எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“போறும் ரொம்ப படுத்தாம புறப்படு,”
அன்றைய தினம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தினம்.
கோவிலில் கற்பகவல்லித் தாயார் சன்னதியில் அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை அவள் நெற்றி வகிட்டில் இட்ட போது மறுக்கவில்லை, சந்தோஷம் ,வெட்கம் கலந்த அந்த புன்னகை
என் வாழ்நாளில் மறக்க முடியாது.
பீச்ல இருந்து பஸ் ஏறினோம் எக்மோர் ஸ்டேஷன்..
ஏதோ நினைவு வந்து சமயபுரத்தில் போன வாரம் கையில் கட்டின அம்மன் டாலரோட
கூடிய மஞ்சள் நிற கயிறை அவிழ்த்து அவள் கழுத்தில் மாலையாக சூடினேன்.
கண்டக்டர் சாட்சியா கல்யாணமே ஆச்சுனு நினைச்சேன்.கண்டக்டர் கொஞ்சம் வயதானவர்,
அப்பா அம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு
வாழ்க்கையை தொடங்குங்க குழந்தைகளான்னார்.
ஷர்மிளா என் கைகளை வலிக்கும் அளவு இறுகப் பற்றினாள்.
எக்மோர்ல ரயில் புறப்படும் வரை கூடவே இருந்தாள்.
ரயில் பறப்படும் வேளை கண்கள் கலங்க என் கைகளை இழுத்து
புறங்கையில் முத்தமிட்டாள். எனக்கும் சொல்லவொண்ணா
துக்கம். எட்டி பார்த்தேன், கண்களை கண்ணீர் திரை மறைக்க பார்த்துக் கொண்டே
இருக்கும் போது மறைந்து போனாள்.
வீடு போனவுடன் அம்மா என்னை சந்தேகமா பாத்தா.
“என்னடா சின்னப் பைல ஷர்ட் பேண்ட் அடைச்சிண்டு அவசரமா
போனே இப்ப திரும்ப வந்து அவசரமா ஆபீஸ் புறப்படறே
என்ன ஆச்சு சொல்லேன்”
என்னவோ சொன்னேன் பிரண்ட் அப்பா சீரியஸ்னு எனக்கே
என் பொய் கன்வின்சிங்கா இல்லை.அந்த வாரக் கடைசில 4343ல
திரும்ப ஃபோன் வந்தது, ஷர்மிதான் “நான் பாம்பே கிளம்பிட்டேன்
நாக்பூர்ல 3 மாசம் டிரயினிங்.உன் வேலை எப்படி இருக்கு. சீக்கிரமா என்னை
உன் கூட கூட்டிக்கோ.உன் ஞாபகமாவே இருப்பேன்”
தழுதழுத்த குரலோடு போன் கட்.
பரமேஸ்வரன் மாமா ரிடயர் ஆயிட்டார், வீடு காலி பண்ணி
பரமக்குடியோ எங்கயோ சொந்த ஊருக்கு போயிட்டார்.
போச்சு அந்த கருப்பு கட்டழகி 4343.
இப்ப நான் பழைய கம்பெனி விட்டுட்டு அடுத்த வாரத்துல இருந்து மெட்ராஸ்ல
அம்பத்தூர் எஸ்டேட்ல ஒரு டிராக்டர் தயார் பண்ற
கம்பெனில புரொடக்ஷன் மேனேஜரா சேரப் போறேன்.
அம்மா அப்பாவையும் சீக்கிரம் அங்கே கூட்டிண்டு போயிடுவேன்.
முதல்ல நான் மட்டும் போய் டூடி ஜாயின் பண்ணினேன்.
அண்ணா நகர்ல ஒரு வீடு கம்பெனி சொல்ப வாடகைக்கு ஏற்பாடு பண்ணிக்
கொடுத்தது.அந்த வசதியான வீட்டை பார்த்தவுடனே
என் ஷர்மியோட அங்கே குடித்தனம் பண்றதா கற்பனை
பண்ணி மகிழ்ந்தேன்.
கிட்டத் தட்ட ஒரு வருஷம் ஆச்சு ஷர்மியோட கான்டாக்ட் கூட இல்லை.
ஒரு வேளை அவளுக்கு வேற இடத்தில் கல்யாணம் ஆயிருந்தா என்ன பண்றதுனு
பயமா கூட இருந்தது. ஒரு தடவை பாம்பே போயி பானு கிட்ட விவரம் கேக்கணும்.
பாப்போம் எப்படியும் 2,3 மாசத்துல பாம்பே போயி தேடிப் பிடிச்சிடுவேன்னு நம்பிக்கை இருந்தது.
இப்ப அம்மா அப்பாவும் மெட்ராஸ் வந்தாச்சு. அம்மா அன்னிக்கு தோசை வார்த்து
என் பிளேட்ல போட்டுண்டே, “ நேத்து திருச்சில இருந்து
ராமு சாஸ்திரிகள் வந்திருந்தார். ராசிபுரத்துல ஒரு அயனான ஜாதகம்,
பொண்ணு பாக்க லட்சுமிகரமா இருப்பாளாம்,உன் அபிப்ராயம் சொன்னா
ஒரு ஞாயித்துக் கிழமை போய் பாத்துட்டு வரலாம்.”
“போம்மா, லட்சுமிகரமா இருந்தா கற்பூரம் ஏத்தி கும்பிடலாம்
எனக்கோ உனக்கோ தோசை வார்த்தா கொடுப்பா?”
“விளையாடதடா உனக்கும் வயசாயிண்டே போறது காலா
காலத்துல கல்கட்டு போடாட்டா அப்பறம் சிரமம்.”
“அம்மா பானு கல்யாணத்துல பாத்தோமே அந்த ஷர்மிளாவை
கேட்டுப் பாருங்கோம்மா” தலையை குனிஞ்சிண்டே முணுமுணுத்தேன்.
“ஓ அப்பவே எனக்கு சந்தேகம்தான், அவா பெரிய இடம்
அவ அப்பா சப்கலெக்டராவோ என்னவோ இருக்கார். இருந்தாலும் பாப்போம்
உன் சித்தப்பா கிட்ட விசாரிக்க சொல்லி அப்பா கிட்ட சொல்றேன்.”
ஆனா அவங்க விசாரிக்கறதுக்கு முன்னாலயே எனக்கு பாம்பே போற வாய்ப்பு வந்தது.
எங்க கம்பெனி பாம்பே ஃபேக்டரில ஒரு வாரம்
ஏதோ புதுசா கம்ப்யூட்டர் டிரெய்னிங்.புறப்பட்டு தாணே சிடில இறங்கிட்டேன்.
முத நாள் வேலை முடிஞ்ச சாயந்தரம் பானு
அட்ரசை தேடிண்டு போனேன்.
“என்னடா இது அதிசயம்னு” சந்தோஷமா வரவேற்பு கொடுத்தா.
நைட் டிபன் சாப்பிடும் போது பானு,அவ ஹப்பி கிட்ட நான் ஷர்மி விஷயத்தை
சொன்னேன்.
“ஓ அவளா, அவ பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் போய் சேந்துட்டா,
அவ இப்ப புனேல இருக்கா, இரு அட்ரஸ் இருக்குனு நினைக்கறேன்
தேடித் தரேன்னு” உள்ளே போய் ஒரு சீட்ல எழுதிக் கொண்டு வந்தா.
ரெண்டு நாள் கழிச்சு அந்த அட்ரசோட புனே போய் ஒரு ஆட்டோல அந்தவீட்டு
முன்னால நின்னேன். என் மனசு படபடனு அடிச்சிண்டது.
அழைப்பு மணியை அழுத்தறதுக்கு முன்னால கதவு திறந்துண்டு ஓடி வந்தது
ரெண்டு வயசு பெண் குழந்தை. என்னைப் பாத்து தயங்கி
மழலை மொழியில்,”மம்மி கோயி ஆயா”ன்னது.
எனக்கு மயக்கம் வராத குறை.உள்ளே இருந்து “ருக்கோ ஆயி பேடி” னு குரல்
ஷர்மிளாவோடதுதான்.
எனக்கு அதுக்கப்பறமும் நின்னு ஷர்மிளாவை பாக்க இஷ்டமில்லை,
அப்படியே திரும்பி ஆட்டோ பிடிச்சு போங்கப்பா…….. இன்னும் என்னத்தை
சொல்லிட்டே போக.
மெட்ராஸ் திரும்பிட்டேன், அம்மா அப்பா சொன்ன அந்த ராசிபுரம் மகாலட்சுமி
சுசீலா என் மனைவி ஆனாள். எங்க வாழ்க்கையும் நல்லாதான் போச்சு.
ரெண்டு பசங்க அவங்களும் வளந்து வேலைக்கு போறாங்க.
(எனக்கு கல்யாணம் ஆகி 3 வருஷம் கழிச்சுதான்
தெரிய வந்தது ஷர்மிளா வீட்ல பாத்தது ஒரு அனாதைக் குழந்தை
அவ எடுத்து வளக்கறானு. என் அவசர புத்தியால ஒரு களங்கமற்ற தேவதையை இழந்தேன்)
பர்மா பஜார்ல அந்த பழைய டெலிபோனை வாங்கி ஹால்ல வச்சிருக்கேன்.
அதுல மார்க்கர்ல 4343னு நம்பர் எழுதி வச்சிருக்கேன்.
சுசீ எத்தனையோ தடவை கேட்டுட்டா ஹால்ல எதுக்கு இந்த பழைய கால ஃபோனை துடைச்சு துடைச்சு வைக்கறிங்கனு. ஒரு அசட்டு சிரிப்புதான் என் பதில்.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings