2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வாக்கிங் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான், செந்தில். வழியில் ரோடோரமாய் ஒரு நாய் படுத்துக் கொண்டிருக்க குட்டிகள் முட்டி முட்டி பால் குடித்துக் கொண்டிருந்தன.
யோசனையுடன் அவைகளை வேடிக்கைப் பார்த்தபடி கடந்துவிட்டான். அபோதுதான் கவனித்தான்… ஒரு குட்டி மட்டும் இங்கும் அங்குமாக துள்ளித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.
மற்றக் குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருக்கும்போது அது மட்டும் என் தனியாக அலைந்து கொண்டிருக்கிறது என்று யோசித்தான். விளையாட்டில் மும்முரமாக இருக்கிறது போல என்று நினைத்துக்கொண்டான். பார்க்க அழகாக இருந்தது. திடீரென்று ஆசை. அதை தூக்கிக்கொண்டு போய் வீட்டில் வளர்க்கலாமே என்று.
நாய் கண்களை மூடி படுத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் விளையாடும் குட்டி. மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து போய், அந்தக் குட்டியை லாவகமாய் தூக்கினான். அது அவனைப் பார்த்து நாக்கை நீட்டிதலையையம் ஆட்டியது.
மெல்ல திரும்பி அந்த நாயைப் பார்த்தான். அது இன்னும் கண்களை மூடிக் கொண்டு தானிருந்தது. அது தூக்கமா அல்லது குட்டிகள் பால் குடிப்பதை கண்மூடி ரசிக்கிறதா என்று தெரியவில்லை. மடமடவென நடந்தான்.
யோசித்துக் கொண்டே ரோடு திருப்பத்தைக் கடக்கும் முன் ஒரு தடவை மறுபடியும் நாயைப் பார்த்தான். அந்த நாய் எழுந்து நின்று நாய்க்குட்டிகளை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி இவனைப் பார்த்தது. இவனது மார்போடு இருந்த குட்டியைப் பார்த்து விட்டததோ என்னவோ, வேகமாய் இவனை நோக்கி ஓடி வந்தது.
ஓட்டமும் நடையுமாய் ஓடி, ரோடோரமாய் நின்றிருந்த ஒரு லாரியின் பின்னால் போய் மறைந்து நின்று கொண்டான்.
கொஞ்ச நேரம் விட்டு வெளிப்பட்டான். அந்த நாயைக் காணவில்லை. கொஞ்ச தூரத்தில் தான் வீடு. வேகமாய் நடந்து வீடு போய் சேர்ந்தான்.
அவனது மார்போடு ஒரு நாய்க்குட்டி இருப்பதைப் பார்த்து திகைத்துப் போய், ‘ என்னங்க இது… இதை ஏன் தூக்கிட்டு வந்தீங்க… எங்கே கிடந்தது இது… ‘ என்று சரசு கேட்க நடந்ததைச் சொன்னான்.
‘சரி… ரொம்ப துறுதுறுன்னு இருக்குது… அழகாகவும் தான் இருக்குது… அதுக்காக தெரு நாயை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து வச்சுக்குவீங்களா… ‘ என்றாள்.
‘நடு வீட்டுல ஏன் வச்சுக்கணும்… வெளீல கட்டிப் போட்டுக்கலாம்… ‘ என்றான்.
‘இவ்ளோ சின்னக் குட்டியா இருக்கே… தாய்ப்பால் குடிச்சிட்டிருந்திருக்குமே… பசி வந்தா தன் தாயை தேடாதா.. பால் குடிக்கற குட்டியை தாய்க்கிட்டேயிருந்து பிரிக்கலாமா… அது பாவமில்லையா… ‘
‘ஏன், நாம்தான் பால் வாங்கறோமே… ஒரு கிண்ணத்தை வச்சு அதுக்கு கொஞ்சம் ஊத்தினா ஆச்சு…‘
‘ஏங்க… இத்தனை நாளாக தன்னோடு தாய்கிட்ட் பால் குடிச்ச பழகியிருக்கும்… திடீர்னு கிண்ணத்துல வச்சா குடிக்குமா… அதை நக்கிக் குடிக்கதான் தெரியுமா… ‘
‘பார்ப்போம்… நீ போயி ஒரு கிண்ணம் எடுத்துக்கிட்டு பாலும் கொஞ்சம் கொண்டுவா… ‘
‘எனக்கென்னவோ இது சரியாப் படலை… பேசாம அங்கேயே கொண்டு போய் விட்டுடுறது நல்லதுன்னு படுது… ‘
அதன் தலையையும் உடம்பையும் வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தான். கையில் பால், கிண்ணம், சர்க்கரை டப்பா மூன்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் சரசு.
‘இதெதுக்கு சர்க்கரை… ‘
‘வெறும் பாலை அது எப்படிங்க குடிக்கும்… டேஸ்ட்டா இருந்தாதான் குடிக்கும்… அதுக்குதான் இது… ‘ என்றவள் அதை உற்றுப்பார்த்தபடி, ‘ இது ஆனா பெண்ணா.… ‘ என்றாள்.
‘ஓ… நான் இதுவரைக்கும் அதைக் கவனிக்கலையே… ‘ என்றுவிட்டு ஆவலுடன், ‘ எப்படி பார்க்கணும்… ‘ என்று வெகுளியாய் கேட்டான்.
சட்டென்று சிரித்தபடி அதை வாங்கி திருப்பி அடிவயிற்றைப் பார்த்துவிட்டு, இது, ‘பொட்டைக் குட்டி… ‘ என்றாள். ‘ ஓ… ‘ என்றவன், ‘ சரி, இதுக்கு நீயே ஒரு பேரும் வையேன்…’ என்றான்.
‘பொட்டைக் குட்டிங்ககறதால ‘பப்பி’னே வைக்கலாம்… ‘
‘அப்போ ஆம்பளைக் குட்டின்னா, ‘ பப்பன் ‘ ன்னு பேர் வைப்பியோ… ‘
களுக்கென சிரித்துக் கொண்டாள். அவள் வைத்த பாலை அதை முகர்ந்து கூடப் பார்க்கவில்லை. இங்கும் அங்குமாக ஓட ஆரம்பித்தது. ரொம்பவும் கஷ்டப்பட்டு அதன் வாயை பாலில் முக்கி எடுத்தான். அப்போதுதான் அது ருசியை அறிந்திருக்கும் போல… நாக்கால் தன் வாயை நக்கிக் கொண்டது. ஆனால் பாலை விரும்பி குடிக்கவில்லை.
‘அய்யையே… இது பால் குடிக்காது போல இருக்கே… ‘ என்றான்.
‘தாய்ப்பால் மறக்காத குட்டியை தூக்கிட்டு வந்து கிண்ணத்துல பால் குடிக்கவச்சா அது எப்படி குடிக்கும்… என்னால ஆகாது… நீங்களாச்சு… உங்க பப்பியாச்சு… எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு… ‘ என்றுவிட்டு நகர்ந்தவள், ‘அதை விட்டுட்டு ஆஃபீஸ் கிளம்பற வேலையைப் பாருங்க ‘ என்றுவிட்டு போனாள்.
விட்டால் ஓடிவிடுமே என்பதால் அங்குமிங்குமாய் தேடி ஒரு கயிரை எடுத்து வந்து அதைக் கட்டிப் போட்டான்.
ஆஃபீஸ் கிளம்பும்போது திடுக்கிட்டான். கேட் முன்னால் அந்த தாய் நாய் வந்து அல்லாடியது. வித்தியாசமாய் சத்தமும் கொடுத்தது. அந்த சத்தம் குட்டிக்கும் புரிந்து விட்டதோ என்னவோ, அதுவும் இங்கிருந்த்தபடியே கீல் கீல் என்று கத்தவாரம்பித்தது. சரசுவைக் கூப்பிட்டு அந்த நாய் துடிப்பதைக் காட்டினான்.
‘எந்தக் காரணம் கொண்டும் கேட்டைத் திறந்துடாதே…’ என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அந்த நாய் கொஞ்சம் நகர்ந்து வழிவிட்டு நிற்க, சட்டென கேட்டை மூடிவிட்டு போய்விட்டான்.
XXXXX
சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு வந்தான். பப்பி படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. கிண்ணத்தில் வைத்த பால் அப்படியே இருந்தது.
கயிற்றை அவிழ்த்துவிட்டு தூக்கி வந்து பாலைக் குடிக்க வைக்க பிராயத்தனப்பட்டான். அது மறுத்தது. வெறுத்துப் போய் திரும்பவும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டுக்குள் போய்விட்டான்.
அவனைப் பார்த்த சரசு, ‘பாவங்க… அந்த நாய் காலைலர்ந்து அஞ்சாறு தடவை வந்து பார்த்துட்டு பார்த்துட்டு சத்தம் போட்டுச்சு… குட்டிக்கிட்ட நெருங்க முடியாது புரிஞ்சிருக்கும் போல, பேசாம போயிருச்சு… தாயையும் சேயையும் பிரிச்சா இப்படித்தான்… கொண்டு போய் விட்டுடுங்க… ‘ என்றாள்.
‘இல்லல்ல… பப்பியை நான் வளர்க்கப் போறேன்… ரெண்டு நாளைக்கு வந்து வந்து பார்க்கும்… அப்புறம் தானா வெறுத்துப்போய் போயிடும்… ‘
திடீரென்று யோசனை வந்தது. கடைத்தெருவில் தள்ளு வண்டிக்காரன் சூப் விற்பதைப் பார்த்திருக்கிறான். ஓடிப்போய் சிக்கன் சூப் வாங்கிவந்தான். அது சூப்பை முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்து கொண்டது.
யோசித்தள் சரசு மறுபடியும் பாலைக் கொண்டு வந்து, பப்பியின் வாயைப் பிளந்து ஸ்பூனால் ஊட்டினாள். அது பாலை விழுங்கியது. மெல்ல மெல்ல பாதி பால் குடித்து முடித்ததும் கீழே இறக்கி விட்டுவிட்டாள்.
திடீரென்று வெளியே சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தான். அந்த தாய் நாய்தான் கேட்டுக்கு வெளியே நின்றபடி உள்ளே பார்த்துக்கொண்டே இங்குமங்கும் நடந்தது. வித்தியாசமாய் சத்தமும் கொடுத்தது.
‘என்னடி… அந்த நாயி திரும்பவும் வந்திடுச்சு… ‘ என்றான் பதட்டமாய்.
‘என்னைக் கேட்டா… போயி அந்த நாயையேக் கேளுங்க… ‘ என்று நக்கல் விட்டாள் சரசு.
அவசர அவசரமாக குட்டியை வீட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தான். அந்த நாய் இன்னும் அங்கிருந்து நகரவில்லை. ரொம்பவும் தவித்தது.
‘ இன்னும் நிக்குதுடி அந்த நாய்… ‘
‘ அது எப்படி தன்னோடு குட்டியை விடும்… ‘
கொஞ்சம் யோசித்தான்… ‘ இப்போ என்ன பண்ண…’ என்றான்.
சிரித்தவள், ‘ பேசாம குட்டியை அதுகிட்ட கொடுத்துடுங்க… ’ என்றாள்.
யோசித்தான்… கஷ்டப்பட்டு தூக்கி வந்து கடைசியில் ஒன்றும் ஆகவில்லையே.
அவளைப் பார்த்தான். ‘ சரி… நான் வெளியே போயி கேட்டை திறந்தா இருக்கற கோபத்துல என்னை அது கடிச்சி வச்சிடுச்சுன்னா… ‘
‘கடி வாங்கிக்கங்க…’ என்று சிரித்தாள். பிறகு, ‘ சரி விடுங்க… நானே போறேன்… ‘ என்றபடி நாய்க்குட்டியை தூக்கினாள்.
‘நீங்க இங்கேயே நில்லுங்க… ‘ என்றுவிட்டு மெல்ல வெளியே வந்தாள். குட்டியைப் பார்த்ததும் நாய் வாலை வாலை ஆட்டியது. கேட்டை கொஞ்சமாகத் திறந்து குட்டியை விட்டுவிட்டு சட்டென கேட்டைச் சாத்தினாள்.
வேகமாய் ஓடிவந்து தன் குட்டியை முகர்ந்து முகர்ந்து பார்த்தது, வாலை ஆட்டிக்கொண்டு குட்டியின் முகத்தை நக்கிக் கொடுத்தது. தாயின் ஸ்பரிஷத்தை உணர்ந்த குட்டியும் தன் வாலை ஆட்டிக்கொண்டு நாயின் வயிற்றுப் பகுதியில் முட்டியது. ஒருவழியாக பால் குடிக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, ‘ மொச் மொச் ‘ சென முட்டி முட்டி பாலைக் குடித்தது.
சில நொடிகள் தான்… நாய் நகர ஆரம்பித்தது. குட்டியும் அதனுடன் ஓட ஆரம்பித்தது. சில தடவை நாயின் கால்களுக்கு இடையில் நுழைந்து, இடறி, சமாளித்து, வெளிப்பட்டு தன் தாயுடன் கூடவே ஓடிக்கொண்டே இருந்தது. இவர்கள் அதை ரசித்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings