எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜெயா முதலில் காரிலிருந்து இறங்கினாள். தொடர்ந்து அன்பழகனும் இறங்கினார். அன்பழகன் இறங்கும்வரை கூட பொறுமை இல்லாமல் கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்த ஜெயா கைப்பையை வீசி எறிந்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவிக் கொண்டு வர, அன்பழகன் வீட்டிற்குள் வந்தார்.
முகம் துடைத்துக்கொண்டிருந்த ஜெயா, “அந்தப் பரிசைத் தெருவில் வீசிவிட்டு உள்ளே வாருங்கள்” என்றாள் கோபத்தில்.
புன்முறுவலுடன், டிரைவர் கொண்டு வந்த அந்தப் பரிசுப் பார்சலை “வைத்து விட்டு போப்பா” என்றார் அன்பழகன்
“மாமா, நான் உங்களிடம்தான் சொல்கிறேன். அந்தப் பரிசு பார்சலைத் தூக்கித் தெருவில் வீசுங்கள் என்று நான் சொன்னது கேட்கவில்லையா. டிரைவர் நில்லுப்பா. இதை எடுத்துக் கொண்டு போய் தெருமூலையில் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடு” என்றாள் ஜெயா.
அப்போதும் சிரித்துக்கொண்டே, “டிரைவர் நீ போப்பா. அந்தப் பார்சல் இங்கேயே இருக்கட்டும்” என்றார் அன்பழகன்.
டிரைவர் என்ன செய்வதென்று குழம்பிக் கொண்டிருக்க, “நீ போய் காரை செட்டிலே பார்க் பண்ணு. ஜெயாவிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்” என்றார் அன்பழகன்.
“நான் சொன்னதைக் கேட்க மாட்ட முத்து. இந்தப் பார்சலை எடுத்துக் கொண்டு போ” என்று கத்தினாள் ஜெயா. அன்பழகனைத் திரும்பிப் பார்த்த டிரைவர், ஒன்றும் சொல்லாமல் வெளியே போனான்.
“டிரைவருக்கு நீங்க அதிகமாகவே செல்லம் கொடுக்கிறீர்கள். பரவாயில்லை. நானே கொண்டு போய் குப்பைப்தொட்டியில் போட்டு விட்டு வருகிறேன்” என்று பார்சலைத் தூக்கினாள் கோபத்துடன்.
“அமைதி, அமைதி, ஜெயா கொஞ்சம் அமைதியாக இரு. இந்தப் பரிசுப்பொருள் எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதை நீ தூக்கி எறியச் சொல்வது அவ்வளவு உசிதமாகப் படவில்லை. அங்கேயே வை” என்றார் புன்முறுவலுடன்.
மார்பு ஏறி இறங்க, கோபத்துடன் “மாமா, இந்தப் பரிசுப் பார்சலை என் சார்பாகத் தான் உங்களிடம் கொடுத்தான் அந்த வரதன். அது தெரியுமில்ல. உங்களை மையமாக வைத்துக் கொண்டு அவன் எனக்குக் காதல் பரிசு கொடுக்கிறான். அதை நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு உடம்பெல்லாம் எரிந்து கொண்டிருக்கிறது” கையிலிருந்த பார்சலை வீசினாள். அந்தப் பரிசுப் பொருளின் மேலே உள்ள பேப்பர் கிழிந்து அந்த தாஜ்மஹால் பொம்மை கீழே விழுந்து கிடந்தது.
“ஜெயா. நீ கோபப்படாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்”. கீழே கிடந்த அந்தத் தாஜ்மஹால் பொம்மையைக் காட்டி “அதை எடுத்து மேலே வை” என்றார் கொஞ்சம் கூட அதட்டல் இல்லாமல்.
“மாமா, திரும்பத் திரும்ப நான் சொல்வது புரியாமல் – இதை கண்டிப்பாக நம் வீட்டில் வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” திரும்பவும் கோபமாக கத்தினாள்.
“ஜெயா, நான் செய்யும் ஆராய்ச்சுக்கு நீ ஒரு அஸிஸ்டென்ட் என்பதை மறந்துவிடாதே. நாம் தயாரித்த அந்த எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு கொல்லி மருந்து எந்த அளவிற்கு முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்பதை நாம் அந்த கான்பரென்ஸில் சொல்வதற்காகத் தானே போனோம்.
வரதனும் ‘சார் உங்கள் அஸிஸ்டென்ட் ஜெயா மிக அழகாக இருக்கிறார்கள். இது ஏன் சார்பாக ஒரு எளிய பரிசு’ என்று என்னிடம் கொடுத்தான்.
அவன் உன் சார்பாக என்னிடம் கொடுத்த பரிசை விசிறி அடிக்க உனக்கு எப்படி உரிமை வந்தது? நீ ஒருவேளை என் அக்கா மகளாக இருக்கலாம். ஆனால் இந்த சோதனைக் கூடத்தைப் பொறுத்தவரை மற்ற அஸிஸ்டென்ட்கள் போல நீயும் எனக்கு ஒரு சாதாரண உதவியாளர் தான். இங்கே எல்லாம் நான் சொல்லும்படி தான் நடக்கவேண்டும். போ, அந்த தாஜ்மஹால் பொம்மையை எடுத்து வரவேற்பறையின் மேஜையில் கொண்டு வை” என்றார்.
ஒரு கணம் அதிர்ந்து போன ஜெயா “நான் இவ்வளவு சொன்ன பிறகும் இந்தப் பரிசை நாம் இங்கே வைக்க வேண்டுமா மாமா?” என்றாள் கொஞ்சம் கண்ணீரோடு.
கொஞ்சம் கூட மாறாத அன்பழகன், “ஜெயா, திரும்பவும் சொல்கிறேன். நீ என்னுடைய ஆராய்ச்சிக்கு ஒரு சாதாரண உதவியாளர்தான். நம் மாமா மருமகள் உறவெல்லாம் வீட்டிலே. இதை எடுத்துக் கொண்டு போய் அந்த மேஜை மேல் வை” என்றார் சிரித்துக் கொண்டே.
எரிச்சலுடன், கீழே கிடந்த அந்தப் பரிசை எடுத்து வரவேற்பறை மேஜையில் வைத்துவிட்டு வந்தபோது கோட்டை கழற்றிய அன்பழகனிடம் கோட்டை வாங்கி ஸ்டான்டில் மாட்டினாள். “எனக்கு ஒரு காபி கொண்டு வா” என்றார் அன்பழகன்.
காபி தயாரித்துக் கொண்டு வந்த ஜெயா, அன்பழகனிடம் கொடுத்து விட்டு “நான் வீட்டிற்கு போகிறேன் மாமா” என்று கிளம்பினாள்.
“ஒரு நிமிஷம் ஜெயா. ஒரு சாதாரணப் பரிசுப் பொருள் யாரோ கொடுத்ததற்காக என் ஆராய்ச்சியில் உதவியாக இருந்த நீ என்னை விட்டுப் போகப் போகிறாயா?”
“அது சாதாரணப் பரிசுப் பொருளில்லை மாமா”.
“என்ன சொல்கிறாய்?”
“வரதன் என்னை விரும்புகிறான் என்பதை தாஜ்மஹால் பரிசுமூலம் தெரிவித்திருக்கிறான்”.
“உன் அழகு அவனைக் கவர்ந்திருக்கலாம். ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுவது அல்லது பரிசு தருவது ஒன்றும் பெரிய பாவச் செயலில்லையே ஜெயா”.
“ஆனால் அந்தப் பெண்ணிற்கு விருப்பமில்லை என்னும் போது அது மிகப்பெரிய வெறியில்லையா?“
“உனக்கு விருப்பமில்லை என்பதை நீ அவனிடம் முகத்திற் கெதிராகவே குறிப்பிட்டிருக்கலாம் ஜெயா. இல்லை என்றால் அங்கேயே பரிசுப் பொருளை அவன் முகத்தில் வீசி எறிந்திருக்கலாம்”.
“உங்களை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை மாமா. அவ்வளவு பெரிய மாநாட்டில் நான் ஒரு அசம்பாவிதம் செய்திருந்தால் உங்கள் பெயருக்குத் தானே களங்கம் வந்திருக்கும். அதனால் தான் அப்படிச் செய்யவில்லை.”
“சரி அவனைப் பிடிக்கவில்லை என்பதற்காக இந்தப் பரிசை ஏன் எறிய விரும்புகிறாய்”.
“அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அந்த கோணங்கி வர தன் முகமும் அவன் ஜொள்ளுவிடும் விதமும் தான் நினைவிற்கு வரும். அதனால்தான் அதை நான் இங்கே வைக்க விரும்பவில்லை” என்றவாறு அன்பழகன் காபி குடித்த கப்பை எடுத்துக் கொண்டு போனாள் ஜெயா.
“ஓ! அதனால் அதைத் தூக்கி எறியச் சொன்னாயா? அது சரி, உனக்கு வரதனைத் தான் பிடிக்கவில்லை. யாரைத்தான் மனதில் வைத்திருக்கிறாய்” என்றார் அன்பழகன்.
அவள் சுட்டும் விரலால் அன்பழகனை நீட்ட, கொஞ்சம் அதிர்ச்சியடைந்த அன்பழகன் “ஜெயா! என் வயதென்ன? உன் வயதென்ன? நீ – நீ – எப்படி என்னை.”
“காதலுக்கும் மனசுக்கும்தான் சம்பந்தமேயொழிய வயது சம்பந்தமில்லை மாமா. இதே பரிசுப்பொருளை நீங்கள் எனக்கு வாங்கித் தந்திருந்தால் நான் என் உயிரினும் மேலாகப் பாதுகாத்து வைத்திருப்பேன்” என்றாள் ஜெயா.
சிரித்துக் கொண்ட அன்பழகன் “அந்தப் பரிசை எடுத்துக் கொண்டு போய் குப்பையில் போடு” என்றார்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings