in ,

தாய் மனசு… தங்க மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

            கொதிக்கும் எண்ணையில் வெடிக்கும் கடுகாய் பொரிந்து கொண்டிருந்தாள் பத்மா. “இதுக்கு முன்னாடியெல்லாம் நான் சண்டை போட்டுக்கிட்டு… அம்மா வீட்டுக்கு வந்துட்டா… ரெண்டே நாள்ல ஓடோடி வந்து என்னைச் சமாதானப்படுத்திக்… கூட்டிக்கிட்டுப் போன மனுஷன்… இப்ப பதினஞ்சு நாளாகியும் வரலையே… ஏன்?”

              “ஏன் இந்தத் தடவ நீ போயி சமாதானப்படுத்தறது… அது மட்டும் செய்ய மாட்டே… அப்படித்தானெ?” பத்மாவின் தாயார் லட்சுமி மருமகனுக்காய் பரிந்து பேசினாள்.

             “நீ சும்மாயிரு… உனக்கொண்ணும் தெரியாது… எல்லாம் அந்த மாமியார்க்கெழவி பண்ற வேலை…” பத்மா ஆவேசமாய்ச் சொல்ல,

             “க்கும்..” என்று முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் காட்டினாள் லட்சுமி.

             “நம்ம பொரிக்கடை சரசு சொல்லித்தான் தெரியும்… இப்ப அந்த மாமியார்க்கெழவி கிராமத்திலிருந்து வந்து எங்க வீட்டுலதான் இருக்குதாம்… நான் சண்டை போட்டுட்டு வந்துட்டது தெரிஞ்சதும்… உடனே பொறப்பட்டு வந்து எம் புருஷன் கூட ஒட்டிக்கிச்சாம்”

             “அது செரி… மவன் ஊட்டுக்கு ஆத்தாக்காரி வந்திருக்கா… அதிலென்ன தப்பு?”

             “நான் சண்டை போட்டுக்கிட்டு வந்த உடனே ஏன் வரணும்?… திட்டம் போட்டுத்தான் வேலை செய்யறா கெழவி… அது வந்து ஓதி உட்டுட்டு இருக்கறதுனாலதான்… எம்புருஷன் சமாதானம் பேச வராம இருக்காரு” பத்மாவின் குரல் கரகரத்தது.

            “எவளோ பொரிக்கடைக்காரி சொன்னா… புண்ணாக்குக் கடைக்காரி சொன்னா!”ன்னு கேட்டுட்டுப் பேசாதடி”

             “டேய்.. உனக்கு சோறு பொங்கிப் போட நானாச்சுடா… விட்டெறிடா அந்தச் சனியனை… வந்தா வர்றா… வராட்டிப் போறா”ன்னு எம்புருஷன் மனசை மாத்தி வெச்சிருக்கா… இல்லாட்டி மனுஷன் இங்க வராம இருப்பாரா?” சொல்லி முடித்து விட்டுக் கண் கலங்கிய மகளை குறுஞ்சிரிப்புடன் பார்த்தாள் லட்சுமி.

“புருஷன் மேல அம்புட்டு ஆசை இருக்கறவ ரோஷத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு கொஞ்சம் இறங்கித்தான் போனா என்னவாம்?”

            மறுநாள் காலை ஏழு மணியிருக்கும்.

            மூட்டை முடிச்சுக்களுடன் கிளம்பிக் கொண்டிருந்த மகளிடம் கேட்டாள் லட்சுமி.  “எங்க கௌம்பிட்ட காலங்காத்தாலே?”

             “எம்புருஷன் வீட்டுக்கு”

             “ஏண்டி… என்னாச்சு உனக்கு?”

             “எம்புருஷன் வீட்டுக்குப் போறதுக்கு  என்ன ஆவணும்?”

            சொல்லி விட்டுத் தெருவில் இறங்கி நடந்தாள் பத்மா.

            சிலையாய் நின்றாள் லட்சுமி.

            பத்து மணி வாக்கில் புருஷன் வீட்டை அடைந்த பத்மா வந்ததும் வராததுமாய் மாமியாருடன் யுத்தத்தைத் துவக்கினாள்.

             “நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷியா? பையனுக்கு புத்திமதி சொல்லி…  “போடா… போயி பொண்டாட்டியக் கூட்டியாந்து குடித்தனம் பண்ணுடா”ன்னு சொல்றத விட்டுட்டு… இல்லாததையும்… பொல்லாததையும் சொல்லிக் குடுத்து ரெண்டு நாள்ல சமாதானம் பேச வர்ற மனுசனைப் போகாமப் புடிச்சு வெச்சிருக்கியே… உன்னையெல்லாம்….”

            மெல்லத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தாள் துளசியம்மாள். அவள்  இருக்கும் மனநிலையில் தான் இப்போது என்ன பேசினாலும் எடுபடாது… தவறாகவே போய்விடும் என்பதைப் புரிந்து கொண்டு, “சரி தாயி… நீதான் வந்துட்டியல்ல… இனி நீயாச்சு… உம்புருஷனாச்சு…  கௌம்பறேன்”

            சொல்லி விட்டு நில்லாமல் உடனே துணிப்பையைத் தூக்கிக் கொண்டு அவள் வெளியேற,

             “போ… போ… இனிமே இந்தப் பக்கமே தலை வெச்சுப் படுத்துடாத..” என்று கத்தலாய்ச் சொன்ன பத்மா “இதெல்லாம் என்னிக்கு செத்தொழியுதோ அன்னிக்குத்தான்  எனக்கும் எம்புருஷனுக்கும் நிம்மதி”  என்றாள்.

            மருமகள் கூறிய இறுதி வார்த்தைகளும் தெளிவாய்க் கேட்டுவிட மனமொடிந்து போனாள் மாமியார். கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. துக்கம் தொண்டையை அடைக்க ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் அதை நிவர்த்தி செய்து விட்டு,

            தெருவில் இறங்கி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.  அவள் மனநிலையைப் போலவே கால்களும் தளர்வாகி…தள்ளாடின.

—-

            அவள் சென்றபின், அரை மணி நேரத்திற்குப் பிறகு,

              “தொளசிம்மா… தொளசிம்மா…”

            வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தாள் பத்மா.  பக்கத்து வீட்டு செல்லாயி நின்று கொண்டிருந்தாள்.   அவள் தன் மாமியாருக்கு நெருக்கமானவள் என்பதால் அவளை எரித்து விடுவது போல பார்த்த பத்மா ‘அது இல்லை…போயிடுச்சு” என்றாள் வெறுப்பாய்.

             “அப்படியா?… என்கிட்டக் கூடச் சொல்லிக்காமப் போயிடுச்சே” அந்தச் செல்லாயி அங்கலாய்க்க,

             “வேணுமின்னா உம்புருஷனை கிராமத்து அனுப்பிச்சு கெழவிகிட்டக் கேட்டுட்டு வரச் சொல்லேன்… ‘ஏன் சொல்லாமப் போயிட்டே?”ன்னு” படு நக்கலாகச் சொன்னாள் பத்மா.

            அவளின் அந்த பதிலால் அதிர்ந்து போன செல்லாயி ‘ஏண்டியம்மா… சண்டை கிண்டை போட்டுத் தொரத்தி விட்டுட்டியா… என்ன?”

             “ஆமா… எனக்கு அதுதானே வேலை!… ஹூம் பேசறா பாரு பேச்சு!… மருமக சண்டை போட்டுட்டுப் போனதே சாக்குன்னு மகன் கூட வந்து சொத்துக்காக ஒட்டிக்கிட்ட அந்தக் கெழவி கூட சண்டை போட்டாலும் தப்பில்ல… நாலு சாத்து சாத்தினாலும் தப்பில்ல…”

             “ச்சீய்… வாயைக் கழுவுடி மொதல்ல… யாரைப்பத்தி என்ன பேசுறே?… உனக்கு என்னடி தெரியும் உன் மாமியாரைப் பத்தி!… அவளோட மனசைப் பத்தி!…தெய்வமடி அவ!… நீயெல்லாம் அவளை உக்கார வெச்சுக் கும்பிடணும்..”

            அந்தச் செல்லாயின் ஆவேசப் பேச்சில் வாயடைத்துப் போய் நின்றாள் பத்மா.

             “என்னமோ சொன்னியே… இவ சொல்லிக் குடுத்துத்தான் உம்புருஷன் உன்கிட்ட சமாதானம் பேச வரலைன்னு… நெஜம் அது இல்லைடி… இவ தெனமும் நூறு வாட்டி  சொல்லுவா… அப்பப்ப சண்டை கூடப் போடுவா… ‘போடா… போயி… அவளைச் சமாதானம் பண்ணிக் கூட்டிக்கிட்டு வாடா”ன்னு… உம்புருஷன்தான் வெட்டுருப்பா மாட்டேன்னுட்டுக் கெடந்தான்… ”

             “அப்படி நெனைக்கறவளாயிருந்தா அவ ஏன் இங்க இருக்கணும்?… பொறப்பட்டுப் போக வேண்டியதுதானே கிராமத்துக்கு?… இங்க இருந்திட்டு இவருக்கு மூணு நேரமும் கொறையாமப் பொங்கிப் போடறதுனாலதான் இந்தாளுக்கு பொண்டாட்டியொட அருமையும் அவசியமுந் தெரியாமப் போயிருச்சு… நாலு நாள் வெளில… கடை கண்ணில அரையுங் குறையமா சாப்பிட்டிருந்தா அப்பத் தெரிஞ்சிருக்கும் வீட்டுச் சோத்தோட அருமை… பொண்டாட்டி கையோட பெருமை… அது தெரியறதுக்குத்தான் வாய்ப்பே குடுக்காம கெழவி நாக்குக்கு ருசியா சமைச்சுக் கொட்டியிருக்காளே… அதா அந்தாளுக்கு  “சமைச்சுப் போட பெத்தவ இருக்கா… சம்பாரிக்க நாம இருக்கோம்… பொண்டாட்டிச் சனியன் இருந்தா என்ன?… இல்லாட்டித்தான் என்ன?‘ ன்னு தோணிடுச்சு” தன் பக்கத்து நியாயத்தை ஆணித்தரமாக பத்மா சொல்ல,

            அதைக் கேட்டு சன்னமாய்ப் புன்னகைத்தாள் செல்லாயி.

             “என்ன குறுஞ்சிரிப்பு சிரிக்கறே?… நான் சொன்னது சரிதானே?… இந்தக் கெழவி மட்டும் இவரு கூட இல்லாம இருந்திருந்தா… எம்புருஷன் என்னைத் தேடி ஓடி வந்திருப்பாருதானே?…”

             “நானும் ஆரம்பத்துல அப்படித்தாம்மா  நெனச்சேன்…ஒரு நாள் வாய் விட்டுக் கேட்டும் போட்டேன்..அதுக்கு உன் மாமியார் சொன்ன பதில் என் நெஞ்சை வலிக்க வெச்சிட்டுதடி… போன வாரம் ஏதோ பேப்பர்ல படிச்சாளாம்… எங்கியோ ஊர்ல…யாரோ ஒருத்தன்…. பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு பொறந்த வூட்டுக்குப் போயிட்டதுனால… மனசு தாங்காம மூணாம் நாளே தூக்குல தொங்கிட்டானாம்!… ஆம்பள மனசு வெளிப் பார்வைக்குத்தான் மொரடாத் தெரியுமாம்… நெஜத்துல பொம்பள மனச விடக் கோழை மனசு ஆம்பள மனசுதானாம்!…. அதைச் சொல்லிப் போட்டு. .’எம்மகனும் அந்த மாதிரி ஏதாச்சும் பண்ணிக்கிட்டான்னா… பாவம் என் மருமக படிக்காதவ… வெள்ளைச் சோளம்… எப்படி இந்த உலகத்துல வாழ்வா? அதனால அவளுக்கு அவ புருஷனை பத்திரமாத் திருப்பிக் கொடுக்கனும்கறதுக்காகத்தான் நான் இங்க வந்து இவன் கூட இருக்கேன்! ..நாளைக்கே அவ வந்துட்டா… ‘இந்தாடியம்மா உம்புருஷன்…இனி நீ பத்திரமாப் பாத்துக்க…”ன்னு சொல்லிப் போட்டு போய்க்கிட்டே இருப்பேன்”னா… அவளைப் போய்…நீ…ச்சை…”

            செல்லாயி சொல்லச் சொல்ல மறைந்திருந்த அந்த மகத்தான உண்மையின் பயங்கரத்தை உணர்ந்து கொண்ட பத்மா குமுறிக் குமுறி அழுதாள்

            அதே நேரம்,

            பேருந்தில் உறங்கியபடியே பயணித்துக் கொண்டிருந்த துளசியம்மாள் உறக்கத்தில்  “எப்படியோ அதுக ரெண்டும் நல்லா இருந்தா அது போதும் எனக்கு” என்று வாய் விட்டுச் சொல்ல,

            அவளைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் பக்கத்து சீட் பெண்மணி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொந்தம் பந்தம் ஒரு மாயை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 3) – வைஷ்ணவி