in ,

தானே தன் தலையில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

        கம்பெனி கேட்டிற்குள் சுரேஷின் ஸ்கூட்டர் நுழையும்போது மணி 9:15.  நிதானமாய் மாடிப்படிகளில் ஏறி தனது செக்சனை அடைந்தான்.

       “சார்…. செக்சன் ஆபீசர் நீங்க வந்ததும் உடனே வரச் சொன்னார்” என்றான் பியூன் முருகன்.

       “இப்பதானே வர்றேன்?.. வந்ததும் வராததுமா வந்து ஏண்டா  “அவன் கூப்பிடுறான்… இவன் கூப்பிடறான்”னு கடுப்பேத்துறே?” எரிந்து விழுந்தான் சுரேஷ்.

      “என் மேல ஏன் சார் பாயறீங்க?… இஷ்டமிருந்த போங்க… இல்லேன்னா விடுங்க… எனக்கென்ன?”

      “எதிர்த்தாடா பேசுறே இடியட்”கத்தினான் சுரேஷ்.

      மொத்த ஆபீசுமே அவன் செய்கையை பார்த்து வியந்தது. இயல்பாகவே சுரேஷ் மிகவும் சாது.  ஆபீஸுக்கு ஒரு நாள் கூட லேட்டாக வர மாட்டான்.  யாரிடமும் இரைந்து பேச மாட்டான்.  “இவனுக்கு என்னாச்சு?” அனைவரும் வினோதமாக பார்த்தனர்.

      பத்து நிமிடங்களுக்கு பிறகு செக்‌ஷன் ஆபீஸரின் டேபிளுக்கு சென்றான் சுரேஷ்.

“வந்த உடனே வரச் சொல்லியிருந்தேனே?”.

      “வந்த உடனேதான் வர்றேன்” என்றான் சுரேஷ்.

      “ஓ… நீங்க இன்னைக்கு லேட்டா?” கேட்டார் செக்சன் ஆபீஸர்.

      “இந்த ஆபீஸ்ல வேலை செய்கிற எத்தனையோ பேர் ஒன்பதரைக்கும் பத்தரைக்கும் வந்திடு  “ஆன் டியூட்டி”ன்னு பொய் சொல்லிட்டிருக்கறப்ப… நான் ஒரு நாள் லேட்டா வரக்கூடாதா?… இதே ஒரு லேடி ஸ்டாஃப் லேட்டா வந்தா கேட்பீங்களா?…  “ஈ…”ன்னு இளிச்சிட்டு “இட்ஸ் ஓ.கே”ன்னு தானே சொல்லுவீங்க?”.

ஆடிப் போனார் செக்‌ஷன் ஆபீஸர்.  “என்ன ஆச்சு இவனுக்கு… இவன் இப்படியெல்லாம் பேசுற ஆள் அல்லவே!” யோசித்தபடியே அவனைப் பார்த்தார்.

       “எதுக்காக கூப்பிட்டீங்க?… அதைச் சொல்லுங்க!”

       “த்ரீ இயர்ஸ் ரெவின்யூ ஃபிகர்ஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்தீங்கல்ல?… அது கம்ப்யூட்டர் ஸ்டேட்மெண்ட்  கூட டேலியாக மாட்டேங்குது” என்றார்.

       “அப்ப கம்ப்யூட்டர் ஸ்டேட்மெண்டையே எடுத்துக்க வேண்டியதுதானே?… எதுக்கு மேனுவல் ஸ்டேட்மெண்ட்?” எதிர்க் கேள்வி கேட்டான் சுரேஷ்.

       “ஒரு கிராஸ் வெரிஃபிகேஷன்காகத்தான் கேட்டேன்!… அதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க… ஏன்?… என்னாச்சு உங்களுக்கு?”.

       “நான் நார்மலாய்த்தான் இருக்கேன்!… ஐ திங்க் யூ ஆர் நாட் இன் நார்மல்” சொல்லி விட்டு வேகமாக தன் சீட்டுக்குத் திரும்பினான் சுரேஷ்.

       “ஏதாவது சைத்தான் இவனுக்குள்ளே புகுந்திடுச்சா?..  திடீர்னு இப்படியெல்லாம் பேசறானே?” அவன் செல்வதையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் செக்‌ஷன் ஆபீஸர்.

      மதியம் 12:30.

      “சார்!… உங்களை ஜி.எம். கூப்பிடறார்!” பியூன் முருகன் சொல்ல, முணுமுணுத்தவாறே எழுந்து ஜி.எம். அறைக்குச் சென்றான் சுரேஷ்.

      “என்ன மிஸ்டர் சுரேஷ்?… என்ன பிரச்சனை உங்களுக்கு?” கனிவுடன் கேட்டார் ஜி.எம்..

      “நத்திங் சார்!… ஐ யாம் ஆல்ரைட்!… ஆமா எதுக்கு திடீர்னு இப்படி கேட்கிறீங்க?”.

      “காலையில செக்‌ஷன் ஆபீஸர் கிட்டே ரொம்ப ரூடா நடந்துக்கிட்டீங்களாமே?… வருத்தப்பட்டார்!”.

      “ஓ… பத்த வெச்சுட்டானா பரட்டை?” பல்லைக் கடித்தான் சுரேஷ்.

      “நோ…. அப்படியெல்லாம் பேசாதீங்க!…  “சுரேஷ்.. ரொம்ப ஸாஃப்ட் நேச்சர்!… திடீர்னு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறார்?னு தெரியலை!”ன்னு ஃபீல் பண்ணி சொன்னாரு!” என்றார் ஜி. எம்.

      “வேஷம் சார்!… அவனைப் பற்றி உங்களுக்கு தெரியாது… ஜகஜ்ஜாலக் கில்லாடி”

      கடுப்பானார் ஜி.எம். “உன்னோட சீனியர் ஆபீஸர் பத்தி என்கிட்ட இப்படித் தரக்குறைவா பேசுறியே… இதன் விளைவு என்னாகும்?ன்னு தெரியுமா?”.

      “நீங்களும்… அவனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அதான் அவனை திட்டினால் உங்களுக்கு கோபம் வருது!”

      ஆத்திரமான ஜி.எம்.  “கெட் அவுட் மேன்” என்றார் கத்தலாய்.

      சுரேஷும் அலட்சியமாய் வெளியே வந்து நிதானமாய் தன் சீட்டை நோக்கி நடந்தான்.

      மூன்று நாட்களுக்குப் பிறகு, செக்‌ஷன் ஆபீஸர் டேபிள் முன் கூட்டமாய் நின்று சுரேஷின் மேல் சரமாரியாக கம்பளைண்ட் செய்து கொண்டிருந்தனர் சக ஊழியர்கள்.

      “சார்… எங்களாலேயும் திருப்பிப் பேச முடியும்… பட் நாங்க டீஸண்டானவங்க!” பர்சனல் பாலு படபடத்தான்.

      “ஓ.கே!… நான் சுரேஷ் கிட்டே பேசி வார்ன் பண்ணிடறேன்!… நீங்க  அமைதியாப் போங்க!” அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிய செக்‌ஷன் ஆபீஸர் யோசித்தார்.

     “சீனியர்கள் கிட்டேதான் எமோஷனலா பிஹேவ் பண்றாருன்னு பார்த்தா… கொலீக்ஸ்க கிட்டேயும் அதே மாதிரிதான் நடந்துக்கிறார்… என்ன பண்றது?…”

      நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.  “கரெக்ட் அவர் கிட்டே ரொம்ப க்ளோசா பழகுறவரு கண்ணுசாமி மட்டும்தான் அவரை விட்டு விசாரிக்க வேண்டியது தான்!”.

      ஆபீஸ் டைனிங் ஹால். தனி டேபிளில் கண்ணுசாமியும், சுரேஷும் அமர்ந்திருந்தனர்.

      “என்னாச்சு உனக்கு?… ஏன் நாலஞ்சு நாளா எல்லார்கிட்டயும் ரொம்ப மோசமா நடந்துக்கறே?”.

      எதுவும் பேசாமல் தலையை மட்டும் தூக்கி கண்ணுசாமியை முறைத்து பார்த்து விட்டு, “எல்லாம் ஒரு காரணத்தோடதான்” என்றான் சுரேஷ்..

       “என்ன காரணம்?”.

       “அதை இப்பச் சொல்ல முடியாது!… நேரம் வரும் போது நானே சொல்றேன்!”.

       “எப்போ ஹெட் ஆஃபீஸில் இருந்து மெமோ வந்து உன் மேல சீரியஸ் ஆக்‌ஷன் எடுத்த பிறகா?” எரிச்சலுடன் கேட்டார் கண்ணுசாமி.

       “என்ன ஆக்‌ஷன் வேணாலும் எடுக்கட்டும்! எனக்குக் கவலையில்லை!… ஏன்னா… எல்லாமே நடக்கிறபடி தான் நடக்கும்!” என்றான் விட்டேத்தியாக.

      “ச்சீ… உன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை!” சொல்லி விட்டு எழுந்து சென்றார் கண்ணுசாமி.

      சுரேஷின் தொடர் அடாவடித்தனங்கள் பற்றி ஹெட் ஆபீஸ் வரை தகவல் சென்று விட,  டிஸ்மிஸ் ஆர்டர் வந்திறங்கியது.

      அந்த டிஸ்மிஸ் ஆர்டரைக் கூட அலட்சியமாய்ப் பெற்றுக் கொண்டு புன்னகையோடு  ஆபீஸை விட்டு வெளியேறிய சுரேஷை அவனது வீட்டில் சென்று சந்தித்தார் கண்ணுசாமி.

      “இப்படிப் பண்ணிட்டியேடா!… எட்டு வருஷமா எடுத்த நல்ல பேரையெல்லாம் எட்டே நாள்ல கெடுத்துக்கிட்டு… வேலையை இழந்திட்டு நிக்கிறியேடா” அங்கலாய்த்தார்.

       “கண்ணுசாமி… நான் இப்படி நடந்துக்காம… ஒழுங்கா இருந்திருந்தாலும் எனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வந்திருக்கும்…. என்ன?.. கொஞ்சம் லேட்டா வந்திருக்கும்!” என்றான் சுரேஷ் எங்கோ பார்த்தபடி.

      “எதை வைத்து அப்படி சொல்ற?” கத்தலாய் கேட்டார் கண்ணுசாமி.

      “என்னோட ஜாதகத்தை வெச்சு!.. போன வாரம் ஒரு பெரிய ஜோசியர் கிட்டே என்னோட ஜாதகத்தை காண்பிச்சேன்… அதைப் பார்த்துட்டு அவர் சொன்னார்… நான் இப்ப இருக்கிற வேலையில் இன்னும் ஒரு மாசம் கூட நீடிக்க மாட்டேனாம்… பெரிய சிக்கல் ஏற்படுமாம்!… அதுதான் பார்த்தேன்… சிக்கலில் மாட்டி பிரச்சனையோட வெளியே வர்றதை விட… நாமே சின்னதா பிரச்சினை பண்ணிட்டு வெளியே வந்துடலாம்தான் இப்படி நடந்துக்கிட்டேன்!”

      “பைத்தியமாடா நீ?… ஜோசியக்காரன் பொழப்புக்காக  எதையோ உளறியிருக்கான்… நீயும் அதை நம்பிட்டு வாழ்க்கையையே கெடுத்துக்கிட்டியேடா!”.

      “அப்படி சொல்லாதடா… அந்த சிவகிரி நாதமுனி ஜோசியக்காரன் சொல்றதெல்லாம் எப்பவும் சரியாய்த்தான் இருக்கும்!” அப்பாவியாய்ச் சொன்னான் சுரேஷ்.

      “உன்னை நினைச்சா எனக்கு சிரிக்கிறதா… அழுகிறதா…ன்னே தெரியலைடா!… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட ஜாதகத்தை பார்த்து இதே சிவகிரி நாதமுனி ஜோசியக்காரன்  “நீங்க ஆறு மாசம்தான் உயிரோட இருப்பீங்க!”ன்னு சொன்னான்!… நானும் கொஞ்சம் பயந்தேன்!… இப்ப ரெண்டு வருஷமாச்சு!… நான் நல்லாத்தான் இருக்கேன்!” என்றார் கண்ணுசாமி இரு கைகளையும் விரித்து காட்டியபடி.

      அப்போதுதான் சுரேஷ்க்கு லேசாக உறைத்தது.

      “நான் தப்பு செஞ்சுட்டேனா?” யோசிக்க ஆரம்பித்தான்.  “அது எப்படி ஜாதகம்  பொய்யாயிடுமா?” தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

      நீண்ட விவாதத்திற்கு பிறகு கண்ணுசாமி தலையிலடித்துக் கொண்டே வெளியேறினார்.

      மறுநாள் ஆபீஸே பரபரப்பாயிருந்தது.  ஹெட் ஆஃபீஸிலிருந்து ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு லிஸ்ட் வந்திருந்தது. ஆளாளுக்கு சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தனர்.

      கண்ணுசாமி மட்டும் சோகமாயிருந்தார். காரணம்…? கிளார்க்  போஸ்டில் இருந்த சுரேஷ் செக்சன் ஆபீஸராக புரமோட் செய்யப்பட்டு, பிறகு அடிக்கப்பட்டு, சுரேஷிற்கு கீழ் வேலை செய்த வேறொருவரின் பெயர் பிரமோட் செய்யப்பட்டிருந்தது. மனதிற்குள் ஜோசியக்காரனை சபித்த கண்ணுசாமி, “இன்னிக்கே போய் இந்த விஷயத்தை சுரேஷ் கிட்டே சொல்லி அவனோட மூடநம்பிக்கையை ஒழிக்கணும்!” என முடிவு செய்து கொண்டார்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஊருக்குத்தான் உபதேசம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சுடிதார் போட்ட எரிமலை ஒன்று (சிறுகதை) – முகில் தினகரன், கோவை