்லங்க ஒரு மூணு நாலு நாள் முன்னாடி வரைக்கும் நடந்தது.. இப்போ முதலாளி வீட்ல ஒரு எழவு விழுந்துடுச்சு! அதனால ஒரு வாரத்திற்கு கட்டடவேலை வேண்டாம்னு சொல்லிட்டாங்க “.

திரும்ப ஜீப்பில் ஏறிய மாதவன் ..” பால்காரன், டிரைவர் தவிர வேறு யாரும் அந்த வீட்டுக்குள் போன மாதிரி தெரியவில்லை ..ஒருவேளை இவர்களைத் தாண்டி கூட்டாக மூன்றாவது ஆள் யாரும் உண்டா? பேங்குக்கு போன விஷயம்… கூட்டிட்டு போன நாகராஜனுக்கு மட்டும்தான் தெரியும். அவன் எவ்வளவு தூரத்துக்கு நம்பிக்கையானவன். …அவன் வேறு கூட்டாளியுடன் சேர்ந்து செஞ்சிருப்பானோ?”

எல்லோருக்கும் ஒரு காரணம் இருப்பது போல தோன்றியது. ஒரு சமயம், எல்லோருக்குமே இதில் சம்பந்தமில்லாதது போலவும் தோன்றியது. குழப்பம் அதிகமாக… இப்போதைக்கு சற்று விட்டுப் பிடிப்போம் , பாரன்சிக் ரிப்போர்ட் வந்துட்டா அந்த கேஸ்ஸில் எளிதில் துப்பு துலங்கி விடும்.

‘பீரோவில் இருக்கும் கைரேகை யாருடன் ஒத்து வருகிறதோ, அவனை நம்முடைய பாணியில் விசாரிச்சா, தானா விஷயம் வெளியில வந்துடும்’ என்று நினைத்தவராய்… சற்று ஆறுதல் வர… வீட்டிற்குத் திரும்பினார்.

மறுநாள் ரிப்போர்ட் கைரேகை மேற்கூறிய யாருடனும் ஒத்து வரவில்லை என்று வந்ததும், மாதவன் குழம்பிப் போனார்.

“சாமிநாதன்! டிரைவர் நாகராஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் அவன் பழக்கவழக்கங்கள் எல்லாத்தையும் கொஞ்சம் விசாரிச்சிட்டு வாங்க, அதுபோல பால்காரனுக்கும் ஏதாவது பணபழக்கம் இருக்கா …அவன் எப்படிப்பட்டவன், கூட்டாளி யாருன்னும் விசாரிக்கனும்.   அவங்க நேரடியா பண்ணலேன்னா இவர்களோடு தொடர்புள்ள யாரோ ஒருத்தன் தான் உள்ளே வந்திருக்கனும் .. நிச்சயம் அந்த வீட்டப்பத்தி தெரிந்தவனாகத்தான் இருப்பான்னு தோனுது”

“சார்… இவர்களுடைய கூட்டாளிகள் குடும்பப் பின்னணி… எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வர்றேன்…” என்று கிளம்பி போனார் சாமிநாதன்.

*******************************

காஞ்சனாவும் செந்தில்நாதன் சோர்ந்து போய் அமர்ந்திருந்தனர். ஒருவாரமாக மாதவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. நகையோ பணமோ கிடைக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது .

இன்ஸ்பெக்டர் மாதவனிடமிருந்து ஒரு போன் …

“செந்தில்நாதன் சார்! நீங்களும், அம்மாவும் கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?”

“சார்! ஏதாவது திருட்டு பற்றி தெரிஞ்சுதா? “

“நீங்க ரெண்டு பேரும் வாங்க …. அப்புறம் பேசிக்கலாம்”

போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இன்ஸ்பெக்டர் மாதவன் அவர்களைப் பார்த்ததும், “காஞ்சனா அம்மா! இந்தப் பையில் உள்ள நகைகள் எல்லாம் உங்களுடையது தானான்னு பாருங்க..” என்று கூறி பையை கவிழ்த்தார்.

காஞ்சனாவுக்கு தன் கண்ணை தானே நம்ப முடியவில்லை. மனம் முழுக்க சந்தோஷம்.”சார்! இது என் நகைதான்” என்றாள் ..

செந்தில்நாதன்,” சார் யார் இது? இவனா நகையும் பணத்தையும் எடுத்தது? “

“மிஸ்டர் செந்தில்நாதன் உங்க பணம் 40 ஆயிரம் ரூபாய் இதுல இருக்கு 10,000 மட்டும் செலவழிச்சிட்டான் “

“ரெண்டு பேரும் உட்காருங்க என்ன நடந்ததுன்னு சொல்கிறேன்” என்றார் மாதவன்.

“செந்தில்நாதன் சார்! உங்க வீட்ல வேலை பார்க்கிறவங்க, தினசரி வர்றவங்க, யாருடைய ரேகையும் திருட்டு நடந்த இடத்தில் இருந்த ரேகையுடன் ஒத்துப்போகவில்லை. எனவே செய்தது ஒரு புதிய ஆள் என்பது என்னுடைய மனதை நெருடிக்கொண்டே இருந்தது”

“கான்ஸ்டபிள் சாமிநாதன் எல்லோருடைய குடும்ப பின்னனி, நண்பர்கள், பணப்புழக்கம்… பணத்தேவை… பற்றி விசாரித்து எனக்கு ஒரு தெளிவை கொடுத்தார் ..கனகாவும், பால்காரனும் சந்தேகப்படும்படி எந்த விஷயத்திலும் சிக்கவில்லை. டிரைவர் நாகராஜன் மீது மட்டும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது அவனுக்கு மட்டுமே பேங்கிலிருந்து நகையை வீட்டிற்கு எடுத்துட்டு வந்திருப்பது தெரியும்….ஒருவேளை அவனே நண்பர்கள் மூலம் செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரிச்சோம்.

இதற்கு நடுவே உங்கள் வீட்டின் பின்னே அரைகுறையாக கட்டப்பட்ட கட்டடத்தை பார்வையிடும் போது அதில் ஒரு விஷயம் என்னுடைய கவனத்தை ஈர்த்தது ..உங்கள் வீட்டு பால்கனிக்கு நேராக இருந்த வீட்டின் ஒரு ஜன்னலில் மட்டும் ரிப்ளக்க்ஷன் (Reflection) கிளாஸ் போட்டிருந்தது.

வாட்ச்மேனிடம் கேட்டபோது ,அந்த ஒரு வீடு மட்டும் சீக்கிரம் பால் காய்ச்சுவதால், அதை முதலில் ரெடி பண்ணுகிறார்கள்… எனவே அந்த வீட்டில் இந்த கண்ணாடியை பொருத்தியிருப்பதாக, அந்த புளோரின் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த இந்த பையன் விக்கி கூறியிருக்கிறான் ..அத்தோடு வீட்டின் பெயிண்டிங் வேலையும் இவன்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கு அது முதலில் எந்த நெருடலையும் ஏற்படுத்தவில்லை. இரண்டாவது முறையாக அதே கட்டடத்தைப் போய் பார்வையிடும்போது, அந்த கண்ணாடி , ஜன்னலை திறந்து வைக்கும் போது உங்கள் வீட்டின் படுக்கை அறையை பிரதிபலிப்பதை பார்க்க முடிந்தது. பீரோவின் பிம்பத்தை மிகச்சரியாக அழகாக பிரதிபலித்தது .காஞ்சனாம்மா பீரோவில் நகைகளை வைப்பதை அவன் பார்த்திருக்கக் கூடும் “

“எப்படி சார் அவன் உள்ளே நுழைந்தான்?” ஆச்சரியமாக இருக்கிறது…

“டேய் இங்க வா ..அதை நீயே சொல்லு… “என்று விக்கியை அழைக்க..

“சார்! ஐயா சொன்னதுதான்…கதவடைச்சிருந்தா கண்ணாடியில் அந்த பீரோவை பார்க்க முடியாது. ஆனா… அம்மா காலையில் எந்திரிச்சதும், பால்கனி கதவு, ஜன்னல் கதவை எல்லாத்தையும் திறந்து வைச்சிருப்பாங்க. எனக்கு பீரோவோட பிம்பம் கண்ணாடியில தெரிஞ்ச போது ஆசை வந்தது.. என் பேரில் யாருக்கும் சந்தேகம் வராது என்ற தைரியத்தில் பிளான் பண்ணினேன்.

இவர்கள் வீட்டில் பின் படிக்கட்டு ஒன்று மொட்டைமாடிக்கு போவது இருந்தது. அதை உபயோகப்படுத்தி மொட்டை மாடிக்குப் போய்…. கீழே சன் ஷேடில் குதித்தேன்… அதில் மெதுவாக நடந்து பால்கனிக்குள் இறங்கினேன். பால்கனி கதவு பூட்டப்பட்டிருந்தது.

ஆனால் நான் முன்னமே அதை எதிர்பார்த்திருந்ததால், பால்கனி பூட்டை அப்படியே அறுத்துட்டு உள்ளே நுழைஞ்சேன். பீரோவை மெதுவாக திறந்து நகைகளையும் பணத்தையும் எடுத்து பையில் போட்டுக்கொண்டு… நான் கையில் கொண்டு வந்திருந்த அதேபோன்ற ஒரு பூட்டை ஸ்க்ரூட்ரைவர் வைத்து சரி பண்ணினேன்.

நன்றாக உற்றுப் பார்த்தால் அந்தப் பூட்டு அறுக்கப்பட்டு பிறகு மாட்டி இருப்பது தெரியும். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அறுத்த இடத்தை நான் கையோடு கொண்டு வந்திருந்த சின்ன பெயிண்ட் டின்னிலுள்ள, பெயிண்ட்டை இலேசாக அடித்து விட்டேன்.

ஆணியில் மாட்டி இருந்த பால்கனி பழைய சாவிய எடுத்துவிட்டு, நான் கொண்டு வந்திருந்த சாவியை அதன் வளையத்தில் சேர்த்துவிட்டு வந்த வழியே திரும்பி விட்டேன். நான் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் இருப்பதால் எனக்கு இது செய்ய முடிந்தது”

இடைமறித்த மாதவன் ,”அந்த இடத்தில்தான் விக்கி தப்பு பண்ணிட்டான். உங்களுடைய வீட்டில் இரண்டாவது தடவையாக ரூமை நன்றாக ஆராயும்போது, பூட்டை கழட்டிய இடத்தில் பெயிண்ட் நன்றாக காயாமல் லேசாக திட்டுத்திட்டாக இருப்பது போல தோன்றியது. மேலும் பால்கனி சுவரில் ஓரிடத்தில் இவனோட கைரேகை பெயிண்ட்டோட நன்றாக பதிந்திருந்தது .

எனவேதான் பால்கனி வழியாக யாரோ வந்து திருடிச் சென்றிருப்பார்களோ என்று நினைத்தேன் .மேலும் இந்த மாதிரி ஒரு யோசனை வர வேண்டுமென்றால் அது கன்ஸ்ட்ரக்ஷன் வேலை நன்றாகத் தெரிந்தவர்களே மட்டுமே செய்ய முடியும்.. என்று தோன்றியது..

 விக்கியின் கைரேகையை அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த வீட்டில், அவனுடைய ஒரு பெயிண்ட் பிரஷ்ஷை தெரியாமல் எடுத்துவந்து அதை பீரோவில் கிடைத்த கைரேகையுடன் ஒப்பிடும்போது மிகச்சரியாக கைரேகை பொருந்தியது.”

” என்ன செந்தில்நாதன் சார்! உங்களுடைய நகையும் பணமும் உங்களுக்கு கிடைத்ததில் சந்தோஷம்தானே…”

“என்ன சார்! இப்படி கேக்கறீங்க! உங்களுக்கு தான் ரொம்ப நன்றி கடன்பட்டிருக்கேன் சார்!” என்று கைகூப்பினார் செந்தில்நாதன்.

மாதவன் சிரித்தார் ” எப்படிப்பட்ட கெட்டிக்காரனும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் என்பது எங்களுடைய கோட்பாடு.. இவன் பால்கனியில் விட்டுச்சென்ற ரேகை தானே அவனை காட்டிக்கொடுத்தது”

மாதவனுக்கு திரும்ப நன்றி சொல்லிவிட்டு… மனநிறைவோடு செந்தில்நாதனும், காஞ்சனாவும், வீடு திரும்பினர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு அமானுஷ்ய அனுபவம் (சிறுகதை) – ஹரிஹரன்

    முற்பகல் செய்யின் (சிறுகதை) – செல்வம். T