2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
எனக்கு 10 வயசு, சுயகவுரவம் அது இதுனு தெரியாத வயசு. ஆனா இருந்திருக்கு எனக்கு தெரியாமலேயே. ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்கத்துல இருக்கற அனுமார் கோவிலுக்கு போய் அப்பா பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரது என் வேலை. காலைல 6.30ல இருந்து 7 மணிக்குள்ள போயிடுவேன்… தேங்காய், பழம், வெத்தலை பாக்கு வச்ச மூங்கில் கூடையோட.
இந்த கோவில்ல அனுமார் அழகா சிரிப்பார். ராமமூர்த்தி பட்டர் என்னடா லேட்டுனு கேப்பார் கொஞ்சம் லேட்டா போனா கூட. நான் சொல்லாமயே அப்பாவோட பேர், நட்சத்திரம் சொல்லி உரத்த குரல்ல மந்திரம் சொல்லி அர்ச்சனை பண்ணுவார். தீபாரதனை, தீர்த்தம், துளசி பிரசாதம், பாதித் தேங்காயோட அர்ச்சனை தட்டு வாங்கிண்டு ஒரு பிரதட்சணம் புன்னகை ஹனுமானுக்கு ஒரு bye. இது வருடக் கணக்கா நடந்து வந்தது.
ஒரு ஹனுமான் ஜெயந்தி தினம், அப்பாவோட நட்சத்திர பிறந்த நாள் குளிர் கால காலை நேரம் அம்மா முதல் வாரமே புக் பண்ணியிருந்தார் அனுமானுக்கு வடை மாலை சாத்தறதா, அம்மாவும் கூட வரதா பிளான். என்னவோ தெரியலை அப்பா கோவிலுக்கு அதிகம் போறதில்லை எப்பவாவது அதிசயமா கூட வருவார். முதல் நாள் ஸ்கூல்ல கபடி மேச் விளையாடின களைப்பு, மொட்டை மாடில குளிர், தலை வரை போர்த்திண்டு தூக்கத்துல இருந்தேன்.
பக்கத்து போர்ஷன் வாசு அம்மா கூப்பிடறாடானு தட்டி எழுப்பினான் மூணு தடவை, நான் திட்டி அனுப்பினேன். கடைசில அம்மாவே முக்கி முனகிண்டு மேலே வந்தா என்னை உலுக்கி, “புத்தி இருக்கா 7 மணிக்கு பகவானுக்கு வடைமாலை சாத்தணும், மணி ஆச்சு இப்பவே எப்ப எந்திருந்து குளிச்சு புறப்படறது நான் வந்து சாப்பாடு போட்டு உன் அப்பாவை ஆபீசுக்கு அனுப்பணும்”
நான், “ஏம்மா அந்த வடைமாலையை பகவான் சாயந்தரம் போட்டுக்க மாட்டாரா, என்ன?”
அம்மா, “இப்ப நீ வரயா, நான் வாசுவை துணைக்கு அழைச்சிண்டு போகட்டுமா? பகவானுக்கு பண்றதுல சுணங்கறே அதான் கணக்குல சுளிச்சிக்கறது”
முனகிண்டே அவசரக் குளியல் போட்டுட்டு அம்மாவோட கோவிலுக்கு போனோம். ராமமூர்த்தி பட்டர் ரெடியா காத்திண்டிருந்தார். “என்னடா அம்பி குளிர்ல எந்திருக்க முடியலையா? 10 நிமிஷம் லேட்னார். ஓ அம்மாவும் வந்திருக்காளா” கேட்டுண்டே அந்த பெரிய பித்தளை தூக்குல சுருண்டு கிடந்த வடை மாலையை நம்ம புன்னகை மன்னனுக்கு சாத்தினார்.
கூடவே துளசி மாலை கருத்த மார்ல வெள்ளை வெளேர்னு வெண்ணை தடபுடலா அர்ச்சனை அப்பா பேரை மூணு தடவை சொல்லி பூஜை பண்ணினார். தீர்க்காயுசு பவனு சொல்லி என் நெத்தில சந்தனம் வச்சார். பிறந்தநாள் அப்பாக்குன்னேன்.
அவரை ஆசீர்வாதம் பண்ணிதான் உனக்கு மரியாதைனு சொல்லிண்டே ஒரு முழ நீள துளசியை கழுத்தில் போட்டார்.
நாலஞ்சு வடைகளை பிச்சு வச்சிண்டு மீதி வடைகளை அம்மா கையில் தூக்குல போட்டு கொடுத்தார் பட்டர். சாயந்தரமா பாத்திரத்தை அம்பியாண்டை கொடுத்தனுப்புங்கோனு சொல்லி. வடை எப்படி செய்வாங்களோ, எங்கே செய்வாங்களோ வாசனை மூக்கை துளைத்தது.
அம்மா அந்த நேரத்தில் கோவிலில் இருந்த 10,12 பேருக்கு வடை பிரசாதம் விநியோகித்தார். நான் முண்டி முண்டி கை நீட்டியும் என் கைல வடை விழலை. பறக்காதேனு திட்டுதான் கிடைச்சது.
வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம், பால்காரம்மா, கீரைக்காரம்மா எல்லோருக்கும் வடை பிரசாதம், என்னைக் கூப்பிட்டு ஒரு வடை கொடுக்கலை.
நான் ஸ்கூல் போயிட்டேன், சாயந்தரம் வந்தவுடனே அம்மா வழக்கமான ஆறிப் போன காபியோட அந்த வடை ரெண்டு தட்டுல வச்சு கொடுத்தா. எனக்கு காபி போறும்னு தட்டை தள்ளி விட்டேன். பிரசாதம்டா அப்படி தள்ளாதேனு எடுத்து வச்சா. ஆனா அந்த நாள்ல இருந்து அனுமான் கோவில் வடைமாலை யார் கொடுத்தாலும் தொடறதில்லை.
அம்மா வேணும்னு அப்படி பண்ணி இருக்க மாட்டாங்க ஆனா என் வீம்பு. இப்ப அம்மா இல்லை, அப்பா இல்லை, நான் அந்த ஊர்லயும் இல்லை அந்த புன்னகை மன்னன் அனுமானை பாத்து 50 வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னுமும் கூட அனுமானுக்கு சாத்தின வடையை தொட தயக்கம், இதுவா சுயகவுரவம, தெரியலை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings